இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்

This entry is part of 22 in the series 20020707_Issue

மஞ்சுளா நவநீதன்


அத்தியாயம் 5- இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்

இந்த அத்தியாயத்தில் இந்துத்துவ சக்திகள் எப்படி ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து எப்படி இஸ்லாமிய எதிர்ப்பில் ஈடுபடுகின்றன என்பது இந்த அத்தியாயத்தின் சாராம்சம். கம்யூனிச அபாயத்திற்குப் பதிலாக ‘இசுலாமிய அடிப்படைவாத விரிவாக்கம் என்பதை இத்தகைய புதிய எதிரியாக அமெரிக்கா படைத்துக் காட்டுகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கிழக்கு வங்கம் ஆகிய இசுலாமிய நாடுகளிக்கிடையில் போர்த்தந்திர ரீதியில் முக்கிய மையமாக விளங்கும் இந்தியாவில் இசுலாமியத்திற்கெதிரான இந்துத்துவ அரசு ஒன்று உருவாவதை அமெரிக்கா வரவேற்கிறது. தனது நீண்ட நாள் தோழமை நாடாகிய பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா ஒரு சமயம் எத்தனித்ததை இத்துடன் நாம் இணைத்து நோக்க வேண்டும். போஸ்னியா போன்ற இடங்களில் இசுலாமியர் இலட்சக் கணக்கில் கொல்லப்படுவதை ஏகாதிபத்தியங்கள் கண்டு கொள்ளாது இருந்தது கவனிக்கத் தக்கது. ஈரான், ஈராக் முதலான நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் முனைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , பொருளாதாரத் தடைகள் முதலியனவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். ‘

இது அகில உலக அரசியல் மற்றும் நாட்டுறவுகளைப் பற்றிய மிக எளிமைப் படுத்தப்பட்ட நோக்கு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லீம் தீவிரவாதத்துக்கு அனுசரணையானவர்கள் சொல்லியிருக்கும் வாதம் இது. ஆனால் உண்மை என்ன என்பதைப் பார்ப்போம். சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைவாத நாடு. ஆஃப்கானிஸ்தானின் அடிப்படைவாதத்தை முதன்முதலில் ஆதரித்த நாடு இது. அமெரிக்காவுடன் மிகுந்த தோழமை பூண்ட நாடுகளில் ஒன்று இது. அமெரிக்கா இஸ்ரேலுடன் நல்லுறவு கொண்டிருப்பதைப் பற்றி இந்த நாட்டுக்குக் கவலையில்லை. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுடன் கடந்த ஐம்பது வருடங்களாகக் கை கோர்த்து நிற்கிறது அமெரிக்கா. ஆஃப்கானிஸ்தானில் போரிட இஸ்லாமியத் தீவிரவாதத்தை பாகிஸ்தானின் அரசாங்க உளவு நிறுவனத்துடன் சேந்து வளர்த்தெடுத்த நாடு அமெரிக்கா. ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடங்குவோம் என்று சொன்னவுடன், உடனேயே ஆதரவுக் கரம் நீட்டிய நாடு பாகிஸ்தான். இந்தியா இந்த யுத்தத்தில் அமெரிக்காவுடன் சேரக் கூடாது எங்களுக்குத்தான் உரிமை என்று தொலைக்காட்சியில் பகிரங்கமாக பாகிஸ்தானின் சர்வாதிகாரியே அறிவித்தார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா தரும் பலத்த ஆதரவிற்காக , அமெரிக்க எதிர்ப்பை பாகிஸ்தான் கைக்கொண்டதா ? இல்லை. முஸ்லீம் நாடுகள் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஈரான் ஈராக்குடன் மோதல் நடந்த வண்ணம் இருக்கிறது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது. அதன் பின்பு குவைத்துக்கு ஆதர்வாக அமெரிக்கா களம் இறங்கி ஈராக் மீது இப்போது வெறுப்பைப் பொழிந்து கொண்டிருக்கிறது.

மேல் நாடுகள் கோசோவோவில் முஸ்லீம்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி யுத்தத்தில் ஈடுபட்டன. முஸ்லீம் நாடுகள் வெறுமே கைகட்டி நின்றன. முஸ்லீம்களுக்கு எதிராகச் செயல்பட்ட மிலோசெவிச் உலக நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டிருக்கிறார். ஆனால் தம்முடைய மக்களையே கொன்று குவித்த பாகிஸ்தானின் யாஹியா கான், அமெரிக்காவின் பலத்த அரவணைப்புக்கும் ஆதரவிற்கும் ஆளானவர். பின்பு வந்த ஜியா-உல் ஹக் காலத்தில் தான் பாகிஸ்தானில் அடிப்படைவாதம் வளர்ச்சி பெற்றது. ஜியாவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்த நாடு அமெரிக்கா. மேல் நாடுகள் முஸ்லீம்களுக்கு ஆதரவா இல்லையா என்பதை படிப்பவர்களே தீர்மானிக்கட்டும்.

இந்தியாவிற்கு எதிராக, இந்திய வெளியுறவு நலனுக்கு எதிராகத்தான் அமெரிக்கா எப்போதுமே செய்லபட்டு வந்திருக்கிறது. அதனால் அமெரிக்கா இந்து எதிர்ப்பு நாடு என்று எவரும் சொன்னதில்லை. ஆனால், இன்று இந்தியாவுடன் தோழமை பூண்டதால் அமெரிக்கா திடாரென்று இந்துத்துவ சார்பான நாடாக ஆகிவிடுகிறது. இஸ்லாமிற்கு எதிரான நாடு என்று சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வளவு பெரிய மோசடி இது.

இரண்டாவதாகக் கருதப்படுவது அரசு, ராணுவம் நிதித்துறை ஆகியவற்றில் இந்துத்துவம் ஊடுருவுவது. பொதுவாகவே இந்தியாவில் தம்முடைய கட்சிக்கு ஆதரவான ஆட்களை நிர்வாகத்தில் இட்டு நிரப்புவது என்பது வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒன்று தான். இது இந்துத்துவாவின் செயல்பாடு என்று சொல்ல முடியாது. பொதுவாகவே அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் அன்றைய அரசுக்குச் சாதகமாகத் தான் நடந்து கொள்வார்கள். இந்த அரசு போய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் , காங்கிரசுக்கும் இவர்கள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். காங்கிரஸ் ஆட்சியில் நிர்வாகத்துறையில் இருந்தவர்கள் பலரும் காங்கிரசில் இணைந்ததுண்டு.

இசுலாமியர்க்கு எதிரான குற்றங்கள் பா ஜ க ஆட்சியில் அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான். பா ஜ கவும், ஆர் எஸ் எஸ்சும் வலுப்பெற்று வருகின்றன. இவற்றிற்கு எதிரணியில் இருக்க வேண்டிய சக்திகள் , பிராந்திய சக்திகள் பா ஜ கவின் ஆதரவிற்காக, இந்த நசிவு சக்திகளைச் சகித்துக் கொள்கின்றன. இது ஏன் என்று காண வேண்டும். முக்கியமான காரணம் – காங்கிரசின் ஆளும் முறைமை தான். பா ஜ க ஆட்சிக்கு வந்ததன் பின்பு, கூட்டணி ஆட்சிதான் என்று முடிவான பின்பு, பிராந்தியக் கட்சிகளை அரவணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்கலாயிற்று. ஆனால் , பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக, ஆட்சியமைக்க வாய்ப்புள்ள காங்கிரஸ் எந்தவிதமான அதிகாரப் பகிர்விற்கும் தயாரில்லை. இது தான் முக்கியமாய் பிராந்தியக் கட்சிகளை பா ஜ க நோக்கி உந்தித் தள்ளியது. இந்த உண்மையை உணர்ந்தால் தான் பின்னாட்களில் பா ஜ கவை எதிர்து ஓர் அணி கட்டுவிக்க முடியும். இந்த உண்மையை காங்கிரஸ் உணர்ந்ததாய்த் தெரியவில்லை. ஒரு விதத்தில் பார்க்கப் போனால் , பா ஜ கவின் தீவிரவாதத்தினை மழுங்கடிக்கவும் இந்தக் கூட்டணி பயன் பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தைச் சொல்லாமல் மார்க்ஸ் மீண்டும் வாய் மலர்கிறார்: ‘உடனடியான அரசியற் செயல்பாடுகள் எகிற வகையில் , சிறுபான்மையோர் , தாழ்த்தப் பட்டோர், சனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். அம்பேத்கர் வழியில் வருணாசிரமத்திற்கு எதிரான உணர்வுகளை ஒன்று குவித்தல், பெரியார் வழியில் நின்று இந்துத்துவ மதிப்பீடுகள் , புனிதக் குறியீடுகள் ஆகியவற்றைச் சிதைத்தல்,வேலை இல்லாத் திண்டாட்டம் , ஏழ்மை ஆகியவற்றின் காரணமாக ஏகாதிபத்தியச் சார்பு நிலைக்கெதிரான போராட்டங்களில் இளைஞர்களை ஒன்றிணைத்தல், போன்றவை நமது உடனடிச் செயல் திட்டங்களாகின்றன. வகுப்புக் கலவரங்களில் இசுலாமியரது உரிமை, உயிர், உடைமை ஆகியவற்றைப் பாதுகாப்பது சனநாயக சக்திகளின் கடமை. ..இந்துத்துவத்திற்கெதிரான கண்டனச் செயல்பாடுகள் என்பன கோபத்தின் வடிகால்களாக அமையாமல், வகுப்புவெறிக்கு எதிரான செயலை நோக்கி ஆற்றல்களைக் குவிப்பதாக அமைய வேண்டும். இந்த அம்சத்தில் இந்துத்துவத்திடம் கூட நாம் பாடம் கற்க வேண்டியிருக்கிறது. ‘

முன்பே இது போன்ற பெரும் முழக்கங்கள் – வெறும் முழக்கங்கள் என்றும் சொல்லலாம் – பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வேண்டுமானால் அம்பேத்கரை இழுத்து அணைத்துக் கொள்வது எதற்காக ? அவர் இந்து மதத்தை கண்டனம் செய்தார் என்பதற்காக. சரி, அம்பேத்கர் கண்டனம் செய்ததற்கான காரணங்கள் மிக வலுவானவை. இன்று அவற்றில் 90 சதவீதம் காரணங்கள் அடிபட்டுப் போய்விட்டன. தலித்கள் மீது நடக்கும் அநீதி தொடரத்தான் செய்கிரது. ஆனால் சட்ட ரீதியாகவும், அரசாங்கச் சார்பிலும் அவை நிகழ்வதில்லை. இந்து மதம் என்று ஒன்று மேலிருந்து இந்த அநீதிகளை நடத்திக் கொண்டிருக்கிறது என்ற பாமரத் தனமான ஒரு புரிவினை ஒத்த பார்வையுடன் மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிச் செல்கிறார்கள். ஆனால், பா ஜ க அரசு கூட வேலைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொண்டிருக்கும் முன்னுரிமையில் கை வைக்கவில்லை. அம்பேத்கர் மீது நிகழ்ந்த அநீதிக்கு அம்பேத்கரின் எதிர்வினை மிகச் சரியான ஒன்று. ஆனால் இன்று மார்க்ஸ் போன்றவர்கள் நடத்தும் எதிர்வினை சாரமற்ற நாடகமே. அம்பேத்கருக்கு நிகழ்ந்த அநீதியின் முனையளவு கூட மார்க்ஸ் போன்றவர்களைத் தீண்டியதில்லை. இருந்தும் அம்பேத்கரை ஏன் இவர்கள் உவப்புடன் முன்னிறுத்துகிறார்கள் ? அவர் இந்துமத எதிர்ப்பாளர் என்பது தான். சரித்திரம் ஒரு முறை துன்பியல் நாடகம் என்றால் மறுமுறை கேலிக் கூத்து என்று சொன்னவர் கரல் மார்க்ஸ்.அ .மார்க்ஸிடம் கேலிக்கூத்தாய்த் தான் இந்துமத எதிர்ப்பு வெளிப்படுகிறது. ஆனால், அம்பேத்கருடைய இந்துமத எதிர்ப்பு ஏன் இன்னமும் தலித் மக்களிடம் கூடக் காலூன்ற முடியவில்லை ? அதன் கலாசாரக் காரணங்கள் என்ன ? வரலாற்றுக் காரணங்கள் என்ன ? ஒற்றைப் பரிமாணத்தில் இந்து மதத்தைக் கட்டுவிக்க மார்க்சும், ஆர் எஸ் எஸ்சும் முயன்றாலும் (இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் இடது சாரிகளும் , ஆர் எஸ் எஸ்-சும் ஒரே மாதிரி தான் ) மக்கள் இந்த ஒற்றைப் பரிமாணக் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து நிராகரித்துத் தான் வந்திருக்கிறார்கள். மார்க்ஸின் இன்றைய, இப்படிப் பட்ட குருட்டுத்தனமான இந்து மத எதிர்ப்புத்தான் இந்து மக்களை – ஆர் எஸ் எஸ் மீது வெறுப்புக் கொண்ட உண்மையான பாமர, மற்றும் படிப்பறிவும் நியாய உணர்வும் கொண்ட இந்துக்களை– ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளை நோக்கித் துரத்துகிறது. இந்துக்களில் நூற்றில் ஒருவர் கூட ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் இல்லை. ஆனால், இந்த உண்மையை முன்வைத்து ஆர் எஸ் எஸ்சுக்கு எதிராக பரந்த அணி கட்டுவிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், நியாய உணர்வுள்ள இந்துக்களையும் உள்ளடக்கி அவர்களின் உணர்வுகளையும் மதித்து அவர்களை மதவாதத்திற்கு எதிராகத் திருப்ப முற்சி செய்யாமல், எல்லா இந்துக்களும் இந்துத்துவ ஆட்கள் என்ற பாணியில் எழுதிச் செல்லும் மார்க்ஸ் போன்றவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. இந்து மதம் என்ற கருத்தை இழிவுபடுத்தி இந்து என்று தன்னைச் சொல்லிக் கொள்வதே இழிவு என்று மக்களை உணரவைப்பது தான். ஆனால் இது ஒன்றும் நடப்பதாய்த் தெரியவில்லை.

***

Series Navigation