இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்துத்துவ அணுகுண்டு என்ற தொடர் இந்துத்துவ சக்திகளால் கூடப் பரவலாக பாவிக்கப் படாத ஒரு சொற்றொடர். ஆனால் மார்க்ஸ் இந்தப் பெயரில் ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார். இதில் இரண்டு பிரசினைகள் உள்ளன. முதன்முதலில் மதத்தின் பெயரால் அணுகுண்டை அடையாளப் படுத்தியவர் ஜ்உல்ஃபிகர் அலி புட்டோ தான். ‘புல் பூண்டைத் தின்றாலும் சரி, இஸ்லாமிய அணுகுண்டைத் தயாரிப்போம் ‘ என்று முழங்கியவர் இவர்.

வங்கதேசம் விடுதலை பெற்றபின்பு, முறையான conventional யுத்தத்தில் இந்தியாவை வெல்வது கடினம் என்ற உணர்வினால் இந்த அணுகுண்டு தயாரிப்பு முயற்சியில் இறங்கினார் புட்டோ. இந்த முயற்சிக்கு சீனா பெரும் உதவி புரிந்துள்ளது. அமெரிக்கா இதைக்கண்டும் காணாமல் இருந்தது.

இந்திய அணுகுண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதும் பா ஜ கவின் கீழ் அல்ல. இந்திரா காந்தியின் ஆட்சியில் தான் இது முதன்முதல் தொடங்கப்பட்டது. மார்க்சுக்கு இது தெரியாதா என்ன ? தெரிந்தாலும் எந்தப் பொய்யைச் சொல்லியாவதுஇந்து மதத்தையும் அணுகுண்டையும் இணைத்தால் போயிற்று என்ற நோக்கம் தான் காரணம்.

‘அறிவியல் ரீதியில் தோல்வி, வெளியுறவு அடிப்படையில் முட்டாள்தனம், மக்களைப் பொருத்தமட்டில் பலமுனைத் தாக்குதல்! ‘ என்பது இந்த அத்தியாயத்தில் மார்க்ஸின் முதல் வரி.

அணுகுண்டு வெடிப்பு என்பது இந்தியா, இந்த நேரத்தில் எதையும் நிரூபிக்கத் தேவையில்லாத ஒன்று என்பதால் அவசியமற்ற ஒன்றே தவிர , அதன் காரணங்கள் சாதாரணமானவையல்ல. மக்கள் சீனம் (மார்க்ஸின் பார்வையில் சீனா இன்னமும் மக்கள் சீனம் தான். பாவம், ஐம்பதாண்டுகள் பின்னால் சீனத்திற்கு மாசேதுங் சூட்டிய பெயர் வெறும் பெயரளவில் தான் சீனா கொண்டிருக்கிறது என்ற உணர்வே அவருக்கு இல்லை.) இந்தியாவின் எதிரி என்று சொல்லக் கூடாது. பாகிஸ்தானை மிரட்டக் கூடாது. சீனா பாகிஸ்தானிற்கு அணுஆயுதங்களை அமைக்க உதவி செய்தால் பார்த்துக் கொண்டு வாய் மூடி இந்தியா இருக்கவேண்டும். அது தான் சரியான வெளியுறவுக் கொள்கை என்பது தான் மார்க்ஸ் போன்றோரின் நிலைபாடு.

‘இந்நிலையில் பாரதீய சனதா அரசு சீனாவை வம்புக்கிழுப்பது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம். இதன் விளைவாக பாகிஸ்தானும் சீனாவும் மீண்டும் நெருங்கத் தொடங்கியிருப்பதென்பது இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சி. ‘ என்பது மார்க்ஸின் பார்வை.

இந்த நம்பிக்கைத் துரோகம் என்ற பெரியவார்த்தை இங்கு புழங்க வேண்டிய அவசியம் என்ன ? அப்படி சீனா இந்தியாவின் நம்பிக்கையைப் பெறும் வண்ணம் என்ன செய்திருக்கிறது ? பாகிஸ்தான்-இந்தியா போரில் முழுக்க முழுக்க பாகிஸ்தானுடன் கூட நின்றது சீனா. பாகிஸ்தான் உதவியுடன், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலப்பகுதியைப் பெற்று அதில் காரகோரம் நெடுவழிப்பாதை அமைத்து தாக்குதலுக்குத் தயாராய் நிற்கிறது சீனா. சீனாவை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று சீனா தோன்றிய நாள் முதல் குரல் கொடுத்த நாடு சீனா. உலக வர்த்தக அமைப்பில் சீனா உறுப்பினர் ஆவதற்கு இந்தியா பெரும் ஆதரவு அளித்து வந்துள்ளது. ஆனால் இதுவரையில் உலக நிறுவனங்களில் சீனா இந்தியாவிற்கு ஆதரவாய்க் குரல் கொடுத்ததில்லை. நம்பிக்கைத் துரோகம் சீனாவினுடையதா ? இந்தியாவினுடையதா ? சீனா 1996 வரையில் 44 அணுகுண்டு சோதனைகள் நடத்தியுள்ளது. முதல் அணுகுண்டு பரிசோதனை 1964-ல் – இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதற்கு 10 வருடங்கள் முன்பு – சீனா நிகழ்த்தியது.

அணுகுண்டு வெடிப்பிற்கு இந்தியாவின் எதிர்பார்ப்பு இரண்டு முனைப் பட்டதாய் இருந்தது. ஒன்று பாகிஸ்தான் சுமுகமான பேச்சு வார்த்தைக்கு உட்பட்டு காஷ்மீர்ப் பிரசினையில் பரப்பும் பயங்கரவாதத்தைக் குறைக்கலாம். அல்லது தானும் அணுகுண்டு சோதனை செய்யலாம். இரண்டாவது தான் நடந்தது. இதனால் உலக நாடுகள் பொருளாதாரத்தடை விதித்தன. பொருளாதாரத்தடை இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானை மிகவும் பாதிக்கும் என்பது இந்தியாவுன் கணிப்பு. இதுதான் நடந்தது. செப்டம்பர் 11-ஐத் தொடர்ந்து அமெரிக்காவின் கடைக்கண் பார்வை பாகிஸ்தான் மீது விழாதிருந்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்திருக்கும் என்பது பொருளியலாளர்களின் கணிப்பு.

அணுகுண்டு வெடிப்பு இந்த ஒரு விஷயத்தைத் தான் சாதித்தது. ஆனால் அரசியல் யதார்த்த நிலையில் , மற்ற நாடுகளின் அச்சுறுத்தலுக்கும், மேலாண்மைக்கும் ஆளாகிக்கொண்டு , பிரிவினைவாதசக்திகள் இந்தியாவிற்கு வெளியே இருந்து ஆதரவு பெற்று வரும் வேளையில் இது இந்தியாவின் ஒரு கூக்குரல் அவ்வளவு தான். இதை இந்துத்துவ அணுகுண்டு என்றெல்லாம் சொல்லி , இந்து மதத்தினை அணுகுண்டுடன் இணைக்க மார்க்ஸ் ஒருவரால் தான் முடியும்.

அணுகுண்டை முதலில் உபயோகிக்க மாட்டோம் என்று கொள்கை இந்தியா கொண்டிருக்கிறது. பாகிஸ்தானோ, சீனாவோ இப்படியொரு கொள்கையை அறிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல, பாகிஸ்தான் ராணுவம் அணுகுண்டை முதலில் உபயோகிக்கத் தயங்க மாட்டோம் என்றும் கூறிவருகிறது. ஒருதலைப் பட்சமாய் எழுதுவது என்பது மார்க்சுக்கு வாடிக்கை. எல்லாத்தப்பும் இந்தியா மீது தான். எல்லாத்தப்பும் பாரதிய ஜனதா கட்சி மீது தான். சீனாவின் சர்வாதிகாரியும், பாகிஸ்தான் ராணுவமும் புனிதர்கள் என்பது தான் மார்க்ஸின் நிலை.

*****

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 6 -6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

மஞ்சுளா நவநீதன்


அத்தியாயம் 6- இசுலாமியருக்கு இந்துத்துவம் சொல்லும் சேதி

‘இசுலாமியர்கள் மற்றும் தலித்களின் வாக்குகளையும் கூட விட்டு விடாமல் பொறுக்கிச் சேகரித்துவிடவேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சியும், சிவசேனா போன்ற அதன் தோழமைக் கட்சிகளும் குறியாய் உள்ளன ‘ என்பது இந்த அத்தியாயத்தின் முதல் வாக்கியம். ‘பொறுக்கிச் சேர்த்துவிட ‘ என்ற வார்த்தைப் பிரயோகத்தைக் கவனியுங்கள். பாரதீய ஜனதா கட்சி மட்டுமல்ல எந்தக் கட்சியும் எவருடைய வாக்கையும் கோரலாம் என்பது தான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. நீ முஸ்லீம் அதனால் நீ பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்கு அளிக்கக் கூடாது என்ற கோட்பாடும், நீ இந்து அதனால் பாரதீய ஜனதா கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற கோட்பாடும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.

முஸ்லீம்களின் வாக்கு வேண்டுமெனில் பாரதீய ஜனதா தம்முடைய அடிப்படைக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளவேண்டும் அது முடியாது என்பது மார்க்ஸின் வாதம். அதைச் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஹஜ் போவதற்காகப் பயணப்படும் பிரயாணிகளின் விமானச் செலவில் இந்திய அரசாங்கம் ஒரு பகுதியை அளிப்பது வழக்கம். பாரதீய ஜனதா இதனை எதிர்த்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஹஜ் உதவிப்பணத்தை அதிகரித்தது.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை பாரதீய ஜனதா எதிர்த்து வந்திருக்கிறது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீருக்கு சுயாட்சி மற்றும் அதிக அதிகாரங்கள் வழங்க ஒரு குழுவை நியமித்திருக்கிறது. ஈராக் , ஈரான் , சூடான் போன்ற நாடுகளுடன் சிறப்பான உறவை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணம் என்ன ?

இரண்டு காரணங்கள் . ஒன்று : இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. வாக்கு வங்கிகள் என்று எல்லோரும் பேசினாலும், இது மாறிவரும் வங்கி தான். ஜெயலலிதா ஆசியுடன், தலித் எழில்மலை பொதுத் தொகுதியில் ஜெயித்ததும் இங்குதான் நடந்தது. வாக்கு வங்கிகளைத் திருப்தி செய்தால் போதும், இவர்கள் எமக்குத் தான் வாக்களிப்பார்கள் என்ற நிச்சயத்தன்மை இந்தியாவில் இல்லாமல் ஆகிவருகிறது. இது ஒரு நல்ல விஷயம் . இது இருக்கும் வரையில் ஆர் எஸ் எஸ் பரந்துபட்ட ஆதரவைப் பெற முடியாது என்பது தான் உண்மை.

இரண்டாவது காரணம் : அரசியல் யதார்த்தம். ஆங்கிலத்தில் Realpolitik என்று சொல்வார்கள். எண்ணெய் வளம் மிக்க நாடுகள் அரபு நாடுகள் அதில்லாமல். இந்தியாவின் பத்துசதவீத மக்கள் முஸ்லீம்கள் . அவர்களின் நம்பிக்கையைச் சேகரிக்காமல் வாக்குச் சேகரிக்க முடியாது. வாக்குச் சேகரிக்காமல் ஆட்சிக்கு வரமுடியாது. இது தான் நிஜம்.

இந்தப் புத்தகத்தின் பாதிப் புத்தகம் கடந்து 75ம் பக்கத்தில் முதன் முறையாக பா ஜ க இந்துக்களின் பிரதிநிதியாக முன்னிற்கிறது என்று வருகிறது. ‘மேற்கண்ட கூற்றில் அவர் நாங்கள் என்று சொல்வது ஒட்டுமொத்த ‘இந்துக்கள் ‘ என்ற பொருளில் ‘ . ‘ ‘ இப்போது தான் முதல் முறையாகச் சொல்கிறார்: ‘ பெரும்பான்மையான இந்து மக்கள் பாபர் மசூதி இடித்ததை ஆதரிக்கவில்லை.ஆனாலும் பா ஜ க வின் பார்வையின் படி இந்துக்கள் என்பதும், பா ஜ க என்பதும் ஒன்று ‘.

பாதிப் புத்தகம் எழுதியபின்பு தான் மார்க்ஸிற்கு இந்த உண்மையைச் சொல்லத் தோன்றியிருக்கிறது. இந்த உண்மையைச் சொன்னவுடன், இந்து மதம் பற்றியும், இந்து மதம் எப்படி தலித்களுக்கு எதிரானது என்பது பற்றியும் சொன்ன பொய்களையெல்லாம் மறு பரிசீலனை செய்து, அவர் திரும்பப் பெற்றிருக்கவேண்டும் இல்லையா ? அதுதான் இல்லை. மார்க்ஸ் என்ற கிறுஸ்தவருக்கு, இந்து மதத்தை அழிப்பது தான் லட்சியம் அல்லவா ? இந்து மதத்தை பா ஜ க பிரதிநிதித்துவ படுத்தமுடியாது என்றால், இந்து மதத்தின் மீதான மார்க்ஸின் தாக்குதல்கள் எல்லாம் வெறும் புரட்டு அல்லவா ? ஒட்டுமொத்த இந்து சமுதாயமே தலித் விரோத, பிராமணமயமாக்கப் பட்ட சமூகம் எனப்து பொய்யல்லவா ? இதனை அவர் அழுத்தம் தந்து சொல்ல வேண்டாமா ?

அவர் சொல்ல மாட்டார். ஏனென்றால் இந்தப் புத்தகம் பா ஜ க மீதான் விமர்சனமாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது என்பதில் அவருக்குக் கவனம். பெரும்பான்மையான இந்துக்கள் முஸ்லிம் விரோதிகள் எல்ல என்ற உண்மையும் சொல்லப் பட்டுவிடக்கூடாது என்பதில் அவருக்குக் கவனம்.

மார்க்ஸின் பிரசினையே இது தான். மார்க்ஸிய, வர்க்கப் பார்வையை இழந்து சாதியப் பார்வையைக் கைக்கொண்டபின்பு தம்முடைய கோட்பாட்டுக்குத் தக்க இந்திய யதார்த்தத்தை வளைக்க வேண்டும். அப்படி வளைக்க முடியாதபோது நழுவிவிடவேண்டும்.இந்துமத எதிர்ப்பைத் தான் வேதவாக்காய்க் கொள்ள வேண்டும். அதற்கு செளகரியமில்லாத உண்மைகளைப் பூசி மெழுகிவிடவேண்டும்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

மஞ்சுளா நவநீதன்


அத்தியாயம் 5- இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்

இந்த அத்தியாயத்தில் இந்துத்துவ சக்திகள் எப்படி ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து எப்படி இஸ்லாமிய எதிர்ப்பில் ஈடுபடுகின்றன என்பது இந்த அத்தியாயத்தின் சாராம்சம். கம்யூனிச அபாயத்திற்குப் பதிலாக ‘இசுலாமிய அடிப்படைவாத விரிவாக்கம் என்பதை இத்தகைய புதிய எதிரியாக அமெரிக்கா படைத்துக் காட்டுகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கிழக்கு வங்கம் ஆகிய இசுலாமிய நாடுகளிக்கிடையில் போர்த்தந்திர ரீதியில் முக்கிய மையமாக விளங்கும் இந்தியாவில் இசுலாமியத்திற்கெதிரான இந்துத்துவ அரசு ஒன்று உருவாவதை அமெரிக்கா வரவேற்கிறது. தனது நீண்ட நாள் தோழமை நாடாகிய பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்கா ஒரு சமயம் எத்தனித்ததை இத்துடன் நாம் இணைத்து நோக்க வேண்டும். போஸ்னியா போன்ற இடங்களில் இசுலாமியர் இலட்சக் கணக்கில் கொல்லப்படுவதை ஏகாதிபத்தியங்கள் கண்டு கொள்ளாது இருந்தது கவனிக்கத் தக்கது. ஈரான், ஈராக் முதலான நாடுகளுக்கு எதிராக மேற்கு நாடுகள் முனைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் , பொருளாதாரத் தடைகள் முதலியனவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். ‘

இது அகில உலக அரசியல் மற்றும் நாட்டுறவுகளைப் பற்றிய மிக எளிமைப் படுத்தப்பட்ட நோக்கு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லீம் தீவிரவாதத்துக்கு அனுசரணையானவர்கள் சொல்லியிருக்கும் வாதம் இது. ஆனால் உண்மை என்ன என்பதைப் பார்ப்போம். சவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படைவாத நாடு. ஆஃப்கானிஸ்தானின் அடிப்படைவாதத்தை முதன்முதலில் ஆதரித்த நாடு இது. அமெரிக்காவுடன் மிகுந்த தோழமை பூண்ட நாடுகளில் ஒன்று இது. அமெரிக்கா இஸ்ரேலுடன் நல்லுறவு கொண்டிருப்பதைப் பற்றி இந்த நாட்டுக்குக் கவலையில்லை. இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுடன் கடந்த ஐம்பது வருடங்களாகக் கை கோர்த்து நிற்கிறது அமெரிக்கா. ஆஃப்கானிஸ்தானில் போரிட இஸ்லாமியத் தீவிரவாதத்தை பாகிஸ்தானின் அரசாங்க உளவு நிறுவனத்துடன் சேந்து வளர்த்தெடுத்த நாடு அமெரிக்கா. ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடங்குவோம் என்று சொன்னவுடன், உடனேயே ஆதரவுக் கரம் நீட்டிய நாடு பாகிஸ்தான். இந்தியா இந்த யுத்தத்தில் அமெரிக்காவுடன் சேரக் கூடாது எங்களுக்குத்தான் உரிமை என்று தொலைக்காட்சியில் பகிரங்கமாக பாகிஸ்தானின் சர்வாதிகாரியே அறிவித்தார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா தரும் பலத்த ஆதரவிற்காக , அமெரிக்க எதிர்ப்பை பாகிஸ்தான் கைக்கொண்டதா ? இல்லை. முஸ்லீம் நாடுகள் ஒரே நேர்கோட்டில் நிற்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. ஈரான் ஈராக்குடன் மோதல் நடந்த வண்ணம் இருக்கிறது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது. அதன் பின்பு குவைத்துக்கு ஆதர்வாக அமெரிக்கா களம் இறங்கி ஈராக் மீது இப்போது வெறுப்பைப் பொழிந்து கொண்டிருக்கிறது.

மேல் நாடுகள் கோசோவோவில் முஸ்லீம்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி யுத்தத்தில் ஈடுபட்டன. முஸ்லீம் நாடுகள் வெறுமே கைகட்டி நின்றன. முஸ்லீம்களுக்கு எதிராகச் செயல்பட்ட மிலோசெவிச் உலக நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டிருக்கிறார். ஆனால் தம்முடைய மக்களையே கொன்று குவித்த பாகிஸ்தானின் யாஹியா கான், அமெரிக்காவின் பலத்த அரவணைப்புக்கும் ஆதரவிற்கும் ஆளானவர். பின்பு வந்த ஜியா-உல் ஹக் காலத்தில் தான் பாகிஸ்தானில் அடிப்படைவாதம் வளர்ச்சி பெற்றது. ஜியாவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்த நாடு அமெரிக்கா. மேல் நாடுகள் முஸ்லீம்களுக்கு ஆதரவா இல்லையா என்பதை படிப்பவர்களே தீர்மானிக்கட்டும்.

இந்தியாவிற்கு எதிராக, இந்திய வெளியுறவு நலனுக்கு எதிராகத்தான் அமெரிக்கா எப்போதுமே செய்லபட்டு வந்திருக்கிறது. அதனால் அமெரிக்கா இந்து எதிர்ப்பு நாடு என்று எவரும் சொன்னதில்லை. ஆனால், இன்று இந்தியாவுடன் தோழமை பூண்டதால் அமெரிக்கா திடாரென்று இந்துத்துவ சார்பான நாடாக ஆகிவிடுகிறது. இஸ்லாமிற்கு எதிரான நாடு என்று சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வளவு பெரிய மோசடி இது.

இரண்டாவதாகக் கருதப்படுவது அரசு, ராணுவம் நிதித்துறை ஆகியவற்றில் இந்துத்துவம் ஊடுருவுவது. பொதுவாகவே இந்தியாவில் தம்முடைய கட்சிக்கு ஆதரவான ஆட்களை நிர்வாகத்தில் இட்டு நிரப்புவது என்பது வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒன்று தான். இது இந்துத்துவாவின் செயல்பாடு என்று சொல்ல முடியாது. பொதுவாகவே அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் அன்றைய அரசுக்குச் சாதகமாகத் தான் நடந்து கொள்வார்கள். இந்த அரசு போய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் , காங்கிரசுக்கும் இவர்கள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். காங்கிரஸ் ஆட்சியில் நிர்வாகத்துறையில் இருந்தவர்கள் பலரும் காங்கிரசில் இணைந்ததுண்டு.

இசுலாமியர்க்கு எதிரான குற்றங்கள் பா ஜ க ஆட்சியில் அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான். பா ஜ கவும், ஆர் எஸ் எஸ்சும் வலுப்பெற்று வருகின்றன. இவற்றிற்கு எதிரணியில் இருக்க வேண்டிய சக்திகள் , பிராந்திய சக்திகள் பா ஜ கவின் ஆதரவிற்காக, இந்த நசிவு சக்திகளைச் சகித்துக் கொள்கின்றன. இது ஏன் என்று காண வேண்டும். முக்கியமான காரணம் – காங்கிரசின் ஆளும் முறைமை தான். பா ஜ க ஆட்சிக்கு வந்ததன் பின்பு, கூட்டணி ஆட்சிதான் என்று முடிவான பின்பு, பிராந்தியக் கட்சிகளை அரவணைத்துக் கொண்டு ஆட்சி அமைக்கலாயிற்று. ஆனால் , பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக, ஆட்சியமைக்க வாய்ப்புள்ள காங்கிரஸ் எந்தவிதமான அதிகாரப் பகிர்விற்கும் தயாரில்லை. இது தான் முக்கியமாய் பிராந்தியக் கட்சிகளை பா ஜ க நோக்கி உந்தித் தள்ளியது. இந்த உண்மையை உணர்ந்தால் தான் பின்னாட்களில் பா ஜ கவை எதிர்து ஓர் அணி கட்டுவிக்க முடியும். இந்த உண்மையை காங்கிரஸ் உணர்ந்ததாய்த் தெரியவில்லை. ஒரு விதத்தில் பார்க்கப் போனால் , பா ஜ கவின் தீவிரவாதத்தினை மழுங்கடிக்கவும் இந்தக் கூட்டணி பயன் பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தைச் சொல்லாமல் மார்க்ஸ் மீண்டும் வாய் மலர்கிறார்: ‘உடனடியான அரசியற் செயல்பாடுகள் எகிற வகையில் , சிறுபான்மையோர் , தாழ்த்தப் பட்டோர், சனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்கவேண்டும். அம்பேத்கர் வழியில் வருணாசிரமத்திற்கு எதிரான உணர்வுகளை ஒன்று குவித்தல், பெரியார் வழியில் நின்று இந்துத்துவ மதிப்பீடுகள் , புனிதக் குறியீடுகள் ஆகியவற்றைச் சிதைத்தல்,வேலை இல்லாத் திண்டாட்டம் , ஏழ்மை ஆகியவற்றின் காரணமாக ஏகாதிபத்தியச் சார்பு நிலைக்கெதிரான போராட்டங்களில் இளைஞர்களை ஒன்றிணைத்தல், போன்றவை நமது உடனடிச் செயல் திட்டங்களாகின்றன. வகுப்புக் கலவரங்களில் இசுலாமியரது உரிமை, உயிர், உடைமை ஆகியவற்றைப் பாதுகாப்பது சனநாயக சக்திகளின் கடமை. ..இந்துத்துவத்திற்கெதிரான கண்டனச் செயல்பாடுகள் என்பன கோபத்தின் வடிகால்களாக அமையாமல், வகுப்புவெறிக்கு எதிரான செயலை நோக்கி ஆற்றல்களைக் குவிப்பதாக அமைய வேண்டும். இந்த அம்சத்தில் இந்துத்துவத்திடம் கூட நாம் பாடம் கற்க வேண்டியிருக்கிறது. ‘

முன்பே இது போன்ற பெரும் முழக்கங்கள் – வெறும் முழக்கங்கள் என்றும் சொல்லலாம் – பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். வேண்டுமானால் அம்பேத்கரை இழுத்து அணைத்துக் கொள்வது எதற்காக ? அவர் இந்து மதத்தை கண்டனம் செய்தார் என்பதற்காக. சரி, அம்பேத்கர் கண்டனம் செய்ததற்கான காரணங்கள் மிக வலுவானவை. இன்று அவற்றில் 90 சதவீதம் காரணங்கள் அடிபட்டுப் போய்விட்டன. தலித்கள் மீது நடக்கும் அநீதி தொடரத்தான் செய்கிரது. ஆனால் சட்ட ரீதியாகவும், அரசாங்கச் சார்பிலும் அவை நிகழ்வதில்லை. இந்து மதம் என்று ஒன்று மேலிருந்து இந்த அநீதிகளை நடத்திக் கொண்டிருக்கிறது என்ற பாமரத் தனமான ஒரு புரிவினை ஒத்த பார்வையுடன் மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிச் செல்கிறார்கள். ஆனால், பா ஜ க அரசு கூட வேலைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் கொண்டிருக்கும் முன்னுரிமையில் கை வைக்கவில்லை. அம்பேத்கர் மீது நிகழ்ந்த அநீதிக்கு அம்பேத்கரின் எதிர்வினை மிகச் சரியான ஒன்று. ஆனால் இன்று மார்க்ஸ் போன்றவர்கள் நடத்தும் எதிர்வினை சாரமற்ற நாடகமே. அம்பேத்கருக்கு நிகழ்ந்த அநீதியின் முனையளவு கூட மார்க்ஸ் போன்றவர்களைத் தீண்டியதில்லை. இருந்தும் அம்பேத்கரை ஏன் இவர்கள் உவப்புடன் முன்னிறுத்துகிறார்கள் ? அவர் இந்துமத எதிர்ப்பாளர் என்பது தான். சரித்திரம் ஒரு முறை துன்பியல் நாடகம் என்றால் மறுமுறை கேலிக் கூத்து என்று சொன்னவர் கரல் மார்க்ஸ்.அ .மார்க்ஸிடம் கேலிக்கூத்தாய்த் தான் இந்துமத எதிர்ப்பு வெளிப்படுகிறது. ஆனால், அம்பேத்கருடைய இந்துமத எதிர்ப்பு ஏன் இன்னமும் தலித் மக்களிடம் கூடக் காலூன்ற முடியவில்லை ? அதன் கலாசாரக் காரணங்கள் என்ன ? வரலாற்றுக் காரணங்கள் என்ன ? ஒற்றைப் பரிமாணத்தில் இந்து மதத்தைக் கட்டுவிக்க மார்க்சும், ஆர் எஸ் எஸ்சும் முயன்றாலும் (இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் இடது சாரிகளும் , ஆர் எஸ் எஸ்-சும் ஒரே மாதிரி தான் ) மக்கள் இந்த ஒற்றைப் பரிமாணக் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து நிராகரித்துத் தான் வந்திருக்கிறார்கள். மார்க்ஸின் இன்றைய, இப்படிப் பட்ட குருட்டுத்தனமான இந்து மத எதிர்ப்புத்தான் இந்து மக்களை – ஆர் எஸ் எஸ் மீது வெறுப்புக் கொண்ட உண்மையான பாமர, மற்றும் படிப்பறிவும் நியாய உணர்வும் கொண்ட இந்துக்களை– ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகளை நோக்கித் துரத்துகிறது. இந்துக்களில் நூற்றில் ஒருவர் கூட ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் இல்லை. ஆனால், இந்த உண்மையை முன்வைத்து ஆர் எஸ் எஸ்சுக்கு எதிராக பரந்த அணி கட்டுவிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், நியாய உணர்வுள்ள இந்துக்களையும் உள்ளடக்கி அவர்களின் உணர்வுகளையும் மதித்து அவர்களை மதவாதத்திற்கு எதிராகத் திருப்ப முற்சி செய்யாமல், எல்லா இந்துக்களும் இந்துத்துவ ஆட்கள் என்ற பாணியில் எழுதிச் செல்லும் மார்க்ஸ் போன்றவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது. இந்து மதம் என்ற கருத்தை இழிவுபடுத்தி இந்து என்று தன்னைச் சொல்லிக் கொள்வதே இழிவு என்று மக்களை உணரவைப்பது தான். ஆனால் இது ஒன்றும் நடப்பதாய்த் தெரியவில்லை.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்

இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 4 அத்தியாயம் 4 – இந்துத்துவம் : தலித்கள் பெண்கள்

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்துத்துவ சக்திகள் எப்படி பெண்களையும் , தலித்களையும் நசுக்க முற்படுகின்றன என்பது பற்றிய மார்க்ஸின் பார்வைகள் – பூச்சாண்டிகள் என்பது சரியான வார்த்தையாய் இருக்கும் – இந்த அத்தியாயத்தில். எப்படி இந்துத்துவ சக்திகள் மனுதர்மத்தைத் திரும்பக் கொண்டுவரப் போகின்றன என்பது பற்றியும், அது எப்படி தலித்களுக்கும் பெண்களுக்கும் எதிரி என்பதை மிக விரிவாகச் சொல்கிறார். ஆனால் அதே சமயம் ‘பா ஜ க போன்ற தேர்தல் களத்தில் செயல்படக் கூடிய கட்சிகள் எல்லாச் சமயங்களிலும் மனுவை நிலைநாட்டுவது தான் தங்களின் நோக்கம் என்று சொல்லிவிடமுடியாது. எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் தார்மிக வாழ்வு , ஸ்வதர்மம், தருமம், படிநிலையாய் ஒழுங்கமைக்கப்பட்ட ‘சன்ஸார ‘ ஆகியவற்றை விதந்தோதுவதைக் காணலாம். ‘ என்றும் சொல்கிறார். அதாவது மனுதர்மத்தினை இந்தியாவில் நிலைநாட்டுவது தான் பா ஜ க-வின் மறைமுக நோக்கம் என்று குற்றம் சாட்டுகிறார்.

பாஜக-வின் நோக்கம் என்னவாய் இருக்கலாம் என்பதற்கு , மனுவை ஆர் எஸ் எஸ் போன்ற அமைப்புகள் புகழும் ஒரு நிலையைச் சுட்டிக்காட்டுகிறார். மனுவிற்கு கோயிலைப் புதுப்பித்ததையும் சுட்டிக் காட்டுகிறார். மனுவின் விதிகள் கல்லில் எழுதப்பட்டவையல்ல. அந்தக் காலத்தின் வரம்புகளுக்குள் ஏற்பட்ட ஒரு சமூக ஏற்பாடு. எல்லா யுகங்களுக்கும் இது பொருந்தி வரும் என்றோ, கடவுள் கையளித்த நியதிகள் என்றோ ஒரு வரி கூட மனுதர்மம் புத்தகத்தில் கிடையாது. அன்றைய மன்னராட்சிக்குத் தக்க சமூக அமைப்பினைக் கட்டிக் காட்ட ஏற்பட்ட ஒரு ‘ஸ்மிருதி ‘ இது. ‘ஸ்மிருதி ‘ என்பதன் பொருளே இது நினைவிலிருந்து எழுதப்பட்ட ஒரு ஆவணம் என்பதாகும். மனுவிற்குக் கோயிலைப் புதுப்பித்ததை, ராஜ ராஜசோழனுக்கு கருணாநிதி சிலை எழுப்பியதுடன் ஒப்பிடலாம். பழம்பெருமை பேசும் மனநிலையில் எழுந்த ஒரு செய்கை இது. நவீன உலகில் இதற்கு எதுவும் அர்த்தமில்லை என்பது, கருணாநிதிக்கும் தெரியும். ராஜராஜ சோழனின் மன்னராட்சியைக் கருணாநிதி கொண்டுவரப்போகிறாரா ? 10000 விலைமாதர்களைக் குடியேற்றப் போகிறாரா என்று கேட்பது எப்படி அர்த்தமற்ற ஒரு கேள்வியோ அதே போன்ற அர்த்தமற்ற கேள்விதான், மனுவிற்குக் கோயில் புதுப்பித்ததன் பின்னால் இல்லாத அர்த்தங்களைக் கற்பிப்பதும். தென்னாட்டில் மனு நீதிஎன்பது , வெறுமே சுயச்சார்பற்ற நீதிஎன்ற அர்த்தத்தில் தான் புழங்கி வருகிறதே தவிர பிராமணிய ஆவணமாக அல்ல. இது சமூகவியல் நோக்கில் சமகால ஆய்வு மேற்கொள்ளும் யாருக்கும் எளிதில் புலப்படும் விஷயம். ஆனால் மார்க்சுக்குத் தான் இது விளங்கவில்லை.

ஆண் பெண் வேறுபாடு பற்றி , இந்துத்துவ அமைப்புகள் சொல்வதாய் மார்க்ஸ் கூறும் விஷயங்களும் கூட எல்லா மதங்களின் கீழும் உள்ளவை தான். கத்தோலிக்கர்கள் இன்னமும், அதிகார மேல்நிலையில் உள்ள பாதிரியார்கள் பதவிக்கு பெண்கள் வருவதை அங்கீகரிக்கவில்லை. முஸ்லீம் பெண்களுக்கு ஆண்களுடன் சேர்ந்து தொழும் உரிமையும் இல்லை. இவற்றைப் பார்க்கில் கடந்த 100 வருடங்களில் இந்து சமூகம் பாரதூரமான மாற்றங்களைப் பெண்களைப் பொறுத்தவரையில் நடைமுறைப் படுத்தி வருகிறது. பங்காரு அடிகளின் இயக்கத்தில் பெண்கள் முன்னணியில் இருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டலாம். விடுதலைப் போராட்டத்தில் இந்துப் பெண்கள் பங்கும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று. ஆனால் மார்க்ஸின் குருட்டுப் பார்வையில் இதெல்லாம் படுவதே இல்லை.

‘நைரோபியில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெண்களது வீட்டு வேலைக்கு ஊதியம் தரவேண்டும் என்ற கோரிக்கையும், லெஸ்பியனிசத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ‘ இந்துத்துவ சக்திகள் தீவிரமாய் எதிர்த்ததாய்ச் சொல்கிறார் மார்க்ஸ். அவர் சொல்லாமல் விடுவது, நைரோபியிலும் சரி , சீனாவிலும் சரி பெண் உரிமைகளுக்கு எதிராக அமைப்பு ரீதியாய் மிகமிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது கத்தோலிக்கத் திருச்சபையும், இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளூம் தான்.

‘இப்போது தலித் பிரசினைக்கு வருவோம் ‘ என்கிறார் மார்க்ஸ். தலித் பிரசினையை இந்து எதிர்ப்புப் பிரசினையாய் ஆக்குவதற்கான முயற்சிகள் அம்பேத்கர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விமர்சனம் இந்து சமூகத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அதிகாரப் பீடங்களில் தலித்கள் இடம் பெறுவது கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து வருகிறது. முழுமையான அங்கீகாரம் இன்னமும் கிட்டவில்லை என்றாலும், 100 வருடங்களில் இந்து சமூகம் அடைந்திருக்கும் மாறுதல், நிச்சயமாய் இந்தியாவிற்கும், இந்து சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பது தான்.

அம்பேத்கரின் விமர்சனத்தை மையப் படுத்தி, இந்து மதத்தை விமர்சிக்கப் பயன் படுத்திக் கொள்ளும் மார்க்ஸ் போன்றவர்கள் இஸ்லாம் பற்றி அறிவுபூர்வமாய் அம்பேத்கர் சொன்ன விமர்சனங்களைப் பூசி மெழுகுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

‘தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடாய் விளங்கும் அம்பேத்கர் , பூலே போன்றோரை இந்துத்துவச் சொல்லாடலுக்குள் அடக்க முனைதல் ‘ என்பது ஒரு குற்றச் சாட்டய் மார்க்ஸ் முன்வைக்கிறார். அம்பேத்கரை இந்துவாய்ச் சித்தரிப்பதில் உள்ள முரண்பாட்டைப் புரிந்துகொள்ளலாம், ஆனால் பூலே தன்னை இந்துவாய் இனம் கண்டவர் தான். அம்பேத்கர் போன்று மதமாற்றம் பற்றிப் பேசியவர் அல்ல பூலே.

முஸ்லிம்களுக்கும் தலித்களுக்குமான ஒற்றுமை இயல்பானது என்பதற்கு மார்க்ஸ் சொல்லும் ஒரு காரணம் : ‘கிராமப் புறங்களில் தலித்களுக்குத் தேவையான மாட்டுக் கறியை இஸ்லாமியக் கசாப்புக் கடைக் காரர்களே தொடர்ந்து அளித்து வருகின்றனர். ‘ இது பற்றி என்ன சர்வே எடுத்தார் என்று தெரியவில்லை. பன்றிக்கறியை உண்கிறார்கள் என்று தலித்கள் மீது வெறுப்பை உமிழும் இஸ்லாமியர்களும் உண்டு. இது போன்ற பொறுப்பற்ற பொதுமைப் படுத்தல்கள், ஒற்றுமையை வளர்க்க உதவாது.

இந்த அத்தியாயத்தில் கடைசியில் அவர் தரும் ஒரு கருத்து இது: ‘இந்துத்துவத்தின் ஆதாரமாக விளங்கும் பார்ப்பனியத்தை ‘ஒதுக்குதலும் ஒதுங்குதலும் ‘ என வரையறுத்ததால், அதற்கெதிரான செயல்பாடு ஐக்கியமாதலும் அத்து மீறலுமாகவே இருக்க முடியும். தலித்கள் முதலில் தங்களுக்குள்ளும் பிறகு சிறுபான்மையினருடனும் பிறகு இதர ஒடுக்கப்பட்ட சக்திகளுடனும் இந்துத்துவத்திற்கு எதிராக ஐக்கியமாதல் , இந்து தரும அடிப்படையில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வெளிகளிலிருந்து அத்து மீறுதல் (எ கா: சுடுகாடு, கோயில் கருவறை) என்பதாக இந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும். மதத்தாலும் ஆணாதிக்கத்தாலும் , சாதீயத்தாலும் கறைபட்டுப் போன நமது மொழி, பாரம்பரியம் , கலாச்சாரம் என எல்லாவற்றிலும் இந்த அத்துமீறல்கள் மேற்கொள்ளப் பட வேண்டும். ஒழுக்கம், சுத்தம், தீட்டு, அழகு போன்ற கறைபட்டுப் போன கருத்தாக்கங்கள் கவிழ்க்கப்பட வேண்டும். அரசியல் , பொருளாதாரம், கலாச்சாரம், கருத்தியல் எனப்பல தளங்களில் மதச்சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி என்ற கருத்தாக்கங்களுக்காக நடைபெறும் போராட்டங்களில் தங்களுக்கான அர்த்தங்களை நிலை நாட்டுவதில் தலித்கள்+பெண்கள்+சிறுபான்மையினர் முன்னணியில் நிற்கவேண்டும். இதர ஒடுக்கப்பட்ட மற்றும் சனநாயக சக்திகள் அவர்களோடு இணைந்து நிற்கவேண்டும். ‘

Pompous hyperbole – மிகப் பெரிதான ஒரு ஊதிப் போன சுய முக்கியத்துவத்தில் எழும் இந்த அறிவுரை , சமகால நிதர்சனங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒரு வெற்று வாசகம். பார்ப்பனீயம் இந்து மதத்தின் ஆதாரம் என்ற ஒரு பொய். அதைத் தொடர்ந்து, தீட்டு, ஒழுக்கம் என்ற கருத்தாக்கங்கள் கவிழ்க்கப் படுமானால், இஸ்லாமியர்கள் இந்தக் கவிழ்த்தலுக்கு தலித்களுடன் துணை நிற்பார்களா ? ‘மதத்தாலும் ,சாதீயத்தாலும் கறைபட்டுப் போன நம் மொழி ‘ என்பதற்கு ஏதாவது பொருள் இருக்கிறதா ? எல்லா மொழிகளும் இப்படிப் பார்க்கப் போனால் , இனவாதத்தினாலும், ‘மற்றவர் ‘ மீதுள்ள வெறுப்பினாலும் கறைபட்டவையே. இந்தக் கறையல்ல ஒரு மொழியின் அடையாளம். ஒரு மொழியின் ஒரு மூலையில் கிடக்கும் கறையினால் மொழி முழுதுமே கறைபட்டதாய்ச் சொல்ல முடியுமா ? ‘சாதி இரண்டொழியெ வேறில்லை ‘ என்பதும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ கூடத் தமிழ் தான்.

இந்தக் கறையைப் போக்குவது என்பது, படைப்பு மற்றும் மொழி ஆக்கத்தினால் ஆகும் , சமூக இயக்கங்களினால் தான் ஆகும். அது இணைப்பிற்கான போராட்டம், தனிப்பிற்கான போராட்டம் அல்ல. ‘தன்னை தலித்தாக உணர்வது ‘ என்பதும் கேட்கக் கவித்துவமாய் இருக்கலாம். ஆனால் நடைமுறை சாத்தியமா ?

தங்களுக்கான வெளிகளிலிருந்து அத்து மீறுதல் என்பதை நான் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்கிறேன். சுடுகாடு, கக்கூஸிலிருந்து தலித்கள் வெளியேறத்தான் வேண்டும். கருவறை நுழைவுப் போராட்டம் என்று முரசறைந்து கொண்டு புரட்சிகரமாய்த் தன்னைக் காண்பித்துக் கொண்ட இயக்கம் கூட, கக்கூஸையும் , சுடுகாட்டையும் விட்டு வெளியேறுங்கள் என்று போராட்டம் நடத்தவில்லை. மார்க்ஸ் சொல்லும் முற்போக்கு இயக்கங்கள் இது பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை என்பது, இந்த வேலைப் பகிர்வை மட்டும் பாதுகாப்பதில் தான் மும்முரமாய் இருக்கின்றன என்பதும் மார்க்ஸ் சொல்வதில்லை. இந்துத்துவ இயக்கங்களின் மீது வீசும் சவுக்கைக் கொஞ்சம் நிறுத்தி தன்னைச் சுற்றிலும் அவர் பார்த்திருக்கலாம். அப்போது நிஜமான எதிரிகள், நண்பர்கள் போன்று பாவனை செய்யும் எதிரிகள் யார் என்று தெரிந்திருக்கும்.தலித்கள் ஏற்கனவே ஒதுக்கிட்டின் கீழ் பயன் பெற்றால் , இது வரை பயன் பெறாத தலித்களைக் கருத்தில் கொண்டு ஒதுக்கீட்டு விதி சீர்செய்யப் படவேண்டும் என்பது கூட இங்கு இன்னும் பின்பற்றப் படாமல் இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட / மிகப் பிற்படுத்தப் பட்ட சாதியினர் என்று ஒதுக்கீடு கேட்கும் சாதியினர் தான் இன்று தலித்கள் மீது கொடூரத்தினை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் மார்க்ஸ் பார்ப்பனீயத்தை மட்டும் சாடி விட்டு பொதுவான பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை என தலித்களிடம் பொய்ப்பிரசாரம் செய்வார்கள். இன்று தலித்களின் எதிரிகள் பிராமணர்கள் அல்ல.

(தொடரலாம்)

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்