உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – பகுதி 3

This entry is part of 26 in the series 20020812_Issue

ஒரு மெளன யுத்தம்


பெரும் கடனுக்காளான ஏழை நாடுகளுக்கு உதவி

1996-ல் ஐ எம் எஃப் -உம், உலக வங்கியும் முதன்முறையாக ஏழைநாடுகளுக்குக் கடன் நிவாரணம் அளிப்பது பற்றி யோசிக்கத் தொடங்கின. பெரும் கடன் தொல்லையிலிருந்து விடுபட வழிமுறைகளும் ஆலோசனைகளாய் வழங்கப்பட்டன. இதன் படி 80 சதவீதக் கடன்கள் ரத்து செய்யப்படும். ஆனால் நாடுகள் உலக வங்கி சொல்வதைக் கேட்க வேண்டும். இதற்காக ஒரு டிரஸ்ட் அமைக்கப் பட்டது.

ஆனால் யதார்த்தத்தில் இது எந்த பலனையும் தரவில்லை. உகாண்டாவும், பொலிவியாவும் ஏப்ரல் 1998-லும், செப்டம்பர் 1998-லும் முறையே கடன் ரத்துத் திட்டத்தை அமல் செய்யத் தொடங்கின – ஆனால் ஒரு வருடத்திற்குள்ளாகவே ஆரம்பித்த இடத்திற்கே இந்த நாடுகள் திரும்பி வந்துவிட்டன. விளைபொருள்களின் விலை வீழ்ச்சியாலும், ஏற்றுமதிக்கென உலக வங்கி நியமித்த எல்லைகள் மிக அதிகமாய் இருந்ததாலும், இந்த நாடுகளால் குறியை எட்ட முடியவில்லை. மொஸாம்பிக் நாட்டில் இந்தத் திட்டம் அமல் படுத்தியதில் 1 சதவீதக் கடன் நிவாரணம் தான் பெற முடிந்தது. இதனால் உடல் நலனிற்கோ, கல்விக்கோ இவர்கள் செலவு செய்யமுடியவில்லை.

கடன் நிவாரண இயக்கம் அழுத்தத்தால், ஜனபரி 1999-ல் துணிச்சலான நடவடிக்கை வேண்டும் என்று ஜெர்மன் முதல்வர் ஷ்ரோடர் கோரினார். கோலோன் நகரில் வளர்ந்த நாடுகளின் மாநாட்டின் போது இந்தக் கடன் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும் என்று கோரி 50,000 பேர் மனிதச் சங்கிலி அமைத்துப் போராடினர்.

கோலோன் நகரில் இரண்டாவது திட்டம்.

கோலோன் நகரில் கடன் நிவாரணத்திட்டம் – 2 , பெருத்த விளம்பரத்துடன் தொடங்கப் பட்டது. 100 பில்லியன் கடன் ரத்து செய்யப்படும் என்றும், 25 பில்லியன் இதற்கு மேலும் நிவாரணம் கிடைக்கும் என்று சொன்னார்கள்.

ஆனால் 2000 வரையில் 22 நாடுகளையும் சேர்த்து, 12 பில்லியன் டாலர்கள் தான் நிவாரணம் பெற்றன.ஆனால் உகாண்டா மட்டும் தான் எதிர்காலத்திலும் தாக்குப் பிடிக்கக் கூடிய நிலையை அடைந்தது.சில நாடுகளில் கடன் நிவாரணம் நிதர்சனமாய் சில பலன்களை அளித்தது. மொஸாம்பிக் நாட்டில் 60 மில்லியன் டாலர்கள் வளர்ச்சிப் பணிக்குக் கிட்டியது. உடல் நலம், கல்வி, விவசாயம் , வேலைப் பயிற்சி போன்ற துறைகளில் முன்னேற்றம் காண முடிந்தது. ஆனால் மொத்தமாய்ப் பார்க்கும் போது என்ன பலன்கள் எதிர்பார்த்தோமோ அது கிட்டவில்லை. கடன் நிவாரணம் சராசரியாக மூன்றில் ஒரு பகுதி தான் கிட்டியது. இந்த நிவாரணங்களுக்குப் பின்பும், இந்த நாடுகள் உடல் நலத்திற்கான செலவைவிட ஒன்றரை மடங்கு கடனுக்கு அளிக்கிறார்கள். தான்ஸானியாவில் ஆரம்பப் பள்ளியில் சேரக் கூடிய குழந்தைகளில் பாதிப் பேர்தான் பள்ளிக்குப் போக முடிகிறது. மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள். ஆனால் கடனுக்கு இப்போது கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாய் வரும் வருடங்களில் தான்ஸானியா தர வேண்டியிருக்கும்.

ந்தத் திட்டத்தில் பல கடன் பட்ட நாடுகள் சேர்க்கப் படவில்லை. உலக வங்கியின் நிபந்தனைகளையும் பல நாடுகள் பின்பற்ற முடியவில்லை. சில நாடுகள் நிவாரணத்திற்குத் தகுதி பெறவில்லை என்று தள்ளப் பட்டுவிட்டன.நைஜீரியா ஜனநாயக நாடானதன் பின்பு 1998-ல் நிவாரணம் பெறும் நாட்டின் பட்டியலிலிருந்து நீக்கப் பட்டது. கடன் தவணைகள் நீட்டிக்கப் ப்டானவே தவிர நிவாரணம் பெறவில்லை. ஆனால் இந்த நாடும் சரி, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும் சரி கடன் நிவாரணம் பெறவில்லை என்றால் சமூகப் பிரசினைகள் தீரவே தீராது. ஹைடி நாடும் நிவாரணம் பெறத் தகுதி பெறவில்லை. இந்த நாட்டின் பாதிக் கடன் துவாலியே என்ற சர்வாதிகாரியின் கீழ் பெறப்பட்டது. மிக்க ஏழ்மை கொண்ட நாடு இது.50 சதவீதம் படிப்பறிவும், 70 சதவீதம் வேலையின்மையும் கொண்டது இந்த நாடு. லத்தீன் அமெரிக்கா கரீபியன் நாடுகளைப் போல் இரு மடங்கு குழந்தைகள் மரண விகிதம் கொண்டது இந்த நாடு.

இந்த அரசியல் நடவடிக்கையால் விளங்குவது என்னவென்றால், கடன் கொடுத்த நாடுகள் கடன் நிவாரணம் அளிக்காது என்பது தான். கடன் கொடுப்பவர்கள் யாருக்குக் கடன் எவ்வளவு கொடுப்பது, எப்படிக் கொடுப்பது, எப்போது கொடுப்பது என்று தீர்மானிக்கிறார்கள். கடன் நிவாரணம் அளிப்பதைக் காட்டிலும் இதைவைத்து அரசியல் செய்வது தான் இந்த வளர்ந்த நாடுகளின் வேலை. இதை வைத்து தாம் எப்படி செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வது என்பதும் அவர்கள் நோக்கு. இதனால் கிடைத்த பலன் , நிவாரணம் தேவைப்படும் பல நாடுகள் நிவாரணம் பெறவில்லை என்பதே. எல்லாக் கடன்களும் ரத்து செய்யப்படவேண்டும், ஏற்றுமதி வருவாய் ஏழை நாடுகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்குச் செலவிடப் படவேண்டும் என்பது ‘ ஜ்ஊபிலி யு எஸ் ஏ ‘ என்ற அமைப்பின் கோரிக்கை.

போதைப் பொருட்கள்

லட்சக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் சட்ட அங்கீகாரம் இல்லாத போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனர். போதைப் பொருட்களுக்கு எதிராக அரசாங்கங்கள் பெரும் போராட்டம் நடத்த பணத்தைக் கொட்டியுள்ளன. இருந்தும் ஐரோப்பாவில் போதைப் பொருட்கள் அமோகமாய் பரவி வருகின்றன. இதனால் சமூகச் சிதறலும், வன்முறைக் குற்றங்களும் பெருகியுள்ளன.

உண்மை : லத்தீன் அமெரிக்காவில் பொலிவியா மிக்க ஏழ்மையான நாடு. குழந்தைகள் மரணம் விகிதாசாரம் மிக அதிகமாய் உள்ள நாடு.இந்த நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பாதி கடனுக்க்ப் போய் விடுகிறது. பொலிவியாவின் மக்களில் 40 சதவீத மக்கள் போதைப் பொருள்கள் வியாபாரத்தை நம்பி வாழ்க்கை நடத்த நேர்ந்துள்ளது.

கடனை அடிப்படையாய்க் கொண்ட வங்கிகள்

வணிக வங்கிகள் இந்த திரும்பிவராக் கடன்கள் பெருகியதால் பெரு நட்டம் அடையவில்லை. இதன் காரணம் என்னவென்றால், வளர்ந்த நாடுகளின் வரி செலுத்துவோர் (பலசமயம் அவர்களுகுத் தெரியாமலே) இந்த நட்டத்தைக் குறைக்க உதவியுள்ளனர். பணவீக்கமும், நாணயமாற்று லாபமும் நட்டத்தைக் குறைக்க உதவியுள்ளன.

பல நாடுகளில் இந்தக் கடன்களை வங்கிகள் நட்டமெனக் காண்பித்து விட்டன. இதனால் அவர்கள் செலுத்தும் வரியும் குறைகிறது. இருந்தும் கடன் பெற்ற நாடுகள் திருப்பித் தரக் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள், வங்கிகளின் நட்டம் சரிக்கட்டும் விதத்தில், நாடுகளின் கடன் சரிசெய்யப் படாததால், மக்கள் மீது சுமை அதிகம்.

இந்தக் கடன்களை ‘விற்பதன் ‘ மூலமும் இந்த வங்கிகள் பணம் ஈட்டுகின்றன. வரியும் குறைகிறது.இரண்டாவது பணச்சந்தை என்ற பெயரில், வங்கிகள் இந்தக் கடனை வாங்கி , கடன் வசூல் செய்து லாபம் ஈட்ட முயல்கின்றன.

வங்கிகள் இந்த கடன் விற்பனையால் வரிக் குறைப்புப் பெற்று லாபத்தை அதிகரிக்கின்றன. ஆனால் கடன் சுமையுள்ள நாடுகளுக்கோ எந்தப் பயனும் இல்லை.

நியாயமற்ற போர்

தெற்கு நாடுகளுக்கு ஆயுதவிற்பனை செய்பவர்களுக்கு பிரிட்டன் மானியம் அளிக்கிறது. 1993/94-ல் பிரிட்டன் அளித்த ஏற்றுமதி உதவி மானியத்தில் சரி பாதி ஆயுத விற்பனைக்காக அளிக்கப்பட்டது. இந்த மானியங்கள் காலப்போக்கில் ஏழை நாடுகளின் கடன்சுமைகளாய் மாறின. பிரிட்டனுக்கு ஏழை நாடுகள் தரவேண்டிய கடனில் 96 சதவீதம் ஆயுதங்களுக்கானது. பெரும் ராணுவச் செலவினால் ஏழைநாடுகள் கடனாளியாயின. யுத்த அபாயம் நெருங்க நெருங்க கடன்களைத் திருப்பித் தரமுடியாத நிலைக்கு இவை தள்ளப்படுகின்றன. 1960-லிருந்து 1987 வரையிலேழை நாடுகள் கிட்டத்தட்ட 400 பில்லியன் டாலர்கள் ராணுவதளவாடங்களுக்காகக் கடன் வாங்கியுள்ளன.

1980-ல் உச்சத்தை எட்டிய ராணுவ வணிகம் 1980-களின் பின்பகுதியில் சரியத் தொடங்கியது. பெரும் ராணுவச்செலவுகள் செய்த ராணுவ சர்வாதிகாரிகள் இப்போது அதிகாரத்தில் இல்லை. இன்றைய அரசுகள் ராணுவதளவாடங்கள வாங்காவிடினும், பழைய கடன்சுமைகள் உள்ளன.

கடன்கள் யுத்தத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஏழைநாடுகள் கடன் தொல்லையால் மேலும் ஏழையாகும்போது, மக்கள் போராடத் தொடங்குகிறார்கள். வன்முறை பெருகிப் போராய் உருமாற்றம் பெறுகின்றன. 1980-ல் கடன் பிர்சைனை உச்சமடைந்தபோது மூன்றாவது உலக நாடுகளில் யுத்தங்கள் மூண்டன. போர் அபாயம் பெருகியது.

Series Navigation