• Home »
  • »
  • இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும், மதவாதமும் உருவான விதம் (இறுதிப்பகுதி)

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும், மதவாதமும் உருவான விதம் (இறுதிப்பகுதி)

This entry is part of 25 in the series 20020106_Issue

ஆர். பி. பகத் (தமிழில் : கல்பனா சோழன்)


நவம்பர் 24, 2001 அன்று ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ‘யில், ‘Census and the Construction of Communalism in India ‘ என்ற தலைப்பில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் தொடர்ச்சி

III . மதவாாியான வகைப்படுத்தல்

இந்திய மக்களின் வாழ்வு, மதத்துடன் பின்னிப் பிணைந்தது. ஆனால், அமொிக்காவில், மக்களின் மதத்துக்கும், அவர்களுடைய கலாசாரத்துக்கும் இப்படிப்பட்ட பிணைப்பு கிடையாது. எனவே, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் கேட்கப்பட வேண்டி இருக்கிறது என்று 1931ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பொறுப்பாக இருந்த ஆணையர் விளக்கம் அளித்தார்( 26). மத மோதல்கள் மலிந்த வரலாறு கொண்ட மேலை நாடுகளில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மதம் பற்றிய விவரம் சேகாிப்பது என்பது மிகவும் சர்ச்சைக்குாிய ஒன்றாக ஆகிப் போகும் என்ற உண்மையை இந்த ஆணையர் வசதியாக மறந்து போனார். மதம் பற்றிய பேச்செடுத்தால் நாடு கொந்தளிக்கும் என்பது அந்த ஆணையர் அறிந்த விஷயம்தான். எனவேதான், ‘மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, மதம் பற்றிய புள்ளிவிவரம் சேகாிப்பது, மத வேறுபாடுகளை வளர்க்கும் என்று வாதிடப்படுகிறது. ஆனால், அதற்காக, இந்த விஷயத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நெருப்புக் கோழி மாதிாி தன் தலையைப் புதைத்துக்கொள்ள முடியாது. உள்ள நிலவரத்தை உள்ளபடி துல்லியமாகப் பதிவு செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. மத வேறுபாடுகள் இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த உண்மை இன்றைய அரசியல் சூழலிலும் பிரதிபலிக்கிறது ‘ என்று அந்த ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்(27).

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மதம் பற்றிய விவரம் ஏன் சேகாிக்க வேண்டும் என்பதற்காக தரப்பட்ட இந்த விளக்கம், காலனிய ஆதிக்க ஆட்சியின் கீழ் இருந்த இந்திய சமூகத்தில் நிலவிய உண்மை நிலைக்குச் சற்றும் பொருந்தாமலே இருந்தது. இது தொடர்பாக 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாின் கருத்துகள் கவனிக்கத்தக்கது : இந்தியாவில் மக்களிடையே நிலவும் வேறுபாடுகள் மத அடிப்படையில் அமைந்தவை அல்ல. சமூக அடிப்படையில் அமைந்தவை. ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பதைப் பொறுத்து அவர்களை வகைப்படுத்துவதில்லை. மாறாக அவர்களது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிாித்துப் பார்க்கப்படுகிறார்கள். அடுத்த வீட்டுக்காரன் எந்த கடவுளைக் கும்பிடுகிறான் என்பதல்ல அவர்கள் பிரச்சினை. அவன் நீரை கையால் அள்ளிக் குடிக்கிறானா, மொண்டு குடிக்கிறானா என்பதே பிரச்சினை (28).

காலனி ஆதிக்க ஆட்சி இன வெறி கொண்டது என்பதால், இந்திய மக்களையும் சாதி, மத வேறுபாடுகளை அடுத்து இனத்தின் அடிப்படையிலும் பிாித்து வகைப்படுத்தியது. காலனி ஆதிக்க ஆட்சியில், மக்கள் பின்வரும் பிாிவுகளாகப் பிாித்து வைக்கப்பட்டிருந்தார்கள் : 1. இந்தோ ஆாியர்கள் – இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர். 2. ஈரானியர்கள் (பார்சிகள்) 3. செமிடிக் ( முஸ்லீம்கள், கிறித்துவர்கள், யூதர்கள் 4. ஆதிகுடியினர் 5. இதர வகையினர். மேற்சொன்ன வகைகளில் மக்களைப் பிாிப்பதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டன. சமூக கட்டமைப்பின் இயல்பின் காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிாிவுகளின் கீழ் மக்களை வகைப்படுத்த முடியவில்லை என்று மாகாண வாாியாகவும், அனைத்திந்திய ாீதியிலும் தரப்பட்ட அறிக்கைகளில் குறிப்புகள் எழுதப்பட்டு இருப்பதைக் காணலாம்.

‘இந்துக்கள், இந்தியாவில் பிறந்தவர்கள். ஐரோப்பியர்களோ, ஆர்மீனியர்களோ, முகலாயர்களோ, பார்சிகளோ, வேறு வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களோ அல்லர். இவர்கள், பிராமணர்களின் ஆன்மீக அதிகாரத்தை ஒப்புக் கொள்கிறவர்கள். உயிர்களைத் துன்புறுத்துவதோ, கொல்வதோ பாவம் என்பதை ஏற்று வாழ்பவர்கள். அல்லது கொல்ல மறுப்பவர்கள். பிராமணர்கள் ஏற்க மறுக்கிற சாதியையோ, மதத்தையோ பின்பற்றாதவர்கள் ‘ என்று இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தது(29). இந்துக்களை முஸ்லீம்களுடன் ஒப்பிட்டே வகைப்படுத்தினார்கள். ஆக்ரா மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு மேல் அதிகாாியாக இருந்த ஜார்ஜ் க்ாியர்சன் வார்த்தைகளில் சொல்வதானால், ‘இந்தியர்கள் என்றால் இந்தியாவில் பிறந்தவர்கள். இந்துக்கள் என்றால் இந்தியாவில் பிறந்த முஸ்லீம் அல்லாதவர்கள் ‘(30).

மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை, இந்துக்கள் யார் இலக்கணம் வகுத்ததோடு நிற்கவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய், உண்மையான இந்துக்கள் யார் என்று அடையாளம் காண ஆரம்பித்தது. 1911ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, மாகாண மேல் அதிகாாிகளுக்கு ஒரு உத்தரவு தரப்பட்டது. அதன்படி, கீழ்கண்ட இலக்கணங்களுக்குப் பொருந்தாதவர்களைத் தனிப் பிாிவாக கணக்கெடுக்கும்படி சொல்லப்பட்டது: 1. பிராமணர்களின் மேலாதிக்கத்தை மறுப்பவர்கள் 2. பிராமணர்களிடம் இருந்தோ அல்லது அங்கீகாரம் பெற்ற இந்து குருவிடம் இருந்தோ மந்திர உபதேசம் பெறாதவர்கள் 3. வேதங்களின் மேன்மையை மதிக்காதவர்கள் 4. இந்து கடவுளர்களை வணங்காதவர்கள் 5. நல்ல பிராமணர்களைக் குடும்பப் புரோகிதர்களாகப் பெறாதவர்கள் 6. பிராமண புரோகிதர்களையே வைத்திருக்காதவர்கள் 7. இந்து கோவில்களின் கர்ப்பகிரகங்களுக்கு அருகே செல்ல அனுமதிக்கப்படாதவர்கள். 8. தீண்டுதல் மூலமோ, வேறு விதங்களிலோ அசுத்தம் உண்டாக்குபவர்கள். 9. இறந்தவர்களைப் புதைப்பவர்கள். 10. பன்றி மாமிசம் சாப்பிடுபவர்கள், பசுவை புனிதமாக மதித்துப் போற்றாதவர்கள்.

இந்தப் பிாிவின்கீழ் வருபவர்களின் எண்ணிக்கை, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு அளவில் இருந்தது. மத்திய மாகாணங்களில், இந்துக்களாக வகைப்படுத்தப்பட்டவர்களில் கால்வாசிப் பேர், பிராமணர்களின் மேலாதிக்கத்தையோ, வேதங்களின் மேன்மையயோ ஒப்புக் கொள்ள மறுத்தார்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்து குருக்களிடம் இருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள்; இந்து கடவுளர்களை வழிபடாதவர்கள்; பிராமணர்களின் சேவையைப் பெறாதவர்கள். மூன்றில் ஒரு பங்கினர் கோவில்களுக்குள் அனுமதிக்கப்படாதவர்கள். கால்வாசிப்பேர் தீண்டத்தகாதவர்கள்; இறந்தவர்களைப் புதைப்பவர்கள். பாதிப்பேர் இறந்தவர்களை எாியூட்டுவதை பொிதாக மதிக்காதவர்கள். ஐந்தில் இரண்டு பங்கினர் பன்றி மாமிசம் சாப்பிடுபவர்கள். (31)

வங்காளத்திலும், பீகாாிலும், ஒாிஸ்ஸாவிலும் மேற்குறிப்பிட்ட பத்து வகைக்கும் பொருந்தாதவர்களாக 59 சாதியினர் இருந்தார்கள். இதில் ஏழு சாதியினர் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள். பன்றி மாமிசம் சாப்பிடுபவர்களாக 14 சாதியினர் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே கோவில்களுக்குள் அனுமதிக்கப்படாதவர்கள்(32). இவர்கள் எல்லாரும் உண்மையான இந்துக்கள் அல்லர் என்றோ, ஓரளவு இந்துக்களாக வாழ்ந்தவர்கள் என்றோ அழைக்கப்பட்டனர். இதன்படி, இந்துக்கள் என்றால் ஒரே மாதிாியான வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லர் என்பதும், பல்வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள் என்றும் புாியும். எனவேதான், தென் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, இந்துக்கள் என்ற வார்த்தையை ஒரு மதப் பிாிவாகப் பயன்படுத்தக் கூடாது என்று 1881ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சென்னை கணக்கெடுப்பு மேல் அதிகாாியாக இருந்தவர் ஆட்சேபம் தொிவித்தார்(33).

இந்தியாவில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் சமூக, கலாசார பழக்கவழக்கங்கள் தனித்துப் பிாித்துப் பார்க்க முடியாதபடி பின்னிப் பிணைந்தவையாக இருந்தன. முகமதிய சாயல் அதிகம் கொண்ட இந்துக்கள் பலர் இருக்கிறார்கள். உதாரணமாக, ‘ பன்ச்ப்ாியா ‘ என்ற வித்தியாசமான குழுவினர், ஐந்து முஸ்லீம் பொியவர்களை வணங்குவார்கள். அவர்களுக்கு மாியாதை காட்டும் விதமாக பன்றி தியாகம் செய்வார்கள். இதற்கென ஒரு முகம்மதியரை – `டஃபாலி பகீர் ‘ – மதகுருவாக நியமிப்பார்கள். இது போலவே, குஜராத்தில், ‘மடியா குன்பிஸ் ‘ போன்ற பல்வேறு குழுவினர், தங்களுடைய முக்கியமான சடங்குகளின்போது, பிராமணர்களை அழைப்பார்கள். ஆனால், இமாம் ஷாவையும், அவரது வழித்தோன்றல்களையும் வழிபடுவார்கள். முகம்மதியர்களைப் போலவே, இறந்தவர்களைப் புதைப்பார்கள். ‘ஷேக்கதாஸ் ‘ பிாிவினர் திருமணச் சடங்குகளை செய்ய, இந்து, முகம்மதிய பொியவர்களை அழைப்பார்கள். `மோம்னாஸ் ‘ பிாிவினர் இறந்தவர்களைப் புதைப்பார்கள்; குஜராத்தி குரானை ஓதுவார்கள்; ஆனால் மற்றபடி இந்து பழக்க வழக்கங்களை பின்பற்றுவார்கள். இந்துக்களையும், சீக்கிய, ஜைனர்களையும் பிாித்துப் பார்ப்பது இன்னும் கடினமானது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரேகூட, ‘ நாம் முன்னரே பார்த்தபடி இந்தியாவில் உள்ள மதங்கள் தனித்தனியான அடையாளங்களைக் கொண்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றுவன அல்ல.(35) ஆனால், இந்திய மக்களை, மத அடிப்படையில் பிாிப்பதில் இருந்த சிக்கலை, மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாாிகள் தங்களுக்கே உாிய விதத்தில் தீர்த்துக் கொண்டார்கள். மக்கள், தங்களை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக கணக்கெடுப்பு அதிகாாிகளிடம் சொல்கிறார்களோ அந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அங்கீகாிக்கப்பட்ட எந்த குறிப்பிட்ட மதத்தையும் சாராதவர்கள், சாதி வாாியாகவோ, பழங்குடி பிாிவிலோ சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இதன்படி, அவர்கள் எல்லாரும் எவ்வளவு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அங்கீகாிக்கப்பட்ட இந்து சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இந்துக்கள் என்று கணக்கெடுக்கப்பட்டார்கள்(36).

இதுவரை சொல்லப்பட்ட விவரங்களைப் பார்த்தால், மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை, காலனி ஆதிக்க ஆட்சியாளர்களின் பார்வையில், மதம், இனம் என்பதன் இலக்கணங்களின் படி, மதப் பிாிவு வகைகள் மாற்றி அமைக்க எல்லா முயற்சிகளையும் செய்தது என்பது தெளிவாகும். பல்வேறு இனங்களை ஒரே விதமான பிாிவினராக மாற்றி வகைப்படுத்தியதன் மூலம் பிாித்தாளும் முறைக்கு அடிகோல முடிந்தது. இந்தியாவில் காலனி ஆதிக்கத்தை நிலை நிறுத்த அவர்களுக்கு இது தேவைப்பட்டது.

IV. எண்ணிக்கை அடிப்படையிலான மத விழிப்புணர்வு

மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் தொிய வந்த மதம் குறித்த புள்ளிவிவரஙகள் பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியதுடன் மத அடிப்படையிலான விவாதங்களையும் எழுப்பின. 1909ம் ஆண்டு கல்கத்தாவைச் சேர்ந்த யு. என். முகர்ஜி `பெங்காலீ ‘யில் எழுதிய தொடர் கட்டுரைகள் சிறு வெளியீடாகவும் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பு : 1901ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கண்ட உண்மை – இந்துக்கள் : மடிந்து வரும் இனம்.

மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை விகிதம் குரைந்து வருவதை முகர்ஜி சுட்டிக் காட்டினார் (37). 1912ஆம் ஆண்டில் சுவாமி ஷ்ரத்தானந்தாவுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது, இன்னும் 420 ஆண்டுகளில் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்ற அச்சம் குறித்து பேசினார். இதை நம்பிய அவர், இஸ்லாமியர்களாகவும், கிறித்துவர்களாகவும் மாறிய இந்துக்களை, மீண்டும் தங்கள் சொந்த மதத்துக்கு திரும்ப வைக்கும் பணியை ஆரம்பித்தார். 1926ஆம் ஆண்டில், இந்து சங்ஸ்தான்: மாண்டு வரும் இனத்தின் காவலர் என்று பொருள்படும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார் சுவாமி ஷ்ரத்தானந்த்.

காலனிய ஆட்சியாளர்கள், புதிய நிலவியல் சூழலில் ஏற்படும் நிலைமைகளை தமக்கு ஆதாயம் தரும் விதத்தில் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வங்காளப் பிாிவினையை முன்வைத்தவரும் சக்திவாய்ந்த பிாிட்டிஷ் அதிகாாியுமான ஹெச் ஹெச் ாிஸ்லெ, ‘1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இஸ்லாமிய, கிறித்துவ மறுமலர்ச்சியின் அடையாளமாக கருதப்படலாம். இந்த மறுமலர்ச்சி இந்துமதத்தின் கோட்டையை அசைத்துப் பார்க்கும். அல்லது இந்து மதம் இது நாள் வரை கொடி கட்டிப் பறந்தது போல இனிமேலும் இருப்பதற்கு சவாலாக அமையும் ‘ என்றார்(39).

இப்படி சொல்வதால் மத பகை வரும் என்று நன்றாகத் தொிந்துதான் செய்தார்கள். இந்த போக்கு இந்தியாவில் காலனி ஆதிக்கம் கொண்டுவந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கங்களைப் பற்றி யோசிக்க வைக்கிறது (40). இப்படி மதாீதியான எதிர்ப்புணர்வை கிளறி விட்ட பின், முஸ்லீம் மக்கள் தொகையின் வளர்ச்சியை அறிவியல்ாீதியாக விளக்க முடியாமல் போனது.மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை முஸ்லீம்களின் எண்ணிக்கை பெருகுவதன் காரணங்களை விளக்கியது. முஸ்லீம்களின் சத்துணவு, திருமண வாழ்வில் கட்டுபாடுகள் இல்லாமை, விதவை மறுமணம், சிறுவயதிலேயே திருமணம் செய்வது உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்பட்டன. முஸ்லீம்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நான்கு முறை திருமணம் செய்யலாம் என்று மதம் அனுமதிக்கிறது என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.

முஸ்லீம்கள் நான்கு முறை திருமணம் செய்து கொள்ளலாம் என்றாலும் பொதுவாக அவர்கள் ஒரு தார வாழ்க்கையே வாழ்வதாக 1911ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது(41). 1971ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, இந்துக்களில் 5.80 சதவீதத்தினர் பலதார வாழ்வு வாழ்கிறார்கள். பல தார வாழ்வு வாழும் முஸ்லீம்களின் எண்ணிக்கை இதற்கும் சற்று குறைவாகவே – 5. 73 சதவீதமாகவே – இருந்தது. இவர்களைத் தொடர்ந்து பலதார வாழ்வு அதிகம் வாழ்பவர்கள் சில பழங்குடியினர். 7.97 சதவீத புத்த மதத்தினர், 6.72 சதவீத ஜைனர்கள் பலதார வாழ்வு வாழ்வதாக அந்த ஆய்வு கண்டறிந்தது. (42). பலதார வாழ்வு என்பது இனப்பெருக்க வீர்யத்திற்கு உத்தரவாதம் தருவதாகாது. ஒரே ஆனை பல பெண்கள் திருமணம் செய்வது வீர்யத்தை அதிகாிக்க உதவாது. குறைக்கவே உதவக் கூடும்.

இதைப் போலவே, குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் மதம் தடை செய்கிறது என்று சொல்லப்படுவதிலும் எந்த உண்மையும் இல்லை. குரான் குடும்பக் கட்டுப்பாட்டை தடை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. கருக்கலைப்பைத்தான் தடை செய்கிறது. கருக்கலைப்பும்கூட உடல் நல அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. (43). மகக்ள் தொகை வளர்ச்சி என்பது பிறப்பு இறப்பு விகிதத்தையும் பொறுத்தது. பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைத்து வாழ்வது இந்துக்களை விட முஸ்லீம்களிடையே அதிகமாக இருக்கிறது. (45). இந்த உண்மைகள் எல்லாம் மத எதிர்ப்பு உச்சத்தில் இருக்கும் போது யார் கண்ணிலும் படாமலேயே போகிறது. இந்த அறிவியல் உண்மைகளை விளக்கி, ஆரோக்கியமான மனித உறவுகளை உருவாக்குவதில் மக்கள் தொகை அறிவியலாளர்களின் பங்கும், பொறுப்பும் மிக அதிகம்.

V. சுதந்திர இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் மதவாதமும்

மக்கள் தொகை கணக்கெடுக்கப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல்களின் துணையால் உருவான மதவாதமும், பிாித்தாளும் கொள்கை கடைபிடிக்கப்பட்டதும் சுதந்திர இந்தியாவில் அப்படியே தொடரப்பட்டது. 1991ஆம் ஆண்டு கணக்கெடுப்பு வரை எந்தெந்த இடங்களில் எந்தெந்த மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் என்ற விவரமே வெளியிடப்பட்டு வந்தது. கல்வி மற்றும் தொழில் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதன்பின் இந்து முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி குறித்த விளக்கங்கள் வெளியிடப்பட்டன. தன்க்களை விட முச்லீம்களின் எண்ணிக்கை பெருகி விடுமோ என்ற இந்துக்களின் பயம் சுதந்திர இந்தியாவிலும் தொடர்ந்தது. 46. இந்த அச்சம் நாட்டில் தேர்தல் நடந்த முறையில் வெளியானது. ஒரு பாமரனுக்கு இது ஒரு மிகப் பெரும் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் அறிவுஜீவிகள் இந்து முஸ்லீம்களிடையே மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் உள்ள வேறுபாடுகளை கல்வி, சமூக பொருளாதார வாய்ப்புகள் மறுக்கபட்டதன் அடிப்படையில் உருவானது என்று நினைக்கலாம்.48. என்றால், சுதந்திர இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புகளிலும் மதம் என்ற பிாிவு இருப்பதன் அவசியம் என்ன ? எந்த மதத்தினர் எந்ததைடங்களில், என்ன எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்ற விவரத்தை மட்டும் வெளியிடுவது ஏன் ? என்ற கேள்விகள் எழுகின்றன.

முதல் கேள்விக்கு வேண்டுமானால் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் இரண்டாவது கேள்விக்கு எந்த நியாயமான விளக்கமும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசனம், மதசார்பின்மை, ஜனநாயகம் இவற்றை அடிப்படை கொள்கையாகக் கொண்டது. அரசியல் சாசனத்தின் அடி நாதத்தை கருத்தில் கொண்டு சுதந்திரம் அடைந்த பின் 1951ம் ஆண்டு நடந்த முதல் மக்கல் தொகை கணக்கெடுப்பில் மகக்ளிடம் சாதி அல்லது இனம் குறித்த கேள்விகளைக் கேட்பதில்லை என்று இந்திய அரசு முடிவெடுத்தது. அரசியல் சாசனத்தில் இதுவரை வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சிறப்பு பிாிவினராக குறிப்பிடப்பட்டுள்ள பழங்குடியினரா, பழங்குடி மரபினரா என்று அறிவதற்காக மட்டும் கேள்வி கேட்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது (49). இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம் தவிர வேறு மதங்களைப் பின்பற்றுகிற யாரும் பிற்படுத்தப்பட்ட சாதியினராக கருதப்படக் கூடாது என்று சாசனம் சொல்கிறது. ஒருவர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரா என்று அறிய மதம் பற்றிய கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது என்று அது சுட்டிக் காட்டுகிறது.

எனவே சமூக நீதியைக் காட்டி மதம் குறித்த கேள்வி தேவை என்று சொல்லப்படுகிறது. ஆனால் மத குழுக்களுக்கு இதுவரை சமூக நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது. எனவே சுதந்திர இந்தியாவின் சமூக நீதி கொள்கை இந்து மதத்தைச் சேர்ந்த சாதி அடிப்படையில் அமைந்த குறுகிய பார்வையுடன் அமைந்துள்ளது. சமூக நீதியின் இலக்குகளை அடைய, திட்டமிட, அமல்படுத்த சமூக பொருளாதார தகவல்கள் கிடைப்பது மிகவும் அவசியமாகிறது. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை, மக்கள் தொகை பற்றிய சகல விவரங்களையும் திரட்டுவதால், மற்ற மாதிாி ஆய்வுகளுக்கு உள்ள குறைபாடுகள் இல்லாததால், அதற்கு ஒரு மாற்று இல்லாமல் போகிறது. பல்வேறு மதத்தினாின் சமூக பொருளாதார நிலை குறித்த விவரங்களை வெளியிடாமல், யார் எங்கே எந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்ற விவரத்தை மட்டும் வெளியிடுவதன்மூலம் வெள்ளையர் ஆட்சி மதவாதத்தை உருவாக்கி வளர்த்தெடுத்த அதே வேலையைத் தொடர்ந்து செய்வதாகிறது. மேலும் பார்சிகள், யூதர்கள் மற்றும் பழங்குடி மதங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவதையும் 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்போடு நிறுத்தி விட்டார்கள்.50. மகக்ள் தொகை கணக்கெடுப்பின் மூலம் இந்தியா, இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் புத்த மதத்தினர் என்ரு ஆறு முக்கிய மதங்கள் வாழும் நாடு என்று சித்தாிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு மதத்திற்குள்ளும் விதவிதமான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட வாழ்க்கை இருப்பதை மறைத்து விட்டார்கள்51.

எனவே, மத குழுக்களை ஒரே இயல்பு கொண்டவையாக இணைத்து தொகுக்கும் அதே போக்கு சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது. இந்த சிக்கலை இந்திய ஜனாதிபதியே எதிர்கொள்ள வேண்டி வந்தது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது இந்திய ஜனாதிபதி பிற்படுத்தப்பட்ட சாதியினராக இருந்தாலும் அந்த பிாிவின் கீழ் சேர்க்கப்பட முடியவில்லை. ஏனென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாாிகளுக்கு தரப்பட்ட பட்டியலின் படி பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பெயர்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது(52). ஜனாதிபதி கேரளத்து பட்டியலின்படி பிற்படுத்தப்பட்ட சாதியினர். ஆனால் தில்லியில் இல்லை. ஆனால் அவரை இந்துவாக கேரளத்திலும், தில்லியிலும் சேர்க்க முடிந்தது. இப்படி ஓாிடம் விட்டு வேறிடம் சென்று வாழும் பிற்படுத்தப்பட்ட சாதியினர், பழங்குடியினரை ஒருமயப்படுத்துவது நடக்கிறது. இந்த முறை , அரசியல் சாசனம் அவர்களுடைய சொந்த ஊாில் அவர்களுக்கு தரும் பலன்களை சென்று வாழும் இடங்களில் மறுக்கும் நிலைக்கு வழிவகுக்கிறது.

முடிவுரை :

காலனிய ஆட்சி அறிமுகப்படுத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை காலனிய பார்வையில் மத அடிப்படையிலான கொள்கைகளையும் பிாிவுகளையும் கொண்டு வந்தது. இந்தியாவில் பல்வேறு தரப்பு மக்களிடையே இருந்த வேறுபாடுகள் தொியாமல் , மத விழிப்புணர்வு இல்லாமலே இருந்தது. ஒன்றிணைந்த குழுக்கள் இருந்தன. இந்த வாழ்க்கை முரையின் இயல்வ்பு தொியாத காலனிய ஆட்சியின் பிாித்தாளும் கொள்கை, இந்த குழுக்களை தனித்தனி அடையாளம் கொண்டவைகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை மூலம் பிாித்தது. இது மதவாத அரசியலுக்கு அடிகோலியது. இதே முறையை சுதந்திர இந்தியாவும் பின்பற்றியது. 1991ம் ஆண்டு வரை நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்டதை விட மறைத்த விவரங்களே அதிகம். 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு எந்த மதத்தினர் எந்த இடத்தில் எவ்வளவு எண்ணிக்கையில் வாழ்கிறார்கள் என்ற விவரத்தோடு அவர்களது சமூக பொருளாதார விவரங்களையும் வெளியிடும் என்று தொிகிறது. இது, நாட்டில் தலைவிாித்தாடும் மதவாத சக்திகளை நாளடைவில் நிச்சயம் பலவீனப்படுத்தும்.

(நிறைவு பெற்றது)

Series Navigation