கத்தோலிக்கப் பாதிரியார்கள் : அமெரிக்கா-ஐரோப்பாவில் உருவாகி இருக்கும் பெரும் பிரசினையும் இந்திய பத்திரிகை உலகமும்

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

மஞ்சுளா நவநீதன்


நான் தொடர்ந்து, இந்து, எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிக்கைகளைப் படித்துவருகிறேன். கூடவே, அமெரிக்கப் பத்திரிக்கைகளையும், இங்கிலாந்து தினசரிகளையும் படித்து வருகிறேன்.

இந்தியாவின் ஆங்கில தினசரிகள் பெரும்பாலும் இந்த வெளிநாட்டு ஆங்கில பத்திரிக்கையின் செய்திகளிலிருந்தே பெறுகின்றன. அது தவிர பெரிய பத்திரிக்கைகளான இவைகளுக்கு பல தனிப்பட்ட பத்திரிக்கையாளர்களையும் முக்கியமான வெளிநாடுகளில் வைத்திருக்கின்றன. ஆகவே, இந்த பத்திரிக்கைகளுக்கு எல்லா விஷயங்களையும் அடைய வழி இருக்கிறது. எந்த செய்தி இந்தியப் பதிப்பில் வரவேண்டும், எது வரத்தேவையில்லை என்பதையும் இந்த பத்திரிக்கைகளின் ஆசிரியர் (அல்லது ஆசிரியர் குழு) தீர்மானிக்கிறது.

ஆகவே, ஒரு தினசரிப் பத்திரிக்கையின் வேலை என்ன என்பது முக்கியமான கேள்வி.

இங்கிலாந்தில் ஒரு மந்திரி விபச்சாரியுடன் பாலுறவு கொண்டதால் பதவி விலகுவது என்பது இந்தியாவில் முக்கியமான செய்தி அல்ல. அது இந்தியப் பத்திரிக்கைகளில் வரவேண்டிய தேவை இல்லை. ஆனால், அதே நேரத்தில், இந்தியர்களை அல்லது இந்தியர்களில் ஒரு பகுதியினருக்கு முக்கியமான விஷயத்தை பதிவு செய்யவேண்டியதும், அந்த விஷயத்தை அந்த ஒரு பகுதியினருக்குச் சொல்வதும் முக்கியமானது. உதாரணமாக, இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில், அல்லது துபாயில் வேலை செய்யும் மக்கள் கணிசமாக இருக்கும் பட்சத்தில், இங்கிருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு தெரிய வேண்டிய விஷயம் இருந்தால், அது தெரிவிக்கப்படவேண்டும்.

ஆனால், நம் இந்தியப்பத்திரிக்கைகள் இந்த குறிக்கோளைத் தலைகீழாக்கி விடுகின்றன. இங்கிலாந்து மந்திரி விபச்சாரியுடன் பாலுறவு கொண்டதால் பதவி விலகுவது படு முக்கியமான விஷயமாகிவிடுகிறது. (ஜெர்மனியில் கொசுத்தொல்லை பற்றி எழுதும் இந்து பத்திரிக்கை, தமிழ்நாட்டில் பூகம்பம் நடந்தால் கூட அதனை எழுதாது என்று நண்பர்கள் முன்பு கிண்டலடிப்பார்கள்). ஆனால், இந்தியர்களுக்கு முக்கியமான விஷயமாக வெளிநாடுகளில் நடக்கும் விஷயங்கள் தீவிரமாக முற்றிப் போனால் ஒழிய அது இந்துப் பத்திரிக்கை மட்டுமல்ல, மற்ற எந்த ஆங்கில தினசரிகளிலும் வெளிவருவதில்லை.

இவ்வாறு நான் எழுத நடந்த ஒரு விஷயம், போப்பாண்டவர் பற்றிய இந்து செய்தி. கத்தோலிக்க மத பாதிரியார்கள் சிறுவர்களை பாலுறவுக்காக உபயோகப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது, பாவம் மட்டுமல்ல, ஒரு குற்றமும் கூட என்று போப்பாண்டவர் சொன்னது இந்துப் பத்திரிக்கையில் வந்திருக்கிறது.

என் சினேகிதி ஒருத்தி எனக்கு மின் அஞ்சல் அனுப்பியிருந்தாள். காலையில் எழுந்தால் ‘இந்து ‘ ஏட்டில் விழிக்கிற பல்லாயிரம் தமிழர்-தமிழச்சிகளில் ஒருத்தி. உலகச் செய்திகளை அறிந்து கொள்ள ‘இந்து ‘ ஒரு பத்திரிகை போதும் என்ற பிடிவாதமான கொள்கை உள்ளவள். ‘போப்பாண்டவர் ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களைக் கண்டனம் செய்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இந்தப் பாதிரியார்கள் சிறுவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்தது மிகுந்த தவறும் பாவச் செயலும் ஆகும் என்று வருந்தியிருக்கிறார். ‘ இந்தச் செய்தியின் பின்னணி புரியாமல் இது என்ன விஷயம் ? ஏன் திடாரென்று போப்பாண்டவர் இது பற்றிப் பேச வேண்டும் என்பது அவளுடைய கேள்வி. இந்தக் கேள்வி எனக்கு அதிர்ச்சி அளித்தது.

இதில் என்ன பிரச்னை என்றால், இதற்கு முன்னர் சுமார் 6 மாதகாலமாக எல்லா அமெரிக்க, ஐரோப்பிய பத்திரிக்கைகளிலும் தீவிரமாக எழுதப்பட்டும், பல பாதிரிமார்கள் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டப்பட்டும், பல பாதிரிமார்களை கண்டிக்காமல் பிஷப்புகள் பல வேறு ஊர்களுக்கு அனுப்பி, அந்த தவறான பாதிரிமார்கள் இன்னும் பல சிறுவர்களை காயப்படுத்தவும் துணை செய்திருக்கிறார்கள் என்று மேற்கு உலகமே கோபமும் வருத்தமும் கொண்டு பொங்கி எழுந்துள்ளது.

கத்தோலிக்க குருமார்களால் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் முன்வந்து வழக்குத் தொடர்வதும், அதனால் திருச்சபை நட்ட ஈடு வழங்குவதும் தொடர்ந்து நடக்கிற விஷயம் , இந்தப் பிரசினை தெரியவந்த மேலிடம் , பல ஆயர்கள் தமக்குக் கீழ் உள்ள இது போன்ற குற்றம் சாட்டப் பட்டவர்களை , வேறு பங்குக்கு மாற்றி, ஆனால் மீண்டும் இந்த குற்றங்கள் நடக்ககூடிய வகையில் சிறுவர்களுடன் தொடர்பு கொள்ளத்தக்க பொறுப்புகளில் அமர்த்தியிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு. இதில்லாமல், புகார்களை ஏற்றுக்கொண்டு, ஆனால் அந்த குற்றம் சாட்டப்பட்டவரை உள்ளூர்க் காவல் துறையில் ஒப்புவிக்காமல் மூடி மறைத்தும் வந்திருக்கிறார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு. வருடம் தோறும் சில மில்லியன் டாலர்கள் திருச்சபை இந்த மாதிரி நட்ட ஈடுகளுக்காகச் சொல்வு செய்கிறது என்பதும் ஒரு விஷயம்.

‘தி இந்து ‘வின் பழைய இதழ்களில் இது பற்றி என்ன செய்திகள் வந்தன என்று தேடிப் பார்த்தேன். ஒரு செய்தியைக் கூடக் காணோம். எந்த கிரகத்திலிருந்து வருகிறது இந்த ‘இந்து ‘ பத்திரிகை ? இந்துப் பத்திரிக்கையில் ஆரம்பத்திலிருந்து இந்த விஷயம் ஒரு மூலையில் செய்தியாக வந்திருந்தால் கூட, போப்பாண்டவர் எதைப்பற்றி பேசுகிறார் என்பதை இந்து பத்திரிக்கையை தொடர்ந்து வாசிக்கும் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். திடாரென்று பொத்தாம் பொதுவாக, போப்பாண்டவர் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரிமார்களைக் கண்டித்தார் என்று படித்தால், என்ன தெரியும் ?

ஏன் இப்படி என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமெரிக்காவைப்பொறுத்த மட்டில், பாஸ்டன் நகர் பத்திரிக்கையில் வெளிவந்த விஷயத்தால், பல பாதிரிமார்களும், இதனால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்களும், காலம் தாழ்ந்தேனும், வெளிவந்து குற்றங்களை வெளிப்படையாக்கி ஒரு பொது விவாதத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

பத்திரிக்கையில் வந்ததால், தூண்டப்பட்ட பலர், தங்களுக்கு நேர்ந்த பாதிப்புக்களை வெளியே தெரிவித்து நஷ்ட ஈடு கேட்டிருக்கிறார்கள் பலர். இது பாவம் புண்ணியம் தாண்டி, சமூகத்திலேயே, அமெரிக்க சட்டத்திலேயே குற்றமான விஷயம். இவ்வாறு தவறான பாதிரிமார்களைப் பற்றி வெளியே சொல்லாமல் அமுக்கி, இன்னொரு ஊருக்கு மாற்றல் செய்து அங்கும் சிறுவர்களைக் காயப்படுத்த உதவியிருக்கிறார் என்று அமெரிக்க பிஷப் அவர்களை ராஜிநாமா செய்யச்சொல்லி கோஷம் எழுந்திருக்கிறது.

இந்தியாவில் ஏராளமான கத்தோலிக்க மதத்தினர் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் கத்தோலிக்க மதத்தினரின் மொத்த எண்ணிக்கை சில முழுக்க முழுக்க கத்தோலிக்கர்கள் இருக்கும் தேசங்களின் மக்கள் தொகையை விட பல மடங்கு அதிகம். இவர்கள் எல்லோரும் அமெரிக்க ஐரோப்பிய பத்திரிக்கைகளைப் படிப்பதில்லை. அவர்களுக்கு இது போல ஒரு பிரச்னை வெளிவந்திருக்கிறது என்பது எப்படித்தெரியும் ? இந்திய பத்திரிக்கைகள் ஏன் இந்த விஷயத்தை மூடி மறைத்திருக்கின்றன ? இந்தியப் பத்திரிக்கைகள் கத்தோலிக்க மதத்து விஷயங்களை எழுதக்கூடாது என்று ஏதேனும் விதி முறை வைத்திருக்கின்றனவா ? இதனால் கத்தோலிக்கர்கள் ‘மனம் புண்படுவார்கள் ‘ என்று இந்தப் பத்திரிகைகள் நினைக்கின்றனவா ? அல்லது இந்திய கத்தோலிக்க சமூகத்தில் இப்படிப்பட்ட ஒரு விஷயமே இல்லை, அதனால் பேச வேண்டிய அவசியமில்லை என்று இந்தப் பத்திரிக்கைகளே தீர்மானம் செய்து இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்து விட்டனவா ? ஒரு சில தவறான மனிதர்களால் மதம் சார்ந்த எல்லோருக்கும் குற்ற உணர்ச்சியா ஏற்படவேண்டும் ? பிரேமானந்தாவினால் இந்துக்கள் எல்லோருக்குமே அவமானமா என்ன ?

(ஆனால் பிரேமானந்தா விவகாரத்திற்கும் , கத்தோலிக்கப் பாதிரிமார்கள் விவகாரத்திற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. திருச்சபை என்பது, ஐ பி எம், கோகா-கோலா கம்பெனி மாதிரி பல அடுக்குகளும், பல நிர்வாகச் சட்டங்களும் கொண்ட ஒரு இறுக்கமான அமைப்பு. கத்தோலிக்கப் பாதிரிமார்கள் , பிரேமானந்தா போன்ற தனி நபர்கள் அல்ல. ஒரு பெரும் ஸ்தாபனத்தில் மேலும் கீழும் பொறுப்பும், வேலைப் பகிர்வும் கொண்ட நிர்வாகிகள், வழிகாட்டிகள்.)

இந்தியாவில் இருக்கும் கத்தோலிக்கர்களுக்காக கத்தோலிக்கர்கள் நடத்தும் செய்தி பத்திரிக்கைகள் இந்த விஷயத்தைப் பேசுமா ? பேசிவிடும் என்று எதிர்பார்க்க முடியுமா ? இன்றைக்கும் கூட, இது இவ்வளவு பெரிய விஷயமாக உலகளாவிய விஷயமாகப் பேசப்படுவதால் தான், ஓரளவுக்கு இறங்கி வந்து, வாடிகன் நிறுவனம் இந்த பிரச்னையை பேச ஒப்புக்கொண்டு இருக்கிறது. இப்போதும் கூட இப்படிக் குற்றவாளிகளை பாதிரிமார்கள் பொறுப்பிலிருந்து நீக்க வாடிகன் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்திய மொழிப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் தங்களது செய்திகளை இந்தியாவின் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலிருந்தே எடுத்துக்கொள்கின்றன. ஆகையால், இந்திய ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வெளிவராதது எப்படி இந்திய மொழிப்பத்திரிக்கைகளில் வெளிவரும் ? பெரும்பாலான கத்தோலிக்கர்கள் ஆங்கில மொழிப் புலமை பெற்றவர்கள் அல்லர். இருப்பினும், ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வந்தால் தானே, அது இந்திய மொழிப் பத்திரிக்கைகளில் பேசப்பட்டு இது மக்களை அடையும் ?

இந்துப் பத்திரிக்கையில் ஆரம்பத்திலிருந்து இந்த விஷயம் ஒரு மூலையில் செய்தியாக வந்திருந்தால் கூட, போப்பாண்டவர் எதைப்பற்றி பேசுகிறார் என்பதை இந்து பத்திரிக்கையை தொடர்ந்து வாசிக்கும் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். திடாரென்று பொத்தாம் பொதுவாக, போப்பாண்டவர் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரிமார்களைக் கண்டித்தார் என்று படித்தால், என்ன தெரியும் ?

இந்தமாதிரி வழக்குகளை தாக்கல் செய்து நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர்கள் கத்தோலிக்கர்கள். ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ளவர்கள். இது போன்ற ஒரு நிகழ்விற்குப் பின்பு தேவாலயம் செல்வதை பலர் நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். பாதிரிமார்களைக் கண்டால் உடல் நடுக்கம் ஏற்படுகிறது என்று சிலர் மன நிலை பாதிப்பு அடைந்துள்ளார்கள். ஓர் அமைப்பில் உள்ள அநீதிகளைத் தொடர்ந்து பேசுவதன் மூலம் அநீதி களையப்படும். நியாயம் பிறக்கும். உண்மைகளை மூடி மறைத்து விடுவதால் தீர்வுகளும் பிறக்காது, முன்னேற்றமும் நிகழாது.

*****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்