இந்த வாரம் இப்படி – அக்டோபர் 21 , 2001

This entry is part of 18 in the series 20011022_Issue

மஞ்சுளா நவநீதன்


உள்ளாட்சித் தேர்தல் : ஒரு வன்முறை வெறியாட்டம்

உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனியச் செய்ய வேண்டும். ஜன நாயகத்தின் நிரந்தர விரோதியாய்த் தன்னை மீண்டும் ஒரு முறை திட்ட வட்டமாய் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெய லலிதா. அமைச்சர்களே தேர்தல் மையங்களைக் கைப்பற்றுவதில் துணை நின்றிருக்கிறார்கள். வாக்குப் போட வந்த மக்கள் துரத்தியடிக்கப் பட்டிருக்கிறார்கள். வேட்பாளர்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பூத் ஏஜண்டுகள் மிரட்டப் பட்டிருக்கிறார்கள். வன்முறை கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்திருக்க வேண்டிய போலிஸ் துறையின் உயர் அதிகாரி போன தேர்தலை விட இப்போது வன்முறை குறைவு தான் என்று அ இ அ திமுகவிற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார். இந்த நற்சான்றிதழ் இப்போது நடந்திருக்கும் வன் முறையை மறுக்க வில்லை என்பது ஒரு விஷயம் . போகிற போக்கில் தம் சக போலிஸ் துறையினர் மீதும் சேற்றை வீசுவது இன்னொரு புறம்.

அரசியல்வாதிகளுக்குக் கால் கழுவி வாழ நேர்கிற அதிகாரிகளின் அவலம் , உண்மையில் தவிர்க்கக் கூடிய ஒன்று தான். நாங்கள் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குத் தலை சாய்க்க வேண்டிய அவசியமில்லை என்று நெஞ்சு நிமிர்த்திப் பிரகடனம் செய்ய வேண்டிய போலிசும் அதிகார வர்க்கமும் ,கைகட்டி வாய் பொத்தி அரசாங்கச் சேவையை , அரசியல்வாதிக்குச் சேவை என்று மாற்றியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையர் , நீதிபதி என்று சகட்டு மேனிக்கு தம் கட்சியில் ஐக்கியப் படுத்திக் கொண்ட சகோதரி ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ள இந்த உதாரணம் வெகு நாட்களுக்கு தமிழக அரசியலில் புண்ணாகிக் கிடக்கும்.

அரசியலிலிருந்து நியாய உணர்வு உள்ளவர்களை விரட்டியடிப்பதற்கும், சேவை மனப்பான்மை உள்ளவர்களை தீவிரவாதிகள் ஆக்குவதற்கும் இப்படி ஜன நாயகத்தின் குரல் வளையை நெறிக்கிற முறை கேடான அரசியல் வாதிகளும் ஒரு காரணம்.

ஜெயலலிதாவிற்கு மற்றவர்களின் வெற்றியை அங்கீகரிக்கிற மனப் பக்குவம் என்றுமே கிடையாது. கருணாநிதியின் ஆட்சியைக் கவிழ்க்கிற அசிங்கத்தை பா ஜ க அரசு செய்யவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அரசைக் கவிழ்த்துக் கொட்டியவர் இவர்.

தமிழகத்தைப் பீடித்துள்ள அ இ அ தி மு க நோய் எப்போது தீரும் என்று தெரியவில்லை. விலகி நின்ற காங்கிரஸ் , அ இ அ தி மு கவுடன் கூட்டு நிச்சயம் தொடர்கிறது என்று குலாம் நபி ஆசாத் கட்டியம் கூறியிருக்கிறார். ராம்தாஸ் சகோதரியின் மீதான தாக்குதல்களை அடக்கி வாசிக்கிறார். பின்னாட்களில் சகோதரியின் தயவு தேவைப் படலாம் என்ற எண்ணமோ என்னவோ. பா ஜ க-விற்கு தி மு க தயவால் தமிழ் நாட்டில் காலூன்ற இடம் கிடைத்து விட்டது. பாவம் ம தி மு க போன்ற கட்சிகள், சிதம்பரம் போன்றவர்கள்.

******

தலித் மக்கள் : உள்ளாட்சியில் இடமில்லையா ?

பல இடங்களில் தலித் மக்கள் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப் பட்டிருக்கிறது. ஊர்க் கட்டுப் பாடு என்ற பெயரில் இவர்கள் மிரட்டப் பட்டிருக்கிறார்கள். ஆனல் இதற்கு அ இ அ தி மு க முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது. கட்சி சார்பில்லாமல் தமிழகத்தில் நடக்கிற ஒரே விஷயம் – சாதீயம் தான். தலித்கள் மீதான தாக்குதல் தான். இதுவும் ஒரு வன்முறையே – இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது தமிழ் நாட்டின் மேல் சாதிகள் அனைத்தும் தான். இவர்கள் திருந்துவது எப்போது ?

*********

கள்ளச் சாராயத்திற்கு மீண்டும் பலி

போலிஸ்காரர்களின் ஆசீர்வாதத்துடன் துணையுடன், உள்ளூர் அரசியல் வாதிகள் அரவணைப்புடன் கள்ளச் சாராய வியாபாரம் விமர்சையாய் நடந்து கொண்டிருப்பதே யாராவது மண்டையைப் போட்டால் தான் நமக்குத் தெரியும் போலிருக்கிறது. இதற்கு முதல்வர் பன்னீர் செல்வம் அளித்த தீர்வு மெதனால் கலக்க முடியாத படி மெதனாலின் நிறத்தையும் சுவையையும் மாற்றுவது தான். ஆகா தீர்க்க தரிசனம். ஒரு விதத்தில் கள்ளச் சாராய விற்பனை தவிர்க்க முடியாது என்பதாய் ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் இது.

முன்பே ஒரு முறை நான் எழுதியிருந்தேன். கள்ளச் சாராயம் என்ற வார்த்தையே தப்பு. சிறிய அளவில் வியாபாரம் செய்பவர்களைத் தடுக்க அல்லது மாமூல் பெற போலிஸ் கண்டு பிடித்த வார்த்தை இது. கள்ளுக்கடைகளைத் திறப்பது தான் இந்தப் பிரசினைக்கு ஒரு தீர்வாய் இருக்க முடியும். பாக்கெட் சாராயம் தயார் செய்யலாம். பால் பாக்கெட்கள் போல் இவை கிடைக்குமெனில் கள்ளச் சாராயம் தேடி யாரும் போக மாட்டார்கள்.

*******

விடுதலைப் போராட்டமும் , பயங்கர வாதம்

விடுதலைப் போராட்டங்களை பயங்கர வாதம் என்று அழைக்க முடியாது என்று பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷரஃப் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். எது விடுதலைப் போராட்டம், எது பயங்கர வாதம் என்று சொல்லாமல் விட்டு விட்டார்.

உண்மைதான், ஆஃகானிஸ்தானில் அமெரிக்கத் தலையீட்டில் நடைபெறுவது தாலிபானின் பிடியிலிருந்து ஆஃகான் மக்களை விடுவிக்கும் விடுதலைப் போர். காஷ்மீரில் பாகிஸ்தானின் கூலிப் படைகள் மேற்கொண்டிருப்பது பயங்கரவாதம்.

************

Series Navigation