இந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

சின்னக்கருப்பன்.


இந்த செய்தியை என் நண்பனிடம் சொன்னபோது, அவன், ‘பாவம். யாரோ போலீஸ்காரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். எவனாவது ஒரு எம்பி செத்துபோயிருந்தால் பரவாயில்லை ‘ என்றான்.

நமது சினிமாக்களிலும், நமது நாவல்களிலும், நமது நடைமுறைப் பேச்சுவார்த்தைகளிலும், துக்ளக் போன்ற பத்திரிக்கைகளிலும் அரசியல்வாதிகள் கீழ்த்தரமானவர்களாக காண்பிக்கப்படுவதும், அரசியல்வாதிகள் என்றாலே ஊழல் என்று பொருள் என்றும் ஒரு பிம்பம் வளர்த்துவிடப்பட்டிருக்கிறது. அதனை நிரூபிப்பது போல நமது அரசியல் வாதிகளில் சிலர் நன்றாகவே நடந்து கொள்கிறார்கள். லல்லுபிரசாத் யாதவ் போன்றவர்கள் அடிக்கும் கூத்தும், ஜெயலலிதா நடத்தும் திருமணங்களும் இந்த கருத்துக்களை பலப்படுத்துகின்றன.

ஆனால் நமது ஜனநாயக அமைப்பு அரசியல்வாதிகளுக்கு மேம்பட்டது. நமது அரசியல் அமைப்பும் நமது சுதந்திர ஜனநாயக அமைப்பும் நமக்கு ஒரு பொருட்டாகத் தெரியாததன் காரணம், அதனை நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பழக்கப்பட்டுக்கொண்டதுதான். அதன் பெருமையை நாம் உணர்ந்து கொள்வதில்லை. எனது துருக்கிய நண்பர் ஒருமுறை அமெரிக்காவில் பேசிக்கொண்டிருந்தபோது, அமெரிக்காவில் இருக்கும் கருத்து சுதந்திரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் நான் கவனித்தேன். அந்தக் கருத்து சுதந்திரம் எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்பதை. ஏனெனில் நான் வளர்ந்த இந்தியாவில் இருக்கும் அளவு கடந்த கருத்து சுதந்திரத்தை கணக்கில் எடுத்தால் அமெரிக்காவில் நான் இறுக்கமாக உணர்கிறேன் என்பதை. அதை என் துருக்கிய நண்பரிடன் சொன்னபோது, அது ஆச்சரியமில்லை என்றார். துருக்கியிலிருந்து வியத்நாம் வரைக்கும் இருக்கும் நாடுகளில் ஒரே ஒரு நாடு மட்டுமே சுதந்திர ஜனநாயக நாடு, அது இந்தியாதான் என்றார்.

அது அருகாமையில் இருக்கும் பாகிஸ்தான் போன்ற ராணுவ சர்வாதிகாரங்களுக்குப் பிடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் என்ன ? அந்த கடுப்பு பாராளுமன்றத்தில் வெடிக்கிறது. இத்தனைக்கும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக போடோ சட்டத்தை ஒப்புக்கொள்ள மறுத்து பேசிக்கொண்டிருந்தபோது வெடிக்கிறது. உடனே நம் ‘மதச்சார்பற்ற ‘ பத்திரிக்கைகளும், ‘அமைதி விரும்பிகளும் ‘ இந்த காரியத்தை செய்தது பிஜேபிதான் என்று பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த வெடிப்பு நடப்பதற்கு 18 நேரத்துக்கு முன்பு காஷ்மீர ஹரியத் மாநாட்டு கட்சியினர் பத்திரிக்கை நிருபர்களிடம் பேசியபோது இன்னும் 12 மணி நேரத்துக்குள் உங்களுக்கு ஒரு செய்தி கிடைக்கும் அது காஷ்மீரப் பிரச்னையின் தீர்வாக கிடைக்கும் என்று பேசியது ஆச்சரியத்துக்குரியது. காஷ்மீரப் பயங்கரவாதிகளுக்கும் ஹரியத் கட்சியினருக்கும் கோடிகோடியாக பாகிஸ்தான் கொடுக்கும் ஹவாலா பணம் சென்றவாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக முக்கிய காஷ்மீர வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டார்கள். பயங்கரவாதிகள் குறிப்பாக பிரதமரை குறிவைத்து ஓடியதும் ஆச்சரியத்துக்குரியது. பிரதமரைக் கொல்வதன் மூலம் காஷ்மீரப் பிரச்னையை தீர்த்துவிடலாம் என்று காஷ்மீர ஹரியத் கட்சியினர் நினைப்பதும் ஆச்சரியத்துக்குரியது.

இது காரணமாக எல்லாத் தரப்பினரிடமிருந்தும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என்ற அறைகூவல் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இது ஆச்சரியக்குரியதல்ல. பழி வாங்கும் குணம் மனிதனின் மனத்தில் ஊறியது. அந்த பழிவாங்கும் குணத்தை களைய வேண்டும் என்று காந்தி சொன்னது இப்போது யார் காதிலும் விழாது. இருப்பினும் நான் அதனையே கூறுகிறேன்.

சரி நாம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கிறோம் என்று கொள்வோம். என்ன ஆகும் ? பாகிஸ்தான் நம் மீது போர் தொடுக்கும். இறப்பு இரு பக்கமும் பரந்த அளவில் இருக்கும். பாகிஸ்தான் தன் அணுகுண்டுகளை பிரயோகம் செய்ய நினைக்கும். போர் முடிவுக்கு வருமா அல்லது இந்தியாவும் பாகிஸ்தானும் முடிவை அடையுமா ?

ரஷ்யாவும் அமெரிக்காவும் அணுகுண்டு சேகரித்தது அதனை பிரயோகிக்க அல்ல. அதனை காண்பித்து பயமுறுத்த. ஆனால், பாகிஸ்தானை அப்படி நினைக்க முடியுமா ? பின் லாடனை வளர்த்து விட்டு தாலிபானை உருவாக்கிய பாகிஸ்தானிய ராணுவம் என்ன செய்யாது ?

சென்ற கார்கில் போரின் போது இந்தியா போர்நிறுத்தக் கோட்டை தாண்டாதது இன்னும் விவாதத்துக்குரியதாக இருக்கிறது. பாகிஸ்தான் கைப்பற்றி இருக்கும் காஷ்மீர் இந்திய எல்லைக்கோட்டுக்குள் உள்ளது என்றால், ஏன் இந்தியா அந்த எல்லைக்கோடு வரை தன் பாத்யதையை நிறுவவில்லை ? ஏன் போர்நிறுத்தக் கோட்டுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்தது ?

போர் விமானங்கள் சாதாரண மக்களின் மீது குண்டு மழை பொழிவது அங்கிருக்கும் மக்களுக்கு இந்தியாவின் மீது வெறுப்பு வளர்வதற்கே உதவும். எனவே இந்தியா எந்தக் காரணம் கொண்டும் எல்லைக்கோடு தாண்டி பாகிஸ்தானிய குடிமக்களை கொல்லக்கூடாது என்பது என் கொள்கை. பாகிஸ்தானிய போர் வீரர்களும் பாகிஸ்தானிய மக்களிடமிருந்தே வருகிறார்கள். எனவே பாகிஸ்தானிய போர் வீரர்களைக் கொல்வது கூட எனக்கு உடன் பாடில்லை.

எல்லோரும் சொல்வது போல, பிரச்னை காஷ்மீர் அல்ல. பிரச்னை பாகிஸ்தான். காஷ்மீர் பிரச்னை இனிமேல் பாகிஸ்தான் பிரச்னை என்றே பேசப்பட வேண்டும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டுமெனில் இந்தியா அரசியல்வாதிகள் பாகிஸ்தான் பிரச்னையை தீர்க்க வேண்டும். பாகிஸ்தான் பிரச்னையை தீர்ப்பதற்கு ஒரே வழி பேச்சு வார்த்தைதான். அந்தப்பேச்சுவார்த்தையின் அடிப்படை, இந்தியாவில் ஒரு அங்கமாக பாகிஸ்தான் இணைவதுதான் இருக்க வேண்டும்.

இன்றைய பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களுக்கு பணமும் இடமும் கொடுத்து அவர்கள் பஞ்சாப், சிந்து, பலுச்சிஸ்தான், பக்தூனிஸ்தான் போன்ற மாநிலங்களில் போலீஸாக அங்கீகாரம் செய்யப்பட வேண்டும். இந்த மாநிலங்கள் இந்தியாவின் முழு மானிலங்களாக இணைய வேண்டும். இந்த மானிலங்கள் விரும்பினால் அவைகளுக்கு சில அளவு சுயாட்சியும் வழங்கப்படலாம். இந்த மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் முழு சுதந்திரத்துடன் இந்தியப் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும். இதுவே பாகிஸ்தான் பிரச்னைக்கு தீர்வு. இதை விட்டு வேறெந்த தீர்வும் பாகிஸ்தான் பிரச்னையை தீர்க்காது. இதை விட்டு காஷ்மீர் பிரச்னை என்று பேசிக்கொண்டிருந்தால், காஷ்மீர் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டதும். அது டெல்லிப் பிரச்னையாகவோ, அல்லது ராஜஸ்தான் பிரச்னையாகவோ அல்லது குஜராத் பிரச்னையாகவோ மறு உரு எடுக்கும். மீண்டும் பாராளுமன்றத்தில் தாக்குதல்கள் நடக்கும்.

பாகிஸ்தான் பிரச்னையை தீர்ப்பது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. அதற்கு முழுக்க முழுக்க முஸ்லீம் பெரும்பான்மை உள்ள பிரதேசங்களை இந்திய மாநிலங்களாக அங்கீகரிப்பதற்கு காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் தான் தைரியம் வேண்டும். அந்த தைரியம் இந்தக் கட்சிகளுக்கு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பஞ்சாபியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாகிஸ்தானில், மற்ற சிந்தியர்கள். பலூச்சிகள், பட்டாணிகள் அனைவரும் நசுக்கப்படுவதாக உணர்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலை இந்தியாவில் இல்லை. கன்னடர்களும், தமிழர்களும், தெலுங்கர்களும் இன்று மற்ற எல்லா மாநிலங்களை விட தொழில்நுட்பத்திலும் அறிவியலிலும் செல்வத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள். இதைப் பார்த்து அவசர அவசரமாக மற்ற மாநிலத்தினர் முன்னேற வேண்டுமென்று முனைந்து வருகிறார்கள். இந்த போட்டியால், ஜாதி மத மொழி மனமாச்சர்யங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இன்று எல்லோரும் படிக்கவும், தொழில் முனைவர்களாக ஆகவும் முனைந்து வருகிறார்கள். இந்த காரணங்களால், மொழி, மதம் ஜாதி கடந்த திருமணங்கள் இன்று நகரங்களில் பரவலாக ஆகிக்கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்தியாவின் அரசியல் சட்டங்களும், அந்தச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்ற பரந்த உணர்வும், ஜனநாயகமும், சுதந்திர கருத்து பறிமாற்றமுமே என்றால் அது மிகையாகாது.

ஏற்கெனவே பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் அவர்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனசீர் புட்டோவும் இந்திய ஆதரவாளர்கள் என்பதால் ராணுவத்தால் துரத்தப்பட்டிருக்கிறார்கள். இது இவர்களை இன்னமும் உறுதியான இந்திய ஆதரவாளர்களாக ஆக்கி விட்டிருக்கிறது. அடுத்த பெரிய கட்சியான மொஹாஜி குவாமி மூவ்மெண்டின் தலைவரான அல்டாஃப் ஹ்உசேன் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையே தவறான விஷயம் என்று கூட பேசி விட்டார். மக்கள் தலைவர்களான இவர்களை நாடு கடத்திவிட்டு ராணுவத்தின் சொல்படி நடக்கும் அரசியல் கட்சித்தலைவர்களை உருவாக்க ராணுவம் பல வருடங்களாக முனைந்து வந்திருக்கிறது. இருந்தும் அதில் தோல்வியையே கண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், புட்டோவும் நவாஸ் ஷெரீப்பும் கூட ராணுவத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்கள்தான். ஒரு கால கட்டத்துக்குப் பின்னர் அவர்கள் உண்மையிலேயே மக்கள் தலைவர்களாக ஆன பின்னர் அவர்கள் இந்திய ஆதரவாளர்களாக ஆகிவிடுவது பாகிஸ்தானிய பொதுமக்கள் இந்தியாவுடன் நட்பையே விரும்புகிறார்கள் என்பதையே குறிப்பிடுகிறது.

இந்த பாராளுமன்றத்தாக்குதலுக்கு பதிலாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து இந்த இந்திய ஆதரவுப் பொதுமக்களை காயம்படுத்தக் கூடாது என்பதே என் கோரிக்கை.

இந்தியாவின் வெளிப்படையான கோரிக்கையாக இந்தியா பாகிஸ்தான் இணைப்பு முன்னுக்கு வைக்கப்பட வேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும். இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு அறிகுறியாக, கொலைக்குற்றம் செய்யாத, ஆனால் காஷ்மீர் போராளிகளாக அடையாளம் காணப்பட்ட காஷ்மீர் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

பெனசீர் புட்டோவையும், நவாஸ் ஷெரீப்பையும், அல்டாஃப் ஹஉசேனையும், எல்லைக்காந்தியின் பேரனான வாலி கானையும் இந்தியா அழைத்து அவர்களின் அரசியல் கட்சிகளுக்கு இந்தியப் பாராளுமன்றத்தில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அவர்களால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து கொடுத்து பாராளுமன்றத்தில் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறு தாலிபான் அரசாங்கத்தை ஆஃப்கானிஸ்தான அரசாங்கமாக உலகமும் இந்தியாவும் ஒப்புக்கொள்ளவில்லையோ, அதுபோல, இன்றைய ராணுவ ஆட்சி இருக்கும் அரசாங்கத்தையும் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ அரசாங்கமாக ஒப்புக்கொள்வதை நிறுத்த வேண்டும். இப்போது கொடுத்திருக்கும் அங்கீகாரத்தை நிராகரித்து, ஜனநாயக ஆட்சி பாகிஸ்தானில் வரும் வரை, எல்லா அரசாங்க உறவுகளையும் முறித்துக்கொள்ளவேண்டும். நவாஸ் ஷெரீப் அரசாங்கமே பாகிஸ்தானின் அரசாங்கம் என அறிவித்து நவாஸ் ஷெரீப் அரசாங்கத்துக்கு, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானின் தூதராலயத்தைக் கொடுக்க வேண்டும். அதே போலச் செய்ய உலக நாடுகளை வற்புறுத்த வேண்டும்.

இதுவே பாகிஸ்தான் பிரச்னையை தீர்க்கும் வழி. திருவள்ளுவர் சொன்னது போல இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்