இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி

This entry is part of 29 in the series 20020722_Issue

மஞ்சுளா நவநீதன்


அத்தியாயம் 6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி

‘இசுலாமியர்கள் மற்றும் தலித்களின் வாக்குகளையும் கூட விட்டு விடாமல் பொறுக்கிச் சேகரித்துவிடவேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனா போன்ற அதன் தோழமைக் கட்சிகளும் குறியாய் உள்ளன ‘ என்பது இந்த அத்தியாயத்தின் முதல் வாக்கியம். ‘பொறுக்கிச் சேர்த்துவிட ‘ என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கவனியுங்கள். பாரதீய ஜனதா கட்சி மட்டுமல்ல எந்தக் கட்சியும் எவருடைய வாக்கையும் கோரலாம் என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. நீ முஸ்லீம் அதனால் நீ பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்ற கோட்பாடும், நீ இந்து அதனால் பாரதீய ஜனதா கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற கோட்பாடும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

முஸ்லீம்களின் வாக்கு வேண்டுமெனில் பாரதீய ஜனதா தம்முடைய அடிப்படைக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவேண்டும் அது முடியாது என்பது மார்க்ஸின் வாதம். அதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஹஜ் போவதற்காகப் பயணப்படும் பிரயாணிகளின் விமானச் செலவில் இந்திய அரசாங்கம் ஒரு பகுதியை அளிப்பது வழக்கம். பாரதீய ஜனதா இதனை எதிர்த்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஹஜ் உதவிப்பணத்தை அதிகரித்தது.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை பாரதீய ஜனதா எதிர்த்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீருக்கு சுயாட்சி மற்றும் அதிக அதிகாரங்கள் வழங்க ஒரு குழுவை நியமித்திருக்கிறது. ஈராக் , ஈரான் , சூடான் போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணம் என்ன ?

இரண்டு காரணங்கள் . ஒன்று : இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. வாக்கு வங்கிகள் என்று எல்லோரும் பேசினாலும், இது மாறிவரும் வங்கி தான். ஜெயலலிதா ஆசியுடன், தலித் எழில்மலை பொதுத் தொகுதியில் ஜெயித்ததும் இங்குதான் நடந்தது. வாக்கு வங்கிகளைத் திருப்தி செய்தால் போதும், இவர்கள் எமக்குத் தான் வாக்களிப்பார்கள் என்ற நிச்சயத்தன்மை இந்தியாவில் இல்லாமல் ஆகிவருகிறது. இது ஒரு நல்ல விஷயம் . இது இருக்கும் வரையில் ஆர் எஸ் எஸ் பரந்துபட்ட ஆதரவைப் பெற முடியாது என்பது தான் உண்மை.

இரண்டாவது காரணம் : அரசியல் யதார்த்தம். ஆங்கிலத்தில் Realpolitik என்று சொல்வார்கள். எண்ணெய் வளம் மிக்க நாடுகள் அரபு நாடுகள் அதில்லாமல். இந்தியாவின் பத்துசதவீத மக்கள் முஸ்லீம்கள் . அவர்களின் நம்பிக்கையைச் சேகரிக்காமல் வாக்குச் சேகரிக்க முடியாது. வாக்குச் சேகரிக்காமல் ஆட்சிக்கு வரமுடியாது. இது தான் நிஜம்.

இந்தப் புத்தகத்தின் பாதிப் புத்தகம் கடந்து 75ம் பக்கத்தில் முதன் முறையாக பா ஜ க இந்துக்களின் பிரதிநிதியாக முன்னிற்கிறது என்று வருகிறது. ‘மேற்கண்ட கூற்றில் அவர் நாங்கள் என்று சொல்வது ஒட்டுமொத்த ‘இந்துக்கள் ‘ என்ற பொருளில் ‘ . ‘ ‘ இப்போது தான் முதல் முறையாகச் சொல்கிறார்: ‘ பெரும்பான்மையான இந்து மக்கள் பாபர் மசூதி இடித்ததை ஆதரிக்கவில்லை.ஆனாலும் பா ஜ க வின் பார்வையின் படி இந்துக்கள் என்பதும், பா ஜ க என்பதும் ஒன்று ‘.

பாதிப் புத்தகம் எழுதியபின்பு தான் மார்க்ஸிற்கு இந்த உண்மையைச் சொல்லத் தோன்றியிருக்கிறது. இந்த உண்மையைச் சொன்னவுடன், இந்து மதம் பற்றியும், இந்து மதம் எப்படி தலித்களுக்கு எதிரானது என்பது பற்றியும் சொன்ன பொய்களையெல்லாம் மறு பரிசீலனை செய்து, அவர் திரும்பப் பெற்றிருக்கவேண்டும் இல்லையா ? அதுதான் இல்லை. மார்க்ஸ் என்ற கிறுஸ்தவருக்கு, இந்து மதத்தை அழிப்பது தான் லட்சியம் அல்லவா ? இந்து மதத்தை பா ஜ க பிரதிநிதித்துவ படுத்தமுடியாது என்றால், இந்து மதத்தின் மீதான மார்க்ஸின் தாக்குதல்கள் எல்லாம் வெறும் புரட்டு அல்லவா ? ஒட்டுமொத்த இந்து சமுதாயமே தலித் விரோத, பிராமணமயமாக்கப் பட்ட சமூகம் எனப்து பொய்யல்லவா ? இதனை அவர் அழுத்தம் தந்து சொல்ல வேண்டாமா ?

அவர் சொல்ல மாட்டார். ஏனென்றால் இந்தப் புத்தகம் பா ஜ க மீதான் விமர்சனமாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது என்பதில் அவருக்குக் கவனம். பெரும்பான்மையான இந்துக்கள் முஸ்லிம் விரோதிகள் எல்ல என்ற உண்மையும் சொல்லப் பட்டுவிடக்கூடாது என்பதில் அவருக்குக் கவனம்.

மார்க்ஸின் பிரசினையே இது தான். மார்க்ஸிய, வர்க்கப் பார்வையை இழந்து சாதியப் பார்வையைக் கைக்கொண்டபின்பு தம்முடைய கோட்பாட்டுக்குத் தக்க இந்திய யதார்த்தத்தை வளைக்க வேண்டும். அப்படி வளைக்க முடியாதபோது நழுவிவிடவேண்டும்.இந்துமத எதிர்ப்பைத் தான் வேதவாக்காய்க் கொள்ள வேண்டும். அதற்கு செளகரியமில்லாத உண்மைகளைப் பூசி மெழுகிவிடவேண்டும்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation