எவ்வாறு ஜூலியானியும், நியூயார்க் போலீஸ் பிரிவும் நியூயார்க்கில் குற்றங்களைக் குறைத்த விதம்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தலையங்கம்


( நியூ யார்க் மேயர் ஜ்ஊலியானி கடந்த எட்டு வருடங்களாய் நியூயார்க் மேயராய் இருப்பவர். அவர் குற்றங்களைக் குறைக்க மேற்கொண்ட வழிமுறைகள் இரக்கமற்றவை என்று விமர்சிக்கப்பட்டதுண்டு. குற்றக் குறைப்புக் கோட்பாட்டில் ‘உடைந்த ஜன்னல் கோட்பாடு ‘ என்ற ஒன்று இப்போது பேசப்பட்டு வருகிறது. ஒரு குடியிருப்பில் ஒரே ஒரு உடைந்த ஜன்னல் சகிக்கப் பட்டால், கொஞ்ச காலத்தில் எல்லா ஜன்னல்களுமே உடைந்துவிடும் என்பது அது. அதனால், குற்றங்கள் முதன் முறை நடக்கும் போதே, எவ்வளவு சிறியதாய் இருப்பினும், குற்றத்திற்குத் தண்டனை உண்டு என்று அறிவுறுத்தும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என்று இந்தக் கோட்பாடு வலியுறுத்துகிறது. இந்தக் கோட்பாட்டை மேற்கொண்டு ஜ்ஊலியானி எடுத்த நடவடிக்கைகள் விமர்சிக்கப் பட்டாலும் காலப்போக்கில் பயனீட்டத் தொடங்கியுள்ளன. மொ பெ)

நியூயார்க் நகரத்தின் மேயரான ரூடி ஜூலியானி அவர்களை டைம் இதழ் அட்டைப்படத்தில் போட்டு, ‘இந்த வருடத்தின் மனிதர் ‘ என்ற பட்டம் கொடுத்து கெளரவித்திருக்கிறது. 9/11இன் போது ரூடி ஜூலியானி தலைமை தாங்கி நியூயார்க் மக்களுக்கு செய்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கெளரவத்தை அளித்திருக்கிறது. ஆனால், நியூயார்க் மக்கள் மேயர் ஜூலியானி அவர்களை ஞாபகம் வைத்துக்கொள்ள ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அது அவரது ஆட்சியின் இறுதி மாதங்களில் அவர் செய்த வேலைகளுக்கல்ல. அதற்கு முன், ஏழே முக்கால் வருடங்கள் அவர் மேயராக இருந்து சாதித்ததற்கு.

1993இலிருந்து நியூயார்க்கின் கொலைக்குற்றங்கள் சுமார் 70 சதவீதம் குறைந்திருக்கின்றன. பாலியல் வன்முறைகள் 40 சதவீதம் குறைந்திருக்கின்றன. திருட்டு 68சதவீதம் குறைந்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு சுமார் 71 சதவீதமும், கார்திருட்டு 74 சதவீதமும் குறைந்திருக்கிறது. அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை நியூயார்க் நகரத்தை அமெரிக்காவிலேயே பாதுகாப்பான நகரமாக குறிப்பிடுகிறது.

குறைந்த குற்றங்கள், உயர்தர வாழ்க்கைக்கு இட்டுச்சென்றிருக்கின்றன. டைம்ஸ் ஸ்கொயர் என்ற மத்திய வளாகம் இருட்டியதற்குப் பின்னர், குடும்பத்துடன் பொழுது போக்கும் இடமாக மாறியிருக்கிறது. பெரும்பாலான குற்றங்கள் ஏழ்மையான சிறுபான்மை குடியிருப்புகளில் அங்கிருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களால் நடத்தப்படுவது என்பதை கருத்தில் கொள்ளும்போது, எவ்வாறு கறுப்பர்களும், ஸ்பானிய மொழி பேசும் சிறுபான்மையினரும் இந்த குற்றக்குறைப்பால் பல உயிர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்கும்.

மண்ஹாட்டன் ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பு எவ்வாறு இப்படிப்பட்ட குற்றக்குறைப்பு நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ‘Do Police Matter ? An Analysis of the Impact of New York City ‘s Police Reforms, ‘ என்ற இந்த கட்டுரை ஜியார்ஜ் கெல்லிங் அவர்களாலும் வில்லியன் சோஸா அவர்களாலும் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது. 1980இல் கெல்லிங் அவர்களும், அரசியல் அறிவியலாளர் ஜேம்ஸ் க்யூ வில்ஸன் அவர்களும் இணைந்து ‘உடைந்த ஜன்னல் ‘ என்ற போலீஸ் தேற்றத்தை உருவாக்கினார்கள். இந்த தேற்றத்தின் படி, சிறிய குற்றங்கள் முக்கியமானவையாகக் கருதப்பட வேண்டும். இந்த சிறிய குற்றங்கள், (அதாவது சுவரில் கிறுக்குவது, கண்ணாடிகளை உடைப்பது, விபச்சாரம் போன்றவை) கவனிக்கப்படாமல் இருந்தால், அந்த குற்றங்களைச் செய்பவர்கள் இன்னும் கொஞ்சம் தைரியம் பெற்று பெரிய குற்றங்களுக்குப் போவார்கள் என்பது. இது வளர்ந்து இன்னும் பெரிய குற்றங்களைச் சகித்துக்கொள்ள போலீஸையும் இன்னும் பெரிய குற்றங்களைச் செய்ய குற்றவாளிகளையும் தூண்டும் என்பது. 1990இல் ‘உடைந்த ஜன்னல் ‘ தேற்றம் ஜூலியானி அவர்களுக்கு முந்தைய மேயரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், 1994இல் மேயர் ஜூலியானி கொண்டுவந்த போலீஸ் கமிஷனர் வில்லியன் ப்ராட்டன் அவர்களால் தான் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவுகள் குறிப்பிடத்தகுந்தவையாகவும், நீண்டகாலம் நிலைத்து இருப்பவையாகவும் இருப்பது கவனிக்கப்படவேண்டும். சிறிய குற்றங்களுக்காக கைதுகளும் தண்டனைகளும் தொடரத் தொடர பெரிய குற்றங்கள் வெகுவேகமாகக் குறைந்தன. இந்த ‘உடைந்த ஜன்னல்கள் ‘ கொள்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதால், சுமார் 60,000 பெரிய குற்றங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது.

மேயர் ஜூலியானி அவர்களது தூண்டுதலால், நியூயார்க் போலீஸ் நிர்வாகம் பெரும் மாறுதலுக்கு உள்ளானது. காம்ஸ்டாட் என்று பெயரிடப்பட்ட இந்த நடைமுறையின்படி, நியூயார்க் தனித்தனி பிரிவுகளாகப்பிரிக்கப்பட்டு அங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க தேவையான அதிகாரமும் வழங்கப்பட்டது. இந்த அதிகாரத்தின் கூடவே, அந்த அந்த பகுதிகளில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் அந்த அந்த அதிகாரிகளே முழுப்பொறுப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும் வழங்கப்பட்டது. இதன் விளைவு, பிராந்திய பிரச்னைகளுக்குப் பிராந்தியத் தீர்வுகள்.

‘கடந்த 20ஆம் நூற்றாண்டில் மிக முக்கியமான போலீஸ் நிர்வாக புதுக்கண்டுபிடிப்பு இந்த காம்ஸ்டாட் என்பது. ‘ என்று இந்த கட்டுரையின் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்த முறையின் வெற்றியால், அமெரிக்காவின் பல மாநிலங்களில் போலீஸ் நிர்வாகத்தினர் இந்த முறையை புகுத்த முயன்றுவருகிறார்கள்.

மேயர் ஜூலியானி அவர்களின் எதிர்ப்பாளர்களும், நியூயார்க் போலீஸ் நிர்வாகத்தின் எதிர்ப்பாளர்களும் நியூயார்க் நகரத்தில் நடந்த குற்றக்குறைப்புக்கு மேயரும் நியூயார்க் போலீஸ் நிர்வாகமும் காரணமல்ல என்று வாதிட்டு வருகிறார்கள். நகரத்தின் குற்றக்குறைப்புக்குக் காரணம், வேலையில்லாத்திண்டாட்டம் குறைந்ததும், மிக வேகமாகவளர்ந்த பொருளாதாரமுமே காரணம் என்று இந்த எதிர்ப்பாளர்கள் வாதிட்டு வருகிறார்கள். அல்லது க்ராக் கொக்கேன் என்ற போதைப்பொருள் உபயோகம் குறைந்ததும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். அல்லது இளம் வயதுடைய ஆண்கள் (குற்றம் புரியும் பெரும்பான்மையினர்) இந்த நகரத்தில் குறைந்ததும் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள்.

உண்மையில், மேற்கண்ட எந்தக் காரணங்களும் தீர ஆராய்ந்தால் நிற்பதில்லை. குற்றங்கள் குறைந்ததற்கும், இளம் வயதுடைய ஆண்கள் எண்ணிக்கை குறைந்ததற்கும் சம்பந்தமில்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. கோக்கேன் உபயோகத்துக்கும் குற்றம் குறைவதற்கும் சம்பந்தமில்லை என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. வேலையில்லாமைக்கும் குற்றத்துக்கும் ஓரளவுக்குச் சம்பந்தமிருக்கிறது. ஆனால் நியூயார்க்கில் அது நேர்மாறு. குற்றங்கள் குறைந்தன. ஆனால் வேலையில்லாமை அதிகரித்தது.

செப்டம்பர் 11க்கு அப்புறம், நியூயார்க் போலீஸ் நிர்வாகத்தின் விமர்சகர்கள் அவ்வளவாக அதனை எதிர்ப்பதில்லை. இது ஆச்சரியமானதல்ல என்றாலும் இது தற்காலிகமானதுதான் என்பது வருந்தத்தக்கது.

Series Navigation

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தலையங்கம்

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தலையங்கம்