இந்த வாரம் இப்படி – நவம்பர் 19 2001

This entry is part of 20 in the series 20011118_Issue

மஞ்சுளா நவநீதன்


முரசொலி மாறனுக்கு ஒரு வெற்றி

உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் முரசொலி மாறனுக்கு ஒரு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. காப்புரிமை – குறிப்பாக மருந்துகளின் காப்புரிமைச் சட்டங்களை உபயோகித்து , நாட்டின் மருந்து உற்பத்தி கட்டுப் படுத்தப் படுகிற ஒரு நிலைமை உருவாகியிருந்தது. இப்போது கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தினால், தனிப்பட்ட நாடுகள் சமூகத்தினர் நலம் கருதி , காப்புரிமைச் சட்டத்தைத் தளர்த்தலாம் என்று கூறப்பட்டுள்ள்து. இது வளரும் நாடுகளுக்கு மிகப் பெரிய வெற்றி. இதனை உபயோகித்து மலிவு விலையில் மருந்துகள் தயார் செய்வது மட்டுமில்லாமல், மருந்தின் ஆய்விலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதே போல் உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகள் வளரும் நாடுகளின் ஆராய்ச்சியை வளர்க்கும் விதத்தில் அமைய வேண்டும். மலிவு விலையில் பொருட்கள் கிடைக்க வழி செய்யும் அதே சமயம் உள்ளூர் வர்த்தக நிறுவனங்களின் இருப்பையும், வளர்ச்சியையும் முன்னிற்கச் செய்ய வேண்டும்.

*******

போக்குவரத்து ஊழியர் போராட்டம் : தனியார் மயமாக்கலுக்கு முன்னோடியா ?

போக்குவரத்து ஊழியர் போராட்டம் தீர்வதில் பன்னீர் செல்வம் அரசாங்கத்திற்கு அவ்வளவு உற்சாகமில்லை என்று தெரிய வருகிறது. இதையே சாக்காக வைத்து , மக்களிடம் போக்குவரத்து ஊழியர்கள் மீது வெறுப்பை உருவாக்கி விட்டால் மெள்ள மெள்ள போக்குவரத்துத்துறையை முழுவதும் தனியார் வசம் ஒப்படைத்து விடலாம் என்று ஒரு எண்ணம் அரசிற்கு இருக்கக் கூடும் என்று தெரிகிறது. என்ன பேரம் நடக்கிறது என்று புரியவில்லை. ‘இந்து ‘ போன்ற நாளிதழ்களில் ஏற்கனவே தனியார் மயமாக்கல் ஒரு தீர்வு என்பதாய் கடிதங்கள் வர ஆரம்பித்து விட்டன.

தமிழ் நாட்டின் போக்குவரத்துத் துறை பெருமளவு சிறப்பான வளர்ச்சியுற்ற ஒரு துறை. அங்கு பிரசினைகள் இல்லாமல் இல்லை. ஆனால் மக்களின் முக்கிய ஒரு தேவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல், சில தடங்கள் லாபகரமாகவும் இயங்குகின்றன. தனியார் போக்குவரத்து ஊழியர்களும் ஒரளவு நல்ல சம்பளம் பெறவும் இந்தப் போட்டி உதவுகிறது.

இந்தப் போராட்டத்தில் மற்ற துறையினரும் ஈடுபடவிருக்கிறார்கள் என்று செய்திக் குறிப்புகள் சொல்கின்றன. அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு மனம் திரும்ப வேண்டும்.

***

ஆஃகானிஸ்தானில் ஒரு பாடல்

சுதந்திர கீதம் மீண்டும் ஆஃப்கானிஸ்தானில் இசைக்கப் படுகிறது. பெண்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள். தொலைக்காட்சி மீண்டும் ஒளிர்கிறது. முகத்திரைகள் விலகுகின்றன. பெண்கள் பள்ளிகள் திறக்கப் படவிருக்கின்றன. வடக்குக் கூட்டணியை ஆதரிக்கும் ரஷ்யாவும் இந்தியாவும் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். எந்த மதமும் கோட்பாடும் மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கிற போது அதை முறியடித்து சுதந்திரக் கொடியை ஏற்றுவது ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.

*****

ஆஃகானிஸ்தானில் இனி என்ன ?

ஆஃப்கானிஸ்தானில் இனி என்ன என்ற கேள்விக்கு உடனடியாய்ப் பதில் இல்லை. இது முழுக்க முழுக்க அமெரிக்காவின் வெற்றி என்று கொண்டாட முடியாத அளவிற்கு, ரஷ்ய இந்திய ஆதரவு செயல் பட்டிருக்கிறது. வடக்குக் கூட்டணி மற்ற குழுக்களையும் சேர்த்து ஆட்சி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. பஷ்டூன் மொழி பேசும் மக்களைத் தவிர மற்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று வடக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. மதவெறி கொண்ட கூலிப்படைகள் ஆஃப்கானிஸ்தான் மக்களை மிரட்டி அடிமைப் படுத்தி வைத்திருந்தன. பாகிஸ்தானி உருது பேசுவோரும், அரேபியா , சூடான் போன்ற நாடுகளிலிருந்து அராபிய மொழி பேசுவோரும் இங்கே புகுந்து ஆக்கிரமிப்புச் செலுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் தண்டனை பெற வேண்டியது அவசியம்.

தாலிபனின் மிதவாதிகளுக்கு அரசில் இடம் அளித்து அதன் மூலம் ஆஃகானிஸ்தான் மீது தன் பிடியைத் தொடர்ந்து வைத்திருக்க பாகிஸ்தான் விழைகிறது. இதற்கு வடக்குக் கூட்டணி ஒப்புக் கொள்ளப் போவதில்லை.

வடக்குக் கூட்டணி தலைவர் ரப்பானியை வாழ்த்தி (மீண்டும்) வரவேற்போம்.

ஆஃப்கானிஸ்தான் போலவே காஷ்மீரிலும் கூலிப்படைகள் தான் எந்த ஒரு இணக்கமும் ஏற்படாதவாறு வன்முறைச் செயலில் ஈடுபட்டு வருகின்றன. 10 ராணுவத்தினர் இந்த பயங்கர வாதிகளால் கொல்லப் பட்டிருக்கின்றனர். இந்த பயங்கரவாதம் எப்போது முடிவு பெறும் ?

****

ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றபிறகு உடனடியாக வாஜ்பாய் ரஷ்யா சென்றதும், அங்கு அவசர அவசரமாக சில ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டதும் நடந்துள்ளது. ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு எப்போதும் சமநிலையில் இருந்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்தியா போரிட நேர்ந்த போதெல்லாம், அமெரிக்கா இந்தியாவிற்கு உதவி வந்திருக்கிறது.

இப்போது இந்தப் பயணம் மற்ற மேனாடுகளுக்கு , இன்னமும் ரஷ்யா தான் இந்தியாவின் நம்பத்தகுந்த நண்பன் என்று நிரூபிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்று நினைக்கிறேன். பாகிஸ்தானுடன் கொண்டுள்ள உறவை அமெரிக்காவோ, இங்கிலாந்தோ அவ்வளவு சீக்கிரம் முறித்துக் கொள்ளாது என்ற உண்மையை உணர்ந்தவுடன் எமக்கும் ஒரு நண்பன் உண்டு என்ற பிரகடனம் இது.

ஆனால் இந்தப் பிரகடனத்திற்கு கொடுக்கப் பட்ட விலை அதிகமோ என்று தோன்றுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு 2 பில்லியன் டாலர் போல இந்தியா ரஷ்யாவிற்குத் தரவிருக்கிறது. அணுச் சேதங்களை ரஷ்யாவே திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு நிபந்தனையும் இதில் உள்ளது. ஆனால் தொழில் நுட்ப அளவில் ரஷ்யா சற்றுப் பின்தங்கித் தான் உள்ளது. இந்தியாவே தனித்த முறையில் இந்த மின் நிலையத்தினை நிறுவக்கூடிய திறன் நம்மிடையே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

************

Series Navigation