அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி – 3 (அத்தியாயம் 3 : இந்துத்துவத்தின் பரிணாமம் – ஒரு வரலாற்றுக் குறிப்பு)

This entry is part of 26 in the series 20020428_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்த அத்தியாயத்தில் மார்க்ஸ் இன்றைய ஆர் எஸ் எஸ்-இன் பிதாமகர்கள் என்று இவர் கருதும் சில இயக்கங்களைப் பற்றிச் சொல்கிறார். இதனுடன் கூடவே இந்து ‘மேல்சாதிக் காரர்கள் ‘ இந்து மதத்தில் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் மீது சில விமர்சனங்களை வைக்கிறார்.

‘வெள்ளையருக்கும் முன் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் வந்த வெளிநாட்டு ஆக்ரமிப்பாளருக்கும், வெள்ளையருக்கும் நோக்கத்திலும் , நடைமுறையிலுமிருந்த சில வேறுபாடுகள் எண்ணத்தக்கவை. வெள்ளையருக்கு முன் வந்தோர் இந்த நாட்டைச் சுரண்டி தங்கள் நாட்டிற்குக் கொண்டு சென்று வாழும் உத்தேசமுடையவர்களல்ல. ‘ என்பது மார்க்ஸின் குறிப்பு. வெள்ளையருக்கு முன்பு வந்த ஆக்ரமிப்பாளர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றார் என்பதைத் தெளிவில்லாமலே விட்டு விடுகிறார் மார்க்ஸ். அவர் சொல்வது இஸ்லாமியப் படையெடுப்புகளைப் பற்றித் தான். ஆனால் இதை வெளிப்படையாய் குறிப்பிடுவது அவர் ‘பாதுகாக்க ‘ நினைக்கும் இஸ்லாமியமக்களுக்குச் சங்கடம் தரும் என்றோ என்னவோ இதைக் குறிப்பிடாமல் விட்டு விடுகிறார். ‘பெரும்பாலும் அவர்களது நோக்கம் இங்கேயே குடியேறுவதாக இருந்தது. ‘ என்கிறார் மார்க்ஸ்.

இது இடதுசாரி அறிவுஜீவிகளின் வழக்கமான பாட்டு. இஸ்லாமியப் படையெடுப்புகளின் தீவிரத்தைக் குறைத்தும் அதன் விளைவுகள் வெள்ளையர் படையெடுப்புகளைப் போலக் கண்டனம் செய்யப்படவேண்டியதில்லை என்பதாகவும் சொல்வதற்கு இந்த வாதம் இவர்களுக்குப் பயன்படுகிறது. அதாவது ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த இடத்தில் குடியேறுவதாய் இருந்தால் பரவாயில்லை என்கிற வாதமாய் இதைக் கொள்ளலாம். இதன் தவறை உணர வேண்டுமென்றால் அமெரிக்கா மீது நிகழ்ந்த ஆக்கிரமிப்பையும், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் செய்த ஆக்கிரமிப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா ‘புதிய உலகம் ‘ என்ற பெயரில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டது. அங்கிருந்த புராதனக் குடிமக்கள் கொல்லப் பட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கைமுறை முற்றிலுமாய் குலைக்கப் பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இனவெறிப் பகுப்பு முறை புகுத்தப் பட்டது. இஸ்லாமியப் படையெடுப்புகள் எகிப்து தொடங்கி ஆஃப்கானிஸ்தானம் வரையில் இருந்த பழங்குடிகளைக் கட்டாய மதமாற்றம் செய்து , அவர்களுடைய கலாசாரம் அழிக்கப் பட்டது. மார்க்ஸ் வாதப் படி பார்த்தால் இதெல்லாம் சரியே. ஏனென்றால் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் ‘இங்கே வந்து நிரந்தரமாக ‘க் குடியேறுவது.

சொல்லப்போனால், வெள்ளையர்கள் இங்கே குடியேறக்கூடாது என்று எந்தக் கொள்கையும் இருந்ததாய்த் தெரியவில்லை. விடுதலைப் போராட்டம் இல்லாமல் இருந்திருந்தால், இங்கு குடியேற்றம் அதிகரித்திருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கும் சரி, சிலுவைப் போர்களுக்கும் சரி மதம் ஆக்கிரமிப்பின் பின்னணியில் மிக முக்கியமான விஷயமாய் இருந்தது. பிரிட்டிஷ் அரசுக்கு இது முன்னணியில் இல்லை. இன்னும் கூர்ந்து கவனித்தால், ஜனநாயக மரபு ஒரு புறம் வளரவும், எழுதப்பட்ட சட்ட வரைவுகள் நிலை பெறவும், எல்லாருக்கும் பொதுவான நீதி என்ற ஒரு நடைமுறை வரவும் பிரிட்டிஷார் காலம் தான் துணை புரிந்தது. இதை மார்க்சும் ஒப்புக் கொள்கிறார். ‘நவீன வடிவிலான அரசு நிறுவனங்களைக் கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ‘ பிரிட்டிஷாருக்கு இருந்ததாய் அவர் தெரிவிக்கிறார். ‘நிர்ப்பந்தம் ‘ என்பதன் பொருள் என்ன ? என்ன நிர்ப்பந்தம் எங்கிருந்து அவர்களுக்கு வந்தது ? ஏன் இஸ்லாமிய அரசின் கீழ் இந்த நிர்ப்பந்தம் எழவில்லை ?

கேள்வியிலேயே ஒருக்கிறது பதில். மார்க்சும் இந்த உண்மைகளைச் சொல்கிறார். ஆனால் அழுத்தம் தந்து சொல்வதில்லை. ‘ அவர்கள் இங்கே வந்தபோது தொழிற்புரட்சி தொடங்கியிருந்தது. ‘ அதாவது , நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையான இந்து மற்றும் இஸ்லாமிய மன்னராட்சிக்கு மாற்றாக ஒரு புதிய ஆட்சி முறை, ஒரு புதிய அரசாங்க வழி முதன் முதலில் எழுந்தது. இதை ‘இந்து உயர்சாதி ஆதிக்க சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. ‘ என்பது மார்க்சின் கூற்று. இந்தப் பயன்படுத்தலின் பின்னால் உள்ள நவீனப் படுத்துதல் எப்படி இந்த உயர்சாதிகளிடையே முதன்முதலில் சமத்துவம் பற்றிய ஐரோப்பியக் கருத்துகளுக்கு வித்திட்டது என்பதை அவர் சொல்வதில்லை.

விடுதலைப் போராட்டத்தின் ‘தொடக்ககால எழுச்சிகளில் இசுலாமியரின் பங்கு அதிக வீச்சுடனும், வன்மையாகவும் இருந்தது ‘ என்பதற்கான காரணங்களாய் மார்க்ஸ் சுட்டுபவை : சிலுவைப்போரின் நினைவும், ஐரோப்பியர் இஸ்லாமியர் மீது எடுத்த படையெடுப்பும். இந்த வன்மைக்கு இவர் மார்சிய அணுகுமுறையைப் பயன் படுத்தியிருந்தால், நிலவுடமைச் சமூகத்தின் மதிப்பீடுகளையும். மதம் சார்ந்த அடையாளங்களையும் கொண்டு எழுந்தது இஸ்லாமியரின் விடுதலைப் போராட்டம் என்பது தெளிவாய் ஆகியிருக்கும். இஸ்லாமியரின் விடுதலைப் போராட்டம், பாகிஸ்தானின் இஸ்லாமியக் குடியரசிற்கு இட்டுச் சென்றது, ‘இந்து உயர்சாதி ‘ என்று மார்க்ஸ் சொல்கிறவர்களின் விடுதலைப் போராட்டம் மதச்சார்பற்ற, அனைவருக்கும் சம வாக்குரிமை அளிக்கிற இந்தியாவிற்கு இட்டுச் சென்றதும் தற்செயலல்ல என்பதும் சொல்லப் பட்டிருக்கும். சுவாரஸ்யமான ஒரு முரண்பாடு என்னவென்றால் இன்று மார்க்ஸ் தான் போராடுவதாய்ச் சொல்லிக்கொள்ளும் ‘மதச்சார்பின்மை, ஜனநாயகம் சமத்துவத்தை ‘ இவர் பெறுவதே ஆங்கிலக்கல்வியாலும், பிரிட்டிஷ் தந்த தாராளவாதக் கொள்கைகளினாலும், இவர் சுட்டிக் காட்டும் ‘இந்து மேல்சாதியினர் ‘ மேற்கொண்ட இயக்கங்களின் விளைவாகவும் தானே ஒழிய, இஸ்லாம் தந்த மதக் கோட்பாடுகளினால் அல்ல.

இந்து உயர்சாதிகள் ஆங்கிலேய அரசு நிறுவனங்களை மட்டுமல்ல, இஸ்லாமிய அரசு நிறுவனங்களிலும் கூட இடம் வகித்தனர். இஸ்லாமிய் அரசு எப்படி மதம் சாராத அரசு என்று நிரூபிப்பதற்காக பலரும், அக்பரின் கீழ் பணி புரிந்த இந்துக்களைச் சொல்வதுண்டு. திப்பு சுல்தானிடமும் கூட ஒரு பிராமணர் முக்கிய மந்திரியாய் இருந்ததுண்டு. இஸ்லாமிய அரசாங்கங்கள் தலித்களைத் தேடிப் பிடித்து அரசு அமைப்பில் இடம் கொடுத்து சாதியத்தை உடைத்துச் செயல் பட்டனவா ? இஸ்லாமிய அரசாங்கங்களுக்கு இங்கிருந்த சாதிய அமைப்பு உறுத்தலாகவோ, களையப் படவேண்டிய ஒன்றாகவோ என்றுமே தோன்றியதில்லை. மார்க்ஸ் இதை மறைமுகமாய்ச் சொல்கிறார். பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகான ஆவணப் படுத்துதல்கள் தாம் முதல் முறையாய் அட்டவணையிட்டு தலித் மக்களுக்கு உரிய அங்கீகாரம் தந்தது.

இதனால் இந்தக் கட்டுரையில் அவர் சொல்வது பாதி. சொல்லாமல் நம் ஊகத்திற்கு விடுவது மீதி. ஆனால் அவருடைய முடிபுகள் அனைத்தும் அவர் சொல்லாமல் விடும் விஷயங்களுக்கு நேர் எதிரிடையானவை.

‘ இந்தியாவிலிருந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் , இசுலாமியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதையும் ஆங்கிலேயர்கள் பள்ளிப் பிள்ளைகளின் மனத்தில் திரும்பத் திரும்பப் பதித்து வந்தனர். ‘ ( என்னுடைய குறிப்பு இது பற்றி : சாதிய ஏற்றுத் தாழ்வுகள் இந்தியாவில் இதற்கு முன்பு இருந்ததில்லை என்பது மார்க்ஸின் வாதமா ? அதைச் சொல்ல பிரிட்டிஷாருக்கு உரிமை இல்லை என்பது இதன் பொருளா ? இசுலாமியர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று பதிய வைத்தவர்கள் தம்மை – பிரிட்டிஷாரை- உள்ளூர்க்காரர்கள் என்று சொல்லிக் கொண்டார்களா ? ஆங்கிலேயர் இஸ்லாமியரைப் பற்றி மட்டும் இப்படிச் சொல்லவில்லை ஆரியர்-திராவடர் என்ற பகுப்பு முறையையும், ஆரியர் வெளியிலிருந்து வந்தவர்கள் என்ற கருத்தையும் பதிய வைத்தவர்கள் அவர்கள் தானே ? இதை ஏற்றுக் கொண்டு ,திராவிட இயக்கங்கள் பிராமணர்கள் வெளியே இருந்து வந்தவர்கள் என்று செய்த பிரசாரமும் தவறல்லவா, மார்க்ஸின் கூற்றுப்படி ? அப்படித் தவறு என்றால் அடஹி ஏன் மார்க்ஸ் வெளிப்படையாய்ச் சொல்வதில்லை ? )

‘இசுலாமியர் ஆங்கிலக் கல்வியிலிருந்து ஒதுங்கும் நிலை நீடித்தது. 1835-ல் ஆங்கிலப் பள்ளிகள் அனைத்திற்கும் நிதியுதவி செய்ய ஆங்கில அரசு முடிவு செய்த போது கல்கத்தாவைச் சேர்ந்த 800 இசுலாமியர் அதனை எதிர்த்து மனு ஒன்றை அளித்தனர். கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் முயற்சி என்று இதனைக் குற்றம் சாட்டினர்/ இந்துக்களோ அரசு முயற்சியை வரவேற்றனர். .. இசுலாமியர் ஆங்கிலக் கல்வியில் நாட்டம் செலுத்தவில்லை. இன்றுவரை இந்நிலை தொடர்கிறது. ‘ (என்னுடய குறிப்பு இது பற்றி : இது மிகச் சுவாரஸ்யமான புள்ளி விவரம். பள்ளிகள் மதமாற்றத்திற்குப் பயன்படும் என்ற அச்சத்தை இசுலாமியர்கள் காண்பித்தார்கள் என்பது இன்றைய ஆர் எஸ் எஸ்-காரர்கள் சிறுபான்மையோர் பள்ளிகளைப் பற்றி சொல்கிற புகாரின் அச்சு நகலாக இருப்பது நோக்கத்தக்கது. இதில் எனக்கு அர்த்தமாகாத இன்னொரு விஷயம் என்னவென்றால், யாருடைய மதமாற்றம் பற்றி இஸ்லாமியர்கள் கவலைப் பட்டார்கள் ? அது நிச்சயமாய் இஸ்லாமியர்களின் மத மாற்றமாய் இருக்க வாய்ப்பில்லை. என்றால், இந்துக்களைப் பற்றியதாய்த் தான் இருக்க வேண்டும். எனில், இந்துக்கள் கிறுஸ்தவர்கள் ஆவது பற்றி இஸ்லாமியர்கள் ஏன் கவலைப்படவேண்டும் ? தாம் செய்யும் மதமாற்றம் தடைப்படும் என்பதாலா ? தம்மை விட கிறுஸ்துவ மதமாற்றக் காரர்கள் திறமையாய்ச் செயல்படக்கூடும் என்ற அச்சம் இந்த எதிர்வினைக்குக் காரணமா ? கடைசியாக ஆங்கிலக் கல்வியில் இஸ்லாமியர்கள் நாட்டம் காட்டவில்லை என்று எங்கே மார்க்ஸ் சர்வே எடுத்தார் என்பது தெரியவில்லை. மத்திய தரவர்க்கத்தினரிடையே, இஸ்லாமியராயினும், இந்துக்களாயினும் ஆங்கிலக் கல்வி மோகம் ஒன்றே போல்தான் என்பது என் எண்ணம்.)

இந்துக்கள் ஏன் அதிகாரத்தில் பங்கு பெற்றார்கள் ஏன் இந்து மதச் சீர்திருத்தத்தை வலியுறுத்தினர் என்பதற்கு மார்க்ஸ் கூறும் காரணங்கள், மார்க்ஸின் வக்கிர மன நிலையைப் புரிந்து கொள்ள உதவும். ‘புதிய மாற்றங்களால் இந்துச் சமூகப் படிநிலை அமைப்பில் எந்தச் சிதைவும் ஏற்படாமல் காப்பது . ‘ என்பது மார்க்ஸ் சொல்வது. இந்த நூறு வருடங்களில் இந்துச் சமூகப் படிநிலை அப்படியே இருந்து வந்திருக்கிறதா என்று இதய பூர்வமாய் அவர் சொல்லட்டும்.

தொடர்ந்த மார்க்ஸின் வார்த்தைகளைப் பார்ப்போம்.

‘ இதன் அடிப்படையிலான செயற்பாடுகளில் ஒன்று மத்தியதரவர்க்கத்திற்கு ஏற்ற இந்து மனைவியரை உருவாக்குவது. இந்த நோக்கில் பெண்கல்வி பற்றிப் பேசினர். விதவைகளின் எண்ணிக்கை அதிகமானால் உயர்சாதிப் பெண்டிர் மத்தியில் விபசாரத்திற்கு வழி வகுக்கும், இது குடும்ப அமைப்பைக் கெடுக்கும் என்கிற நோக்கில் விதவை மறுமணம், இளமைத் திருமணத் தடை முதலியவற்றை உயர்சாதி இந்துச் சீர்திருத்தவாதிகள் முன்வைத்தனர். ‘

நான் இது இட்டுக்கட்டிச் சொன்னதில்லை. நிஜமாகவே மார்க்ஸ் இதைச் சொல்கிறார். அதாவது இந்து உயர்சாதி ஆண்கள் விதவைத் திருமணத்ட்தை வலியுறுத்திச் சொல்வதற்குக் காரணம் , தம்முடைய குடும்பப் பெண்கள் விதவையானால் விபசாரிகள் ஆகிவிடுவார்கள். அவர்களை விபச்சாரியாகாமல் தடுக்க வேண்டுமென்றால் அவர்களை மறுமணம் செய்ய ஊக்குவிக்கவும் வேண்டும். இந்தக் கருத்தை தெரிவித்தவர்கள் யார் என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறாரா என்று தேடிப் பார்த்தேன். எங்குமே அவர் இது பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த மாதிரி ஒரு வெறுப்புப் பார்வையில் இஷ்டத்துக்கும் இட்டுக்கட்டி இவர் சொல்கிற இடங்கள் அனேகம். இதில் இது ஒரு உதாரணம் தான். ஆயிரக்கணக்கான வருடங்கள் மேல்சாதி விதவைகள் விபச்சாரிகள் ஆகிக்கொண்டே இருந்தார்களா ? இதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா ?

இதன் மறுதலை எவ்வளவு ஆபத்தான கருதுகோளுக்கு இட்டுச் செல்கிறது என்பதை இவர் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. விதவைத் திருமணத்தை எதிர்த்தவர்கள் தம்முடைய குடும்பத்துப் பெண்கள் விபசாரியானால் பரவாயில்லை என்று கருதினார்களா ? இந்து உயர்சாதி மக்களின் சீர்திருத்தம் அந்தரங்க சுத்தியில்லாதது, உள்நோக்கங்கள் உள்ளது என்று இவர் கூறுவதற்காக இப்படி இட்டுக் கட்டிச் சொல்லும் வாசகங்கள் , மார்க்ஸின் பெண்வெறுப்பைச் தான் காட்டுகின்றன.

இத்துடன் சேர்த்து பெண்கல்வியையும் ஏன் அவர் குறிப்பிடவேண்டும் என்பதும் எனக்குப் புரியவில்லை. மத்தியதரவர்க்கத்திற்கு ஏற்ற பெண்களை உருவாக்குவதுதான் பாரதியார் , ஜோதிபா ஃபுலே ஆகியோரின் நோக்கமா ?

இதற்குப் பின் மார்க்ஸ் இந்துத்துவத்தின் வளர்ச்சியில் முதன்மையாய் பிரம்ம சமாஜம் தோற்றுவித்த ராஜாராம் மோகன் ராயினைக் காண்கிறார். சதி என்ற கொடிய பழக்கத்தை ஒழிக்கப் போராடியவர். பிரம்ம சமாஜம் ஐரோப்பியப் பார்வையில் இந்து மதத்தைப் புனரமைக்க முயன்றது. இந்துமதம் என்பதை , கிறுஸ்தவத் திருச்சபை மாதிரி ஆக்க முயன்ற இந்த முயற்சி அவ்வளவாய் வெற்றி பெறவில்லை. காரனம், பன்முகத்தன்மை இந்துக்களிடம் ஊறிப்போன ஒன்று. ஐரோப்பிய மதங்கள் உருவான வரலாறும், இந்துமதம் உருவான வரலாறும் நேர் எதிரிடையானவை. ஒற்றை அடையாளத்திலிருந்து உருவாகியவை ஐரோப்பிய மதங்கள் இந்து மதம் வேறு வேறுஅடையாளங்களின் சங்கமம். ஒற்றை அடையாளம் என்பதே இந்து மதத்தவரின் ஆழ்மனதில் இடம் காணாத ஒன்று. பிரம்ம சமாஜம் போன்றவை வேரூன்றாததற்கும் இதுவே காரணம்.

மார்க்ஸின் பிரசினை என்னவென்றால், ஒரு அத்தியாயத்தில் ஒற்றை அடையாளம் இருந்ததில்லை என்பதால் ‘இந்து ‘ என்ற சொல் குழப்பமான அர்த்தம் கொண்டிருப்பதால் சொல்கிறார். வேறு அத்தியாயத்தில் ஒற்றை அடையாளம் கட்டுவிக்க முயன்றவர்கள் ‘இந்துத்துவ ‘வாதிகள் என்கிறார். மார்க்சிற்கு அதுவும் சரியில்லை. இதுவும் சரியில்லை. இன்றைய அர்த்தத்தில், எந்த விதத்திலும் ஆர் எஸ் எஸ்-உடன் ராஜாராம் மோகன் ராயை இணைக்க முடியாது எனினும் அதை இணைக்க முயல்கிறார் மார்க்ஸ். இந்து அடையாளமே இந்துத்துவ அடையாளம் என்று காண்பிக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறார். அதனால், பிரக்ஞை பூர்வமாகவே இந்தக் கோட்பாட்டிற்கு சங்கடம் விளைவிக்கும் எல்லோரையும் ஒன்று ஏதோ ஒரு விதமாய் இந்துத்துவ ஆட்கள் தான் என்று நிறுவ முயல்வது, அதுவும் முடியவில்லை என்றால் அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் விடுவது – இது தான் அவருடைய உத்தி. ராஜாராம் மோகன் ராய் ஐரோப்பியப் படுத்தப் பட்ட நிலையில் இந்துமதம் – சாதியத்திற்கு அதில் இடமில்லை. ஆனால் ஆர் எஸ் எஸ் வர்ணாசிரமத்தைப் பாதுகாக்கிறது என்று சொல்லும் மார்க்ஸ், எப்படி இந்தத் தொடர்பை நிறுவமுடியும் ? ஆனால் தர்க்கம் பற்றித் தான் மார்க்ஸிற்குக் கவலையே இல்லையே. இன்றைய ஆர் எஸ் எஸ்-ஐ எதிர்ப்பதற்காக இந்து என்ற பெயரில் செயல்பட்ட எல்லோரையும் வரிசையாக ஒரே நேர்கோட்டில் நிற்கவைப்பது தான் அவர் பாணி.

இன்றைய ஆர் எஸ் எஸ்-இன் முதல் பிதாமகர் ராஜாராம் மோகன் ராய் என்றால் ஆர் எஸ் எஸ் காரர்கள் மகிழவே செய்வார்கள். இன்னும் கொஞ்சம் முன்னால் போய் மார்க்ஸ் சங்கரரிடமும் போகலாம். வியாசரிடம் போனாலும் தப்பில்லை.

(தொடரலாம்)

Series Navigation