இந்த வாரம் இப்படி – டிசம்பர் 31, 2001

This entry is part of 21 in the series 20011229_Issue

மஞ்சுளா நவநீதன்


பைத்தியக் காரத்தனத்திற்கு பதில் : அதைவிடப் பைத்தியக்காரத்தனம்

கண்ணகி சிலை உடைத்தது பைத்தியக்காரத்தனம் என்றால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் தமிழகமெங்கும் 100 கண்ணகி சிலைகளை நிறுவச் ‘சான்றோர் பேரவை ‘ முடிவு செய்திருப்பது. தமக்குத்தாமே சான்றோர்களாய்ப் பெயர் சூட்டிக் கொண்ட இவர்களை அடியொட்டி நானும் ‘துணைக்கோள் பயணிகள் பேரவை ‘ ஒன்று ஆரம்பிக்கலாம் என்று யோசனை.

கண்ணகி சிலை அதே இடத்தில் நிறுவப்படவேண்டும் , இந்தப் பிரசினை இதோடு மூடப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாய் இருக்க முடியும்.

*********

போர் மேகங்கள் : இந்தியா பாகிஸ்தான்

போர் மூள்வது என்பது அரசாளுவோருக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். இதைச் சாக்கிட்டாவது மக்கள் தம் எதிர்ப்புணர்வை மூட்டை கட்டிப் போட்டுவிட்டு , அரசாங்கத்தின் ஆதரவாளர்களாய் மாறுவார்கள். விரைவில் வரும் உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கும் , போர் அச்சுறுத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நம்புவோம்.

பாகிஸ்தானுக்குப் போர் என்பது மக்களை மட்டுமல்ல, ராணுவத்தையும் திசை திருப்ப உதவும். ஆஃப்கானிஸ்தானில் தாலிபனை உருவாக்கிக் கட்டுப்படுத்திய பாகிஸ்தான் ராணுவம் இப்போது மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளது. பாகிஸ்தானே முதன்மையானது என்று முஷரஃப் அறிவித்து அவருடைய அமெரிக்க ஆதரவிற்கு நியாயம் தேட முயன்றாலும், முஸ்லீம் தீவிரத்தலைவர்கள் இதற்கு உடன்படவில்லை. இது மட்டுமல்லாமல் , ஆஃப்கானிஸ்தானிலிருந்து வரும் பாகிஸ்தான்-தாலிபன் ஆட்களுக்கு பாகிஸ்தானில் இடமளிக்க, ராணுவத்தை இந்திய எல்லைக்கு அனுப்புவது என்பது சரியான காரணமாய் இருக்கும்.

ஏற்கனவே அமெரிக்கா செய்தது போல , பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா முன்வர வேண்டும். இது பெரும்போர் ஏற்படுவதைத் தவிர்க்கும்.

***********

ஜெயலலிதா : இன்னொரு வழக்கில் விடுதலை

நிலக்கரி இறக்குமதி வழக்கில் அரசு சரியாகக் குற்றத்தை நிரூபணம் செய்யவில்லை என்று ஜெயலலிதா விடுதலை பெற்றிருக்கிறார். இது ஜெயலலிதாவிற்கு மிகத் தெம்பு தரும் ஒரு விஷயம். இது எதிர்பார்த்ததே. அரசு வழக்கறிஞர், ஜெயலலிதா மீது குற்றச்சாட்டை நிருபிக்கப் பாடுபடுவார் என்று எதிர்பார்க்க முடியுமா ?

லோக் பால், லோக் ஆயுக்த சட்டம் இயற்றி தனிப்பட்ட , சுதந்திரமான ஓர் அமைப்பின் கீழ் பொதுவாழ்வில் பதவி வகிப்பவர்கள் மீது போடப்படும் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்ற விவாதம் பல ஆண்டுகளாய் நடந்து வருகிறது. ஆனால் இதன் கதி என்னாயிற்று என்று தெரியவில்லை.

**********

Series Navigation