அறிவுலகின் ஒரு பெரும் சறுக்கல் (வி எஸ் நைபால் பற்றி)

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

எட்வர்ட் சையத்


மேலை நாடுகள் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள வியப்புக் கலந்த ஆர்வம் தொடர்கிறது. சமீபத்தில் ட்ரினிடாடைச் சேர்ந்த வி எஸ் நைபால் , நான்கு இஸ்லாமிய நாடுகளிடையே தான் மேற்கொண்ட பயணம் பற்றி பெரிய புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். 18 வருடங்கள் முன்பு இதே நான்கு நாடுகள் பற்றி வேறொரு புத்தகம் அவர் எழுதினார். முந்திய புத்தகத்தின் பெயர்: ‘நம்பிக்கையாளர் நடுவில் : ஓர் இஸ்லாமியப் பயணம் ‘. இப்போதைய புத்தகம் : ‘ நம்பிக்கைக்கு அப்பால் : மதம் மாறியவர்ளிடையே ஒரு பயணம். ‘ இந்த இடைவெளியில் நைபால் சர் நைபால் ஆகியிருக்கிறார். பெரும் எழுத்தாற்றலினால் , தகுதிக்கேற்பவே மிகுந்த புகழ் பெற்றிருக்கிறார். நாவல்களும், பயணக் கட்டுரைப் புத்தகங்களும் உலக இலக்கியத்தில் அவர் இடத்தை உறுதி செய்கின்றன.

மிகப்பல ஏடுகளில் மிகப் புகழ்ச்சியுடன் இந்தப் புத்தகம் விமர்சிக்கப் பட்டிருக்கிறது. இஸ்லாம பற்றிய முதிய பார்வையத் தருவதாகவும், நேர்த்தியான நேர்முகப் பதிவாகவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இஸ்லாம் பற்றிய பிரமைகளை உடைப்பதாகவும், மேலைநாட்டினர் இஸ்லாம் பற்றி கொண்ட ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதாகவும் கொண்டாடப் படுகிறது. இது போன்ற ஒரு புத்தகத்தை யூத மதம் பற்றியோ, கிறுஸ்தவ மதம் பற்றியோ யாரும் எழுத மாட்டார்கள். ஆனால் இஸ்லாம் என்றால் பரவாயில்லை — மொழியோ , விவரமான அறிவோ தேவைப் படுவதில்லை .

நைபாலின் ஈடுபாடு ஒரு தனித்த விஷயம். கீழைநாடுகள் பற்றி வழக்கமாக எழுதுபவரும் அல்ல. அவர் வெறுமே பரபரப்பிற்காக எழுதுபவரும் அல்ல. மூன்றாவது உலகத்தைச் சேர்ந்த இவர், மேலை நாடுகளில் மூன்றாவது உலகம் பற்றிய மோசமான கட்டுக்கதைகளைக் கேட்கச் சலிக்காத தாரளவாதிகளுக்காக செய்திகள் அனுப்புபவர். தேசிய விடுதலைப் போராட்டங்களோ, புரட்சி இயக்கங்களோ, காலனியாதிக்கத்தின் விளைவுகளோ, ஆப்பிரிக்க ஆசிய நாடுகளில் ஏற்படுத்தியிருக்கும் சோகமான விளைவுகள் நைபால் கண்ணில் படுவதில்லை. இவர்கள் ஏழ்மையிலும், சுயவலிமையின்மையிலும் , சரியாய்க் கற்று தன்னகப் படுத்திக் கொள்ளாத மேனாட்டுத் தத்துவங்களிலும் – தொழில் மயமாக்கல், நவீனமாதல் போன்றவை – முழுகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நைபால் ஒரு புத்தகத்தில் சொல்கிறார். : இவர்களுக்கு தொலைபேசி உபயோகிக்கத் தெரியும். ஆனால் தொலைபேசியைச் சரி செய்யவோ, தொலைபேசியை உருவாக்கவோ தெரியாது. மூன்றாவது உலகின் உதாரண புருஷர் ஆகிவிட்டார் இவர். ட்ரினிடாடில் பிறந்த இவர், இந்து இந்திய வம்சாவளியினர். 1950-களில் இங்கிலாந்தில் குடியேறிய இவர், பிரிட்டிஷ் மேல்தட்டுடன் ஐக்கியமாகிவிட்டவர். நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று பேசப் படுபவர். மூன்றாவது உலக நாடுகள் பற்றிய உண்மையே பேசுபவர் என்று அறியப் படுபவர்.1979-ல் ஒரு விமர்சகர் இவர் பற்றிப் பேசும் போது குறிப்பிட்டார் : ‘ மூன்றாவது உலகம் பற்றிப் பேசும் போது அவர்களின் மீது கழிவிரக்கப் படாமல் , அவர்களின் ஒழுக்க விழுமியங்கள் பற்றிய ஒளிரும் உயர்வுநவிற்சியில்லாமல், அவர்களை விட தான் உயர்ந்தவன் என்ற தொனியில்லாமல் , காலனியாதிக்கக்காலம் எவ்வளவு உயர்ந்தது என்ற பிரமைகளை ஏற்படுத்தாமல் பேச வல்லவர் ‘.

இருந்தும் நைபாலைப் பொறுத்த வரையில் கூட இஸ்லாம், மூன்றாவது உலக நாடுகளின் மற்றப் பிரசினைகளைக் காட்டிலும் மிக மோசமானது. அவருடைய இந்து வம்சாவளி உணர்வுடன் அவர் சமீபத்தில் இந்திய வரலாற்றில் மிகப்பெருத்த சேதம் இஸ்லாம் வருகையினாலும், இஸ்லாமின் இருப்பினாலும் நிகழ்ந்தது என்று சொன்னார். மற்ற எழுத்தாளர்கள் மாதிரியில்லாமல் அவர் ஒன்றல்ல இரண்டு பயணங்களை இஸ்லாமிய நாடுகளில் மேற்கொள்கிறார். ஆனால் இஸ்லாம் மதத்தின் மீதும் , இஸ்லாமியர் மீதும், அதன் கருத்துகள் மீதும் அவருடைய ஆழ்ந்த வெறுப்புத் தான் வெளிப்படுகிறது. ‘நம்பிக்கைக்கு அப்பால் ‘ புத்தகம் நைபாலின் இஸ்லாமிய மனைவி நாதிராவிற்கு, அந்தப் பெண்மணியின் உணர்ச்சிகள் , கருத்துகள் பற்றி எந்தக் குறிப்பும் இல்லாமல் , அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது என்பது எப்படிப்பட்ட முரண். முதல் புத்தகத்தில் அவர் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை. அவர் முன்பே அறிந்ததைத் தான் முஸ்லிம்கள் நிரூபிக்கிறார்கள். எதை நிரூபிக்கிறார்கள் ? இஸ்லாமில் ஒளிந்து கொள்வது ஒரு வகை ‘அறியாமைக்குள் ஒளிவது ‘ என்பதையாம். மலேசியாவில் நைபாலிடம் ஒருவர் கேட்கிறார்: ‘உங்கள் எழுத்தின் நோக்கம் என்ன ? எல்லோருக்கும் இது பற்றிச் சொல்வதா ? ‘ அவர் பதில் : ‘ ஆமாம், புரிந்து கொள்ள முற்சி என்று சொல்லலாம். ‘ ‘ பணத்திற்காக இல்லையா ? ‘ ‘ ஆமாம், ஆனால் நான் என்ன எழுதுகிறேன் என்பதும் முக்கியம். ‘ ஆக, அவர் முஸ்லீம்களுக்கிடையே பயணம் செய்து, அது பற்றி எழுதி பிரசுரகர்த்தரிடம் கொடுத்து, பிரசுரித்துப் பணம் பெற்று , அவருக்குப் பிடித்த ஒன்றைத் தான் அவர் செய்வதாகக் கொள்ள வேண்டும். முஸ்லீம்கள் அவருக்கு ‘சம்பவங்கள் ‘ அளிக்கிறார்கள், இதையே இஸ்லாமின் உதாரணமாய் அவர் காண்பிக்கிறார்.

இதில் அவருக்கு மகிழ்ச்சியோ அன்போ ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. முந்திய புத்தகத்தில், முஸ்லீம்களை — அமெரிக்க , பிரிட்டிஷ் வாசகர்களுக்காக– பயங்கரவாதிகளாகவும், சரியாய் உச்சரிக்கத் தெரியாதவர்களாகவும், சரியாய்க் கருத்துக் கூற முடியாதவர்களாகவும், மேற்கிலிருந்து வரும் ஒரு நீதிபதி ஸ்தானத்தில் இருந்து அவர் கணிக்கிறார். இஸ்லாமிய பலவீனங்களை அவர்கள் காட்டுகிற மாதிரித் தோன்றும் போதெல்லாம், நைபால் என்ற மூன்றாவது உலக சாட்சியாகிறார். ஒரு ஈரானிய முஸ்லீம் மேலைநாடுகள் பற்றிப் புகார் கூறும் போது நைபால் விளக்குகிறார்: ‘ ஒரு பிற்போக்கான காலத்திய மனிதன் எண்ணெயும், பணமும் கண்டு அடையும் குழப்பம் இது. அதிகார உணர்வுடன் கூடவே , ஒரு பெரும் கலாசாரத்தினால் (மேற்குக் கலாசாரம்) சூழப்பட்டுள்ள ஓர் உணர்வு. இதை (மேற்கை) நிராகரிக்கவும் வேண்டும் , அதே சமயம் அதைச் சார்ந்தும் இயங்க வேண்டும். ‘

அந்தக் கடைசி வாக்கியம் நினைவில் இருக்கட்டும். இது தான் நைபாலின் கருதுகோள், இந்த கருத்து மேடையிலிருந்து தான் அவர் பேசுகிறார். மேற்கு என்பது அறிவின் உலகம், விமரசனங்களின் உலகம், தொழில் நுட்ப உலகம், உயிருள்ள அமைப்புகளின் உலகம். இஸ்லாம் கோபங்கொண்ட ஆனால், மேற்கைச் சார்ந்திருக்கிற , வளர்ச்சியுறாத , அதேசமயம் தான் அறியாத, கட்டுப் படுத்த முடியாத ஒரு சக்தி கொண்டது. மேலைநாடுகள் இஸ்லாமிற்கு வெளியிலிருந்து நல்ல விஷயங்களை அளிக்கின்றன. ஏனெனில் இஸ்லாமின் உயிர்ப்பு அதனுள்ளிருந்து உருவாகவில்லை. 100 கோடி முஸ்லீம்களின் இருப்பு ஒரு வரியில் புறம் தள்ளப் படுகிறது. ‘இஸ்லாமின் குறைபாடுகள் அதன் தொடக்கத்தில் உள்ள குறைபாடுகள் . அது எழுப்பிய அரசியல் பிரசினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வுகளோ, நடைமுறைக்கு ஒத்த திர்வுகளோ தரவில்லை . வெறும் கடவுள் நம்பிக்கையை மட்டும் அளித்தது . இறை தூதரை மட்டுமே அளித்தது . இது மட்டுமே எல்லாவற்றுக்குமான தீர்வு என்றும் பிரகடனம் செய்தது. இந்த அரசியல் இஸ்லாம் வெறும் கோபமும், அராஜகமும் தான். ‘ நைபாலுடன் பேசும் எல்லோருமே இஸ்லாம் எதிராக மேற்கு என்ற ஒரு அணியில் திரள்வதாய் இவர் காண்கிறார். சில சமயம் இது களைப்புத் தருவதாகவும், சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வது போலும் உள்ளது.

பிறகு ஏன் இவர் இருபதாண்டுகளுக்குப் பின்பு முன் போலவே பெரிய , சலிப்புத் தருகிற புத்தகம் எழுத வேண்டும் ? எனக்குத் தோன்றுகிற ஒரே காரணம் : தனக்கு இஸ்லாம் பற்றி ஒரு புதிய பார்வை கிடைத்திருப்பதாய் அவர் நம்புகிறார். அந்தப் பார்வை: அராபியர் அல்லாத முஸ்லீமாய் ஒருவர் இருந்தால், அவர் மதம் மாறினவர். மதம் மாறியவர்கள் என்ற முறையில், பாகிஸ்தானியர்கள், மலேசியர்கள், ஈரானியர்கள், இந்தோனேசியர்கள் அசலாய் இல்லாத ஒரு உணர்வினால் அவதியுறுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் இஸ்லாம், அவர்களின் மரபிலிருந்து அவர்களை வெட்டி விலக்கி , இங்கேயும் இல்லை அங்கேயும் இல்லை என்ற ஒரு திரிசங்கு நிலையில் அவர்களை வைக்கிறது. மதம் மாறியவர்களின் இந்தச் சிக்கலை இந்தப் புத்தகத்தில் அவர் தொகுத்திருப்பதாய் நம்புகிறார். அவர்களின் இறந்த காலத்தை இழந்து போனபின்பு, தம் புதிய மதத்திலிருந்து ஒன்றும் கிடைக்காமல், குழப்பமுற்று அதனால் மகிழ்வை இழந்து, வாழ்திறனை இழந்தவர்களாய் நிற்கிறார்கள். இந்த கேலிக்கூத்தான வாதத்தை நீட்டிப் பார்த்தால், ரோமில் குடியிருப்பவன் தான் ரோமன் கத்தோலிக்கராய் இருக்க முடியும், பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்கர்கள் தம் மரபுகளை இழந்தவர்கள். பிரிட்டிஷார் இல்லாத ஆங்கில சர்ச்சைச் சேர்ந்தவர்கள் , மலேசிய, ஈரானிய முஸ்லிம்கள் போன்றே நகல் செய்து , வாழ்திறனை இழந்தவர்கள் – காரணம் அவர்கள் மதம் மாறியவர்கள்.

இந்த 400 பக்கப் புத்தகம் ‘ நம்பிக்கைக்கு அப்பால் ‘ இந்த முட்டாள் தனமான, அவமதிப்பு ஏற்படுத்தும் கருத்தின் அடிப்படையிலானது. இது உண்மையா இல்லையா என்பது கேள்வியல்ல, வி எஸ் நைபால் போன்ற மிகுந்த அறிவுத் திறன் கொண்ட ஒரு எழுத்தாளர் ஏன் இப்படி ஒரு முட்டாள் தனமான, சலிப்புத் தரும் புத்தகத்தை எழுத வேண்டும் ? மதம் மாறிய முஸ்லீம்கள் எங்கே இருந்தாலும் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கிறார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லி, நிகழ்ச்சிகளை வர்ணிக்கிறார். அவர்களுடைய வரலாறு, தத்துவம், பூகோளம் பற்றிக் கவலையில்லை. மதம் மாறியவர்கள் அராபியர்கள் இல்லையென்றால், இதே கதி தான். வெறும் நகல்கள் தான். நைபாலுக்கு அறிவார்ந்த ஒரு விபத்து நடந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இஸ்லாம் பற்றி அவர் கொண்டுள்ள மோசமான ஒருமுகச் சிந்தனை, ஒரே சூத்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூற வைத்துள்ளது. இதனால் மனத்தளவில் அவர் தற்கொலை புரிந்து கொண்டு விட்டார். இது தான் முதற்பட்சமான அறிவுலகின் சறுக்கல் என்று நான் கருதுகிறேன்.

நைபாலுக்கு ஏற்பட்ட இழப்பு பெரிதும் இரங்கலுக்குரியது. அவர் எழுத்து ஒன்றே போல், ருசிகரமற்றுப் போய் விட்டது. அவர் அறிவுத் திறன் சிதறிப் போய் விட்டது. அவர் பொருள்பட எழுத முடியவில்லை. அவருக்கு முன்பிருந்த புகழின் நிழலில், விமர்சகர்களை ஏமாற்றி இன்னமும் பெரிய எழுத்தாளர் ஒருவர் அவர் என்ற பிரமையை அவர் ஏற்படுத்தவல்லவர். பெரும் வருத்தம் என்னவென்றால், நைபாலின் இந்தப் புத்தகம் இஸ்லாம் பற்றி ஆழ்ந்த புரிதலை அளிப்பதாய் சிலர் எண்ணக் கூடும் . இது இஸ்லாமியருக்கு இழுக்கு. இஸ்லாமியருக்கும், மேலை நாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி இன்னமும் ஆழமாய் ஆகிவிடும். புத்தகம் விற்பவர்களும்ம்கு, நைபாலுக்கும் நிறையப் பணம் கிடைக்கும் என்பது தவிர வேறு எந்தப் பயனும் இல்லை.

***

Series Navigation

எட்வர்ட் சையத்

எட்வர்ட் சையத்