மொழிச்சிலை அமைப்பு! மொழித்தாய் வாழ்த்து!- போலித் தமிழர்கள்

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

சி. ஜெயபாரதன்


[முன்னுரை: மேதைகளுக்குச் சிலை வைப்பது பற்றியும், மொழித்தாய் வணக்கம், மொழிச்சிலை எடுப்புப் பற்றியும் தமிழ் இணையத் தளங்களில் சில வாரங்களாக, வாக்கு வாதங்கள் வளர்ந்து வருகின்றன. ‘வையகத் தமிழ் வாழ்த்துக் ‘ கவிதையை வெளியிட்ட நான் இவற்றைப் பற்றி என் கருத்தைக் கூற விரும்புகிறேன். இதற்கு நான் எடுத்தாளும் உதாரணங்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடனோ, எந்த மதத்தைத் தாக்கும் எண்ணத்துடனோ எழுதப் படவில்லை]

மேதைகளுக்குச் சிலை அமைக்கலாமா ?

பாரதம் விடுதலை பெற்ற பின், மகாகவி பாரதியாருக்கு அவர் பிறந்த எட்டையா புரத்தில் மணி மண்டபம் கட்டிச் சிலை எழுப்பப் பட்டது. விடுதலைப் பிதா, மகாத்மா காந்தியின் சிலை பாரத பாராளு மன்றத்தின் முன் சிந்தனை உருவில் நிறுவப்பட்டு உள்ளது. அவைகளைப் போல் காமராஜர் சிலை, அண்ணா சிலை, கண்ணகி சிலை, வள்ளுவர் சிலை என்று வைப்பதில் தவறு ஏது ? ராஜாஜி, பெரியார், மா.போ.சி., எம்ஜியார், கருணாநிதி, ஒளவையார் ஆகியோருக்குச் சிலைகள் உள்ளனவா ? தெரியவில்லை! அவர்களும் சிலையாய் அமரத் தகுதியானவர்களே! சிலைகள் என்றும் சரித்தர கால நினைவை ஊட்டும், கலைச் சின்னங்கள்!

கண்ணகிக்கு அவள் காலத்திலே சிலை வைக்காததால், முகம் தெரியாமல் போய், அவளாக நடித்த விஜய குமாரி முகம் போலிருக்கிறது என்று நக்கல் புரிய ஏதுவாகி விடுகிறது. முதலில் நடித்த கண்ணாம்பா முகம்போல் அமைத்திருந்தால், நகையாடல் ஒரு வேளை குறையலாம்! அடுத்து ஜெயலலிதாவுக்குச் சிலை வைக்க எண்ணம் உதய மாகலாம். இப்போதே ஜெயலலிதாவுக்குச் சிலை வைத்தால், முகப் பிரச்சனை எழ இடமிருக்காது! அவரது அரசியல் திருவிளையாடல்களை வெறுப்பவர் பலர் இருந்தாலும், அவர் சிறந்த நாட்டியக் கலா நடிகை என்பதைப் பாராட்டவாவது சிலை நிறுவலாம். அவரே பெரும் நிதி உதவி செய்வார். இமயத்தில் கல்லெடுத்து குமரி முனையில், வள்ளுவர் சிலைக்கு எதிரே நூறடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலை எழுப்பலாம்! கி.பி.2001 இல் தமிழகத்தை இப்படி ஒரு கிளியோபாத்ரா ஆண்டார் என்று, கி.பி.3000 இல் வாழும் தமிழர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!

பிரிட்டனில் இப்படிப் பிரச்சனைகள் எழாத வண்ணம், சிற்பிகள் அவ்வப்போது அரசியல், சமூக, விஞ்ஞான மேதைகள், அறிஞர்கள் வடிவத்தை, மெழுகு மாளிகையில் [Wax Museum] உருவாக்கி நிரந்தரமாய் வைத்து விடுகிறார்கள்!

கிரேக்க, ரோமாபுரி நாகரீகத்தைக் காட்ட நூற்றுக் கணக்கான சிலைகள் பல்லாயிரம் ஆண்டுகள், சில சிரமிழந்தும், மூக்குடைந்தும், முகமுடைந்தும், முழுமையாகவும் கால வெள்ளத்தில் அழியாது கரை சேர்ந்துள்ளன! இந்தியாவின் மீது கி.மு.325 இல் படையெடுத்து வென்று, சரித்திரப் புகழ் பெற்ற, மகா அலெக்ஸாண்டர் சிலை இன்னும் பாதுகாக்கப் பட்டு வருகிறது!

கி.மு.400 இல் புத்தர் சிலைகள் நேபால், திபெத், இலங்கை, இந்தோநேசியா, சிரியா, ஆஃப்கானிஸ் தான், ஆசியாவில் பர்மா, தாய்லந்து, கம்போடியா, சைனா, ஜப்பான், கொரியா வெங்கும் நிறுவப் பட்டு சுமார் 500 மில்லியன் மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றி வருகின்றனர். கெளதம புத்தரின் முகத் தோற்றம் தெரியாததால் ஒவ்வொரு தேசத்திலும் சிலைமுகம் வேறுபட்டு, ஜப்பான் புத்தர் ஜப்பானியர் போலவும், சைனா புத்தர் சீனாக்காரர் போலவும் ஆக்கி இருப்பதை நகையாடுவதில் என்ன பயன் ? உருவ வழிபாட்டைப் புறக்கணித்த, புத்தர் வடிவையே தெய்வமாக வைத்து வணங்கத் தொடங்கினர், புத்த மதத்தார்.

நல்ல வேளை! காந்தியின் சிலை அவராக நடித்த ‘பென் கிங்ஸ்லி ‘ போல் முகம் இல்லை! உயிரோடு உள்ள போதே காந்தி மகான், தன் சுய சரிதையை எழுதி வைத்து விட்டார். இல்லாவிடில், அவர் இராம அவதாரம், அல்லது கிருஷ்ண அவதாரம் என்று பலர் அவரை இதிகாஸ மனிதராய் மாற்றி விடுவார்கள்!

பாரத நாட்டில் சரித்திரத்தைக் கூறும் பல சிலைகள் திருடு போய்விட்டன. 1991 இல் ரஷ்யாவில் பொது உடமை ஏகாதிபத்தியம் வீழ்ந்த பின், தளபதிகளான லெனின், ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்பட்டு உடனே அகற்றப் பட்டன! ஆஃப்கானிஸ்தானில் உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையை, சமீபத்தில் தாலிபான் மூர்க்கர்கள் ஏவு கணை வெடியால் தகர்த்து உடைத்தார்கள். பதினான்காம் நூற்றாண்டு முதல் பல தடவை முகலாயர் தைமூர், கஜினி படை எடுத்து, இந்தியாவைக் கொள்ளை அடித்து, ஆலயச் சிலைகளை உடைத்து ஒச்சப் படுத்தியதை, சரித்திரம் பக்கம் பக்கமாய் விளக்கும்! நமது கோயில்கள் இப்போதும் சாட்சி கூறும். கண்ணகிச் சிலையைக் கடத்தியதும் இம்மாதிரி மூர்க்கச் செயலே! சரித்தரச் சின்னங்கள், கலைச் சிற்பங்கள், காவியங்கள் ஒரு நாட்டின் தனித்துவத்தைக் காட்டுபவை. அவற்றின் அமைப்புகளையும், தடங்களையும் நீக்கி விட்டால், ஒரு நாடு சுடுகாடு போல் மயான பூமி ஆகி விடும்!

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழருக்குத் தேவையா ?

மொழித்தாய் வணக்கத்தை முதலில் தொடங்கியவரே தீர்க்க தரிசியான பாரதி! தமிழைப் பற்றியும், தமிழ் நாட்டைப் போற்றியும், தமிழ்த்தாயை வாழ்த்தியும் பக்கம் பக்கமாய் கவிகள் எழுதிய பாரதிபோல் பாரினிலே எந்தக் கவிஞனும் நாட்டையும் மொழியையும் பாராட்டிய தில்லை. பாரதியார், ‘பாப்பாப் பாட்டில் ‘ குழந்தைப் பருவத்திலேயே தமிழைத் தாயாக அறிமுகப் படுத்தி அவளை வணங்கச் சொல்கிறார். ஐந்து வயதுச் சிறுவருக்கு அறிவுரை புகட்டுவது எளிது. ஐம்பது வயது முதியவருக்கு எடுத்துச் சொல்வது கடிது! மிகக் கடிது!!

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற, எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா!

அமிழ்தில் இனியதடி பாப்பா, நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா!

பாரதியார் சிறுவர்களுக்கு அன்புடன் எழுதிய அறிவுரையை முதியோர்கள் பின்பற்ற வேண்டும் என்று எந்த நியதியாவது உண்டா ? இல்லை. ஆனால் பிறந்த நாட்டுப் பெருமையும், பேசும் மொழிமீது பாசமும் இல்லாத மானிடர்கள், ‘நாம், நம்நாடு, நம்மொழி ‘ என்னும் தனித்துவ ஆத்மா அற்ற மரக்கட்டைகள், மனிதக் கூடுகள்!

மனிதன் தோன்றிய காலம் முதல் நாடு, மொழி, இனம், மதம் இவை யாவும் சிதறிய மக்களை ஒன்று சேர்க்கும் இணைப்புச் சக்தியாகவும், பிரிக்கும் பிளவுச் சக்தியாகவும் உலகை ஆண்டு வந்திருக்கின்றன. தமிழ் மொழிக்கு ஆங்கிலம் போன்று சொல்லாட்சியும், செழுமையும், தொடர்புத் திறனும் இல்லை. தற்கால அறிவியல், விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களை எளிதில் விளக்கும் சக்தி ஆங்கிலம் போன்று இல்லாவிட்டாலும், தமிழ் கால வெள்ளத்தில் மூழ்கிப் போகாமல், நீந்திக் கரையேறி முன்னேறி வருகிறது.

‘தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘, பாரதியார் புரியாத மந்திரம் எதுவும் ஓதவில்லை! பின் என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். ‘பஞ்ச பூதச் செயல்களைக் கூறும், புத்தம் புதிய கலைகள், மெத்த வளருது மேற்கே; அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! சொல்லவும் கூடுவதில்லை; அவை சொல்லும் திறமை தமிழ் மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும். அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் ‘ என்று ஒரு பேதை உரைத்தான். இந்த வசை தமிழுக்கு எய்திடலாமோ ? சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘ என்று நமக்கெல்லாம் கட்டளை இடுகிறார்.

அடுத்து ‘தமிழ் ‘ என்னும் தலைப்பின் கீழ், ‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தில் வேண்டும்; இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை ‘ என்று நமக்கு அறிவுரை புகட்டுகிறார். அதே சமயம் ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் ‘ என்று நமக்கு ஆணை இடுகிறார். வங்காளிகள் தம் தாய்மொழியை இப்படி வணங்க வில்லை என்று ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படிப் பொருந்தும் ? ‘ஜெய்ஹிந்த் ‘ என்று விடுதலைப் போரின் போது முதலில் முழக்கியவர், வங்காளிகள்! ‘வந்தே மாதரம் ‘ என்று பாரத மாதாவை முதலில் வந்தனம் செய்தவர், மராட்டியர்கள்! அதனால் வங்க, மராட்டியர் பாரதத்தை ஏன் அன்னையாக வணங்கினார்கள் என்று கேட்கலாமா ? ‘பாரதம் உண்மையில் தாயும் இல்லை! தெய்வமும் இல்லை! ‘, என்று வாதம் செய்யலாமா ?

‘எந்த நாட்டினராவது மொழித்தாய் வாழ்த்தோ, மொழிச்சிலை எடுப்போ கொண்டுள்ளாரா ‘ என்பது ஓர் ஆணித்தரமான கேள்வி! இதற்குப் பதில் நேரடியாகச் சொல்வது சிரமம். ஆனால் இணைக் காரணங் களைக் காட்டி, இதற்கு எதிர்ப்பதில் தர முடியும். ‘தாய்மொழிக்கு வாழ்த்து இசைப்பதும், தமிழன்னைச் சிலை வைப்பதும் ஒருவிதக் குலத்தியல் [Cult] ‘ என்பது அடுத்த குற்றச் சாட்டு. புதுக் கண்டு பிடிப்பும் கூட. அந்த வாக்குப்படிப் பார்த்தால், மகாகவி பாரதியாரும், சுந்தரம் பிள்ளையும் ஒருவிதக் குலத்தி யலைச் சேர்ந்தவரா, என்று கேட்கத் தோன்றுகிறது.

அடிமைச் சங்கிலியில் பாரதம் முடங்கிக் கிடந்த போது, ‘ஜெய்ஹிந்த் ‘ என்று வங்காள சிங்கம் நேத்தாஜியும், ‘வந்தே மாதரம் ‘, என்று மராட்டிய வேங்கை திலகரும் வெள்ளையரை விரட்ட கர்ச்சித்த போது, தமிழ் நாட்டில் பாரதியார் 1925 ஆண்டிலேயே, ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித் திருநாடு ‘ என்று தேச பக்தியையும், மொழிப் பாசத்தையும் தமிழினத்துக்கு ஊட்டினார். ‘எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே ‘ என்று சுந்தரம் பிள்ளைத் தமிழை அழகிய பெண் தெய்வமாகப் போற்றுகிறார். மொழித்தாய் வணக்கத்தையும், அதற்கு ஊன்று கோலாய் உதவும், மொழிச்சிலை எடுப்பையும் ‘குலத்தியல் ‘ என்று குத்திக் காட்டுவது, தமிழ் வரலாறு தெரியாமல் வாதாடுவதாகும்.

‘வங்காளிகள் தமிழர் போல் மொழித்தாய் வாழ்த்தும், மொழிச்சிலை எடுப்பும் செய்வ தில்லை ‘, என்று ஓர் உதாரணம் தரப்பட்டுள்ளது. நாகரீகமான வங்காளி மக்கள் இன்றும், மனிதத் தலைகளை அறுத்து மாலையாகச் சுடிய, அநாகரீகக் காளிச் சிலையைத் தெய்வமாகத் தொழுது கொண்டு, ஆண்டாண்டு தோறும் விழாக் கொண்டாடி வருகிறார்கள். காட்டு மிராண்டிகளின் நரபலி யுகத்தைக் காட்டும் ஒரு சின்னம், இந்தக் காளிச்சிலை! தாயுருவைக் காட்டாது ஒரு பேயுருவைக் காட்டும், இந்தச் சிலை ஒரு

தெய்வச் சிலையா ? இது இனத்தியலா ? குலத்தியலா ? அல்லது அறிவியலா ? தமிழ் நாட்டில் இப்படி நரபலிச் சிலைக்கு இத்தனை பெரிய விழாவும், வேண்டுதலும் கிடையாது!

இந்த இருபதாம் நூற்றாண்டில் பலர், பாம்புத் தலைச் சிலைகளையும், யானைத் தலை விநாயகரையும், குரங்குத் தலை அனுமாரையும் அனுதினமும் வணங்கி வருவதுபோல், வேறு எங்காவது உண்டா ? இந்த விநோதச் சிலைகளை இந்துக்கள் வழிபடுவது, ஒருவிதக் குலத்தியலா ? அல்லது இனத்தியலா ? இப்படிக் குத்திக் காட்டினால் எத்தனை பேர் மனம் புண்படுகிறது ? இதே கருப்புக் கண்ணாடிப் போட்டுக் கொண்டு பார்க்கப் போனால், பாரத கண்டத்தின் நூதனப் பழக்க வழக்கங்கள் எல்லாமே, பல மாந்தரைக் ‘குலத்தியல் ‘[Cult] என்ற குழியில் தள்ளிவிடும்!

இந்துப் பெண்டிர் நெற்றியில் திலகம் இடுவதுபோல் வேறு மதத்தினர் யாராவது செய்கி றார்களா ? சிலர் மேனியில் பூணூல் போடுபது போல் வேறு இனத்தவர் யாராவது போட்டுக் கொள்கிறார்களா ? தமிழர் சிலர் நெற்றியில் நாமம் தீட்டுவதுபோல், மற்றும் சிலர் திருநீறு பூசிக் கொள்வதுபோல் வேறு மதத்தினர் யாரா வது தம்மினத்தைக் காட்டிக் கொள்கி றார்களா ? இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் குலத்தியலா ? வெளிநாட்டிலிருந்து முதன்முதல் இந்தியாவைப் பார்க்க வருவோர்க்கு நம் நடத்தைகள், பண்பாட்டு முறைகள், பழக்க வழக்கங்கள் எல்லாமே கோமாள்ித் தனமாகத் தெரியலாம்! அதைக் கேட்டுக் கோபப்படாதவர்கள் நம்மில் மிகச் சிலரே! ‘இது எங்கள் பண்பாடு! உங்களைப் போல் நாங்கள் ஏன் வாழ வேண்டும் ‘, என்று நாமெல்லாம் உடனே எதிர்த்து வாதாட மாட்டோமா ?

தமிழ் நாட்டில் பிறந்த போலித் தமிழர்கள்!

எந்த நாட்டிலாவது மொழி வாழ்த்து பாடப் படுகிறதா ? இல்லவே இல்லை! ‘ஆங்கிலம் வாழ்க! ஆங்கிலம் வளர்க!! ‘ என்று சொற்பொழி ஆற்றியபின் முடிவில் யாராவது முழக்குகி றார்களா ? இல்லவே இல்லை! ஏனென்றால், ஆங்கிலேயர், பாரத நாட்டைப் போல் அடிமைப் படவில்லை! ஆங்கில மொழி பாரத கண்டத்தின் பதினெட்டு மொழிகள் போல் அன்னியரால் நசுக்கப் படவில்லை! ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு! ‘ என்னும் தேசீய கீதம் செவியைத் தழுவும் போது, தமிழரது நெஞ்சம் பொங்கி, மெய் சிலிர்க்க வில்லை என்றால் அவர்கள் கல் நெஞ்சம் படைத்த பாதித் தமிழர்களே! முழுமை உணர்வில்லாத ஒருவிதப் போலித் தமிழர்களே!

‘வங்காளிகள் வங்கமொழி மீது கொண்டுள்ள ஆர்வம், நாம் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்தை விடப் பன் மடங்கு ஆழமானது! ‘ என்பது அடுத்த குறைபாடு! முற்றிலும் மெய்யான வாய்மொழி இது. தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவர்களில் பலர் பரம்பரை பரம்பரையாய்த் தமிழைத் தீட்டுமொழி என்று ஒதுக்கியும், சமஸ்கிருதத்தைத் தேவமொழி என்று தெரிசித்தும் வருபவர்கள். மொழிகளிலே கூட மனித இனத்தைப் பிரிப்பது போல, ஏற்றத் தாழ்வு! தேவர்கள், தெய்வங்கள் பேசும் மொழியை வேறு யாரும் இதுவரைக் கண்டு பிடிக்கவில்லை! அவை லாட்டின், ஹீப்ரு மொழிகளாக ஏன் இருக்கக் கூடாது ? இவர்களது கண்டு பிடிப்பு ஒரு விந்தையே! ‘சமஸ்கிருதம் வாழ்க! சமஸ்கிருதம் வளர்க!! என்று யாரும் கூச்சலிட வேண்டியதிலை. ஏனென்றால் அது தேவமொழி. உலக வழக்கில் நிலவாமல், தேவர்கள் போல் மனிதர் கண்ணுக்குத் தெரியாமல் உலவும், ஒரு மாய மொழி அது!

தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. ‘எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது! ‘ என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள் ‘ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன! இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ? மகாராஷ்டிராவில் உண்டா ? தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!

ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, ‘தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள் ‘ என்றாராம்.

கடவுள் படைப்பின் உன்னத மகிமை, மனிதரின் தனித்துவத் தன்மை! தனித்துவச் சிந்தனை! தனித்துவத் தோற்றம்! தனித்துவ உணர்ச்சி! தனித்துவ வளர்ச்சி! தனித்துவப் படைப்பு! ஒரு நாட்டில் கோடான கோடி ஆண்டுகளாய் ஊன்றி உருவானது, ஓரினத்தின் தனித்துவ மேன்மை! அதை நசுக்கி மிதிப்பதோ, அவமதிப்பதோ, ஒதுக்குவதோ அநாகரீகம். ஒரு வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே பார்த்தால், தந்தை ஒரு மாதிரி! தாய் ஒரு மாதிரி! ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி! அது போன்று நம் தேசத்தைப் பிளந்து உள்ளே பார்த்தால், வங்காளி ஒரு மாதிரி! பஞ்சாபி ஒரு மாதிரி! மராட்டியர் ஒரு மாதிரி! தமிழர் ஒரு மாதிரி! இவர்கள் யாவரும் ஒரே அச்சு யந்திரத்தில் ஒரே மாதிரி ஏன் வார்க்கப் படவில்லை என்று வாதிப்பது அர்த்தமற்றது.

மொழித்தாய் வணக்கம், மொழிச்சிலை எடுப்பு தமிழினத்தின் ஒரு தனித்துவ மகிமை! அதை நசுக்கி மிதித்துப் புண்படுத்துவது சிறுமை! ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு ‘ என்று நாமக்கல் கவிஞர் இசைத்திருப்பதை ஏற்றுக் கொண்டு, அதை மதிப்பது அறிவுடமை.

செந்தமிழ் வாழ்கவெனும் போதினிலே, சிலர்க்குத்

தேள்வந்து கொட்டுது காதினிலே!

[முடிவுரை: நமது தனித்துவ, உடன்பிறந்த வழிமுறைகளை, நம்பிக்கைகளை நக்கல் செய்து, நம்மை நாமே தாக்கி, தாழ்த்தி, உயர்த்திக் கொள்வது மிக்க அறிவீனம்! சுதந்திர நாட்டில் இவை அர்த்தமற்ற தர்க்கங்கள்! மக்களுக்குச் சம உரிமையை மறுக்கும் விதண்டா வாதங்கள்! இங்கு நான் எடுத்தாண்ட உதாரணம் எதுவும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன்]

*******************************

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா