இந்த வாரம் இப்படி – அக்டோபர் 7,2001

This entry is part of 18 in the series 20011007_Issue

மஞ்சுளா நவநீதன்


உள்ளாட்சி தேர்தல்கள்

உள்ளாட்சி தேர்தல்களில் தி முக அணி, அ தி மு க அணி, ம தி மு க , காங்கிரஸ் அணி என்று நான்கு அணிகளாய் மோதுகின்றன. கட்சி நோக்கில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டாம் என்றும் சில அமைப்புகள் கோரியுள்ளன. தமிழ் நாட்டில் கட்சி சார்பற்ற தேர்தல் என்பது சாத்தியமா என்று தெரியவில்லை. அதிகாரப் பகிர்வில் பெண்களுக்கும் மற்றும், தலித்களுக்கும் நியாயமான பங்கு கிடைக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளன என்பது மகிழ்விற்கு உரிய விஷயம். துரதிர்ஷ்ட வசமாக பழைய பெருச்சாளிகளின் மகன்களும் , மகள்களுமே வேட்பாளராய் நிற்பது கவலை தருகிறது.

சிதம்பரத்தின் தலைமையில் குமரி அனந்தன், த மா க, மற்றும் ஒத்த கருத்துடையவர்கள் இணையக் கூடுமானால் அது உண்மையான மாற்றுக்கு வழி வகுக்கலாம். மற்றபடி, மதிமுக, அதி மு க , பா ம க என்பதெல்லாம் ஆட்கள் மாற்றம் தானே ஆட்சி மாற்றமோ அடிப்படைக் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மாற்றமாய்த் தெரியவில்லை.

*******

ஆஃப்கானிஸ்தானின் தாக்குதல்

அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானைத் தாக்கத் தொடங்கிவிட்டது. ஆஃப்கானிஸ்தானின் மக்கள் இதனால் எவ்வளவு துயரம் அனுபவிப்பார்கள் — ஆனால் தாலிபன் இதைச் சொல்ல அருகதை இல்லை. மக்களை மிருகங்களை விடக் கீழாக நடத்திய ஒரு சர்வாதிகாரக் கும்பல் அது. சாதாரண மக்களுக்கு உணவு, வானொலி போன்றவற்றை வீசுவதாகவும்ஒரு செய்தி சொல்கிறது. ஆனால் உடனடியாக அமெரிக்காவிற்கு ஆதரவாக இதனாலெல்லாம் மக்கள் திரும்பி விடுவார்களா என்று சொல்வது கடினம். ஏற்கனவே அமெரிக்கச் சைத்தான்களுக்கு எதிரான புனித யுத்தம் என்பதாகப் பிரசிஅனையைத் திசை திருப்ப தாலிபானும் தாலிபன் பின்பற்றும் பல முஸ்லிம் தலைவர்களும் பேசத் தொடங்கிவிட்டார்கள். தாஜிக்ஸ்தானிலிருந்தும் பாகிஸ்தானிலிருட்ந்தும் தாக்குதல்கள் நடத்தப் படவிருக்கின்றன – நடத்தப் படுகின்றன. தீவிரவாத முஸ்லீம் தலைவர்களை பாகிஸ்தான் ராணுவ ஆட்சி வீட்டுக் காவலில் வைத்துள்ளது. பாகிஸ்தானில் பிரசினை எந்தத் திசை நோகித் திரும்பும் என்று பார்க வேண்டும். பர்வேஸ் முஷரஃபின் கைக்குள் முழு ராணுவமும் இருக்கிறதா இல்லையா என்று இனிமேல் தான் தெரியும்.

*****

பாகிஸ்தானில் தொடரும் சர்வாதிகார ஆட்சி.

சந்தடி சாக்கில் பர்வேஸ் முஷ்ரஃப் தன் ஆட்சியை காலவரையறையின்றி நீட்டிக் கொண்டு விட்டார். உம், எந்த சர்வாதிகாரி தான் தானாக பதவியைத் துறந்து ஜனநாயகத்திற்கு வழி கோலியிருக்கிறார் ? அதுவும் பகிஸ்தானில் அது நடந்ததே இல்லை. ஆனால் இன்றைய நிலையில் ஆட்சி மாற்றம் இன்னமும் நிலையின்மையைத் தருமோ என்ற அச்சமும் உள்ளது.அதில்லாமல் பர்வேஸ் முஷரஃபை நம்பித் தான் அமெரிக்கா கோடி கோஇட்யாய்க் கொட்டி கொடுத்திருக்கிறது. அந்த ‘முதலீடு ‘ ஆள் மாறினால் என்ன ஆகும் என்று சொல்ல முடியாத நிலை.

********

ஓசாமைவைப் பிடிக்க பாகிஸ்தான் பணம் பெற்றதா ?

1999-ல் பாகிஸ்தான் ஓசாமவை ஒப்படைக்கப் பணமும், பயிற்சியும் அமெரிக்காவிடமிருந்து பெற்றதாக ஒரு செய்திக் குறிப்புச் சொல்கிறது. என்றால், நவாஸ் ஷரீஃப் துரத்தப் படாதிற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

********

தமிழ் நாட்டில் போலிஸ் சங்கம்

போலிஸ்காரர்களுக்கு சங்கம் வைப்பதற்கு அனுமதி வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதி அளித்து அ தி மு க ஆட்சிக்கு வந்தது. இதனால் உருவான போலிஸ் சங்கத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். போலிஸ் சங்கம் என்ன விதமான கோரிக்கைகளை வைத்துப் போராடும் என்றோ , எப்படிப் பட்ட போராட்டங்களில் ஈடுபடும் என்றோ தெளிவில்லை. மற்ற தொழிற்சங்கங்களுக்கு முன்னோடியாக, மக்களைப் பாதிக்காத முறையில் இவர்கள் சங்கச் செய்ல்பாடுகளைக் கொண்டிருந்தால் வரவேற்கலாம்.

*******

ஆஃப்கானிஸ்தானில் எந்த அரசு அமையும் ?

பாகிஸ்தான் ஆதரவில் இயங்கும் தாலிபன் அரசு வீழ்வது கிட்டத்தட்ட நிச்ச்யம் என்ற நிலையில் எப்படிப் பட்ட அரசு அங்கு அமையும் என்ற தெளிவில்லை. அங்கு காஷ்மீருக்குப் பயங்கரவாதிகளைத் தயார் செய்து அனுப்பாத அரசு வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானில் இந்திய ஆதரவு அரசு அமைவதை விரும்பவில்லை. ஆஃப்கானின் பழைய அரசரும், வடக்குப் பிரதேசக் கூட்டணி என்ற பெயரில் இயங்கிவரும் தாலிபன் எதிர்ப்பு அமைப்பும் இணைந்து அரசு அமைக்கலாம் என்ற யோசனை பாகிஸ்தானிற்குப் பிடிக்க வில்லை. எதிர்காலம் நிச்சயமில்லாத ஒரு நிலையில் உள்ளது ஆஃப்கானிஸ்தான். அங்கே சகஜ வாழ்க்கை திரும்பும் என்று நம்புவோம்.

*********

Series Navigation