ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

பில் குயெரின்


ஆஸியா டைம்ஸ் இதழிலிருந்து

ஒரு வருடத்துக்கு முன்னர், 2001இல் இந்தோனேஷியா அரசியல் சகதியில் சிக்கித்தவிக்கும் என்று ஜோதிடம் கூறுவது கடினமாக இருந்திருக்காது. இருப்பினும், இந்த அளவுக்கு மோசமாகப் போகும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

அத்தனை அரசியல் சகதிக்கு நடுவில், குண்டுகளால் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும், பலாத்காரம் செய்யப்பட்டும் இந்தோனேஷியர்கள் இறந்துகொண்டிருந்தார்கள்.

சுதந்திர அசே இயக்கம் (அல்லது Gerakan Aceh Merdeka, or GAM) என்ற பிரிவினைவாத இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நிறுத்தப்படுவதாக அறிவித்தது.

ஸ்டாக்ஹோமில் பிரிவினைவாத தலைவர் டெங்கு ஹாசன் டி டிரோ, ‘பிரச்னை அசே பிரதேசத்துக்கு இந்தோனேஷிய தலைவர்கள் வருகை தருவதன் மூலம் தீர்க்க முடியாது. இந்தோனேஷியாவே ஒரு பிரச்னை. இந்தோனேஷியா ஒரு தேசமே இல்லை. இது இன்னமும் டச்சு பேரரசின் பகுதி. இந்தோனேஷியா உடைந்தே ஆக வேண்டும். ஏனெனில் மக்கள் வெவ்வேறு வழியில் செல்ல விரும்புகிறார்கள். நாங்கள் எங்கள் வழியில் செல்ல விரும்புகிறோம் ‘ என்று கூறுகிறார்.

அசே பிரிவினைவாதிகளை கொல்ல உருவாக்கப்படும் கொரில்லாப்படையான மொபைல் பிரிகேட் (பிரிமாப் என்றும் அழைக்கப்படுகிறது) கூலிப்படைக்கு இந்தோனேஷிய ராணுவம் பயிற்சி தருகிறது என்பதை ஜகர்த்தாவின் தேசிய போலீஸின் பிரதிநிதி பிரிகேடியர் ஜெனரல் சாலே சாஃப் ஒப்புக்கொள்கிறார்.

மலுக்கு (Maluku) பிரதேசத்தில் முஸ்லீம்களும் கிரிஸ்தவர்களும் வன்முறையில் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொன்றுகொள்கிறார்கள். இதனை தீர்க்க எந்த தீர்வும் இல்லாமல் இந்த பிரச்னை வளர்ந்து கொண்டே போகிறது. இன, பொருளாதார, அரசியல் போட்டாபோட்டிகள் இந்த பிரச்னைக்கு எந்த விதமான தீர்வையும் வரவிடாமல் அடித்துக்கொண்டிருக்கின்றன. இந்தக் காரணங்களாலேயே, இந்த வன்முறைகளை நிறுத்தக்கூடிய சக்தி உள்ளவர்கள் கூட இந்த இன, மத வன்முறை தொடர்ந்து நீடிப்பதில் அக்கறை காட்டுகிறார்கள்.

கிரிஸ்துவ அமைப்புகளும், அரசியல்கட்சிகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளே புகுந்து அமைதியை நிலை நிறுத்த வேண்டும் எனக் கோரி இருப்பதற்குக் காரணம், இந்தோனேஷிய அரசாங்கம், நடக்கும் வன்முறையை நிறுத்துவதற்கு எந்தவிதமான வைராக்கியத்தையும் காட்டாமல், வெறுமனே எமர்ஜென்ஸியை திணீப்பதன் மூலம் அமைதி வந்துவிடாது என்று இவைகள் கருதுவதே. ஸ்பைஸ் தீவுகள் (Spice Islands) என்றழைக்கப்படும் இந்த தீவுகளில் மூன்றுவருடமாக தொடர்ந்து நடந்துவருகிறது வன்முறை. இன்றைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டி, பலர் இந்த தீவுகளுக்கு வந்து வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஜாவா தீவைச்சேர்ந்த லஷ்கர் ஜிஹாத் என்ற தீவிரவாத முஸ்லீம் அமைப்பு ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு மலுக்கு தீவுகளுக்கு அனுப்பப்பட்டது. மலுக்கு தீவு கிரிஸ்தவர்கள் இதனை எதிர்த்ததன் காரணமாக நடந்த 1999ஆம் வருட கலவரங்களில் சுமார் 500 முஸ்லீம் கிராமத்தினர் கிரிஸ்தவர்களால் கொல்லப்பட்டார்கள். ரத்தக்களரிக்கு லஷ்கர் ஜிஹாத் அமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஜாவா தீவில் பல நகரங்களிலும் சிறு நகரங்களிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மலுக்கா தீவில் இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையே இருந்துவந்த ‘அவ்வப்போது சண்டைகளை ‘, தீவிரப்படுத்தி, போஸ்னியா முறை ‘மத சுத்திகரிப்பாக ‘ ( ‘religious cleansing ‘) ஆக்கிக்கொண்டிருக்கிறது.

ஜகர்த்த நகரத்தில் இந்த ஜிஹாத் இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதற்குக் காரணம், இந்தோனேஷிய ராணுவத்திலும், அரசாங்கத்திலும் இதற்கு ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இருப்பதே. முஸ்லீம் சார்பு அமைப்பு ஒன்றை எதிர்ப்பதாக ஆகிவிடும் என்பதாலும், அரசாங்கம் இதனை எதிர்ப்பதில்லை. மலுக்கு தீவில் ராணுவமும், போலீசும் இரண்டு புறங்களிலிருந்தும் சண்டை போடுகிறது. இருப்பினும், பெரும்பான்மையாக முஸ்லீம்கள் இருக்கும் இந்தோனேஷிய ராணுவம் பெரும்பாலும் முஸ்லீம் தீவிரவாதக்குழுக்களுக்கே ஆதரவாக இருக்கின்றன.

மதுரா தீவுக்காரர்கள் பல தீவுகளில் குடியேறியிருந்தார்கள். இப்போது ஸாம்பித், கலிமந்தன் போன்ற தீவுகளிலிருந்து துரத்தப்பட்ட இந்த மதுராகாரர்கள் அகதிகளாக அவலமான அகதி முகாம்களில் மதுரா தீவில் வசிக்கிறார்கள். ஸாம்பித் தீவுகளில் பெப்ரவரி 2001இல் தாயக் என்ற அங்கு வாழும் கிரிஸ்துவ மக்கள், 5 மதுராக்காரர்களை கொல்வதில் ஆரம்பித்த காட்டுமிராண்டித்தனம் பெருகி தீவையே முழுக்கியது. மதுராக்காரர்கள் (முஸ்லீம்கள்) பழிக்குப்பழி என்று இறங்கி கிரிஸ்தவர்களான தாயக் மக்களைக் கொன்றார்கள். மதுராக்காரர்கள் ஸாம்பித் நகரை கைப்பற்றி ‘சாம்பித் ஒரு மதுரீஸ் நகரம் ‘ என்று அறிக்கைகளோடு ஊர்வலம் வந்தார்கள். ஆயிரக்கணக்கான தாயக்குகளும், மதுராக்காரர்கள் அல்லாதவரும் ஸாம்பித் தீவை விட்டு ஓடினார்கள். இந்த செய்தி பரவி இன்னும் பல ஊர்களிலும் தீவுகளிலும் வெறி தாண்டவமாடியது.

தாயக் மக்கள் மீண்டும் சாம்பித் நகரை கைப்பற்றியதும், இந்த தாயக் மக்களின் தலைவர்கள் ‘விடுவித்தவர்கள் ‘ (liberators) என்று பாராட்டப்பட்டு ஊர்வலம் வருவதற்குள், சுமார் 1 லட்சம் மதுராக்காரர்கள் மத்திய கலிமந்தன் பிரதேசத்தை விட்டு ஓடவும் ஏதுவாயிற்று.

‘இன சுத்திகரிப்பும் ‘ கொடுமையும் உலகத்தை வெட்கித்தலைகுனியச்செய்தது. அரசாங்கம் தாமதமாக அமைதி நிலைநாட்ட வந்ததும், குடல்கள் வெட்டியெடுக்கப்பட்டதும், தலைகள் வெட்டப்பட்டதும், தெளிவாகத் தெரியும் ஒளிப்படங்கள் உலகப்பத்திரிக்கைகளில் வந்ததும் இன்னும் நிலைமையை மோசமாக்கியது. (மொ.கு.இந்தியப்பத்திரிக்கைகளில் இந்த செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டதன் காரணம் தெரியாது)

குடியரசிலிருந்து வெளியேறும் எண்ணத்தை விட்டுவிடுமாறும், கருத்து சுதந்திரம் வழங்குவதாகவும் இந்த தீவுகளுக்கு வருகை தந்த இந்தோனேஷிய ஜனாதிபதி அப்துர் ரஹ்மான் வாஹீத் கூறினார்.

சூலவேஸி தீவுகளிலும், போஸோ தீவிலும் சுமார் 2000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த தீவுகளில் நடந்த கொலைகளை திட்டமிட்டதற்காக மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆக்ஸ்ட் மாதத்தில், ஜகர்த்தா கடை வீதியில் குண்டு வெடித்தது. சென்ற ஜனாதிபதி சுஹர்டோவின் மகனான டாமி சுஹர்ட்டோ வாடகைக்கு விட்டிருக்கும் பல வீடுகளிலிருந்து துப்பாக்கிகளும், கிரனேடுகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே மாதத்தில், இன்றைய ஜனாதிபதியாக இருக்கும் மேகவதி சுகர்னோபுத்ரி அசே தீவுமக்களிடமும், மேற்கு பப்புவா தீவு மக்களிடமும் இதுவரை நடந்த வன்முறைக்கு மனித உரிமை மீறல்களுக்கும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். சொல்லி நான்கே நாட்களுக்குள் மீண்டும் அசே தீவில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலவரமும், குண்டுவெடிப்புகளும், பல இறப்புகளும் நடந்தன. நான்கு வங்கிகள் குண்டுவீச்சில் உடைக்கப்பட்டன. சுமார் 60 பள்ளிக்கூடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.

ஜகர்த்தா பங்குச்சந்தையில் 2000 செப்டம்பரில் வெடிகுண்டு வைத்ததற்காக அசே மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு 20 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

அசே மாநிலத்துக்கு செப்டம்பர் 2001இல் மேகவதி சென்று அங்கிருந்த சமூகத்தலைவர்களை சந்தித்தார். இது நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னர் சியா குவலா பல்கலைக்கழகத்தின் தலைவர் அசே தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். மேகவதி வந்து சென்றதும், அவர் சந்தித்த சமூகத்தலைவர்களை அசே தீவிரவாதிகள் கடத்திச்சென்று துப்பாக்கி முனையிம் 24 மணிநேரம் வைத்திருந்தார்கள்.

1984இல் டான்சுங் பிரியோக் படுகொலையை நடத்திய முன்னாள் உதவி ஜனாதிபதி ஜெனரல் டிரி சுத்ரிஷ்ணோ அந்தப்படுகொலையில் இறந்த மக்களின் குடும்பத்தாருக்கு பணம் கொடுப்பதாக நீதிமன்றத்துக்கு வெளியே ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்கா சென்ற ஜனாதிபதி மேகவதி அங்கு அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்து அளவளாவினார். அதே நேரத்தில், இந்தோனேஷியாவில், அமெரிக்க எதிர்ப்பு முஸ்லீம் தீவிரவாதிகள், ஹோட்டல்களிலும் வீடுகளிலும் அமெரிக்கர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து கொலை செய்ய ஆரம்பித்தார்கள். அமெரிக்க தூதரகம் முன்னர் போராட்டம் நிகழ்த்தினார்கள். அமெரிக்கர்கள் எல்லோரும் இந்தோனேஷியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்தார்கள். பாதுகாப்பு அமைச்சர் மதோரி அப்துல் ஜலில் அமெரிக்க குடிமக்கள் இந்தோனேஷியாவில் பாதுகாப்புடன் இருக்க உத்திரவாதம் தருவதாக அமெரிக்க தூதரிடம் உறுதி அளித்தார்.

அடுத்த மாதம், மந்திரி சபை கூடி, ஊர்வலக்காரர்களை தடை செய்யவும், வெளிநாட்டுக்காரர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கவும், இந்தோனேஷியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு போர்களில் கலந்து கொள்வதை தடுப்பதற்கும் முடிவு செய்தது. அதே நேரத்தில், அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் நடத்தும் தாக்குதல்கள் பற்றிய தன் கவலையை தெரிவித்தது. அங்கு சாதாரண மனிதர்களின் பிரச்னைகளை ஐக்கிய நாடுகள் கண்டுகொள்ள வேண்டும் என்று இந்தோனேஷியா கோரியது. இருப்பினும், இஸ்லாமிய தீவிரவாதிகளான லஷ்கர் ஜிஹாத் போன்ற அமைப்புகள் அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான வன்முறையை அதிகரிக்கப்போவதாக அறிவித்தன.

இதற்குப் பிறகு, உதவி ஜனாதிபதியான ஹம்ஜா ஹாஸ் நேரடியாக ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல்களை கண்டித்தார். பிறகு ஜனாதிபதி மேகவதியும் கூட்டுச் சேர்ந்து கொண்டு மறைமுகமாக அமெரிக்காவை விமர்சித்தார்.

கலிமந்தன் பிரதேசத்திலிருந்தும், வடக்கு மலுக்கு தீவிலிருந்தும் வந்து, வடக்கு சுலவேஸி பிரதேசத்தில் அகதிகள் கூடாரத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள். சுமார் 5000 குடும்பங்கள் ரியாவு தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கு பனைஎண்ணெய் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். போஸோ, மத்திய சுலவேஸி போன்ற இடங்களிலிருந்துவ் வந்த அகதிகள் பலு நகரத்துக்கு அனுப்பபடுவார்கள்.

இன்று மேற்கு டிமோர் பிரதேசத்தில் இருக்கும் கிழக்கு டிமோர் அகதிகள் (கிழக்கு டிமோர் இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுவிட்டது) சுமார் 1 லட்சம் பேர்கள் மீநும் கிழக்கு டிமோருக்கே அனுப்பபடுவார்கள். இந்த புலம் பெயர்ந்தவர்களால் சுமார் 2 பில்லியன் ருப்பையாவும், (இந்தோனேஷியப் பணம்), 520 டன் அரிசியும் தினந்தோறும் அவர்களது உணவுக்காக இந்தோனேஷியா செலவழிக்கிறது.

சென்ற கிரிஸ்துமஸின் போது ஒரு அமெரிக்க டாலருக்கு 9315 ருப்பையா அளவுக்கு இருந்தது. அரசியல் மாற்றங்களுக்கு ஏற்றாற்போல மாறும் இந்த விகிதம், ஒரு டாலருக்கு 12200ஐ தொட்டுவிட்டு, இப்போது 10,200இல் இருக்கிறது.

ஜனநாயகத்தின் இரண்டாவது வருடம் இந்தோனேஷியாவில் துயரகரமாய் ஆகிவிட்டது. நீதியும், சுதந்திரமும் காப்பாற்றப்படவில்லை.

இந்த நாட்டில் , இருட்டுச் சக்திகள் ஏராளமான பண பலத்துடன், தம்முடைய அழுக்குக் கரியங்களை எடுபிடிகளை ஏவிச் செய்துகொள்கிறார்கள். ‘சீர்திருத்தம் ‘ செய்ய முனைகிற இன்றைய அரசு பழைய ஊழல்களைத் தோண்டி எடுக்கும் என்பது தான் இவர்களின் அச்சம்.

நீதித்துறையிலும் ஊழல் மண்டிக் கிடப்பதால் வழக்குரைஞர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

ஜனநாயகம் நோக்கிய பரிசோதனை ஏழைகள் பரம ஏழைகளாகவும், பணக்காரர்கள் பெரும் பணக்காரர்கள் ஆகவும் தான் உதவியிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை, எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்று ஆகியிருக்கிறது.

ஜகர்த்தா தலைநகரம், பல லட்சக்கணக்கான வேலையில்லாதவர்களை தாங்கிக்கொண்டு திணறிக்கொண்டிருக்கிறது. இது பல மோசமான விளைவுகளுக்கும், வன்முறைக்கும் விளைநிலமாகப் போய்விட்டது. வறுமை, எதிர்கால நம்பிக்கையின்மை எல்லாம் சேர்ந்து தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற சூழ்நிலை தோன்றிவிட்டது. போலீசும், ராணுவமும் பல முக்கியவர்த்தகங்களில் தனி கோலோச்சுகிறது. உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் போராடுகிறார்கள். ஜகர்த்தாவின் வெப்பமான காற்றும் வன்முறையும் முகத்தில் அடிக்கிறது.

பேச்சு சுதந்திரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு ஒன்றும் பொருளே இல்லை. நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்ப்டாமல் அரசியல்வாதிகள் தம்முடைய பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

2002 ஆண்டிலாவது அமைதி திரும்புமா என்று ஆவலுடன் இந்தோனெசிய மக்கள் காத்திருக்கிறார்கள்.

Series Navigation

பில் குயெரின்

பில் குயெரின்