அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி

This entry is part of 32 in the series 20020407_Issue

மஞ்சுளா நவநீதன்


(இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு : அ மார்க்ஸ் வெளியீடு : அடையாளம், எச் 15/193, 2-வது தளம் , கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310)

முதலில் சொல்ல வேண்டியது : இந்தப் புத்தகத்தின் தலைப்புப் பற்றி. ‘இந்துத்துவம் – ஒரு பன் முக ஆய்வு ‘ என்ற பெயரே தப்பு. இதை ‘ஆர் எஸ் எஸ் – பா ஜ க : ஒருமுக ஆய்வு ‘ என்று பெயரிட்டால் மிகச் சரியாய் இருந்திருக்கும். ஏனெனில் இந்துத்துவம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இந்த சக்திகள் இந்து மதம் மற்றும் கலாசாரத்தின் ஒரே பிரதிநிதிகளாய்த் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முயல்வதன் மூலம் ஓர் ஒற்றைப் பரிமாணத்தில் இந்து சமூகத்தினைக் கட்டுவிக்கவும், பிரதிநிதிப் படுத்தவும் முயல்கிறார்கள் அவர்களுடைய அரசியல் ஆதாயங்களுக்கு இப்படித் தம்மைப் பிரகடனப் படுத்துவது பயன் படலாம். ஆனால் அ மார்க்ஸ் போன்றவர்கள் இந்துத்துவத்தின் ஒற்றை பிரதிநிதிகள் இவர்கள் என்ற கருத்தாக்கத்தை நிராகரித்தல்லவா இருக்க வேண்டும் ? இல்லை, அ மார்க்ஸ் போன்றவர்கள் இந்த நிராகரிப்பை வழங்குவதன் மூலம் , இந்துத்துவத்தின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்க மாட்டார்கள். இந்துத்துவ சக்திகள் தான் இந்து மற்றும் இந்தியக் கலாசாரத்தின் ஒரே பிரதிநிதிகள் என்று சுவீகரிப்பதன் மூலம் இவர்களின் ஏச்சு ஒரு முனைப்பட்டு விடுவதும், பா ஜ கவைத் தாக்குவது இந்து மதத்தைத் தாக்குவது என்பதாக அர்த்தப் படுவதும் , இவர் போன்றவர்களின் பரந்து பட்ட நோக்கத்தை நிறைவேற்ற உதவும். இந்து மதம் தான் சாதீயம், இந்து மதம் தான் தலித் எதிர்ப்பு, இந்து மதத்திற்கு எதிர்ப்புத் தான் உய்விற்கு ஒரே வழி என்ற தாரக மந்திரத்தை மீண்டும் மீண்டும் லட்சார்ச்சனை செய்வதில் பா ஜ கவை எதிர்ப்பது என்பது இந்து மதத்தை எதிர்ப்பதற்குச் சமானம் என்பது நிறுவப் பட்டு விடும்.

உதாரணமாக திராவிடர்கள் என்ற பதத்திற்கும், திராவிட இயக்கத்தினர் என்ற பதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. திராவிடர்கள் எல்லோரும் திராவிடர் இயக்கத்தினராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்கள் எல்லாம் முஸ்லீம் லீகினராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லீம்களின் வரலாறு என்று முஸ்லீம் லீகின் வரலாற்றைச் சுட்டுவது எவ்வளவு நேர்மையற்ற செயலோ, திராவிடர்களின் வரலாறு என்று திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை எழுதுவது எவ்வளவு நேர்மையற்ற செயலோ , அதே போல் தான் இந்துக்களையெல்லாம் இந்துத்துவ சக்திகளின் உள்ளே இருப்பவர்களாய்ப் பார்ப்பது.

இதற்கு ஈடு சொல்லும் படியாக நான் கோவை குண்டு வெடிப்புக் காரர்களையும், ஒசாமவின் ஜிகாத் கும்பலையும் மையப் படுத்தி ‘இஸ்லாம் : ஒரு பன்முக ஆய்வு ‘ என்று எழுதித் தீர்க்கலாம். உடனே மார்க்ஸ் போன்றவர்கள் இது இஸ்லாம் இல்லை, அஸ்கர் அலி இஞ்சினீயர் இருக்கிறார், ஷபனா ஆஸ்மி இருக்கிறார், இஸ்லாமியர்கள் ஏழைகள், சாதாரண மக்கள் தம் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போரிடுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விடுவார்கள் . ஆனால் இந்து மதமும் , கலாசாரமும் பற்றி மிதவாத சக்திகளைப் பட்டியலிட வேண்டாம் — ஒரே ஒரு உதாரணம் கூடச் சுட்டிக்காட்ட இவருக்கு மனம் வரவில்லை. இது இந்தப் புத்தகத்தில் மட்டும் ஏற்படுகிற விதி விலக்கான செயல் அல்ல. வழமுறையாக இந்து மதத்திலும் , கலாசாரத்திலும் எந்தப் போற்றத்தக்க விஷயமும் இல்லை என்று நிறுவுவதற்கு, இந்த நேர்மையற்ற அணுகுமுறை மார்க்ஸ் போன்றவர்களுக்குப் பயன்படுகிறது.

முதல் அத்தியாயம் : இந்துத்துவம் : கவனத்தில் கொள்ள வேண்டிய சில புள்ளிகள்

இந்த அத்தியாயத்தில் மீண்டும் இந்துத்துவம் என்று சொல்லப் படுவது முன் சொன்னது போலவே, ஆர் எஸ் எஸ் – ஜன சங்கம் – விஸ்வ இந்து பரிஷத்-இன் தோற்றம் வளர்ச்சி தான் பேசப் படுகிறது. விவேகானந்தரோ, காந்தியோ, ராமகிருஷ்ண பரம ஹம்சரோ பேசப் படவில்லை.

‘ஜன நாயகம், மதச் சார்பின்மை என்கிற இரு முழக்கங்களின் மீது இந்துத்துவம் மிகப் பெரிய தாக்குதலை இன்று நிகழ்த்தி வருகிறது ‘ என்று குறிப்பிடுகிறார். மதச் சார்பின்மை மீது இந்துத்துவ சக்திகள் தாக்குதல் நடத்தி வருவது உண்மை தான். ஆனால் ஜன நாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதில்லை. ஏனென்றால் தாம் அரசியல் சக்தியைப் பற்றும் வரையில் ஜன நாயக ரீதியான மேலோங்கல் தான் தமக்கு ஒரு மதிப்பையும், சமூக இடத்தையும் அளிக்கும் என்று அவை புரிந்து வைத்திருக்கின்றன.

கோல்வால்கர் இந்தியாவை பித்ரு பூமி என்று சொன்னாராம். ‘ இந்துத்துவச் சொல்லாடலுக்கு வசப்பட்ட நமது சுப்பிரமணிய பாரதியும் கூட ‘எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே ‘ தான் இன்பத்தேன் வந்து பாய்வதாக மகிழ்கிறார் ‘ என்று சொல்லிச் செல்கிற மார்க்ஸின் வக்கிரபுத்தியை என்னவென்று சொல்ல ? பாரதி இந்துத்துவவாதி என்றால் யார் இந்துத்துவவாதி இல்லை – மார்க்ஸ் உட்பட ? ஒவ்வொரு கருத்தாக்கத்துக்கும் அதனதன் கால-இடச் சந்தர்ப்பங்களினால் அர்த்தம் மாறுபடும். தந்தையர் நாடு என்பது உண்மையில் தமிழ்நாட்டின் பிரத்தியேக மரபு. தந்தைவழிச் சமூகத்தை வழிவழியாய்க் கொண்டு வந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவும் கூட பரத கண்டம் என்று தானே வழங்கப்பட்டது. சொந்த நாட்டை வந்தே மாதரம் என்று வணங்கிய ஒருவர் , தந்தையர் நாடென்று கூறியதால் அவர் இந்துத்துவச் சொல்லாடலுக்கு வசப் பட்டார் – நூற்றாண்டு இறுதியில் வரப்போகிற சொல்லாடலுக்கு அன்றே வசப்பட்ட பாரதியின் மேதையைப் புகழ்வதா , பாரதியின் இந்துத்துவச் சார்பை சரியாய் இனங்கண்ட மார்க்ஸின் மேதமையைப் புகழ்வதா ?

மார்க்ஸ் இந்த இடத்தில் ஒரு முக்கியமான, ஆனால் சுலபமாக மறக்கப் பட்டு விட்ட ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். ‘சிறுபான்மையினர் தமது அடையாளங்களையும் , நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் அழித்துக் கொண்டு பெரும்பான்மைக்குள் அடக்கமாகி விட வேண்டும் எனச் சொல்வது ஜன நாயகமல்ல ‘ என்று மிகத் தெளிவாய்க் கூறுகிறார். ஆனால் இஸ்லாமிய நாடுகளில் மிக மோசமான மனித உரிமை மீறல்களும், பெரும்பான்மைவாதமும் செயல் படுவது பற்றி மூச்சு விடுவதில்லை. இது இந்தியாவில் உள்ள ஆர் எஸ் எஸ் பற்றிய புத்தகம் தான் என்று சமாதானம் சொல்லி விட முடியாது. உலக அரங்கில் நடக்கும் பாலஸ்தீன் போன்ற பிரசினைகளுக்கு இந்தியாவில் எதிர்வினையாற்றுவது சரிதான் என்று நிலைபாடு கொண்டவராயிற்றே மார்க்ஸ். அதே போல் பெரும்பான்மைவாதத்தின் ஆபத்தை எதிர்க்கும்போது , பெரும்பான்மைவாதத்தின் உச்ச கட்டமான தேசிய விடுதலை இயக்கம் என்ற பெயரில் நடக்கும் கேலிக் கூத்துகளையும், கருத்துருவச் சப்பைக் கட்டுகளையும் , வன்முறையின் நியாயப் படுத்தலையும் அல்லவா அவர் விமர்சித்திருக்க வேண்டும் ? காஷ்மீர் பிரிவினைக் கோரலின் அடிப்படை தர்மமே பெரும்பான்மை வாதம் தானே ? பாகிஸ்தான் உருவானதின் காரணமும் பெரும்பான்மை வாதம் தானே ? அதெல்லாம் சரியென்ற தொனியில் எழுதிச் செல்லும் மார்க்ஸ், இந்துத்துவ சக்திகள் பெரும்பான்மை வாதம் பேசுவது பற்றி மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி கண்டனம் செய்கிறார். ஏன் அப்படி ?

ஜனநாயகம் பற்றியும், ஆர் எஸ் எஸ் ஜனநாயக விரோதி என்றும் சொல்லும் மார்க்ஸ், ஜன நாயகம் பற்றி ஆர் எஸ் எஸ் சொல்லும் இன்னொரு விஷயம் – இதற்குத் தொடர்புடையது தான் — பற்றியும் விவாதித்திருக்க வேண்டும். ஆர் எஸ் எஸ் சொல்லும் இன்னொரு குற்றச் சாட்டு , இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பெற்றால் ஜன நாயகம் இராது என்பது. இது வெறும் அனுமானம் தான் என்றாலும், அகில இந்திய ரீதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையடைவார்கள் என்ற அச்சம் தேவையற்றது என்றாலும் இந்த விமர்சனம் பற்றிய உண்மையை அவர் எதிர் கொண்டிருக்க வேண்டும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களா தேஷில் ஜன நாயகம் காற்றில் பறக்க விட்டது பற்றியும், மற்ற முஸ்லீம் நாடுகளும் ஜன நாயகப் போக்கைப் பின்பற்றாதது பற்றியும், முஸ்லிம் முல்லாக்களும் சரி , முஸ்லீம் அறிவு ஜீவிகளும் சரி ஜன நாயகம் இஸ்லாமின் கருத்தாக்கம் என்று கொண்டதில்லை என்பது பற்றியும் பேசியிருக்க வேண்டும். ஆர் எஸ் எஸ்/பா ஜ க வின் வளர்ச்சிக்கான உள் காரணங்கள் போலவே வெளிக் காரணங்கள் உண்டு என்பதை மிகச் சுலபமாய் இவர் மறைத்து விடுகிறார்.

தனக்குப் பிடிக்காத எல்லா இயக்கங்களையும் பாஸிஸ்ட் என்று சொல்லிச் செல்லும் ஒரு போக்கிற்கு மார்க்சும் பலியாகிறார். ஃபாஸிஸ்ட் கருத்தியல் இன்று எல்லா வெகுஜனக் கட்சிகளிலும் கூடப் புழங்கி வருகிற ஒரு விஷயமாய்த் தான் இருக்கிறது. அ தி மு க-வில் ஜெயலலிதா வைத்ததே சட்டம். காங்கிரஸில் சோனியா வைத்ததே சட்டம் என்று இயங்கி வருவதைக் காண்கிறோம். அவர் பட்டியலிடும் விஷயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்க்கலாம். என்ன ஆச்சரியம் அ தி மு க, காங்கிரஸ், பாமக, எல்லாமே மார்க்ஸ் தரும் அளவு கோல்கள் படி ஃபாஸிஸ்ட் கட்சிகள் தாம் அப்படி அவர் தரும் பட்டியல் இது:

விரிவாக்க நோக்கமுள்ள அயலுறவுக் கொள்கை. (சீனாவின் திபெத் கொள்கை.)

கட்டமைக்கப் பட்ட ‘மற்றது/எதிரி ‘க்கான சமூக ஒருமிப்பு.(உன்னை விடமாட்டேன் – எம் ஜி ஆர்.)

அரசியலதிகாரத்தை முழுக்க மையப் படுத்துதல் ( எம் ஜி ஆர், ஜெயலலிதா, சோனியா, ராமதாஸ்.)

நாடும் கலாசாரமும் கெட்டுச் சீரழிந்துவிட்டன என்ற ஓலம். (என் தாத்தாவும் ஒரு ஃபாஸிஸ்ட். ஊரே கெட்டுப் போச்சும்மா.)

வன்முறையின் புகழ் பாடுதல். ( ‘அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலிலிருந்து பிறக்கிறது ‘ – மாவோ).

அரசியல் கூட்டங்களை / நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயலை நோக்கி உந்துதல். (ஆகவே என் அருமை நண்பர்களே நீங்கள் அடுத்து நடத்தவிருக்கும் கூட்டத்தை, எது பற்றியதானாலும், கசாமுசா என்று, திட்டமிடாமல், செயல் எதையும் பற்றிப் பேசாமல் நடத்த வேண்டும் . இல்லையோ தொலைந்தது. நீங்களும் ஃபாஸிஸ்ட். )

‘ஆண்மை ‘யை வலியுறுத்துதல் .(தமிழ் /தெலுங்கு/ இந்தி சினிமா.)

பட்டியலிட்டது அ மார்க்ஸ். அடைப்புக் குறிகளில் எனது விளக்கங்கள் . இந்தப் பட்டியலைப் பற்றி வெகு நேரம் நான் யோசித்தேன். ஏன் இப்படி ஒரு பட்டியலை அவர் தரவேண்டும். பா ஜ க – ஆர் எஸ் எஸ் செய்லபாடுகளுடன் ஒப்பிட்டால் பல விஷயங்கள் இதில் பொருந்தாமல் இருக்கின்றன. அவர்கள் பெண்களுக்கு முக்கியமாய்ப் பல பதவிகளுலும் பொறுப்பிலும் முன்னிறுத்தியிருக்கிறார்கள். உலகமயமாதலில் இவர்கள் காங்கிரசிற்குச் சளைத்தவர்கள் இல்லை என்று மார்க்ஸே பல உதாரணங்கள் தருகிறார். ஜனநாயக ரீதியாகப் பலவிதங்களில் தம்முடைய அமைப்புகளில் அதிகாரபரவலுக்கும் பா ஜ க – ஆர் எஸ் எஸ் இடமளித்து வருகிறது. எனக்கு தோன்றுகிறது என்றால் இந்தப் பட்டியல் அனாதரவாக இங்கு தரபட்டதற்கு ஒரு நோக்கம் உண்டு. இஸ்லாமையும் , முஸ்லீம் அரசியலையும் ஆதரவுக் கண்ணோட்டத்தில் பார்த்தாக வேண்டும் என்ற அடிப்படைக் கடப்பாடுடன் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது. ஆனாலும், முழுக்க இஸ்லாம் மதவாதத்துடன் , முஸ்லிம் அரசியல் நடவடிக்கைகளுடன் இனங்காண முடியாத முரண்பாடு மார்க்ஸிற்கு. தன் விமர்சனத்தை மறைமுகமாக வெளியிடலாம் என்று இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும். இஸ்லாம் மதவாதம் மற்றும் அரசியலின் பிற்போக்குத் தன்மைகளை இப்படி விமர்சிப்போம் என்று அவர் கருதியிருக்க வேண்டும்.

‘இன்று நாட்டை எதிர் நோக்கியுள்ள மிகப் பெரிய ஆபத்தாக இந்துத்துவம் நிற்கிறது ‘ என்கிறார் மார்க்ஸ். ஆர் எஸ் எஸ்- இன்று நாட்டை எதிர் நோக்கியுள்ள முக்கியப் பிரசினைகளில் ஒன்று என்று நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதை வலுவிழக்கச் செய்வது என்று எல்லாவிதமான மதச் சொல்லாடல்களிலிருந்தும் விலகிச் செல்கிறவர்களால் சாத்தியம் என்று நான் நம்புகிறேன். மிகப் பெரிய ஆபத்துகளான மற்ற பிரசினைகளான ஊழல், தேசீய இனப்பிரசினைஎன்ற பெயரில் வன்முறையைக் கிளப்பும் இனவாதம், ஜன நாயகத்தின் வழியில் பெற்ற உரிமைகளை துஷ்பிரயோகம் செய்கிற பெருங்கட்சிகளின் செயல் – இவையெல்லாமே மிகப் பெரிய ஆபத்துகள் தான்.

‘இந்துத்துவம் வெறும் மதப் பிரசினை அல்ல; அது இந்து உயர்சாதி ஆதிக்கத்தைத் தக்க வைக்கும் அரசியல் செயற்பாடு ‘ என்ற மார்க்ஸின் கூற்றிலும் உண்மையில்லை. தம்முடைய பரந்து பட்ட தளத்தை, சாதி தாண்டிய அல்லது எல்லாச் சாதிகளையும் உள்ளடக்கிய ஒரு காட்சிப் பொருளாக ஆக்குவதன் மூலம், இந்து மதத்தினை எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பாகக் கட்ட வேண்டிய ஒரு கட்டாயம் பா ஜ க விற்கும், ஆர் எஸ் எஸ்-க்கும் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் கல்யாண்சிங், பங்காரு லட்சுமண் போன்றோரை அது தலைமைப் பொறுப்புகளில் நிறுத்தியுள்ளது.

‘இந்துத்துவம் சிறுபான்மையோரை எதிரிகளாய்க் கட்டமைத்து அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது ‘ என்ற மார்க்ஸின் கூற்று முதல் பகுதி உண்மை. ஆனால் சிறுபான்மையினர் மூலமாக இந்து மதத்திற்கு ஆபத்து என்ற பொய்யைக் கிளப்பிவிட்டு மத அரசியல் பண்ணுவது தான் ஆர் எஸ் எஸ்-ன் நோக்கம். ‘அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது ‘ என்பது மிகைப் படுத்தப் பட்ட பேச்சு.

‘சிறுபான்மையினரை எதிரிகளாகக் கட்டமைத்த போதும் பார்ப்பனீயக் கலாசாரக் கூறுகளை முதன்மைப் படுத்தி சமூக/அரசியல் அதிகாரங்களில் உயர்சாதியினரைத் தக்க வைத்து ஒடுக்கப் பட்ட சாதியினரைத் தொடர்ந்து ஒடுக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது ‘ என்ற மார்க்ஸின் கூற்றைப் படித்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.சாதீயம் என்பது ஒரு இந்தியக் குணாம்சம். அது ‘இந்துக் குணாம்சம் ‘ என்றும் சொல்லலாம். அப்படிச் சொன்னால் இந்து மதத்தின் அனைத்திந்தியப் பொதுமையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதை ஒப்புக் கொள்வாரா மார்க்ஸ் ? முதுகுளத்தூர் தொடங்கி, மேல வளவு வரையில் கீழ்வெண்மணி தொடங்கி தாமிரவருணி வரையில் , ஒடுக்கப் பட்டவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதல்களுக்கு மேல்சாதியினரைக் குற்றம் சாட்ட வேண்டும் . இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தியவர்களுக்கு கோல்வால்கரையும் தெரியாது, சாவர்க்கரையும் தெரியாது. இந்தத் தாக்குதல்கள் நடத்தியவ்ர்களின் முன்னோடி யார் அவர்களின் தமிழ்ப்பாரம்பரியம் என்ன என்பதை மிகச் சாமர்த்தியமாய் மறைத்து, இந்துத்துவம்-ஆர் எஸ் எஸ்- ஒரு வடவர் சூழ்ச்சி என்பது போல வர்ணிப்பதன் அடிப்படையான் நேர்மையின்மையை எந்த விமர்சகர்களும் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் பரிதாபம். மார்க்ஸ் போன்றோர் இப்படிப்பட்ட தாக்குதல்களுக்காக மேல்சாதியினரைக் கண்டனம் செய்ய வேண்டிய தருணத்தில் மட்டும், பார்ப்பனீயத்தை இழுத்து மேல்சாதியினருடன் சேர்த்துவிடுகிறார்கள். அதாவது பிராமணரல்லாத மேல்சாதியினரைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பது என்பது சொல்லொணாச் செயல், இல்லையா ? மேல் சாதியினரின் மீது படிந்துள்ள சாதியக் கறையைமழுங்கடித்து, பிராமணர்கள் தான் சாதிய அமைப்புக்கு முழுமுதல் காரணம் என்று நிறுவுவதற்காக, மேல்சாதியினரை , ‘பிராமணல்லாதாராய் ‘க் காண்பது ஓர் உத்தி.

ஒரு குறிப்பிட்ட சாதியினரை அல்லது வகுப்பாரை ஒடுக்குவதைக் குறிக்கோளாகக் கொள்வது எந்த மதத்தின் அடிப்படை அம்சமும் அல்ல. அப்படியென்றால் கிருஸ்தவ மதம் தான் யூதப் படுகொலைகளுக்கும் காரணம் என்பதாகும். அடிமை முறை கிறுஸ்தவ மதத்தின் ஆணி வேர் என்றாகும். ஒவ்வொரு மதமும் வேறு வேறு காலகட்டத்தில் வேறு வேறு சமூகப் பிரசினைகளாலும், சில தனிமனிதர்கள் முயற்சியாலும் உருவாகி வளர்ந்து வருகிறது. மதத்தின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை நிலைபெறச் செய்வது. சில நம்பிக்கைகளின் , நம்பிக்கைகள் சார்ந்த சடங்குகளில் , அந்தச் சடங்குகளின் தனித்தன்மையில் பிரத்தியேகமான ஒரு அடையாளத்தைக் கட்டி எழுப்பும் ஏற்பாடு தான் மதம். காலப்போக்கில் சில கருத்துகள் முன்னுக்குத் தள்ளப்படலாம். சில கருத்துகள் மறைந்து போகலாம். மாறுபடலாம்.

இஸ்லாமும் சரி, கிறுஸ்தவமும் சரி இந்தியா வந்த போதும் சரி, மற்ற நாடுகளுக்குச் சென்ற போதும் சரி, சாதிகளை ஒழிக்க வேண்டும் , ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை அமைக்க வேண்டும் என்றெல்லாம் எந்த உன்னதச் செயல்திட்டமும் கொண்டு இயங்கவில்லை. தம்முடைய மத நம்பிக்கைகளுக்கு விளைநிலம் தேடி வந்தார்கள். அவ்வளவு தான்.

மத நம்பிக்கைகளுடன் ஊடாக ஏற்றத் தாழ்வுகளும், அந்த நம்பிக்கையமைப்பை வலுப்படுத்துவதற்காக, அந்த நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குவதும் மதத்தை வளர்க்கிற உற்சாகிகளின் வேலை. இந்து மதத்தைக் காட்டிலும் மற்ற செமிட்டிக் மதங்களில் இப்பட்டிப்பட்ட ஒடுக்குமுறைகள் தாங்க முடியாத அளவுக்கு நடந்ததுண்டு. கீழை மதங்களின் பார்வை ஒற்றைப் பார்வையல்ல. அதனாலேயே மதம் சார்ந்த வன்முறை கீழ்த்தேசங்களில் குறைவு. உலக வரலாற்றைப் பயின்றவர்கள அனைவருக்கும் மிக வெளிப்படையாய்த் தெரியும் செய்தி இது.

மதக் கோட்பாடுகளைத் தமக்குச் சார்பாய் வளைக்க வல்ல முல்லாக்களும், பூசகர்களும், கிறுஸ்தவ மேல் சாதியினரும் எப்போதும் எங்கேயும் உண்டு.தான். இவர்களுக்குச் சேவகம் செய்கிற மதத்தை, மறுப்பதென்கிற செயல் எல்லா மதங்களுக்குள்ளும் நடக்கிறது. இந்து மதத்திற்குள்ளும் , நாராயண குரு, பசவண்ணர், விவேகானந்தர், மாதா அமிர்தானந்தமயீ, சாய்பாபா, வள்ளலார், ராமனுஜர் என்று பலரால் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

‘பார்ப்பனீயம், சாதீயம் , தீண்டாமை இவை பற்றியெல்லாம் பேசாமல் இந்துத்துவத்தை எதிர்க்க இயலாது ‘ என்பது இதைத் தொடர்ந்த இன்னொரு அருள் வாக்கு. நான் முன்பே குறிப்பிட்டது போல பார்ப்பனீயம், சாதீயம் , தீண்டாமை என்பது இந்து மதக் கருத்தாக்கங்கள் என்பதைக் காட்டிலும் இந்தியக் கருத்தாக்கங்கள் என்பதே சரி. அதனால் தான், கிறுஸ்தவர்களிடையே கல்லறைப் பிரசினை வருகிறது. முஸ்லீம்களிடையேயும் சாதீயம் வெளிப்படுகிறது. பாகிஸ்தான், பங்களா தேஷ் போன்ற , இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளிலும் – அவை இஸ்லாமிய நாடுகள் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்டாலும் கூட – இந்தப் பிரசினை ஓயவில்லை. எனவே பார்ப்பனீயம், சாதீயம் , தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும், ஆர் எஸ் எஸ்- போன்ற இயக்கங்களை எதிர்ப்பதையும் போட்டுக் குழப்பிக் கொள்வதன் மூலம் அவர் சொல்லவருவது என்னவென்றே புரிவதில்லை.

‘பன்மைத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதே பாசிசத்தை எதிர் கொள்வதற்கான ஒரே வழி. ‘ என்பது மிகச் சரியான பார்வை தான். ஆனால் இந்தப் பன்மைத்துவம் கடைப் பிடிக்க வேண்டியவர்கள் இந்துக்கள் மட்டுமே என்பது எப்படி ?

‘நமது சூழலில் ‘மதவாதத்தின் ஆபத்து எனப் பொதுவாகச் சொல்லிவிடமுடியாது. இந்துமதவாதம் என நாம் அழுத்திச்சொல்லியாக வேண்டும். நேரு ஒரு முறை சொன்னது போல இங்கே பாசிசம் என்பது பெருமதவாதத்தின் அடிப்ப்டையில் தான் தோன்ற முடியும். ‘ என்று மார்க்ஸ் சொல்கிறார். நேரு சொன்ன காலகட்டத்தில் இது உண்மையாய்க் கூட இருந்திருக்கலாம். ஆனால் இன்று காலம் வெகுவாக மாறிவிட்டது. இஸ்லாமியப் பயங்கரவாதம் உலகின் பெரும்பான்மை மதத்தின் பிரதிநிதியாய்த் தன்னைக் காண்பித்துக் கொண்டு உலா வருகிறது என்பதை மறந்து விட முடியாது. இன்று ஏற்படும் செயல்பாடுகள் அகில உலக அளவில் பரந்த எதிரொலிகளைக் கொண்டவை. ‘சிறுபான்மைத் தீவிரவாதத்தின் மீது ‘ கவனம் குவிப்பதை மார்க்ஸ் எதிர்க்கிறார். நம் போராட்டம் இரண்டு விதமான தீவிரவாதத்தினையும் எதிர்த்தே செயல்பட முடியும். ஆனால் மார்க்ஸ் சிறுபான்மைத் தீவிரவாதம் பற்றிய மெத்தனமும், ‘பெருமதவாதத்திற்கு எதிர்வினையாகவே இங்குச் சிறுபான்மைத் தீவிரவாதம் தோன்றுகிறது ‘ போன்ற வாதங்களின் மூலம் சிறுபான்மைத் தீவிரவாதத்தினை நியாயப் படுத்தும் முயற்சியும் செய்கிறார். இந்த விதமான வாதங்கள் மேலும் எதிர்த் தீவிரவாதத்தை வளர்க்கத் தான் உதவுமே தவிர தீர்வாகாது.

(தொடரலாம்)

Series Navigation