இந்த வாரம் இப்படி : டிசம்பர் 21 2001

This entry is part of 25 in the series 20011222_Issue

மஞ்சுளா நவநீதன்


கண்ணகி சிலை உடைப்பு

சில விஷயங்கள் நடக்கும் வரை அப்படி நடக்கலாம் என்று யாரும் சொன்னால் கூட நம்பமுடியாது. கண்ணகி சிலை திட்டமிட்டு அகற்றப் பட்டிருப்பதாய்த் தான் இது வரை வந்திருக்கும் எல்லா செய்திகளும் உணர்த்துகின்றன. சோதிடர் சொன்னார் என்பதற்காக ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் இது அகற்றப் பட்டிருக்கிறது என்பது வதந்தி போல பரவி வருகிறது என்றாலும் நம்பத் தகுந்த வதந்தி. தன் பெயர் ஆங்கிலத்தில் எப்படி எழுதப் படவேண்டும் என்று மாற்றியமைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. சோதிடர்களிடமும், குறி சொல்பவர்களிடமும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்று பல வருடங்கள் முன்பே அவர் மாநிலங்களவை உறுப்பினராய் இருந்த போது குஷ்வந்த் சிங் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதன் எல்லை பொதுச் சொத்தை சேதப்படுத்தும் அளவிற்குப் போகும் என்பது எல்லோரையும் எரிச்சல் படுத்த வேண்டும்.

கண்ணகி என்ற கதாபாத்திரம் ஒருவிதத்தில் தமிழ்ப் பெண்களின் குறியீடு என்றும் சொல்லலாம். இன்று பெண்ணியக்குரலாகவும், அநீதிக்கு எதிரான குரலாகவும் கண்ணகியின் கதை இனம் காணப் படுகிறது.. அரசனுக்கு எதிரான ஒரு குரலின் பதிவு என்ற முறையிலும் கூட பல விதங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்தது சிலப்பதிகாரமும் அதன் நாயகி கண்ணகியும்.

சிலை என்ற முறையில் கண்ணகியின் சிலை சிறப்பான வடிப்பு என்று கூற முடியாது. சற்றே விஜயகுமாரியை நினைவுபடுத்தும் சினிமாத்தனம் அந்தச் சிலையில் உண்டு என்பது ஓர் உறுத்தல். எனினும் தமிழ்க் கலாசாரத்தின் ஓர் அடையாளம் என்ற அளவில் சிலை நிறுவுதல் செய்யப் பட்டது. அது கருணாநிதியையும், அவர் எழுதிய பூம்புகாரையும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதும் ஒரு வேளை இது இடிக்கப்படக் காரணமாய் இருக்கலாம். அதே இடத்தில் சிலை நிறுவப்படவேண்டும் என்று போராட்டம் நடக்கவிருப்பதாய் அறிகிறேன்.

இந்தச் சிலை விவகாரம் கடும் விலைவாசி உயர்வு, அரசு ஊழியர்களுக்கு வேலைப் பாதுகாப்பு பற்றிய அச்சம் இவற்றையெல்லாம் பின் தள்ளிவிட்டதைப் பார்க்கிறோம். ஒரு வேளை இதுவும் ஜெயலலிதாவின் ஒரு நோக்கமோ என்னவோ ? உக்கிரம் கொண்டுள்ள பெண்சிலை வாஸ்துப்படி சரியல்ல என்றால், கிராமங்களில் கோவில்களில் உள்ள துர்க்கையம்மன், மாரியம்மன் கோவில் சிலைகளை ஜெயலலிதா என்ன செய்வார் ?

***********

ஜெயலலிதாவிற்கு எதிராக யாரை நிறுத்துவது ?

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட தயாராகிவருகிறார். எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தலாமா என்று யோசித்து வருகின்றன.

வை கோபால்சாமி, ப சிதம்பரம், கோவிந்தவாசன் போன்றோர் பெயர்களை நான் சிபாரிசு செய்வேன். ஆனால் ஒன்றுபட்ட ஒரு அணி உருவாகும் என்றால், தி மு க தவிர்த்த மற்ற கட்சி வேட்பாளருக்கு தி மு க ஆதரவு அ:ளிக்குமா என்பது சந்தேகமே. அதில்லாமல், நிச்சயம் சாதி பற்றியெல்லாம் யோசிப்பார்கள். ஆனால் உண்மையில் ஜெயலலிதாவின் பணபலத்திற்கும், ஆள்பலத்திற்கும் எதிராக நிஜமான ஒர் ஆள் நிறுத்தப்பட வேண்டும் என்றால் நான் முன்னே தந்த பட்டியல் தான் சரி. யார் காதிலாவது விழுகிறதா ?

**********

நாடாளுமன்றத் தாக்குதல் : ஏன் இன்னும் தயக்கம் ?

பாகிஸ்தான் இந்தியாவிடம் நிரூபணம் கேட்கிறது. தாவூத் இப்ராகிம் என்ற பயங்கரவாதி எப்படி பாகிஸ்தானில் வெளிப்படையாகவே ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறான் என்று பாகிஸ்தான் பத்திரிகைகளே செய்திகள் வெளியிட்டுள்ளன.

செப்டம்பர்11 தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு உதவி புரிவதற்கு முன்பு, பாகிஸ்தான் நிரூபணம் கேட்டதா ? இப்போது தாலிபன் பிடியிலிருந்து மக்கள் விடுவிக்கப் பட்டபின்பு தெருக்களில் இசை ஒலிக்கிறது. மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் கிட்டத்தட்ட தாலிபன் ஆட்சியின் கீழ் இருந்த ஆஃப்கானிஸ்தான் போன்றது தான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒழுங்கான தேர்தல்கள் கூட நடந்ததில்லை. பாகிஸ்தாவில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழிப்பதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதும் இந்திய அரசின் கடமை. முன்பு பங்களா தேஷில் இருந்தது போலவே காஷ்மீரி மொழிக்கு உரிய இடம் , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கிடையாது. இந்த விடுதலைப் போர் நடந்தால் நிச்சயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவை வாழ்த்துவார்கள்.

இப்படி இந்தியாவுடன் பிரசினையை ஏற்படுத்திவிட்டு சீனாவிற்கு முஷரஃப் போவதும் தற்செயலானதல்ல. ஆஃப்கானிஸ்தானின் முக்கிய தாலிபன் தலைவர்களை ஏற்கனவே தப்ப விட்டாயிற்று. அதில்லாமல், பெரும்பாலான தாலிபன் ஆட்கள் தப்பி பாகிஸ்தானுக்கு வருகிறார்கள். ஆஃப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானை வெறுக்கிறார்கள். தாலிபன் அரசின் அத்தனை அலங்கோலங்களுக்கும் பாகிஸ்தான் காரணம் என்று அவர்கள் அறிவார்கள். இப்படி தப்பி வந்த பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் தள்ளத்தான் பாகிஸ்தான் முயற்சி செய்யும்.. இனியும் சரியானபடி இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பிரசினைகளும், வெடிகுண்டுகளும் தொடரத்தான் செய்யும்.

********

Series Navigation