கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

சின்னக்கருப்பன்


வெகுகாலத்துக்கு முன்னர் திராவிடர் கழகம் ஒரு வழக்கை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தது.

அரசு அலுவலகங்களில் இந்து, கிரிஸ்தவ, முஸ்லீம் மதங்கள் சார்ந்த பிம்பங்கள் இருக்கக்கூடாது. அவ்வாறு சில அலுவலகங்களில் இருக்கின்றன. அவைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரி தி.க நீதி மன்றத்தை அணுகியது.

நீதிமன்றம் இதற்குத் தீர்ப்பு சொல்லும்போது, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் செகுலரிஸம், மதங்களை ஒதுக்கும் செகுலரிஸம் அல்ல என்றும், எல்லா மதங்களையும் சமமாகவும் ஒன்றாகவும் பாவிக்கும் செகுலரிஸம் என்றும் தீர்ப்பு வழங்கியது. (இது சட்டரீதியான மொழிபெயர்ப்பு அல்ல. ஏறத்தாழ இது போன்று)

என்னைப்பொறுத்த மட்டில், இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. கொடுக்கப்பட்ட நீதியை மதிக்கிறேன். ஆனால், நான் தவறான நீதி தரப்பட்டதாகவே கருதுகிறேன்.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் வருவாய் வரும் எல்லா இந்துக்கோவில்களையும் நிர்வகிக்கிறது. ஆனால், முஸ்லீம் கிரிஸ்தவ கோவில்களை அது அவ்வாறு நிர்வகிப்பதில்லை. முஸ்லீம் மசூதி சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியத்தை அது நிர்வகிக்கிறது. வக்ஃப் வாரியத்தலைவராக ஒரு பெண்ணை ஜெயலலிதா நியமித்தது அனைவருக்கும் தெரியும். அதற்கு சில முஸ்லீம்களிடமிருந்து எதிர்ப்பும் வந்தது. ஆனால், நிர்வாகத்தின் அன்றாட வேலைகளில் தமிழ்நாடு அரசு தலையிடுவதில்லை. ஆனால், இந்துக்கோவில்களின் அன்றாட வேலைகளை தமிழ்நாடு அரசே நிர்வகிக்கிறது. இந்துக்கோவில்களின் சொத்துக்கள் முழுவதும் அரசாங்க சொத்துக்கள் போலவே நிர்வகிக்கப்படுகின்றன.

சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும், திருவரங்கம் கோவிலிலும் போடும் உண்டியல் காசு அனைத்தும் அரசாங்கப்பணம். அந்தப்பணம் எங்கே எப்படி செலவிடப்படவேண்டும் என்று நிர்ணயம் செய்வதும் தமிழ்நாட்டு அரசாங்கம்தான். இது உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் வராத விஷயம். (சும்மாவா திருப்பதிக்கு தமிழ்நாடும் ஆந்திராவும் அடித்துக்கொண்டன) அதே நேரத்தில் வேளாங்கண்ணி கோவில் உண்டியல் பணம் நிச்சயம் தமிழ்நாடு அரசாங்கத்துக்குச் சொந்தமானதல்ல.

திராவிடர் கழகம் மட்டுமல்ல, எல்லா செகுலரிஸ்டுகளும் எதிர்த்திருக்க வேண்டிய விஷயம் இது. இந்த விஷயம் நமக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்டதால், நமக்கு வித்தியாசமாகத் தோன்றுவதில்லை. ஆனால், இது எவ்வளவு முக்கியமான விஷயம் பாருங்கள். இதே இடத்தில் மதத்துக்கு பதிலாக ஜாதியைப் போட்டுப்பாருங்கள். இதன் தவறு தெரியும். மற்ற ஜாதி சங்கங்களை அவரவர் மேலாண்மை செய்து கொள்ளலாம் என்றும், (உதாரணத்துக்கு) பிள்ளைமார்களுக்கான ஜாதி சங்கத்தை மட்டும் தமிழ்நாட்டு அரசாங்கம் மேலாண்மை செய்யுமா ? அப்படி செய்வதுதான் சரியானதாக இருக்குமா ?

தமிழ்நாட்டு அரசாங்கம் என்பது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அல்லது தமிழைப் புரிந்துகொள்பவர்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்ள உருவான அமைப்பு. அத்தோடு நின்று விடவேண்டும்.

ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம், ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோவில்களை நிர்வாகம் செய்யவேண்டும் ? கிரிஸ்தவ கோவில்களையும், சீக்கிய கோவில்களையும், புத்தக்கோவில்களையும், முஸ்லீம் மசூதிகளையும் தமிழ்நாட்டு அரசாங்கம் நிர்வாகம் செய்யாதபோது, ஏன் இந்துக்கோவில்களை மட்டும் அது நிர்வாகம் செய்யவேண்டும் ? அப்படிச் செய்தால் அது எப்படி மதச்சார்பற்ற அரசாங்கமாக இருக்கமுடியும் ?

இந்து மதநம்பிக்கை உள்ளவர்கள் ஆட்சிக்கு வரும் வரைக்கும், இந்துக்கோவில்களை இவர்கள் நிர்வாகம் செய்வது தவறான செயல் அல்ல, ஏனெனில் அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தது, இந்துக்கோவில்களை நிர்வகிக்கவும் சேர்த்துத்தான் என 90 சதவீதம் இந்துக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் வாதிடலாம். நிர்வாகம் சரியாக நடைபெறுமோ இல்லையோ, பெரும்பாலான இந்துக்கள் தேர்வு செய்ததால், ஜனநாயக ரீதியாய் இது சரியான விஷய்ம என்று வாதிடலாம்.

ஆனால், இந்து மதத்தில் நம்பிக்கை இல்லை என்பதை அடிப்படை கருத்தாகக் கொண்ட ஒரு கட்சி, சாப்பாடு போன்ற பிரச்னைகளுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்போது, பிரச்னை வேறுமாதிரியாகிறது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அடிப்படைக் கருத்து பெரியாரின் சிந்தனைகள். இன்றுவரை அதனை கட்சிப்பூர்வமாக இந்தக்கட்சிகள் மறுக்கவில்லை. அதனையும் தாண்டி, பெரியாரை சொந்தம் கொண்டாட, மதிமுக, பாமக, விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. ஆக, பாஜகவையும், காங்கிரஸையும் தவிர்த்து, மற்ற எல்லா பெரிய தமிழ்நாட்டுக்கட்சிகளும் பெரியாரின் வழிவந்தவராகச் சொல்லிக்கொள்கின்றன. இப்படிப்பட்ட கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது, இவர்கள் இந்துக்கோவில்களை நிர்வகிப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும் ?

இந்து அற நிலையத்துறை என்ற அரசாங்க அமைச்சகத்துக்கு பெரிய கட்டிடம் அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் இருக்கிறது. இந்துக்கோவில்களுக்கு ஏராளமான சொத்துக்கள் தமிழ்நாடெங்கும் இருக்கின்றன. இந்தச் சொத்துக்கள், பல நூற்றாண்டுகளாக, பிள்ளை இல்லாதவர்கள், தர்மத்துக்கு எழுதி வைத்தவர்கள், நேர்ந்து கொள்வதன் காரணமாக கோவிலுக்கு எழுதி வைத்தவர்கள், உண்டியல் பணம், என இதன் சொத்துக்கள் ஏராளம். இதனை இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி நிர்வாகம் செய்வார்கள் ?

இது போல அரசாங்கம் இந்து மதக்கோவில்களை மேலாண்மை செய்வதால் வரும் பிரச்னைகள் ஏராளம். வெளியே பேசப்படாவிட்டாலும் ஏராளம். உதாரணமாக, இந்துக்கோவில்களை நிர்வாகம் செய்வதற்கு ஒரு கிரிஸ்தவ அல்லது முஸ்லீம் அதிகாரியை நியமனம் செய்ய தமிழ்நாட்டு அரசுக்கு முழு உரிமை உள்ளது. சொல்லப்போனால், ஒரு கிரிஸ்தவர் அல்லது முஸ்லீம் இந்து அறநிலையத்துறையில் வேலை கொடுக்கப்படாமல் இருந்தால், அவர் நீதி மன்றத்துக்குச் சென்று, தான் சார்ந்த மதம் காரணமாக தனக்கு அரசாங்க துறை ஒன்றில் வேலை மறுக்கப்பட்டது என்பதை காரணமாகக் காட்டி அரசின் மீது வழக்குத் தொடுக்க முடியும்.

நாஸ்திகர்களான திமுகவினர் இந்து அறநிலையத்துறையை நிர்வாகம் செய்தது கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஏனெனில் அவர்கள், ‘எங்களுக்கு மதநம்பிக்கைதான் இல்லையே தவிர நாங்கள் நேர்மையானவர்கள் தான். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், அந்த வேலை பற்றி எங்களிடம் எந்த எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதனை நிறைவேற்றுவோம் ‘ என வாதிடலாம். சரி. எதிர்காலத்தில் முஸ்லீம் லீக் கட்சியும், கிரிஸ்தவ ஜனநாயக முன்னணியும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றிவிட்டார்கள் எனக் கொள்ளுவோம். அப்போதும் அவர்கள் இந்து அறநிலையத்துறையை நிர்வாகம் செய்யமுடியுமா ? அது சரியானதாக இருக்குமா ? ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த விஷயத்தை, தமிழர்கள் அனைவருக்கும் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நிர்வாகம் செய்வதில் வரும் சிக்கல்கள் ஏராளமானவை.

முதல்வர் ஜெயலலிதா இந்து மத நம்பிக்கை உள்ளவர். அவர் இந்துக்கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அத்தோடு ஞாயிறன்று இந்து மதம் சார்ந்த ஒழுக்கம், ஆன்மீகச் சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்வதாக அறிவித்திருக்கிறார். இதனை இந்துத்வா சதி, இந்துத்வாவை தமிழ்நாட்டில் பரப்ப முயற்சி என திராவிடர் கழகத்திலிருந்து காங்கிரஸ் வரை பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

நானும் அது போலத்தான் நினைக்கிறேன்.

ஆனால், இந்துக்கோவில் சொத்துக்களை அரசாங்கம் நிர்வகிப்பது சரி என்றால், அந்தச் சொத்துக்களை ஒரு இந்து மதத்தலைவர் எப்படி செலவு செய்வாரோ அதுபோலத்தானே, அரசாங்கமும் செய்யவேண்டும் ? மதம் சார்ந்த வேலைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்பது அடிப்படைக்கொள்கையாக இருந்தால், இதுவரை இந்துக்கோவில்களை அரசாங்கம் நிர்வகித்து வந்ததும் தவறு என்றுதானே ஆரம்பிக்க வேண்டும் ?

இந்துக்கோவில்களையும், முஸ்லீம் மசூதிகளையும் தமிழ்நாடு அரசாங்கம் நிர்வகிக்கத் தேவையில்லை என்பது மட்டுமல்ல, அது தவறானதும் கூட.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தி, அங்கு கோவில்களை நிர்வகிக்க, இந்துக்கள் மட்டும் ஓட்டுப்போடும் ஒரு முறையைக் கொண்டுவந்து, அந்த ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் டிரஸ்டிகளால் இந்தக் கோவில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும். மாநிலம் தழுவிய அளவில் கோவில்கள் நிர்வாகம் தேவையில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி இந்து அறநிலையத்துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகம் செய்ய அனுமதி செய்தாலே போதுமானது. இதனுள் எல்லா ஜாதிச் சண்டைகளும் வரும்தான். ஆனால், அதுதான் இந்து சமூகம், இந்திய சமூகம். இந்தக் கணக்கு வழக்குக்களை சரிபார்க்க, அவைகள் தமிழ்நாடு சாராத ஆடிட்டர்களைக் கொண்டு ஆடிட் செய்யவோ, அதில் ஊழல்களைத் தவிர்க்க, தமிழ்நாடு போலீஸ் மற்றும் மத்திய போலீசுக்கு அதிகாரம் வழங்குவதோ செய்யலாம்.

இந்த இந்து அறநிலையத்துறைக்கு ஓட்டுப்போடுபவர்களும், இந்த நிர்வாகத்துக்கான பிரதிநிதிகளாக தேர்தலில் நிற்பவர்களும் இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் என்று தங்களைத் தாங்களே அறிவித்துக்கொள்பவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். கட்சி சார்பற்று நடக்கவேண்டும் என விரும்பினாலும், இதில் பணம் இருப்பதால், கட்சிகள் தலையிடும் என்பதும் நிச்சயமான ஒன்றுதான். இதிலும் கட்டாயமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். இது போன்றதொரு அமைப்பை உருவாக்கிவிட்டு அரசாங்கம் நகர்ந்து கொள்ளவேண்டும். இந்த இந்து அறநிலைய அமைப்புக்களும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் நடத்துவதற்கும் அனுமதி தரப்பட வேண்டும். இப்போது இந்த கோயில்களில் வருமானம் வருகின்ற பணத்தில் கல்லூரிகள், பள்ளிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவை அரசாங்கக் கல்லூரிகளே தவிர, கோவில் நிர்வாகத்தின் கல்லூரிகள் அல்ல.

இறுதியாக, தமிழ்நாட்டு அரசாங்கம், சட்டப்படி உண்மையிலேயே மதம், ஜாதி, இனம் ஆகிய விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டு அரசாங்கம் தமிழ்நாடு சம்பந்தமான உலகீய விஷயங்களை நிர்வகிக்கத்தான் இருக்க வேண்டுமே தவிர, தமிழர்களின் ஆன்மீக, ஜாதி விஷயங்களை நிர்வகிக்கக்கூடாது.

அதுதான் தமிழ்நாட்டுக்கும் நல்லது, இந்துக்களுக்கும் நல்லது, மற்ற மதத்தினருக்கும் நல்லது, தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் நல்லது.

இதைத் தொடர்ந்து நாம் எல்லோருமே மதச்சார்பின்மை பற்றிய உண்மையான சிந்தனையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மதம் பொதுவாழ்வில் வகிக்கும் இடம் சரியான ஒரு வகையில் அமைய வில்லை. மதம் தனிமனிதர்களைப் பொறுத்தவிதமாய்த் தான் இருக்க வேண்டுமே தவிர பொது இடத்தை ஆக்கிரமிக்கலாகாது. மதம் சார்ந்த ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பது சட்டமாக்கப் படவேண்டும். மதம் சார்ந்த எல்லாத் திருவிழாக்களும் கோயில், மசூதி அல்லது சர்ச்சுகளுக்குள் தான் நிகழவேண்டும். தெருவிற்கு வரலாகாது.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்