• Home »
  • அரசியலும் சமூகமும் »
  • இந்த வாரம் இப்படி – நவம்பர் 4 ,2001 (வளைக்கரங்கள், ப.த.ச, மூன்றாமணி, முட்டை, பெளத்தம், கிறுஸ்தவர்கள், மின்னஞ்சல் மிரட்டல்)

இந்த வாரம் இப்படி – நவம்பர் 4 ,2001 (வளைக்கரங்கள், ப.த.ச, மூன்றாமணி, முட்டை, பெளத்தம், கிறுஸ்தவர்கள், மின்னஞ்சல் மிரட்டல்)

This entry is part of 16 in the series 20011104_Issue

மஞ்சுளா நவநீதன்


வளைக்கரமும் பர்வேஸ் முஷரஃபும்

‘நான் ஒன்றும் வளையல் போட்டுக் கொண்டிருக்கவில்லை ‘ என்று தெரிவிக்கிறார் பாகிஸ்தானின் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப். இந்தியா படையெடுக்குமானால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கிற வீராவேசமான பேச்சில் ஒரு வாசகம் இது. பெண்களை இழிவு படுத்துகிற வாசகங்கள் எல்லா மொழிகளிலும் , எல்லாச் சந்தர்ப்பங்களைலும் புழங்கக் காண்கிறோம். ஆணாதிக்க, தன்னுடைய வீரத்தை காட்ட, தான் கோழையில்லை என்பதைத் தெரிவிக்க, நான் என்ன பெட்டைப் பயலா ? என்றும், நான் புடவை (மேல் நாடு என்றால் பாவாடை) அணிவதில்லை என்றும் தெரிவிப்பதும் வழக்கமாகி இருக்கிறது. இது எவ்வளவு அசிங்கமான சொற்பழக்கம் என்று யாரும் உணர்வதாய்த் தெரியவில்லை. இந்திரா காந்தி என்ற பெண் தலைவியாக இருக்கும் போது பர்வேஸ் முஷரஃப் ஒரு சாதாரண அலுவலராய் இருந்த சமயம், பாகிஸ்தான் படைகள் இந்திரா காந்தியின் படைகள் முன்பு சரணாகதியடைந்ததை ஒரு பெண்மணி நினைவு படுத்தியிருக்கிறார்.

பெண்கள் இது மாதிரி இன்னொரு சொலவடைகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உதாரணமாய் என்னை என்ன முட்டாள் என்றா நினைத்துக் கொண்டாய் என்று கேட்பதற்குப் பதில் எனக்கு என்ன மீசையா இருக்கிறது என்று கேட்கலாம். நான் காட்டு மிராண்டியா என்று கேட்பதற்குப் பதில் எனக்கு என்ன தாடியா தொங்குகிறது என்று கேட்கலாம். இது போன்ற இன்ன பிற வாசகங்களை வழக்கிற்குக் கொண்டு வந்தால், – பெண்களுக்குக் கற்பனை வளம் இல்லையா என்ன ?– முஷரஃப் போன்ற அறிவு கெட்ட ஆண்களுக்குப் புத்தி வரும்

*********

பயங்கரவாதத் தடைச் சட்டம்

தடா மதிரி , மிசா மாதிரி இதுவும் எந்தப் பயனையும் அளிக்காது. அதில்லாமல், சாதாரண மக்களின் மீதான சந்தேகக் கேஸ்களும், அரசியல் எதிரிகளைப் பழி வாங்கும் போக்கில் ஓர் அம்சமாய்த் தான் இது செயல் படும்.

தடா , மிசாவில் இல்லாத இன்னொரு அம்சம் இதில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பத்திரிகையாளர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் பகுதி அது. பயங்கரவாதிகளுடன் போலிஸ் மற்றும் அரசியல்வாதிகளுக்குள்ள ஒரே தொடர்பு பத்திரிகையாளர்கள் தான் என்றாகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்களை நம்பி அவர்கள் தம் கருத்துகளை வெளியுலகிற்கு எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகள் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இந்த தொடர்பும் அறுந்து போகுமெனில், பத்திரிகையாளர்கள் இவர்களுடன் பேசவும் முயலமாட்டார்கள். இதனால் அரசிற்குத் தான் நட்டம். பத்திரிகைத் துறையினருக்கு செய்தி சேகரிப்பின் போது என்ன விதமாய்ச் செயல்பட வேண்டும் என்று அரசு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாகாது.

**********

தமிழ் நாட்டில் மூன்றாவது அணி

தமிழ் நாட்டில் மூன்றாவது அணி உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளில் வென்றிருப்பதே மானெரும் சாதனை என்று சொல்ல வேண்டும். மூன்றாவ்து அணி உருவாக நேரும்போதெல்லாம், காங்கிரஸ் போன்ற அன்றைய பெருங்கட்சிகள் அகில இந்திய அரசியல் போக்குகளிற்காக தமிழ் நாட்டின் அரசியலைப் பலி கொடுத்தது உண்மை. சிதம்பரம், கிருஷ்ண சாமி, ஈ வி கே எஸ் இளங்கோவன் போன்றோர் இணைந்து அமைத்திருக்கும் இந்த அணி திருமா வளவன் போன்றோரையும் உள்ளிட்டு உருவாக்கப் படவேண்டும். ம தி மு க-வும் , பா ம க வும் மூன்றாவது அணியில் சேருமெனில் இந்த அணி மிக வலுவாகச் செயல் படவும் வாய்ப்புண்டு.கொள்கையளவில் பா ம கவிற்கும், ம தி முக விற்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது விளக்கினால் தேவலை.

இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு வெளியே தமிழ் நாட்டின் அதிகாரப் பகிர்வு நடக்க மூன்றாவது அணி வலுப்பெறுவது வழி கோலலாம்.

**********

முட்டையா சத்துணவு உருண்டையா ?

முட்டைக்குப் பதிலாக சத்துணவு உருண்டை ஒன்றை வழங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாய் அறிகிறேன். இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. முட்டையின் சத்துக்கள் பெரிதும் நிரூபிக்கப் பட்டவை. முட்டையில் கலப்படம் செய்யவும் வாய்ப்பில்லை. சத்துணவு உருண்டை என்பது அப்படியல்ல. கருணநிதி சத்துணவில் முட்டை சேர்க்க ஆரம்பித்தார் அதனால் அதை நிறுத்துவோம் என்ற முட்டாள் தனமான கருத்துத் தான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

இதில்லாமல் நாமக்கல் போன்ற இடங்களில் முட்டைத் தொழில் நசிக்கும் அபாயமும் இருக்கிறது. முட்டையைத் தொடர வேண்டும்.

*******

பெளத்தத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள்

ஆயிரக்கணக்கான மக்கள் இந்து மதத்தை விட்டு பெளத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இந்து மதத்தின் சாதீயத்திற்கு மாற்றாக அம்பேத்கரால் பரிந்துரைக்கப் பட்ட வழி இது. வாழ்த்துவோம். இது பற்றி ஆஎ எஸ் எஸ் காரர்கள் எரிச்சலடைந்து அறிக்கை விட்டுருப்பதும் எதிர்பார்க்கக் கூடியதே. இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்க வேண்டுமெனில் அதன் சாதீயம் ஒழிய வேண்டும்.இன்றைய நிலையில் சாதீயத்தின் தீவிரங்கள் எல்லாம் தலித்கள் மீது தான் பாய்கின்றன. சாதி வெறி பிடித்த மேல்சாதியினரும் பிரசினையைத் தீர்க்க உதவ மாட்டார்கள். இந்தப் பிரசினையை ஒழிக்காமல் கிறுஸ்தவர்கள் மத மாற்றம் செய்கிறார்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்வது பிரசினையைத் தீர்க்க உதவாது. இந்தியா ஜன நாயக நாடு. தத்தம் மதத்தினைத் தேர்வு செய்யும் உரிமை அனைவருக்கும் உண்டு. தம்முடைய மதம் தனக்கு உரிய உரிமையை அளிக்க வில்லையெனில் எந்த மதம் அப்படி அளிக்கக் கூடுமோ அதை மேற்கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு.

*********

பாகிஸ்தானில் கிறுஸ்தவர்கள் படுகொலை

ஒரு வழிபாட்டுக் கூடத்தில் முஸ்லீம் தீவிர வாதிகள் கிறுஸ்தவர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள் . காஷ்மீரில் தினம் தினம் பாகிஸ்தானின் அரசு உதவியுடன் இந்துக்களுக்கு எதிராக நடக்கிற இந்த விஷயம் இப்போது பாகிஸ்தானிற்குள் கிறுஸ்தவர்களுக்கு எதிராக நடந்திருக்கிறது. ஆஃகானிஸ்தானில் நடக்கும் போரை கிறுஸ்தவ-முஸ்லீம் போராகச் சித்தரிக்க உதவும் வண்ணம் இந்தச் செயல் நடைபெற்றிருக்கிறது. இதை நிகழ்த்தியவர்களின் எண்ணம் இதனைத் தொடர்ந்து கிறுஸ்தவர்கள் முஸ்லீமைத் தாக்கினால் அவர்களைக் குறை சொல்லி மீண்டும் கிறுஸ்தவர்கள் மீதான தாக்குதலைத் தொடரலாம் என்பது தான். அப்படியேதும் உடனடியாய் நடக்க வில்லை என்பது உண்மை.

பாகிஸ்தானில் கிறுஸ்தவர்கள் எப்போதுமே நசுக்கப் பட்டுத் தான் வந்திருக்கிறார்கள்.இந்தியாவில் தலித் மக்களுக்காவது வேலை மற்றும் படிப்பில் முன்னுரிமை என்ற பெயரில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் தலித் மக்கள் போலத் தான் கிறுஸ்தவர்கள் இருந்து வருகின்றனர்.

********

ஜெயலலிதாவிற்கு மிரட்டல் கடிதம்

மின்னஞ்சலில் ஜெயலலிதாவிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம். தமிழக விடுதலை முன்னணியினர் இந்த மிரட்டல் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளனராம். மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட எந்த ஒரு கடிதமும் எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது என்பதை மிகச் சுலபமாய்க் கண்டுபிடிக்கலாம் . ஆனால் அது கண்டுபிடிக்கவில்லை இன்னமும்.

கோர்ட்டில் வைத்துக் கொல்லுவோம் என்று குறிப்பாகச் சொல்வது வேறு சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. ஜெயலலிதா கோர்ட்டிற்குப் போகிற ஆர்வம் காட்டியதே இல்லை. வாய்தா வாங்கியே வழக்கு முழுக்க நடக்கிறது. எப்போதாவது கோர்ட்டிற்கு வந்து இந்த வழக்கிற்குத் தீர்வு ஏற்படலாம் என்ற வாய்ப்பும் இப்போது போய் விட்டது. ஒரு யோசனை: வழக்கு மன்றத்தைத் தற்காலிகமாக போயஸ் தோட்டத்திற்கு மாற்றி விட்டு இரவு பகலாய் விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்கினால் நல்லது. அதுவரையில் கோர்ட் மட்டுமல்ல வேறெங்கும் அம்மையார் செல்லக் கூடாது என்று செய்தால் என்ன ?

*******

Series Navigation