‘ கடவுளுக்கான போர்கள் ‘ என்ற காரென் ஆம்ஸ்ட்ராங் புத்தகத்தின் விமர்சனம்

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

க்ரிஸ் ஹெட்ஜஸ்


என்னுடைய ஒழுக்கவியல் (Ethics) பேராசிரியரான ஜேம்ஸ் லூதர் ஆடம்ஸ் அவர்கள் எங்களிடம் ‘நீங்கள் எதிர்காலத்தில் கிரிஸ்தவ ஃபாஸிஸ்ட்களை எதிர்த்து போராடிக்கொண்டிருப்பீர்கள் ‘ என்று சொன்னார். அவர் சொல்லும் விஷயம் நடக்க முடியாதது என்று தோன்றினாலும், அவர் ஒன்றும் லேசுப்பட்ட படிப்பாளி அல்ல. நாம் ஒரு புதிய நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும்போது, இஸ்லாம், கிரிஸ்தவம், யூதம் ஆகிய மூன்று ஒரிறைவன் வழிபாட்டு மதங்களும் நவீன காலத்தின் மிகப்பெரிய ஆன்மீக ஓட்டையை அடைக்கத் தவறிவிட்டன. இந்த ஓட்டையை ‘கடவுள் வடிவமுள்ள ஓட்டை ‘ ( ‘ ‘a God-shaped hole. ‘ ‘) என்று ஜீன் பால் சார்த்தர் கூறினார். நாம் இன்று மாபெரும் மதப் பரிசோதனையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கின்றோம். இதே போன்றதொரு மதப்பரிசோதனை தான், ஆக்ஸியல் யுகம் எனப்பட்ட ( Axial Age கிமு 800 – கிமு 200) காலகட்டத்தில் தோன்றி, பாகன் (Pagan – பல கடவுளரை வழிபடும் ஆதிமதங்கள்) மதங்கள் அழியவும் ஓரிறைவன் வழிபாட்டு மதங்கள் தோன்றவும், அத்தோடு கூட சீர்திருத்தக்காரர்களும், சிந்தனாவாதிகளும் தோன்றவும் காரணமாக இருந்தது. இந்த காலக் கட்டத்திலேயே எந்த இன்று புழங்கும் அசல் சிந்தனைகள் முதன் முதல் சிந்திக்கப்பட்டது. ஆனால், இன்று வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், அத்தனை சக்தியும், உத்வேகமும், சிந்தனையும், ஜனநாயகத்தின் எதிர்ப்பாளர்களிடமும், மதம் சாராத சமூகத்தின் எதிர்ப்பாளர்களிடமே இருக்கிறது.

காரென் ஆம்ஸ்ட்ராங் போல நீங்களும் அடிப்படை வாதம் என்பதை தடுக்கவேண்டிய விஷயமாகப் பார்க்கிறீர்களா இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய புத்தகம், எவ்வாறு யூதம், கிரிஸ்துவம், இஸ்லாம் போன்ற ஒற்றைக்கடவுள் மதங்களில் அடிப்படை வாதம் தோன்றி வளர்கிறது என்பதை ஆழமாக, படிக்க எளிய, தெளிவான புத்தகமாகத் தருகிறது. ஒரேயடியாக அடித்துப் பேசாமல், அமெரிக்காவிலும், இஸ்ரேலிலும், ஈரான், எகிப்து தேசங்களிலும் எவ்வாறு அடிப்படை வாதம் வளர்ந்தது என்பதையும் எடுத்துரைக்கிறார். அதே நேரத்தில், அவர் இயல்பாகவே, வாழ்க்கையின் அர்த்தத்தையும், குறிக்கோளையும் நோக்கி ஏங்கும் ஏழை மக்களின் ஆன்மீகத்தேடலுக்கு அனுதாபம் காட்டாத சக்திகளாலும், நாடுகளாலும் அவர்கள் உதாசீனம் செய்யப்பட்டு, அடிப்படைவாதத்துக்குச் செல்லும் மக்களைப் பற்றிய அனுதாபத்தையும் வெளிப்படுத்துகிறார்.

நவீனத்துவத்துக்கு எதிர்வினையாகத் தோன்றும் பதில்களும் தூய்மையானவையல்ல என்பதையும் காரென் ஆம்ஸ்ட்ராங் குறிப்பிடுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் கொள்கைகளும், அதன் விடுதலை இயங்கங்களுக்கான ஆதரவும், அத்தோடு கூடவே மின்னணுவியல் யுகத்துக்குத் தகுந்தாற்போல தங்கள் செய்திகளையும் மறுவடிவமைக்க வேண்டிய கட்டாயத்திலும், மதங்களின் மாயக்கதைகளை அறிவியல் போலவே பகுத்தறிவு ரீதியாக அணுகமுடியும் என்ற நம்பிக்கைகளையும் ஆம்ஸ்ட்ராங் குறிப்பிடுகின்றார். ‘உவமானங்கள் நிறைந்தும் உவமேயங்கள் நிறைந்தும், மாயக்கதைகள் போல நவீனகாலத்துக்கு முந்தைய பைபிள் படிப்பு போலில்லாமல், இன்று புரோடஸ்டண்ட் கிரிஸ்தவர்கள் பைபிளை நிரந்தர உண்மை என்பதாய் வாசிக்கிறார்கள் ‘ என்று ஆம்ஸ்ட்ராங் குறிப்பிடுகிறார். அதே போல, அயத்துல்லா ருஹல்லா கொமேனி மத்திய காலத்துக்குச் (middle ages – பிற்போக்குக் காலத்தின் குறியீடுர் சென்றவரல்ல என்பதையும் குறிப்பிடுகின்றார். ‘உண்மையில், அவரது செய்தியும், அவர் வளர்த்து வந்த கொள்கையும் நவீனமானவை. மேற்கத்திய எதேச்சதிகாரத்துக்கு எதிர்ப்பும், பாலஸ்தீன மக்களுக்கான அவரது ஆதரவும் மற்ற மூன்றாம் உலக இயக்கங்களுக்கான ஆதரவு போன்றதே. ஆகவே அவர் நேரடியாக மக்களிடம் பேச முடிந்தது ‘ என்று கூறுகிறார். ஏன் மிகவும் கடுமையான தீவிரவாத யூதர்கள், இஸ்ரேலின் மதம் சாராத சமூகத்தை எதிர்த்தாலும், யேஷிவா என்ற நவீன சுய உதவி நிறுவனங்களைத் தோற்றுவித்திருக்கிறார்கள். ‘டோரா ( யூதர்களின் புனித நூல் ) புத்தகத்தைப் படிப்பதற்கு புதிய கடுமையான சட்டங்களை உருவாக்கிக்கொண்டு, அதே நேரத்தில் அரசியல் அமைப்பைத் தங்களுக்கு அனுசரனையாக மாற்றவும் செய்தார்கள். இதனால், இவர்கள் 2000 வருடங்கள் இல்லாத ஒரு செல்வாக்கை அடிப்படைவாத யூதத்துக்குப் பெற்றுத்தந்திருக்கிறார்கள் ‘ என்று ஆம்ஸ்ட்ராங் குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படைவாத இயக்கங்கள் புரட்சிகரமாக மாறிய ஒரு உலகத்தின் சட்டதிட்டங்களையும் ஒழுக்கங்களையும் வடிவமைக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள் – பல சமயங்களில் கவலை தரும் விதமாக். ஆனால் அவர்களுமே, எந்த கலாச்சாரத்தை அழிக்கத் திட்டமிடுகிறார்களோ அதே நவீன கலாச்சாரத்தின் உற்பத்திதான் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதுமில்லை. இவர்கள் ‘பகிர்ந்து வாழும் ஒரு வாழ்க்கைமுறையை (symbiotic) இந்த நவீனத்துவத்துடன் கொண்டிருக்கிறார்கள் ‘ என்று குறிப்பிடுகின்றார். சமரசம் செய்துகொள்ளாத மற்ற இயக்கங்களைப்போலவே (பாஸிஸம், கம்யூனிஸம், தேசியவாதம்) இந்த அடிப்படைவாத மதங்களும் தொடர்ந்து அழியாமல் நின்றிருக்கின்றன. ‘மேற்கத்திய உலகம் இதுவரை இல்லாத, புத்தம் புது சமுதாயத்தை உருவாக்கித் தந்திருக்கிறது ‘ என்று சொல்லும் ஆம்ஸ்ட்ராங், ‘ஆகவே இதற்கான மதமும் வித்தியாசமானதாகவே இருக்கும் ‘ என்று குறிப்பிடுகின்றார். இதுவரை 3 புத்தகங்கள் எழுதியிருக்கும் ஆம்ஸ்ட்ராங், ‘கடவுள் : ஒரு வரலாறு ‘ என்ற புத்தகத்துக்காக வெகுவாகப் பாராட்டப்பட்டவர். எவ்வாறு இந்த அடிப்படைவாத இயக்கங்களைத் தோற்கடிப்பது எப்படி என்பது இவருக்குப் புரிபடாததாக இருக்கிறது. இவர் சொல்வது போல, ஒரு அடிப்படைவாத இயக்கத்தை நசுக்கினால் அது இன்னும் வீர்யத்துடன் கூடிய பல சந்ததிகளை உருவாக்கிவிடுகிறது.

பழிவாங்கும் குணம் கொண்ட, சகிப்புத்தன்மையற்ற சிந்தனை, இனவாதம், மற்ற மக்களை வெறுத்தல் போன்றவற்றிற்கு நவீன குணமுள்ள சிவில் சமூகத்தில் எந்த இடமும் இல்லை என்பதுவே இவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கலாம். பெரும்பாலான அடிப்படைவாதங்கள் அடக்கமுடியாத கோபத்தின் விளைவுகள். இதுவும், சமூகம் மோசமென்று விலக்கிவைக்கும் மக்களிடமிருந்து உருவாகும் விளைவுகள். இஸ்ரேலின் குஷ் எமுனிம் இயக்கம், இரானிய மதகுருக்களின் இயக்கம், எகிப்தின் முஸ்லீம் சகோதர இயக்கம், அமெரிக்காவில் ஜெர்ரி பால்வெல், பாட் ராபர்ட்ஸன் போன்றோரின் கிரிஸ்தவ தீவிரவாத இயக்கங்கள், ‘நவீனத்துவத்தின் பகுத்தறிவை உள்வாங்கிக்கொண்டு, அதன் கவர்ச்சிகரமான தலைவர்களின் கீழ், அடிப்படைவாதத்தையே மறுவிளக்கம் செய்து, அந்த கொள்கையின் கீழ் என்ன செய்வது என்பதையும் சமூகத்தை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதையும் முன் வைக்கின்றன ‘ என்று ஆம்ஸ்ட்ராங் எழுதுகிறார்.

மிகவும் அதிதீவிரமான போர்கள் புனிதத்துக்கும், புனிதமற்றதற்கும் இடையே நடப்பதல்ல. ஆனால், புனிதர்களுக்கும், நம்பிக்கையாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் நம்பிக்கையற்றவர்களுக்கும் இடையே நடப்பது. அன்வர் சதாத் அவர்களின் படுகொலையும், யிட்சக் ராபின் அவர்களின் படுகொலையும் இதையே காட்டுகின்றன. அரபு தேசங்களில் இரண்டு போர்கள் நடக்கின்றன. ஒன்று அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே நடப்பது. இரண்டாவது மத நம்பிக்கையாளர்களுக்கும், மதத்தை சமூகத்தோடு இணைக்காதவர்களுக்கும் இடையே நடப்பது. தொலைக்காட்சியில் முழங்கும் கிரிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் ஒருவருக்கு ஒருவர் நிகழ்த்திய போரே அவர்களை வீழ்த்தியது. கிரிஸ்தவ மதப்பிரசாரகர்களுக்கும் மதம் சாராதவர்களுக்கும் இடையே போர் நடக்கவில்லை. ஜிம் பேக்கருக்கும் ஜிம்மி ஸ்வாக்கார்ட்டுக்கும் இடையே நடந்த போரே இருவரையும்

வீழ்த்தியது. (இவர்கள் இருவரும் அமெரிக்க தொலைக்காட்சியில் கிருஸ்தவப் பிரசாரகர்கள் – மொ பெ)

இந்த இயக்கங்களின் வேர்களைப் பயின்ற ஆர்ம்ஸ்ட்ராங், அவற்றின் உச்சமும் உண்டு வீழ்ச்சயும் உண்டு என்று குறிப்பிடுகிறார். அடிப்படைவாதங்கள் எல்லாவற்றிற்குமே ஒரு தனித்த முறை உண்டு – ஈரான் ஷாவை எதிர்த்தவர்களும் சரி, எகிப்தின் நாசரை எதிர்த்தவர்களும் சரி , ஒவ்வொருமுறை நசுக்கப் பட்ட போதும் வேறு வேறு குழுக்களைக் கட்டி அமைத்து, வேறு குறிக்கோள்களை உருவாக்கிக் கொண்டு மறுபடி நவீன சமூகத்தைத் தாக்க முனைகிறார்கள். ‘ புரோடஸ்டண்ட் அடிப்படைவாதிகள் ஸ்கோப்ஸ் வழக்கில் கீழ்மைப்பட்டபின்னர் , வெகுவாக பிற்போக்குக்காரர்களாகவும் , பைபிள் வார்த்தைக்கு வார்த்தைக்கு நம்புகிறவர்களாகவும் மாறிவிட்டனர். ‘ என்று அவர் எழுதுகிறார். (ஸ்கோப்ஸ் வழக்கு : டார்வினின் பரிணாமக் கோட்பாட்டைப் பள்ளிகளில் கற்பிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கு. டார்வின் கோட்பாட்டை கற்பிக்கலாம் என்ற தீர்ப்பு பல கிருஸ்தவ அமைப்பிற்குப் பிடிக்கவில்லை – மொ பெ) ‘நாசரின் உழைப்பு முகாம்களில் சூனி அடிப்படைவாதம் உருப் பெற்றது. ஷாவின் அடக்கு முறை இஸ்லாமியப் புரட்சிக்கு வழி கோலியது. ‘

இது எதுவுமே நவீனத்துவத்திற்கு ஆதரவான குரல் அல்ல. ஆர்ம்ஸ்ட்ராங் ஏழு வருடங்கள் ரோமன் கத்தோலிக்க மத கன்னிகாஸ்த்ரீயாய்க் காலம் கழித்தவர். ‘நவீனத்துவம் என்பது பலருக்கு ஒரு வெறுமையையும், அர்த்தமில்லாத வாழ்க்கையையும் குறிக்கிறது. பலருக்கு நவீனத்துவத்தின் நிச்சயமின்மையைக் காட்டிலும் ஒரு வித ஸ்திரத்தன்மை பிடித்திருக்கக் கூடும். தம்முடைய பயங்களை கற்பனை எதிரிகளின் மீது ஏற்றி, எல்லோருமே தமக்கு எதிராகச் சதி செய்வதாய் இவர்கள் நம்பத் தொடங்கி விடுகிறார்கள். ‘ அறிவியல்வாதம், புராணிகங்களை விட்டொழித்துவிட்டு, அதன் இடத்தில் எதையுமே அளிப்பதில்லை. அறிவியல்வாதத்தின் வக்கிரத்தினால், பல சர்வாதிகாரிகள் உருவாகக் காரணமாய் இருந்தது. சர்வாதிகாரக் கருத்தியல் உருவாகவும் காரணமாய் இருந்தது. இரண்டு உலகமகாயுத்தங்களும் ஏற்பட்டன. படுகொலை விஷவாயுக் கூடாரங்களும், மோசமான உழைப்பு முகாம்களும் இதன் பலன். ‘ ஓர் ‘உயர்ந்த ‘ , புராணிக உண்மையை நம்பாமல் வெறும் அறிவை மட்டும் நம்புவது , அடிப்படைவாதிகள் இழைத்த கொடுமைகளைக் காட்டிலும் கூடக் கொடுமையான பல குரூரங்களை ஏற்படுத்தியுள்ளது. ‘

தாம் புரிந்துகொள்ள முடியாத சக்திகளால் இவர்கள் துன்புறுத்தப் படுகிறார்கள். ஷாவின் கீழ் முஸ்லீம்கள், ஹிடல்ரின் கீழ் யூதர்கள், எகிப்தில் மேநாட்டுக்கு ஆதரவான கொள்கைகளால், ஹோஸ்னி முபாரக் காலத்தில் கஷ்டப்பட்ட விவசாயிகள், தாராளவாதத்தின் அகங்காரத்தின் கீழ் வாழும் அமெரிக்க கிருஸ்தவர்கள் – இவர்களுக்கெல்லாம் அடிப்படைவாதம் புகலிடமாகவும், நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது. ஆனால், சமரசத்தை ஏற்றுக் கொள்ளாத எல்லாக் கருத்தியல்கள் போலவே, அடிப்படைவாதம் ஒரு கற்பனைப் பொன்னுலகிற்காக , லட்சியங்கள் வழிமுறைகளை நியாயப் படுத்துகின்றன என்ற கருத்துடன் ஒன்றிப்போய் தம்முடைய நெறிமுறைகளை முற்றும் இழந்து போகின்றன. கிருஸ்தவர்கள் சித்திரவதை செய்து தம் நம்பிக்கையை (Inquisition) நிறுவியதை ஒத்ததே இவர்களின் வழிமுறைகள்.

அடிப்படைவாதிகளில் மிதவாதியாய் இருப்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ‘கிருஸ்தவ அடையாளம் ‘ என்ற அமைப்பு அடிப்படைவாதத்தை எதிர்க்கும் அதே வேளையில், யூதமேலாண்மையைத் (Zionism) தாங்கிப் பிடிக்கும் கிருஸ்தவ வலதுசாரிகளைக் கண்டனம் செய்கிறது. கடவுளின் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற பட்டத்தை யூதர்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்டதால், கிருஸ்தவ ஆரியர்களுக்கு இந்தப் பட்டம் சூடிக்கொள்ள வழியில்லாததால் யூதர்கள் மீது இவர்களுக்குக் கோபம். ஓக்லோஹோமா நகரில் ஏப்ரல் 19, 1995-இல் அமெரிக்க அரசாங்கக் கட்டடத்தை வெடிவைத்துத் தகர்த்த தாம்ஸ் மக்வீ இந்தக் குழுவைச் சேர்ந்தவன். முஸ்லீம் யூத அடிப்படைவாதக் குழுக்கள் போலவே இந்தக் குழுவும், குழந்தைகள், ஏதுமறியாத மக்களையும் புனிதப் போரில் கொன்றால் தவறில்லை என்று எண்ணுகிறது.

அதிகாரவர்க்கத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டால் அதை நிரப்பிவிடுகிற வாய்ப்புக் கிடைத்த பல கிறுக்குத் தலைவர்களை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. அடிப்படைவாதம் வளரும் என்பதை விட ஆபத்தான விஷயம், நவீன , மதச்சார்பற்ற சமூகம் கருகிவிடக் கூடும் என்பது தான். மைய நீரோட்ட இஸ்லாம், கிருஸ்தவம், யூதமதம் , வலுவற்று , ஓரங்கட்டப் பட்டுவிட்டன. அவற்றை திறந்த ஒரு அமைப்பாகவும், சகிப்புத் தன்மை கொண்டதாகவும் வளர்த்த சக்திகளே ( அவற்றின் புனித நூல்கள் ) இன்று அவை அடிப்ப்டைவாதிகளால் ஒதுக்கப்படக் காரணமாகிவிட்டன. ‘இந்த (அடிப்ப்டைவாத) இறையியல் அமெரிக்காவில் வளர்வது அரிது தான். ஆனால், மிகுந்த பொருளாதாரச் சிக்கலோ அல்லது பெரும் இயற்கை அழிவோ ஏற்பட்டால், கிருஸ்தவ சர்ச் சர்வாதிகாரியாய் மாறக்கூடும் தான். தாராளவாதக் கோட்பாடுகள் அழியவும் கூடும் ‘ என்கிறார் ஆர்ம்ஸ்ட்ராங். ‘ ஏசுநாதரின் பல கொள்கைகளுக்கு எதிரான முதலாளித்துவத்தை கிருஸ்தவ மதம் ஏற்றுக் கொண்டு விட்டதே. அது போல் மாறிய சூழலில் ஃபாஸிஸ்ட் கோட்பாடுகளையும், பொது ஒழுங்கு என்ற பெயரில் ஏற்றுக் கொண்டால் வியபதற்கில்லை ‘

Chris Hedges is a reporter in New York for The Times.

THE BATTLE FOR GOD By Karen Armstrong. 442 pp. New York: Alfred A.

Knopf. $27.50.

Series Navigation

க்ரிஸ் ஹெட்ஜஸ்

க்ரிஸ் ஹெட்ஜஸ்