பங்களாதேஷில் 1971இல் நடந்த இனப்படுகொலைகள்

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue


கிழக்குப்பாகிஸ்தானில் , இன்றைய பங்களாதேஷில், 1971 நடந்த இனப்படுகொலைகள் யூதர்களுக்கு எதிராக நடந்த ஹோலோகாஸ்ட், ர்வாண்டா இனப்படுகொலைகள், சோவியத் கைதிகள் கொலைகளுக்கு சமானமாகக் கருத வேண்டியவை. இது 20ஆம் நூற்றாண்டில் மிக்குறுகிய காலத்துக்குள் மிக படுபயங்கரமாக நடந்த படுகொலைகள். கிழக்குப் பாகிஸ்தானில் சுதந்திரம் கோரிய சக்திகளை நசுக்க முனைந்த பாகிஸ்தானிய ராணுவம், பல லட்சக்கணக்கான மக்களைக் கொல்ல முயன்று அதில் வெற்றியும் கண்டது.

பின்னணி

200 வருடங்கள் பிரிட்டிஷ் அரசின் கீழ் இந்தியா இருந்தபின்னர், இந்திய துணைக்கண்டத்துக்கு சுதந்திரம் வரும்போது, கிழக்கு பாகிஸ்தானும் மேற்கு பாகிஸ்தானும் ஒரே நாடாகப் பிணைக்கப்பட்டன. மகாத்மா காந்தி மற்றும் பலரால், பிரிவினை எதிர்க்கப்பட்டாலும், வெளியேறும் பிரிட்டிஷ் அரசாலும், பல இந்திய அரசியல் வாதிகளாலும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரிக்கப்பட்டது. 1947இல் நடந்த பிரிவினை சென்ற நூற்றாண்டில் மகத்தான சோகங்களில் ஒன்று. பல லட்சக்கணக்கான மக்கள் மத, இன கலவரங்களில் கொல்லப்பட்டார்கள். இந்துக்கள் பாகிஸ்தானிலிருந்து துரத்தப்பட்டார்கள். முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குத் துரத்தப்பட்டார்கள். இருப்பினும் சிறுபான்மையினர் இந்த இரண்டு தேசங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பிரிவினைக்குப் பின்னர் இருந்தார்கள்.

இந்த அமைப்பு மிகவும் நிலையற்றதாக இருந்தது. இது இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையே இரண்டு பெரும் போர்களுக்கு வித்திட்டது. 1998-99இல் ஏறத்தாழ ஒரு போர் நடக்கவும் காரணமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசமான காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததுதான். பாகிஸ்தானுக்கு இரண்டு சிறகுகள் இந்தியாவின் இரண்டு பக்கங்களிலும் இருந்ததும் பாகிஸ்தானின் பிரச்னைகளுக்குக் காரணம். இதைவிட இரண்டு பகுதிகளுக்கும் இடையே இருந்த மாபெரும் இன வித்தியாசம். பாகிஸ்தானின் ஜனநாயகம் ராணுவ சர்வாதிகாரிகளால் நசுக்கப்பட்டதும் (1958), கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த உறவு இழிந்து, ஊழல் நிறைந்ததாகவும், நவ-காலனியாதிக்க உறவாகவும் மாறியதால், மேற்கு பாகிஸ்தான் மேலாதிக்கத்துக்கு தீவிர எதிர்ப்பு கிழக்கு பாகிஸ்தானிய பங்காளிகளிடம் வளர்ந்தது.

ஷேக் முஜிபுர் ரஹ்மான்

1970இல் பெரும் வெள்ளம் கிழக்கு பாகிஸ்தானை தாக்கியது. அப்போதிருந்த அரசு சரியான உதவி செய்யாமல் இருந்தது பெரும் மனவருத்தத்தை பங்காளிகளிடம் உருவாக்கியது. இந்த அழிவு அவாமி லீக் என்ற கட்சி தொடங்கவும் அது பலம் பெறவும் காரணமாக இருந்தது. இந்த கட்சி ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இந்த கட்சி, அவாமி லீக், கிழக்குப் பாகிஸ்தானுக்கு சுயாட்சியைக் கோரியது. இது ராணுவ சர்வாதிகாரத்துக்கு முடிவையும் கோரியது. டிஸம்பர் 1970ல் நடந்த பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி முதல் கட்சியாக ஆனது.

பெப்ரவரி 22, 1971இல் மேற்கு பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்கள் அவாமி லீக் கட்சியையும் அதன் ஆதரவாளர்களையும் அழிக்க முடிவு செய்தார்கள். ஆரம்பத்திலேயே இது ஒரு இனப்படுகொலை முடிவு என அவர்களாலேயே அங்கீகரிக்கப்பட்டது. ‘முப்பது லட்சம் பேரைக் கொல் ‘ என்று ஜனாதிபதி யாஹ்யா கான் பெப்ரவரி மாநாட்டில் சொன்னார். ‘பிறகு மற்றவர்கள் நாம் போடும் பிச்சையை சாப்பிடுவார்கள் ‘ (ராபர்ட் பெயின், மஸாக்கர் (1972) பக்கம் 50)

மார்ச் 25ஆம் தேதி இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டது. டாக்கா பல்கலைக்கழகம் தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டார்கள். டாக்கா நகரத்தில் ராணுவக்கும்பல்கள் ரோந்து சுற்றி ஒரே இரவில் சுமார் 7000 பேர்கள் கொல்லப்பட்டார்கள். அது வெறும் ஆரம்பம் மட்டுமே. ‘ஒரே வாரத்தில் டாக்காவின் மொத்த மக்கள்தொகையும் ஊரைவிட்டு ஓடியது. சுமார் 30000 பேர் ஒரே வாரத்தில் கொல்லப்பட்டார்கள். எல்லா கிழக்குப் பாகிஸ்தானிலும் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஏப்ரல் வரும்போது, சுமார் 3 கோடி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கிழக்கு பாகிஸ்தான் முழுவதும், வீடு இழந்து, உதவி கிடைக்காமல், ராணுவத்தைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டிருந்தார்கள் ‘ (ராபர்ட் பெயின், மஸாக்கர்,(1972), பக்கம் 48)

ஒரு கோடி மக்கள் இந்தியாவுக்கு ஓடினார்கள். இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடியும் அளவைவிட பல மடங்கு அகதிகளை தாங்க முடியாத இந்தியா ராணுவத்தைக்கொண்டு இந்தப்பிரச்னையைத் தீர்க்க உந்தப்பட்டது. (அப்போது பங்களாதேஷ்/கிழக்குப் பாகிஸ்தானின் மக்கள்தொகை 75 மில்லியன், 7.5 கோடி)

ஏப்ரல் 10ஆம் தேதி, தப்பிப்பிழைத்த அவாமி லீக் கட்சியினர் பங்களாதேஷ் நாட்டை சுதந்திர நாடாக அறிவித்தனர். மேற்கு பாகிஸ்தான் அரசு ராணுவத்தை எதிர்க்க முக்தி பாஹினி என்ற படை உருவாக்கப்பட்டது. கொரில்லா முறை பயிற்சி கொடுக்கப்பட்ட இந்த படை, பங்களாதேஷ் நில அமைப்பை நன்றாகப் புரிந்து வைத்திருந்ததால், மக்களோடு மக்களாக இணைந்து கொரில்லா முறைப் போரை ராணுவத்துக்கு எதிராகப் பிரயோகிக்க ஆரம்பித்தது. போரில் முடிவில், பங்களாதேஷின் பல இடங்கள் ராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தன.

வங்காள ஆண்களுக்கு எதிரான படுகொலைகள்

பங்களாதேஷ் மக்கள் மீதான போர், எழுதப்பட்டதை நிறைவேற்றுவது போல செய்யப்பட்டது. அந்தோணி மஸ்கரானஸ், ‘இனப்படுகொலைக்கு யார் யாரெல்லாம் குறி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை ‘ என்று கூறுகிறார்.

‘அவையாவன

1) கிழக்கு பெங்காள் ரெஜிமெண்டைச் சேர்ந்த பெங்காளி ராணுவத்தினர், ஈஸ்ட் பாகிஸ்தான் ரைபிள்ஸ், போலீஸ், பாராமிலிட்டரி அன்ஸார், முஜாஜித்

2) இந்துக்கள் — ‘நாம் ஆண்களை மட்டும்தான் கொல்கிறோம். பெண்களும் குழந்தைகளும் சுதந்திரமாக விடப்படுகிறார்கள். நாமெல்லாம் போர்வீரர்கள். கோழைகளல்லர்.. ‘இவ்வாறு நான் கோமில்லா என்ற பெரும் ராணுவ தளத்தில் கேட்டேன். (ஆர். ஜே. ரோம்மல், ‘இதிலிருந்து ஆயுதமேந்தாத ஒரு ஆணைக்கொல்வது என்பது பெரும் வீரத்தனம் என்று நினைக்கலாம் ‘, R.J. Rummel, Death By Government, அரசாங்கத்தால் இறப்பு பக்கம் 323)

3) அவாமி லீக் கட்சியினர். இந்தக்கட்சியின் கடைநிலை உறுப்பினர் சேர்த்து எல்லா உறுப்பினர்களும் அலுவலக வேலைக்காரர்களும், பதவியில் இருப்பவர்களும்.

4) கல்லூரி, பல்கலைக்கழகத்தில் இருக்கும் எல்லா மாணவர்களும் மாணவிகளும். இவை எல்லோரையும் மிலிடண்ட் என்று முத்திரை குத்தியது பாகிஸ்தான் ராணுவம்.

5) பெங்காளி அறிவுஜீவிகள். பேராசிரியர்கள், ஆசிரியர்கள். இவர்கள் எல்லோரையும் மிலிடண்ட் என்று முத்திரை குத்தியது பாகிஸ்தான் ராணுவம்.

(அந்தோணி மஸ்கரானஸ், பங்களாதேஷின் அழிப்பு (விகாஸ் பப்ளிகேஷன்ஸ் (1972) பக்கம் 116-17)

மஸ்கரானஸ் அவர்களது சுருக்க உரை, ஆணா பெண்ணா என்பதற்கும், சமூக வர்க்கத்துக்கும் இடையே உறவுகளை தெளிவு படுத்துகிறது. ( ‘அறிவுஜீவிகள் ‘, ‘பேராசிரியர்கள் ‘, ‘ஆசிரியர்கள் ‘, ‘பதவியில் உள்ளவர்கள் ‘, இன்னும் ‘பெங்காளி ராணுவத்தினர் ‘ எல்லோருமே தெளிவாக ஆண்கள். ஆண்களின் மேற்கண்ட வேலையால் குடும்பத்தினரும் இந்தப் படுகொலையில் சேர்க்கப்பட்டார்கள். இதனால், இந்த பங்களாதேஷ் படுகொலைகளை ஆண்கள் படுகொலை என்றும், மேல்தட்டினர் படுகொலை என்றும் வரையறுக்கலாம். இந்த இரண்டு முறைகளிலும் ஆண்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.

விடலைச் சிறுவர்களும், இளைஞர்களும், அவர்கள் எந்த வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், குறிவைக்கப்பட்டார்கள். ரோனாக் ஜஹான், ‘விடுதலைப்போரின் காலம் முழுவதும், நல்ல உடல் நலம் கொண்ட எந்த இளைஞனும் விடுதலைப்போர் வீரனாகப் பார்க்கப்பட்டான். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இறுதியில், எல்லா நகரங்களும், பெருநகரங்களும் இளைஞர்கள் இல்லாமல் காலியாகின. இந்த இளைஞர்கள் ஒன்று இந்தியாவுக்கு ஓடிப்போனார்கள். அல்லது விடுதலைப்போரில் இணைந்தார்கள் ‘

இனப்படுகொலையின் முதல் கட்டத்தில், ‘நல்ல உடல் கொண்ட இளைஞர்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள் ‘ (Genocide in Bangladesh, ‘ in Totten et al., Century of Genocide, p. 298) ஆர் ஜே ரும்மல் , ‘யாராரெல்லாம் விடுதலைப்போரில் இணையக்கூடியவர்களோ, அதாவது இளைஞர்களை, பாகிஸ்தானிய ராணுவம் தேடிக்கொன்றது. வீடுவீடாகத் தேடி இந்த இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கண்டே பிடிக்கமுடியாமல் மறைந்தார்கள். பல இளைஞர்களின் உடல்கள், வயல்களிலும், ஆறுகளின் கரைகளிலும், ராணுவமுகாம்களின் அருகிலும் கிடந்தன. எதிர்ப்பார்க்கக்கூடியது போலவே, ராணுவத்தின் கைவீச்சுக்குள் இருக்கும் எல்லா இளைஞர்களையும் அவர்கள் குடும்பங்களையும் திகிலடையச்செய்தது. 15 வயதிலிருந்து 25 வயதுவரை இருக்கும் இளைஞர்கள் அனைவரும் கிராமங்களிலிருந்து இந்தியாவை நோக்கி ஓடினார்கள். வீடுகளை விட்டுச் செல்ல விரும்பாத இளைஞர்கள், அவர்களது தாயார்களாலும் சகோதரிகளாலும் துரத்தப்பட்டார்கள் ‘ (Death By Government, p. 329.)

ரும்மல் (பக்கம் 323) தனது புத்தகத்தில், யூத ஆண்களுக்கு எதிரான ஒரு நாஜி முறையை ஞாபகப்படுத்தும் ஒரு சடங்கை விவரிக்கிறார். ‘ பிரதேசம் முழுமையிலும் நடந்த ஒரு விஷயம், இந்துக்கள் தனிமைப்படுத்தப்பட்டு அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுதான். போர்வீரர்கள் ஆண்கள் சுன்னத் செய்திருக்கிறார்களா என்று பரிசோதிப்பார்கள். சுன்னத் செய்திருந்தால் அவர்கள் ஒருவேளை உயிர் வாழலாம். அவர்கள் செய்யாமலிருந்தால் நிச்சயம் இறப்புதான் ‘

டாக்கா நகரைச்சுற்றி அமைப்பு ரீதியான இனப்படுகொலை நடந்ததை ராபர்ட் பெயின் விவரிக்கிறார்.

‘டாக்கா நகரைச்சுற்றிய இறந்த பிரதேசங்களில், ராணுவ அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களால் பார்க்க இயலாத இடங்களில் மக்கள் படுகொலை (mass extermination ) பரிசோதனைகளை நிகழ்த்திப்பார்த்தார்கள். டாக்கா நகருக்கு அருகில் இருக்கும் பரிகங்கா ஆற்றின் கரையில் இருந்த ஹரிஹர்புரா கிராமத்தில், தங்கள் பரிசோதனைக்கு வேண்டிய மூன்று விஷயங்களையும் பார்த்தார்கள். பலிகடாக்களை வைத்திருக்க சிறை, சிறைக்கைதிகளைக்கொல்ல ஒரு இடம், இந்த உடல்களை அழிக்க தேவையான முறை. ஆற்றங்கரையில் இருந்த பெரிய கோடவுண் பாகிஸ்தான் தேசிய எண்ணெய் கம்பெனிக்கு சொந்தமானது. ஆற்றங்கரை தான் கொலை செய்ய தகுந்த இடம். உடல்கள் ஆற்றில் வீசியெறியப்பட்டன. எல்லா இரவுகளிலும் கொலைகள் நடந்தன. பெரும்பாலும் சிறைக்கைதிகள் ஒருவர் பின்னே ஒருவராக கயிறுகளால் கட்டப்பட்டு ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஆறு அல்லது எட்டுப்பேர் ஒரு கயிற்றில். எலக்டிரிக் ஆர்க் வெளிச்சத்தில், பின்னே இருண்ட ஆற்றின் பின்னணியில் அவர்கள் எளிதான குறிகள். கொலை செய்யும் ராணுவத்தினர் கரையில். தண்ணீரில் நடக்கும் மக்கள் குறிகள். வெப்பமான இரவு காற்றில் அலறல்கள். பிறகு மெளனம். சிறைக்கைதிகள் கரையிலேயே தண்ணீரில் அடித்துக்கிடந்தார்கள். பிறகு அடுத்த வரிசை அழைத்துவரப்பட்டது. அதே போல அடுத்த கொலைகளும். காலையில் கிராமத்து படகோட்டிகள் இந்த உடல்களை ஆற்றின் மத்திக்கு இழுத்துச்சென்று இந்த உடல்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளை வெட்டினார்கள். இந்த உடல்கள் தனித்தனியே மிதந்து சென்றன. ‘ (Payne, Massacre [Macmillan, 1973], p. 55.)

பெங்காளி பெண்களுக்கு எதிரான படுகொலைகள்

பாகிஸ்தானிய இனப்படுகொலையின் ஆரம்பக்கட்டத்தில் பெங்காளிப் பெண்கள் குழும பாலுறவு பலாத்காரத்துக்கும், கொலைக்கும் உட்படுத்தப்பட்டார்கள். இந்த இனப்படுகொலையில் ஆண்களே முதல் குறியாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், பெண்கள் பலாத்காரத்தினாலும், படுகொலையினாலுமே மேற்கத்தைய பார்வையாளர்கள் இந்த பாகிஸ்தானிய இனப்படுகொலையைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற்றார்கள்.

சூஸன் ப்ரவுன்மில்லர் தன்னுடைய ‘எங்கள் எண்ணத்துக்கு எதிராக: ஆண்கள், பெண்கள், பலாத்காரம் ‘ (Against Our Will: Men, Women and Rape) புத்தகத்தில், பங்களாதேஷின் 1971 நிகழ்ச்சிகளை நான்ஜிங் நகரத்தில் ஜப்பானிய பாலியல் பலாத்காரங்களோடும், ருஷ்யாவில் ஜெர்மானியர்கள் செய்த பாலியல் பலாத்காரங்களோடும் ஒப்பிடுகிறார். ‘… 2,00,000 அல்லது 3,00,000 அல்லது 4,00,000 பெண்கள் (இந்த மூன்று வேறுபட்ட புள்ளிவிவரங்கள் அடிக்கடி கூறப்படுகின்றன) பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். சுமார் 80 சதவீத பெண்கள் இதில் முஸ்லீம்கள் (பங்களாதேஷின் முஸ்லீம் மக்கள்தொகையையில் முஸ்லீம்களின் சதவீதத்தை பிரதிபலிக்கும் வண்ணம்). ஆனால், இந்துப் பெண்களும், கிரிஸ்தவ பெண்களும் விட்டுவிடப்படவில்லை. பாகிஸ்தானிய ராணுவம் அந்த சிறிய மிகுந்த மக்கள் தொகை கொண்ட பிரதேசத்தில் அலையலையாய் பரவியதில், அவ்வளவு அதிகமான வங்காளப் பெண்களை கண்மூடித்தனமாக கற்பழித்தது எளிய கணக்குத்தான் ‘ (பக்கம் 81)

பத்திரிக்கையாளர் அப்ரே மெனென் இப்படிப்பட்ட ஒரு தாக்குதலை விவரிக்கிறார். ‘இரண்டு பாகிஸ்தானிய போர்வீரர்கள் மணமக்களுக்காகக் கட்டப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தனர். மற்றவர்கள் குடும்பத்துடன் வெளியே நின்றனர். ஒருவர் அந்த குடும்பத்தை தன் துப்பாக்கியால் பயமுறுத்திக்கொண்டிருந்தான். அவர்கள் உள்ளே போர்வீரனின் குரைக்கப்பட்ட கட்டளையைக் கேட்டனர். மணமகன் எதிர்ப்பதும் கேட்டது. பிறகு மெளனம். அந்த மணமகள் அலறுவது கேட்டது. பிறகு மீண்டும் மெளனம். அமுக்கப்பட்ட அழுகுரல் பிறகு கேட்டு அடங்கியது. சில நிமிடங்களில் அந்த இரண்டு போர்வீரர்களில் ஒருவன் வெளியே வந்தான். அவனது உடை கசங்கியிருந்தது. தன் நண்பர்களைப் பார்த்து இளித்தான். அவனது இடத்தை நிரப்ப இன்னொருவன் அந்த அறைக்குள் சென்றான். அப்படியே அந்த ஆறுபேரும் அந்த கிராமத்து பெண்ண பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கினார்கள். பிறகு அந்த ஆறுபேரும் விரைவாக வெளியேறினார்கள். அந்தப்பெண்ணின் தகப்பன் தன் மகள் ரத்த வெள்ளத்தில் பிரக்ஞை அற்றுக் கிடப்பதை கண்டார். அவளது கணவன் தனது வாந்தியின் மீது குப்புறக் குனிந்து உட்கார்ந்திருந்தான். ‘ (Quoted in Brownmiller, Against Our Will, p. 82.)

பிரவுன்மில்லர் எழுதுகிறார், ‘ பங்காளாதேஷின் பாலியல் பலாத்காரம் அழகினால் கட்டுப்படுத்தப்படவில்லை. எட்டுவயது பெண்களிலிருந்து 75 வயது பாட்டிகள் வரை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். அந்த இடத்தில் மட்டுமே பெங்காளிப் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்கள் நூற்றுக்கணக்கில் ராணுவ முகாம்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு இரவு உபயோகத்துக்காக வைக்கப்பட்டார்கள். ‘ சில பெண்கள் ஒரு இரவில் எட்டு முறைக்கு மேல் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள். (பிரவுன்மில்லார் பக்கம் 83) பலர் இந்த மோசமான தாக்குதல்களால் இறந்தார்கள். எத்தனை பேர்கள் இந்த பொது இனப்படுகொலை காரணமாக கொல்லப்பட்டார்கள் என்பது அனுமானிக்கத்தான் முடியும் (கீழே பார்க்க)

பங்களாதேஷ் தனது சுதந்திரத்தை அடைந்து பல வருடங்களாகியும், அவர்களுக்கு அரசாங்கம் சில உதவிகளைச் செய்தும் அவர்கள்து துன்பம் பல வழிகளில் தொடர்ந்தது.

‘ அந்த 9 மாதங்களில் நடந்த பாலியல் பலாத்காரம், கட்டாயப்படுத்தப்பட்ட விபச்சாரம் ஆகியவை பெங்காளிப் பெண்களுக்கு நடந்த அவமானத்தில் முதல் கட்டம் தான். பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், இந்த பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களை தேசீய ஹீரோயின்கள் என்று சொன்னது அவர்களை மீண்டும் சமூகத்தில் இணைக்க ஆரம்பித்த தவறான ஆரம்பமாகிவிட்டது. முக்தி பாஹினி விடுதலைப்போர்வீரர்களை இந்தப் பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கேட்டதும், காணாமல் போன கணவன்மார்களுக்குப் பதிலாக விடுதலைப்போர்வீரர்களை திருமணம் செய்து கொள்ளக் கேட்டதும் தவறாகவே முடிந்தது. பெண் கற்பு, பர்தா தனிமை போன்ற கருத்துக்கள் முக்கியமான கருத்துக்களாக இருக்கும் அந்த தேசத்தில், ‘திருமணம் செய்து அனுப்பு ‘ போன்ற விஷயங்கள் ஆரம்பிக்கவே இல்லை. சில மணமகன்கள் முன்னுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களும் அரசாங்கம் அந்தப் பெண்களின் தந்தை ஸ்தானத்திலிருந்து இவர்களுக்கு ஏராளமான பணம் டெளரியாகத் தரவேண்டும் எனக் கோரினார்கள். (Brownmiller, Against Our Will, p. 84.)

எவ்வளவு பேர் இறந்தார்கள் ?

1971 பங்களாதேஷில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை நிச்சயம் 15 லட்சத்துக்கு மேல். இது இரண்டாம் உலகப்போர் முடிந்த உலகத்தில் மிகவும் மோசமான இனப்படுகொலை. இது ர்வாண்டா தேசத்தில் (8 லட்சம் பொதுமக்கள் கொலை) நடந்ததை விட அதிகம். இந்தோனேஷியாவில் (1965-66இல் சுமார் 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்) நடந்ததை விட அதிகம். ஏ.ஜே.ரும்மல் எழுதுகிறார்.

‘267 நாட்களில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை நம்பமுடியாதது. பங்களாதேஷ் பத்திரிக்கைகளால், 18 மாவட்டங்களில் சுமார் 5 மாவட்டங்களில் மட்டுமே புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. பாகிஸ்தானிய ராணுவம் 1 லட்சம் பங்காளிகளை டக்கா நகரில் கொன்றது. குலானா மாவட்டத்தில் 1.5 லட்சம். ஜெஸ்சூரில் 75,000, கோமில்லா மாவட்டத்தில் 95,000, சிட்டங்காங் மாவட்டத்தில் 1 லட்சம். 18 மாவட்டங்களில் மொத்தம் 12,47,000 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். இது முடிவு பெறாத புள்ளிவிவரம். இதுநாள் வரைக்கும் உண்மையில் மொத்தம் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சில புள்ளிவிவரங்கள் படி இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு. அதாவது 3,00,000 பேர். ஆனால் பெரும்பாலான புள்ளிவிவரங்கள் 10 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை குறிப்பிடுகின்றன. பாகிஸ்தானிய ராணுவமும், அதன் உதவியாளர்களும் அன்றைய மொத்த பாகிஸ்தானில் 18 பேரில் ஒரு ஆளைக் கொன்றிருக்கின்றன. கிழக்குப் பாகிஸ்தான் மக்கள்தொகையை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டால் 25 பேரில் ஒருவரை கொன்றிருக்கின்றன. யாஹ்யாகான் ஆட்சியில் இருந்த காலம் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டு வருடாந்தர கொலை விகிதம் பார்த்தால், (மார்ச் 1969இலிருந்து டிஸம்பர் 1971வரை), இந்த அரசு சோவியத் யூனியனைவிட, சீன கம்யூனிஸ்ட் அரசை விட, ராணுவ ஆட்சியில் இருந்த ஜப்பானைவிட இது மிகக்கொடிய அரசு. (Rummel, Death By Government, p. 331.)

எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் எனக் கணக்குப்போடுவது கடினம். இருப்பினும், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தோமானால், கொல்லப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் ஆண்களும் 20 சதவீதம் பெண்களும் இருக்கிறார்கள் என கருதலாம். உலக இனப்படுகொலைகளிலேயே மிகவும் மோசமானது பங்களாதேஷ் இனப்படுகொலைதான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

யார் இதற்குக் காரணம் ?

ராபர்ட் பெயின் எழுதுகிறார், ‘கிழக்குப் பாகிஸ்தானில் மாதம் மாதமாக பொதுமக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ராணுவ அதிகாரிகள் செய்யும் சிறிய தவறுகளல்ல இவைகள். ஆனால், அமைப்பு ரீதியாக, பெரும் ராணுவ அதிகாரிகள் ஆணையோடு, சிறப்பாக, ராணுவ துல்லியத்தோடு என்ன செய்கிறோம் என்ற நன்கு புரிதலோடு நடந்த கொலைகள். முஸ்லீம் போர்வீரர்கள் முஸ்லீம் விவசாயிகளை கொல்ல அனுப்பப்பட்டார்கள். இயந்திரத்தனமாக, துல்லியத்தோடு இந்த கொலைகள் செய்யப்பட்டன. ஆயுதமேந்தாத பொதுமக்களைக் கொல்வது என்பது சிகரெட் குடிப்பது போலவும், ஒயின் அருந்துவது போலவும் சாதாரணமான ஒரு பழக்கமாக கருதப்படும்வரை இது நடந்தது. ஹிட்லர் ருஷ்யாவை ஆக்கிரமித்த போது நடந்த கொலைகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட பொதுமக்கள் கொலைகள் இந்த அளவு இங்குதான் நடந்தது ‘(Payne, Massacre, p. 29.)

நவீன இனப்படுகொலைகளில் பங்களாதேஷ் இனப்படுகொலைகள் தான் முன்பே அரசில் முடிவெடுக்கப்பட்டு, மிகவும் அக்கறையாகத் திட்டமிடப்பட்டு நடந்த இனப்படுகொலைகள். ஐந்து பாகிஸ்தானிய ஜெனரல்களே இதன் மையக்காரணம். பாகிஸ்தானிய ஜனாதிபதி யாஹ்யா கான், ஜெனரல் டிக்கா கான், ராணுவ தளபதி ஜெனரல் பிர்ஜாடா, பாதுகாப்பு தலைவர் ஜெனரல் உமர்கான், உளவு துறை தலைவர் ஜெனரல் அக்பர் கான். வெகுகாலமாக பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை ஆதரித்து வந்த அமெரிக்க அரசாங்கம், 3.8 மில்லியன் டாலர் பொறுமானமான ராணுவத்தளவாடங்களை இந்த ராணுவ சர்வாதிகாரிகளுக்கு இனப்படுகொலைகள் ஆரம்பித்த பின்னால் அளித்தது. அதுவும், ‘ அரசாங்கம், அமெரிக்க பாராளுமன்றத்திடம் யாஹ்யாகான் அரசாங்கத்துக்கு அனுப்பப்படும் ராணுவதளவாடங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன என்று அறிவித்த பின்னால் ‘ (Payne, Massacre, p. 102.)

இனப்படுகொலையும், கொடூரங்களும் கீழ்மட்ட ராணுவ அதிகாரிகளாலும், சாதாரண போர்வீரர்களாலும் நடத்தப்பட்டன. இந்த ‘விருப்பத்துடன் வந்த கொலையாளிகள் ‘ வங்காளிகள் எதிர்ப்பு இனவெறியாலும், முக்கியமாக சிறுபான்மை இந்துக்கள் மீதான வெறுப்பாலும் விரும்பி இந்த இனப்படுகொலைகளைச் செய்தார்கள். வங்காளிகள் பெரும்பாலும் குரங்குகள் என்றும் கோழிகள் என்றும் பேசப்பட்டார்கள். பாகிஸ்தான் ஜெனரல் நியாஜி, ‘அது கீழே இருக்கும் கீழ்மட்ட ஆட்களால் நிரம்பிய இடம் ‘ என்று குறிப்பிட்டார். முக்கியமாக, வங்காளிகளுக்குள் இருக்கும் இந்துக்கள், நாஜிகளுக்கு யூதர்கள் போல பாகிஸ்தானியர்களால் நடத்தப்பட்டார்கள். ‘scum and vermin that [should] best be exterminated. ‘ முஸ்லீம் வங்காளிகளோ, போர்வீரர்கள் தயவில் வாழவேண்டிய மக்களாகப் பார்க்கப்பட்டார்கள். எந்த சந்தேகம் வந்தாலும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள். போர்வீரர்களுக்கு விருப்பப்படி கொன்றுதள்ள உரிமை கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு (பாகிஸ்தானிய) பஞ்சாபிய கேப்டன் பத்திரிக்கையாளர் டான் கோக்கின் (Dan Coggin ) இடம் சொன்னதான, ‘நாங்கள் யாரை வேண்டுமானாலும் எதற்காகவும் கொல்லலாம். எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது ‘ என்று சொன்னதை குறித்திருக்கிறார். உச்சக்கட்ட அதிகாரத்தின் ஆணவம் என்று கூறுகிறார் அவர். (Rummel, Death By Government, p. 335.)

அதன் பிறகு.

டிஸம்பர் 3 ஆம் தேதி, இந்திய பிரதமரான இந்திரா காந்தி, கோடிக்கணக்கான வங்காளிகளை திருப்பி பங்களாதேசுக்கு அனுப்பும் பொருட்டும், இந்தியாவின் நிரந்தர எதிரியாக தன்னை உருவாக்கிக்கொண்ட பாகிஸ்தானை பலவீனப்படுத்தும் பொருட்டும், பங்களாதேசுக்கு சுதந்திரம் வாங்கித்தரும் பொருட்டும், கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாதேசுக்குள் முழு ஆக்கிரமிப்பை ஆரம்பித்தார். பல மாதங்களாக கொரில்லாப் போரால் பலவீனப்பட்டு இருந்த பாகிஸ்தானிய ராணுவம் வெகுவேகமாக தோல்வியடைந்தது. டிஸம்பர் 16ஆம் தேதி, அதற்குள்ளும் ஒரு இறுதியான இனப்படுகொலை நடத்தி முடித்துவிட்டே, நிபந்தனையின்றி சரணடைந்தது. அவாமி லீக் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு டாக்காவுக்குள் வெற்றிகரமாக நுழைந்தார். ஜனவரி 10, 1972இல் சுதந்திர பங்களாதேஷ் பாராளுமன்றத்தை உருவாக்கினார்.

பாகிஸ்தானிய ராணுவம் வெளியேற்றப்பட்டபோது, வெற்றியடைந்த பங்காளாதேஷிகள் சுமார் 150,000 மக்களைக் கொன்றார்கள்.(Rummel, Death By Government, p. 334.). இது இனப்படுகொலை நடந்து முடிந்த பிறகு நடக்கக்கூடிய ஒன்றுதான். (இதுவே ர்வாண்டா, போஸ்னியா-ஹெர்ஸகோவினா, கோஸோவோ, சோவியத் சிறைக்கைதிகள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் நடந்தன). பழிக்குப்பழி என்று நடந்த கொலைகளும், துரோகிகள் என்று நடந்த கொலைகளும் இவை. வங்காளி சுதந்திரப்போர்வீரர்களால் நடத்தப்பட்ட படுகொலைக்கு, பாகிஸ்தானிய ராணுவத்துக்கு உதவியதாகக் கருதப்பட்ட வங்காளிகள் பலியானார்கள் ‘ என்று ஜஹான் எழுதுகிறார். ( ‘Genocide in Bangladesh, ‘ p. 298; )

இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டவர் எவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. எல்லோரும் பாகிஸ்தானிலும் மற்ற நாடுகளிலும் சுதந்திரமாகவே இருக்கிறார்கள். இவர்களை நீதிக்கு முன் நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அரசியல் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள் பங்களாதேசின் சுதந்திரத்துக்குப் பின்னர் நின்று போகவில்லை. ‘எல்லாத்தரப்பாலும் கொட்டப்பட்ட இரத்தம், பல பல ஆண்டுகளுக்கு பங்களாதேசின் அரசியலை பாதித்து வந்தது. ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு என பல நடந்தன. பல ரத்தக்களரியாக நடந்தன ‘ என்று ரும்மல் குறிப்பிடுகிறார். (Death By Government, p. 334.)

http://www.geocities.com/Athens/Styx/7297/

http://members.bellatlantic.net/~vze3m8n9/

http://www.liberationmuseum.org/

http://www.gendercide.org/case_bangladesh.html

Series Navigation

செய்தி

செய்தி