இந்த வாரம் இப்படி – அக்டோபர் 14 2001

This entry is part of 26 in the series 20011015_Issue

மஞ்சுளா நவநீதன்


பன்னீர் செல்வம் படைக்கும் முன்னுதாரணம்

முதல்வருக்குரிய பந்தா, பரிவாரங்கள், ஊர்வலங்கள் எல்லாம் இல்லாமல் அமைதியாய் தில்லி சென்று திரும்பியிருக்கிறார் முதல்வர் பன்னீர் செல்வம். ஆடம்பர விழாக்களில் முதல்வரைப் பார்த்தவர்களுக்கு இது ஒரு அபூர்வமான காட்சி. ஜெயலலிதாவின் கோபத்திற்குப் பயந்து பன்னீர்செல்வமும் கட்சிக் காரர்களும் அடக்கி வாசிக்கிறார்கள் என்று காரணம் சொல்லப் பட்டால் கூட இது ஒரு நல்ல முன்னுதாரணம் . தொடரட்டும் எளிமை.

******

காலிதா ஜியா பிரதமர் ஆகிறார்

பங்களா தேஷில் காலிதா ஜியா பிரதமர் ஆகியிருக்கிறார். ஷேக் ஹசீனாவின் கட்சி 62 இடங்களையே பிடிக்க முடிந்தது. இஸ்லாமிய அடிப்படை வாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தவர் காலித ஜியா. இதன் விலை என்ன என்பது போகப் போகத் தெரியும். குறுகிய கால நலன்களுக்காக ஜன நாயக விரோத சக்திகளுடன் கூட்டுச் சேர்வது எவ்வளவு பெரிய தவறு என்று தெற்காசிய நாடுகளின் அரசியல் தலைமைகள் எவ்வளவு பட்டாலும் உணர்வதாகத் தெரியவில்லை. பிந்திரன்வாலேயும் இந்திரா காந்தியும், ஜியா உல் ஹக்கும் தாலிபானும் என்று தொடரும் இந்த அவல நிலையின் அடுத்த கட்டம் என்னவாகுமோ ?

ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. பங்களாதேக்ஷில் இருக்கும் ஐரோப்பிய பிரதிநிதி, ஜியாவின் வெற்றிக்குப் பிறகு, இந்துக்கள் வெகுவாகத் தாக்கப்படுவதையும், அவர்கள் எல்லைக்குத் துரத்தப்படுவதையும் குறிப்பிட்டு பங்களாதேஷின் அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

********

மூன்றாம் உலகப் போர் : வேறொரு வடிவம்

அமெரிக்காவில் செப்டம்பர் 11ல் நடந்த தாக்குதல் மூன்றாவது உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று பலடும் அச்சம் தெரிவிக்கும் வேளையில், நைஜீரியாவிலும், இந்தோனேஷியாவிலும், ஒசாமா பின் லேடனுக்கு ஆதரவான முஸ்லிம்களும் , எதிரான கிரிஸ்துவர்களும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இது போலக் கலவரங்கள் நடந்தவாறு உள்ளன. ஒசாம பின் லேடன் போன்றவர்களின் நோக்கம் ஒரு விதத்தில் இதுதான் என்று கூற வேண்டும். இந்த உலகப் போர் ஒரு மையப் புள்ளியில் நாடுகளுக்கிடையில் நடப்பதற்குப் பதிலாக உள்நாட்டுப் போர்களாகவும், மக்கள் ஒருவரையொருவர் சந்தேகிக்கும் படியும், அதனால் ஏற்படும் உள்நாட்டுக் குழப்பங்களாகவும், குழுக்கள் சமரசத்திற்கு வழியின்றி இரு துருவங்களில் நிற்பதாகவும் அமையும் போலிருக்கிறது. இதனால் விரிந்த ஒரு தளத்தில் சாதாரண மக்களின் துயரங்கள் அதிகமாகும் போலிருக்கிறது.

******

திமுக கூட்டணியில் பா ம க

அதிமுகவை அரியணையில் ஏற்றி உட்கார வைத்துவிட்டு , இப்போது ஊழல் பற்றியும் சகோதரியின் துரோகம் பற்றியும் பேசுவது போலித்தனம் தான். தமிழ் நாட்டின் அரசியலில் போலித்தனம் இல்லாமல் பிழைப்பு நடக்குமா என்ன ? பா ம க வின் நோக்கம் தி மு க அணி வெற்றி பெற வேண்டும் என்பதைக் காட்டிலும் தன்னுடைய செல்வாக்கு மண்டலத்தை அதிகப் படுத்திக் கொண்டு விட வேண்டும் என்பதாய்த் தோன்றுகிறது. இந்த விதத்தில் ம தி மு கவின் போக்கு சற்றே தன் காலில் தானே நிற்க வேண்டும் என்கிற முனைப்புக் கொண்டதாய்த் தெரிகிறது.

******

வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு

பல காலமாக வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு என்ற பேச்சு இருந்து வந்தது உண்மை. இப்போது கிடைத்திருக்கிறது. பால் தெரோ என்ற அவருடைய நண்பர் சென்ற வருடம் அவரைப் பற்றியும், அவர் அணுகுமுறைகள் பற்றியும் அவ்வளவாகப் பாராட்டமுடியாத ஆளுமை அவருடையது என்பதாக ஒரு புத்தகம் எழுதினார். இஸ்லாமிய நாடுகளில் அவர் பயணம் மேற்கொண்டு எழுதிய புத்தகங்கள் பல விதமாய் விமர்சனத்திற்கு ஆட்பட்டதுண்டு. முஸ்லிம்களின் விரோதி என்று அவரை விமர்சனம் செய்ஹ்டவர்களும் உண்டு. ஆனால் இந்தியர்கள் பற்றியும் இந்தியர்கள் பற்றியும் கூட அவர் விமர்சித்திருக்கிறார். ‘இந்தியா ‘ ஒரு காயமுற்ற கலாச்சாரம் ‘ ‘லட்சக்கணக்கில் கலகங்கள் ‘ போன்ற புத்தகங்களில் அவர் சொல்கிற விஷயங்கள் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை. சுதந்திரப் போராட்டம் பற்றியும் ,காந்தி பற்றியும் பல உவப்பற்ற விமர்சனங்கள் உண்டு. பாபரி மசூதி உடைபட்ட போது ‘இந்துக்களுக்கு இப்போது தான் வரலாறு உணர்வு வந்துள்ளது ‘ என்பது போன்ற ஒரு தவறான , நியாயமற்ற கருத்தையும் அவர் தெரிவித்தது உண்டு. அவரை விரோதி என்று பார்க்காமல் விமர்சகர் என்று பார்த்து அவர் விமர்சனங்களின் உண்மையை உணர்ந்து கொள்ள முயல்வது தான் விவேகமான செயல். துரதிர்ஷ்டவசமாக, விமர்சனங்களைக் கண்டாலே தம்முள் சுருங்கிக் கொண்டு, இன்னமும் அந்த விமர்சனத்துக்கு ஆளான விஷயங்களுக்குக் சப்பைக் கட்டுக் கட்டுவது ஒரு பழக்கமாய் எல்லோருமே மேற்கொண்டு விட்டார்கள்.

******

Series Navigation