’20ஆம் நூற்றாண்டில் சீனா-இந்தியா போட்டி ‘ : ஜான் டபிள்யூ கார்வர் எழுதிய புத்தகத் திறனாய்வு

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

ஸ்ரீராம் சுந்தர் சாவுலியா


(A review of John W Garver ‘s Protracted Contest. Sino-Indian Rivalry in the Twentieth Century. University of Washington Press, 2001. ISBN- 0-295-98074-5. Price US $ 44.56. 447 pages)

சிறந்த சீன ஆய்வாளரான ஜான் கார்வர் கடந்த 15 ஆண்டுகளாக எவ்வாறு சீனா-இந்தியா உறவு இருந்துவந்திருக்கிறது என்பதை பற்றி முழுமையான ஆய்வறிக்கைக்காக வேலைசெய்து வந்திருக்கிறார். இறுதி வடிவம் அவரது விடாமுயற்சிக்கும், உழைப்புக்கும், எடுத்துக்காட்டாக இருக்கிறது. இவரது இந்தப்புத்தகம், உலகத்தின் இரண்டு மிகப்பெரிய நாடுகளில் இருக்கும் பெரும் மக்கள் தொகையும், அவர்களது வெகு வேகமாக வளரும் பொருளாதாரமும் கொண்ட இந்த இரு நாடுகளிடையே , அடிக்கடி மாறும் உறவுகளையும் பற்றிய முந்தைய எல்லா புத்தகங்களை விடவும் சிறப்பானதாக இருக்கிறது. டிராகனுக்கும் மயிலுக்கும் இடையே நடக்கும் இந்த கதை பல ஆராய்ச்சியாளர்களை கவர்ந்திருந்தாலும், அதன் எல்லா முகங்களையும் ஒன்றுவிடாமல் விவரமாக விளக்க இது போன்ற ஒரு புத்தகம் வந்ததில்லை. (இந்தப் புத்தகத்துக்கு, வாங் ஹோங்வேய், ப்ரம்மா செல்லானி, லியோ ரோஸ் போன்றவர்களும் பங்களித்திருக்கிறார்கள்)

Intersecting spheres of influence

சீன தேசீயவாத வரலாறு, அதன் பிரதேசங்களாக காஷ்மீர், நேபாள், பூடான், சிக்கிம் ஆகிய அரசுகளையும், இந்தியாவின் வடகிழக்குப் பிரதேசங்களையும், பர்மா, இந்தோசீனா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றையும் பேசுகிறது. இந்திய கலாச்சார தேசியவாதத்தின் படி, நேபாளம், திபெத், பர்மா, இந்தோசீனா, தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றை இந்தியாவின் கலாச்சார பேரரசின் பகுதிகளாகப் பார்க்கிறது.

இந்த முரண்பட்ட வரலாறுகளை தீவிரப்படுத்துவது கருத்துருவப் பிரசினைகள். மாவோயிஸ சீனா, இந்திய தலைவர்களின் ‘பிற்போக்கு வகுப்பு இயல்பையும் ‘ பிரிட்டிஷ் திட்டங்களை நேரு பாரம்பரியமாகப் பெற்ற ‘எதேச்சதிகார மேலாதிக்க விரிவாக்கமாகவும் ‘ பார்த்து சந்தேகப்படுகிறது. இந்தியாவைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் இந்த போக்கு, டெங் காலத்திலோ, டெங்குக்குப் பின் வந்த தலைவர்கள் காலத்திலோ மாறியதாகத் தெரியவில்லை என்று கார்வர் கூறுகிறார். இந்தியாவின் மன்ரோ கொள்கை ‘தென் ஆசியாவை தன்னுடைய பிரத்யேக பாதுகாப்பு பிரதேசமாகப் பார்ப்பதை ‘, பீஜிங் ‘இந்தியாவின் சுற்றுநாடுகளோடு சீனா இறுக்கமான உறவு கொள்வதை தடுக்கும் பிராந்திய எதேச்சதிகாரமாக ‘ பார்க்கிறது. (பக்கம் 31)

திபெத் பிரச்னை

1951இல் திபெத் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்து தன்னோடு இணைத்துக்கொண்டது டெல்லியில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. வரலாற்றில் முதல் தடவையாக, நிரந்தரமாக சீனாவின் ஏராளமான படைகள் இந்தியாவின் வடக்கு எல்லையில் குவிக்கப்பட இருப்பதையும், இதுவரை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ‘இடைநிலப் பகுதியாக ‘ (buffer zone) இருந்துவந்த திபெத் விழுங்கப்பட்டதையும் கண்டு நடுக்கம் வந்தது. பல இந்தியர்கள் இந்தியாவின் பாதிப்புக்குள்ளான திபெத்திய லாமா கலாச்சாரம் அழிக்கப்படுவதையும், தொடர்ந்து திபெத்தின் தனிச்சிறப்பான கலாச்சாரம் பீஜிங்கால் அழிக்கப்படுவதையும் கண்டு முறையிட்டார்கள். (நேருவின் வார்த்தைகளில், ‘திபெத், கலாச்சார ரீதியில், இந்தியாவின் ஒரு பிரிவு. ‘) ஆனால் சீனாவின் பார்வையில், திபெத்திய கலாச்சாரம் ‘சீர்திருத்தப்பட்டு ‘ , தன்னுடைய ‘நிலப்பிரபுத்துவ சுரண்டலிலிருந்து ‘ விடுதலை தரப்பட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி கனவு காண்பது போல, சீன மைய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு, சோசலிஸ சமூகமாக மாறவேண்டும்.

திபெத்தின் கனிம வளமையும் (சீனாவின் கனிமங்களில் சுமார் 40 சதவீதம் திபெத்தில் இருக்கிறது) அதன் ‘போருக்கு இணக்கமான இருப்பிடமும் ‘ (strategic ) திபெத்தை மீண்டும் 1951 நிலைக்கு திரும்பவிடக்கூடாது என்று சீனாவின் வைராக்கியத்தை உறுதி செய்தது. 1958இலிருந்து அந்தக் கோரிக்கையையே ‘திபேத்திய சுயாட்சி ‘ என்ற பெயரில் பிரச்சாரம் செய்யவும் இந்திய அரசாங்கங்கள் முனைந்தன. 1962 சீனா-இந்தியா போர், மாவோசேதுங் அவர்களது வார்த்தையில், ‘மக்மஹன் கோட்டைப்பற்றியதல்ல, திபெத் பிரச்னை பற்றியது ‘ என்று குறிப்பிட்டார். ஏனெனில், இந்தியாவும் அமெரிக்காவின் சிஐஏவும் இணைந்து திபேத்திய சுதந்திரப்போராட்டத்தை உருவாக்கி இருக்கின்றன என்று அவர் நம்பினார் (சிஐஏவின் திபேத் ரகசியப்போர், (The CIA ‘s Secret War in Tibet) என்ற புத்தகம், உண்மையிலேயே இந்தியாவும் சிஐஏவும் இணைந்து பல ரகசிய வேலைகளை அப்போது செய்தன என்று உறுதிப்படுத்துகிறது.) சீனாவின் இனப் பிரச்னைகளை தீவிரப்படுத்துவதற்கும், சீனாவை இந்தியாவோடு இணக்கமாக இருக்கச்செய்வதற்கும், திபெத்திய பிரச்னையை இந்தியா பயன்படுத்திவந்தது. ஆனால், திபேத்திய பிரதேசத்தில் ஏராளமான ஹன் சீனர்களை குடியேற்றியதும், பீஜிங்குக்கும், திபெத் தலைநகர் லாசாவுக்கும் இடையே சிறந்த தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு இணைத்ததும் , ‘திபெத் எதிர்காலத்தில் சுயாட்சியுடன் இருக்கும் என்பது ஒரு கனவாக மாறிவிட்டது. அது கனவென்றால், திபெத்தில் இருக்கும் இந்தியாவின் கலாச்சாரக் கூறுகள் இறுதியாக அழிக்கப்பட்டவைதான் என்பதும் பொருளாகிவிட்டது ‘ (பக்கம் 71)

எல்லைப் பிரசினை

அக்ஸாய் சின் பகுதி – ஜம்மு காஷ்மீருடன் சேர்த்து – இந்தியா தனது என்று சொந்தம் கொண்டாடினாலும், அரசியல் எல்லைவகுப்பின் காரணமாகவும், உத்தியளவிலும் , சீனாவிற்கு மிக முக்கியம். மேற்கு திபெத் மீது கட்டுப்பாடும், அதனால் திபெத் மீது கட்டுப்பாடு செலுத்தவும் இது சீனாவிற்கு அவசியம் ஆகிறது. அக்ஸாய் சின் என்ற கரடுமுரடான பிரதேசத்தின் ஊடான நெடுவழிப் பாதையும், திபெத்திற்குச் செல்லும் வழியும் இடப்பட்டுள்ளது. அக்ஸாய் சின் பகுதிக்கு இந்தியா உரிமை கொண்டாடுவது, திபெத் மீது மறைமுக உரிமை கொண்டாடி, மக்கள் விடுதலைப் படையை திபெத்திலிருந்து விரட்டச் செய்யும் முயற்சி என்று சீனா கருதுகிறது.

கிழக்குப் பகுதியில் எல்லைத் தகராறு, இமாலயத்தின் 90,000 சதுர கிலோமீட்டர்கள் உள்ள ‘தென் சரிவுப் பகுதி ‘ – இந்தியாவின் அருணாசலப் பிரதேஷ் ஆகும். இந்தியா ‘சிலிகுரி கழுத்துப் பகுதி ‘ என்றழைக்கப் படும் வடகிழக்குப் பகுதியில் உள்ள பிரிவினை இயக்கங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க தேவைப்படும் மிக முக்கியமான பகுதி என்று இந்தியா கருதுகிறது. 1962-லிருந்து 1979 வரையில் இப்படிப் பட்ட பிரிவினை இயக்கங்களுக்கு வெளிப்படையான ஆதரவை சீனா அளித்து வருகிறது.

மேற்குப் பகுதி-கிழக்குப் பகுதி எல்லைத் தகராறுகளில் உள்ள ஒப்புமையைக் கண்டு, 1960-இல் செள என் லாய் , பகுதிகளைப் பரிமாறிக் கொள்ளலாம் என்று கேட்ட போது, நேரு மறுத்துவிட்டார். இந்தியாவின் பொதுஜனக் கருத்து , இதை ஒப்புக் கொள்ளாது என்று நேரு சொன்னார். ( ‘அக்ஸாய் சின்னை சீனாவிற்குக் கொடுத்தால், நான் இந்தியப் பிரதமராய் இருக்க முடியாது ‘. ) இது மட்டுமல்லாமல், அக்ஸாய் சின்னைக் கொடுத்தால் சீனா திருடிக் கொண்ட பகுதியைச் சீனாவிடமே கொடுப்பது போலாகும்,அதற்குப் பதில் இந்தியா திரும்பிப் பெறுவது ஏதுமில்லை. வடகிழக்குப் பிராந்தியத்தின் மீது சீனா முன்வைக்கும் உரிமையை வலியுறுத்தாது என்றாலும், ஏற்கனவே இப்பகுதி இந்தியா வசம் தானே உள்ளது. 1980-ல் இந்தியா மறுப்புத் தெரிவித்ததன் பின்பு, கிழக்குப் பகுதி பற்றிய எல்லைப் பிரசினை தான் மிக முக்கியமான பிரசினை என்று அழுத்தமாய்க் கூறலாயிற்று. 1987-ல் சும்துராங் சு என்ற இடத்தில் சிறிய அளவில் ஒரு போரும் நடந்தது. 1967-க்குப் பின்பு நடந்த முதல் இந்திய-சீனப் போர் இது. தீர்வு காணப்படாத எல்லைப் பிரசினைகள் பேச்சு வார்த்தைகளில் இன்று வரை முக்கிய அங்கம் வகித்து வருகின்றன.

மூன்றாவது உலகம் : ஒரு பிரதேசச் செல்வாக்கிற்கான போர்.

1945-க்குப் பிறகு காலனியாதிக்கம் முடிவுக்கு வர வர, சீனாவும் இந்தியாவும் பெருமைக்காகவும், செல்வாக்குக்காகவும் , போட்டியிட்டு வந்திருக்கின்றன. வழிமுறைகளும், செயல்திட்டங்களும் வேறு வேறுதான் என்றாலும். 1947-ல் முதல் ஆசிய உறவு மாநாட்டில் இந்த அமைப்பின் தலைமை நிலையம் தில்லியில் இருப்பதா அல்லது பீஜிங்கில் இருப்பதா என்பதே பிரசினையாய் இருந்தது. உலகின் ‘மூன்றாவது அணி ‘யைத் தலைமை தாங்கி நடத்த விரும்பிய இந்தியாவின் ஆசையில் மண் விழுந்தது. மாவோயிச சீனா ‘ஆப்பிரிக்க-ஆசிய ஒற்றுமை ‘ என்ற பெயரில் நேருவின் அணிசேராக் கொள்கைக்கு எதிரணி கட்டத் தொடங்கியது. ‘புரட்சிகர அணி ‘க்கும், ‘ஏகாதிபத்தியச் சார்பு அணி ‘க்கும் வேறுபாடு காண வேண்டும் என்று சொல்லி, இந்தியா மேலை நாடுகளுக்கு, பின்னாளில் ரஷ்யாவிற்கு மறைவிடம் தந்ததாய்ப் பழி சுமத்தியது. சீனாவின் ‘ஆப்பிரிக்க-அசிய ஒற்றுமை ‘ ‘பீஜிங்-ஜகார்த்தா-ராவல்பிண்டி ‘ என்ற அச்சில் சுழலத் தொடங்கியது. நேரு இந்த அச்சு ‘சீனாவின் இந்திய எதிர்ப்பை முதன்மைப் படுத்திய முக்கோணம் ‘ என்று வர்ணித்தார் (பக்-123). 1962-ல் சீனா நடத்திய யுத்தம் , ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளில் தன் செல்வாக்கை அதிகரிக்க நடத்திய ஒன்று என்று இந்திய அறிவாளிகள் கருதினர்.

1990-களில் இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டும் என்று குரல் எழுப்பிய போது, சீனா வெறுப்பைக் கக்கியது. ‘இந்தியாவோ, ஜப்பானோ உறுப்பினர் ஆவது சீனாவிற்குப் பின்னடைவு.. சீனா நெடுங்காலமாய் பெரும் வல்லரசாய் இருந்து வருவது தடைப்படும்..சீனா தான் ஆசியாவின் ஒரே வல்லரசு எனக் காண வேண்டும். ‘ (பக் 143). மூன்றாவது உலகத்திலிருந்து நிரந்தர உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டால், ஐ நா பாதுகாப்பு கவுன்சில் போல ஒரு மனதாய் முடிவு செய்யவேண்டும் என்றும் கோரியது. இதன் பொருள் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரான சீனா ‘வீட்டோ ‘ செய்து இந்தியாவை உறுப்பினராக்காமல் தடுக்கலாம் என்பதாகும்.

இமாலயப் பகுதிகளில் உரசல்கள்

1959-29-ல் நேபாளம் பற்றி சீனாவின் பிரசாரம் இது : ‘ சிறிய நேபாளம் துணிவுடன் இந்தியாவை எதிர்ப்பது மெச்சத் தக்கது. ‘ (பக் 143). நேபாளத்தில் ஜனநாயகம் காலூன்றுவதை இந்தியா வரவேற்றபோது , நேபாளத்தின் அரசர்களின் சார்பாக நிலைபாட்டை சீனா எடுத்தது. இந்தியாவைப் பற்றிக் கவலைப் படாமல், நேபாளத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. 1960-களிலும், 1988-இலும், நேபாளமும் சீனாவின் மக்கள் சேனையும் உளவுத்துறையில் ஒத்துழைப்பு அளித்துக் கொண்டன. காத்மண்டு-லாசா நெடுஞ்சாலையும், மாவோயிஸ்டுகளைத் தூண்டிவிட்டு கலவரங்கள் நடத்த சீனா உதவியது. இதனால் இந்தியா பெரும் கவலை கொண்டுள்ளது. கடந்த நாற்பது வருடங்களாக சீனா சுற்றிவளைத்துக் கொண்டு வருவது பற்றி இந்தியா அச்சம் கொண்டுள்ளது.நேபாளத்தில் தொடங்கி இந்தியா-சீனா போட்டி வளர்ந்து கொண்டே தான் போகும் என்பது கார்வட்ரின் கணிப்பு.(பக் 195)

பூடான், சிக்கிம் மீதும் சீனா கொண்டுள்ள உரிமைக் கோரலும் , இந்தியாவுடனான சிக்கலுக்கு இன்னொரு காரணம். திபெத்தை சீனா ஆக்கிரமித்ததன் பின்பு, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட இடம் பறிபோனபின்பு, சிக்கிமின் மதிப்பு இந்தியப் பார்வையில் உயர்ந்தது. சிக்கிமில் முறையாக, ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தி இந்தியாவுடன் இணைத்ததன் பின்னர், இந்தச் சிக்கல் போர வடிவமாகவும் மாறியது. 1967-லும், 1975-லும் எல்லைப் போர்கள் நடந்தன.

பூடானுடன் இந்தியா கொண்டுள்ள ‘சிறப்பான உறவும் ‘ சீனாவின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. ஆசியப் பிரதேசத்தில் மிரட்டும் வடிவில் உள்ள வல்லரசுகள் பஞ்சசீலக் கொள்கைக்கு மாறாக நடப்பதாய் சீனா அறிக்கை விட்டது. இமாலய நாடுகள் பற்றி சீனாவின் பார்வையை இப்படிச் சுருக்கமாய் கார்வர் முன்வைக்கிறார்: ‘இந்தியா ஆதரவு தரும் அரசுகள் பற்றி சீனா மிக அதிருப்தி அடைந்துள்ளது. இது அடிப்படையில் மேலாண்மை நோக்கங்கள் கொண்டது எனவும், சீனாவிற்கும் மற்றும் சிக்கிம் , பூடான், நேபாளம் மக்களுக்கு அநீதியானது என்பது சீனாவின் கருத்து. இந்த அரசுகளை மாற்ற சீனா முனைந்திருக்கிறது. ‘(பக் 186)

சீனா-பாகிஸ்தான் சுமுக உறவு

சீனா பற்றி இந்தியாவின் மிக முக்கியமான புகார் , பாகிஸ்தானை சீனா அரவணைத்துச் செல்லும் போக்குத் தான். சீனாவின் அரசு ஆய்வாளர்கள் ‘ இந்தியா பாகிஸ்தான் பகை தான் சீனா உலக அளவில் மேலாண்மை பெறுவதற்கான போராட்டத்தில் ஒரு பெரும் படிக்கல் ‘ என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (பக் 189) இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் செயல்படுவதை கோட்பாடாகவே வைத்து ஆவன செய்து வருகிறார்கள். 1965-போரின் போது செள என் லாய் ராணுவ உதவி குறித்து தந்த வாக்குறுதிகள் தான் அயூப் கானை உந்தித் தள்ளின. மூன்று நாட்களுக்குள் போர் நிற்காவிட்டால் சிக்கிம் பகுதியாக இந்தியா மீது போர் தொடங்கப் படும் என்ற சீனாவின் மிரட்டல் தான் செப்டம்பரில் இந்தியா போர் நிறுத்தம் மேற்கொள்ளக் காரணம் ஆயிற்று. 1971-யுத்தத்தில் சீனா அந்த அளவு உற்சாகமாகக் குரல் கொடுக்கவில்லை. ‘பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடலாகாது ‘ என்ற முனகலோடு சீனாவின் மறுப்பு நின்று விட்டது. அதற்கு முக்கிய காரணம் ரஷ்யா சீனா மீது தாக்குதல் நடத்தத் தயங்காது , தாக்கினால் என்ன ஆகும் என்ற சீனாவின் அச்சமே. (பக் 213)

டெங் தலைமையேற்றபின்பு சீனா அண்டை நாடுகளுடன் ராணுவரீதியாய் முரண்படுவதைக்காட்டிலும் பொருளாதார ரீதியாய், தாராளமயமாக்கல் கொள்கையை மேற்கொள்வது நல்லதுஎன்ற பார்வை மேலோங்கியது. 1988-ல் ராஜீவ் காந்தி பீஜிங் சென்றதன் பின்பு , சீன பாகிஸ்தான் உறவைப் பற்றியும் இந்தியா பெரிது பண்ணவில்லை. ஆனால் பாகிஸ்தானின் அணுகுண்டு தயாரிப்பிற்கு சீனாவின் உதவி இந்தியாவினால் ஒப்புக் கொள்ளமுடியாததாய் ஆயிற்று. இது வெறும் மேநாட்டுப் பிரசாரம் என்று சீனா மறுப்புத் தெரிவித்தாலும் , இது வெறும் அரசியலே என்கிறார் கார்வர்.(பக் 324)

90களில் காஷ்மீர் பற்றி சீனாவின் நிலைபாடு மிகத் தணிந்துவிட்டிருந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் பகைமை நீடிப்பதில் சீனாவிற்கு மிகுந்த சுயநலம் உண்டு எனப்து கார்வரின் பார்வை. ‘ பாகிஸ்தான் – இந்தியாவிற்கு இடையில் உள்ள பிரசினை முடிவடையாம் இருக்க வேண்டும் எனப்தே சீனாவின் எண்ணம். இது முடிவு பெற்றால், இந்தியா-பாகிஸ்தான் உறவு சீர்பட்டுவிடும், சீனாவின் மேலாண்மைக்கான சாத்தியம் குறையும். காஷ்மீரைப் பொறுத்து இந்தியாவுடன் பாகிஸ்தான் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது தான் சீனக் கொள்கையின் சாரம்சம். ‘(பக் 242)

பர்மா முனை

1950-88-ல் பர்மா (இப்போது மியான் மார்) சீனா-இந்தியாவிற்கிடையில் நடுநிலைமையைத் தீவிரமாய்க் கையாண்டது. சீனா பர்மாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் செய்து வந்த உதவியை நிறுத்தி ராணுவ அரசுடன் அரசியல் மற்றும் ராணுவ அளவில் ஒத்துழைப்புக் கொள்ள ஆரம்பித்தவுடன் பீஜிங்-ரங்கூனிடையே நட்பு மலரத் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர் நடவடிக்கையாக ஆங் சான் சூ குயி-யின் ஜனநாயக இயக்கத்திற்கு இந்தியா ஆதரவு அளித்தது. இதன் பலனாக மியான் மாரின் ராணுவத்துறைகள் மேலும் ஆழமாய் சீனாவுடன் உறவு பூண்டன. சீனாவின் ஆதரவில் மியான்மாரின் ராணுவம் வளர்ந்தது. இராவடி வழியாக கடலுக்குப் பாதை அமைக்கப் பட்டது. தம் செல்வாக்குக் குறைவதைக் கண்ட இந்தியா ரங்கூன் அரசுடன் உறவைச் சீர்செய்து கொண்டது. கார்வர் கூற்றுப்படி ‘ சீனா-மியான்மார் உறவை முறிக்க இந்தியா பெரும் முயற்சி மேற்கொள்ளும். ‘ (பக் 273)

இந்து மகா சமுத்திரத்தில் மேலாண்மை

இந்தியபொருளாதாரத்திலும் சரி, சீனப் பொருளாதாரத்திலும் சரி, இந்து மகா சமுத்திரப் பகுதி வெளிநாட்டு வணிகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருப்பதால், இது புதிய சச்சரவிற்குக் காரணமாகலாம். ஐரோப்பவுடன் சீனா செய்யும் வணிகத்தில் 67 சதவீதம் மலாக்கா ஸ்ட்ரெய்ட்ஸ் , இந்து மகாசமுத்திரப் பகுதி, சூயஸ் கால்வாய் வழியாக நடக்கிறது. இந்தக் கடல் வழிகளில் இந்திய கடற்படை அபாயகரமானது என்று சீன ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவின் ‘கடல்துறை ‘ மற்றும் கடற்படையைக் கொண்டு, இந்து மகாசமுத்திரப் பகுதியைத் திறக்க சீனா முயன்று வருகிறது. இது கருதியே, இந்தியாவும் அந்தமான் நிகோபார் தீவுகளில் , சென்ற மாதத்திலிருந்து , அமெரிக்கக் கடற்படையுடன் இணைந்து பாதுகாவல் மற்றும் வேவு வேலைகளைத் தொடங்கியுள்ளது.

அணுச்சக்தி போட்டி

கார்வரைப்பொறுத்த மட்டில், 1962இல் சீனாவைப்பற்றிய மதிப்பீடுகளை இந்தியா மாற்றிக்கொண்டதின் விளைவே, இந்தியா ஒரு அணுசக்தி வல்லரசாக தன்னை உருமாற்றிக்கொண்டதும், 1964இல் முதல் அணுகுண்டு பரிசோதனை நடத்தியதும். ஆனால், எப்போதும் சீனா இந்தியாவை ஒரு அணுசக்தி வல்லரசாக, அமெரிக்க தரத்திலோ ரஷ்யத்தரத்திலோ பார்த்ததில்லை. கார்வர் இந்த மாறுபட்ட தரிசனங்களை ‘ஒழுங்கீடற்றதாக ‘ காண்கிறார். இந்த ஒழுங்கின்மையால், சீனா இந்தியா அணுசக்தி போட்டி மறைமுகமானதாக ஆகிறது. (அதாவது சீனா ரகஸியமாக பாகிஸ்தானுக்கு அணுகுண்டுகளைத் தருவது). ‘பாகிஸ்தானுக்கு அணுகுண்டுகளைத் தருவதன் மூலம், தென் ஆசியாவில் தனக்கு எதிராக உருவான சக்தி ஒழுங்கின்மையை சரிப்படுத்துகிறது ‘ என்று கார்வர் கூறுகிறார். (பக்கம் 327)1992இல் ஒரு முக்கியமான வேலை செய்தது சீனா. சீனா அணு ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து தொழில்நுட்பமும் கொடுத்து, இத்தொழில்நுட்பத்தில் சுயச்சார்புடைய நாடாக பாகிஸ்தானை உருவாகிய பின்னர், வெகுவேகமாக NPT [Non-Proliferation Treaty] ‘இல் இணைந்தது (பக்கம் 332). அணுகுண்டு வைத்திருக்கும் தன்னிறைவுடைய பாகிஸ்தான்தான் சீனாவின் முக்கிய நோக்கம். அது 1990இல் நிறைவேறியவுடன், டெங் அணுகுண்டு பரப்புவதை தடுக்கும் ஒப்பந்தத்துக்கு கையெழுத்திட்டார்.

இந்தியா 1998இல் போக்ரான் அணுகுண்டு வெடிப்புகளுக்குப் பின்னர், தன்னுடைய முதல் எதிரியாக சீனாவைக் குறிப்பிட்டதை பீஜிங் கண்டித்தாலும், கார்வர் ‘இந்தியாவின் எதிர்ப்புச் சக்திகள் பற்றிய இந்தியச் சிந்தனை சரியானதுதான் ‘ என்று கூறுகிறார் (பக்கம் 339). பாகிஸ்தானுக்கு அதன் அணுகுண்டுகள், மகத்தான சமச்சீரை இந்தியாவுக்கு எதிரான தருகின்றன. இந்தியாவுக்கோ, அதன் அணுகுண்டுகள். அதிரடியான, ஆக்கிரமிப்பு பேராசை கொண்ட சீனாவுக்கு எதிரான சரியான தடுப்பு மருந்து.

உலகத்தின் மிக வலிமையான தேசங்களில் ஒன்றாகவும், சீனாவுக்கு எந்த விதத்தில் இளைய தேசமில்லை என்பதாகவும் மனவியல் ரீதியில் அணுகுண்டுகள் இந்தியாவை வலிமைப்படுத்துகின்றன. 90களில் சீனாவை உலக வல்லரசுகளில் ஒன்றாக அமெரிக்கா அங்கீகரித்ததன் பின்னணியில், ‘சீனாவே அமெரிக்காவுக்கு அடுத்த பெரிய வல்லரசு என்றும், இந்தியா அணுகுண்டு இல்லாத அந்தஸ்துக்கும் அமெரிக்கா தள்ளியதை நிராகரித்ததே ‘ இந்திய அணுகுண்டுகளுக்குக் காரணம் என கார்வர் எழுதுகிறார் (பக்கம் 354).

முடிவுரை

சீன இந்தியா நிலைபாடு 21-ம் நூற்றாண்டில் எப்படி இருக்கும் என்பதற்கு இரு சாத்தியங்களை கார்வர் முன்வைக்கிறார். இந்தியாவின் ஆதரவு நாடுகளை நிலைகுலையச் செய்யாமல் சமாதான வழியில் , இந்தியச் செல்வாக்குப் பிரதேசங்களில் மெள்ள காலூன்றலாம். இரண்டாவது, இந்தியா சீனாவிற்கு ஆதரவளித்து, பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பு மேற்கொண்டு, சீனாவின் கை ஓங்குவதை அனுமதிக்கலாம். கார்வரின் பார்வையில் முதல் அனுமானம் நடைமுறையில் சாத்தியமில்லை – ‘ஏனெனில் தெற்காசியாவில் பீஜிங் சீன அதிகார மையத்தின் வளர்ச்சியைத் தடை செய்து, இந்தியச் செல்வாக்கை அங்கீகரிக்கும் என்று எந்தக் குறிப்பும் இல்லை. ‘ (பக் 374).

சீனாவின் அபார வளர்ச்சியும், ராணுவ பலமும் காணுமிடத்து ‘இந்தியாவே சீன விரிவாக்கத்துக்குத் தடை செய்யாமல் இருப்பது சாத்தியம். ‘ (பக் 377) இருப்பினும், தமது கலாசாரச் சிறப்பும், தனித்தன்மையும், தேசிய மனநிலை மற்றும் குணாம்சமும், குறித்த இந்தியத் தலைவர்களின் புரிவு இவற்றைக் காணும் போது, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை அவர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது தெளிவில்லை. சீனப் பேரரசின் இளையப் பங்காளியாக எப்படி இந்தியா இருக்கமுடியும் என்பது, இந்தியா எதிர்காலத்தில் ரஷ்யா , அமெரிக்காவுடன் கொண்ட உறவின் அடிப்படையில் தான் இறுதியாய்த் தீர்மானிக்கப்படும். தைவானை எப்படி சீனா உள்வாங்கிக் கொள்கிறது என்பதைப் பொறுத்தும், ஜப்பானுடன் சீனா கொள்ளும் உறவும் கொண்டு தான் சீனாவின் நீண்டகாலத் திட்டம் – இந்தியாவைப் பொறுத்து எப்படி அமையும் என்பது தெரியும்.

நீண்டகாலப் போட்டி என்ற இந்தப் புத்தகம், எல்லைகள் குறித்த அரசியல், வரைபடங்களைப் புரிந்துகொள்ளுதல், பட்டியலிடுதல் உத்திகளைக் குறித்த சிந்தனைகள் பற்றி மிகச் சிறப்பான பயிற்சியளிக்கவல்லது. ஆசிய வரலாற்றின் மாணவர்களுக்கும், உலக நிகழ்வுகளை ஊன்றிக் கவனிக்கும் சாமானியர்களுக்கும் இது பயனுள்ள ஒன்று. தனிப்பட்ட சாய்வுகள் எதுவுமின்றி உலக தேச உறவுகளைப் பற்றிய இந்தப் பெருநூல் இனி பல்லாண்டுகளுக்கு பயிலப்படும் – பேசப்படும்.

***

ஆஸியா டைம்ஸ் இதழில் வந்த கட்டுரை

Series Navigation

ஸ்ரீராம் சுந்தர் சாவுலியா

ஸ்ரீராம் சுந்தர் சாவுலியா