• Home »
  • அரசியலும் சமூகமும் »
  • இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 30,2001 (சிமி, ஆஃபன், பன்னீர்செல்வத்தின் போட்டோ, உள்ளாட்சித் தேர்தல் அணிகள், தடா)

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 30,2001 (சிமி, ஆஃபன், பன்னீர்செல்வத்தின் போட்டோ, உள்ளாட்சித் தேர்தல் அணிகள், தடா)

This entry is part of 20 in the series 20011001_Issue

மஞ்சுளா நவநீதன்


இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் – தடையும் துணையும்

இஸ்லாமிய மாணவர் இயக்கம் தடை செய்யப் பட்டுள்ளது. பின் லேடனின் கொள்கையைப் பின்பற்றி தூய இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்ப முயலும் இவர்களை பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்ற காரணத்திற்காக த்டை செய்து தலைவர்கள் சிறையில் அடைக்கப் பட்டிருக்கின்ற்றனர். கான்புரில் நடந்த வன்முறையின் மூல காரணம் இவர்கள் என்றும் சொல்லப் படுகிறது.

எல்லா வன்முறைத் தத்துவங்களும் உயர்ந்த லட்சியத்தைக் காட்டிக் கொண்டு தான் வருகின்றன. கடவுளின் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காகக் கொன்றாலும் தப்பில்லை, சமத்துவம் ஸ்தாபிப்பதற்காக வன்முறை, போரை முடிவு பண்ணப் போர் என்று தான் இப்படிப்பட்ட கோட்பாடுகள் பேசுகின்றன. மதச் சார்பின்மையில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மதச் சார்பின்மையில் நம்பிக்கை இல்லை என்பதன் பொருள் மற்ற மதங்களுக்கு வாழும் உரிமையில்லை என்பதும் கூட. ஆஃப்கானிஸ்தானின் மதவெறி அரசை இந்தியாவில் ஸ்தாபிப்பது என்ற ‘உன்னதமான ‘ லட்சியத்திற்காக பயங்கரவாதிகளை ஆதரிப்பது என்பது இவர்களின் போக்கு.

துரதிர்ஷ்டவசமாக இஸ்லாம் என்ற பெயரை இவர்கள் தம் நிறுவனப் பெயரில் தாங்கியிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மற்ற இஸ்லாமிய அமைப்புகள் இவர்களுக்கு ஆதரவாய்ப் பேசுகின்றன. ஜனநாயக எதிர்ப்புக் குரல் எந்த மதப் போர்வை போர்த்தி வந்தாலும் பாசிசக் குரல் என்பதை இவர்கள் அழுத்தமாய்ச் சொல்ல வேண்டும்.

ஆனால் தடை விதிப்பது மட்டுமே இவர்களைச் செயலிழக்கச் செய்து விடும் என்று தோன்றவில்லை. இஸ்லாமிய இயக்கங்களில் மிதவாதக் குரல் உரக்க எழுந்து ஒரு நல்ல தலைமை தோன்றி வலுப் பெற்றால் ஒழிய இப்படிப் பட்ட அமைப்புகள் மக்களின் மனதை மூளைச் சலவை செய்துகொண்டு தான் இருக்கும்.

***********

ஆஃப்கானிஸ்தான் , பாகிஸ்தான் : என்ன உறவு ?

ஆஃப்கானிஸ்தான் கிட்டத்தட்ட பாகிஸ்தான் படைத்து உலவ விட்ட ஃப்ராங்கென்ஸ்டான் என்று சொல்லலாம். ஆஃப்கானிஸ்தானில் அரசாட்சி மாற்றத்திற்கு தான் ஆதரவு அளிக்க முடியாது என்ற பாகிஸ்தானின் அறிவிப்பு இத்தன்மையானது தான். அமெரிக்காவிற்கு உதவி செய்ய இந்தியாவைக் காட்டிலும் தனக்கே உரிமை அதிகம் என்று தன் பேச்சில் அடிக்கடி குறிப்பிட்டார் முஷரஃப். ஆஃப்கானிஸ்தானில் அமைந்துள்ளது பாகிஸ்தானின் ஆதரவில் இயங்கும் பொம்மை அரசு என்பது இந்தியாவின் விமானம் கடத்தப் பட்ட போது நடந்த நிகழ்ச்சிகளில் தெளிவாகவே தெரிந்தது. இப்போதும் கூட பாகிஸ்தானின் நிலைபாடு தாலிபான் அரசு கவிழ்க்கப் படக்கூடாது வேறெந்த அரசும் பதவி ஏற்கக் கூடாது என்பதே.

*******

முதல்வர் பன்னீர் செல்வத்தின் போட்டோ இல்லை

பழைய முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோக்களை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற முடியாததற்கு அரசு அதிகாரிகள் சொல்லும் காரணம் இது: முதல்வர் பன்னீர் செல்வத்தின் போட்டோ கிடைக்கவில்லை. ம்ம். ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் முதல் வேலையாய் தன்னைப் படம் எடுத்து அனுப்பி வைத்தார். முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இன்னும் நேரமில்லை போலிருக்கிறது.

இந்த முதல்வர் போட்டோ பாலிசியைக் கொஞ்சம் திருத்தினால் தேவலாம். இந்தப் பன்னீர் செல்வம் போய் அடுத்த கண்ணீர் செல்வம் எப்போது வருவார் என்று தெரியாதை நிலையில் , இது ஒரு மகா தலைவலி. இறந்து போன தலைவர்களின் போட்டோவை வைத்து திருப்தி அடையலாம். ஆனால் நம் தலைவர்களின் ஈகோ அதற்கு இடம் கொடுக்குமா ?

*******

கற்காலம் நோக்கி ஆஃப்கானிஸ்தான்

ஆஃப்கானிஸ்தானிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் துரத்தப் பட்டு அகதியாகிவிட்டனர். எப்படி வங்கதேசப் பிரசினையின் போது லட்சக் கணக்கில் மக்கள் இந்தியாவில் சரண் அடைந்தார்களோ அது போல இப்போது ஆஃப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானிலும் ஈராக்கிலும் சரண் அடைந்திருக்கிறார்கள். செப்டம்பர் 11க்குப் பின்பு இன்னமும் பீதியடைந்து பாகிஸ்தானின் எல்லையில் காத்துக் கிடக்கிறார்கள். பெரும் பஞ்சம் ஆஃப்கானிஸ்தானில் வரும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். அவர்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத தாலிபான் அரசு தூய இஸ்லாம் பேசிக் கொண்டிருக்கிறது என்பது தான் சோகம். அதில்லாமல் மக்களுக்கு உதவி செய்ய வந்த ஊழியர்களையும் கிறுஸ்துவத்தைப் பரப்ப முயன்றார்கள் என்று சிறையில் தள்ளியிருப்பதால், எல்லா நிவாரணப் பணியாளர்களும் வெளியேறி விட்டனர்.

***********

உள்ளாட்சித் தேர்தலில் எத்தனை அணிகள்.

உள்ளாட்சித் தேர்தலில் பழைய வியூகங்கள் செயல் படவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் தனியாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட அணி தனியாகவும், ம தி மு க தனித்தும் நிற்கின்றன. உள்ளாட்சித் தேர்தல்கள் பெருமளவில் இல்லாமல், ஊருக்குள் சில ஆயிரம் வாக்குகளுள்ள தொகுதியில் நடப்பதால் அந்தந்த இடங்களில் செல்வாக்குள்ள சிறு கட்சிகள் கூட வெற்றிவாய்ப்புப் பெறும் என்பது ஒரு நல்ல விஷயம். அதிகாரம் பரவலாக்கப் படும் . இதற்கிடையில் ஊராட்சித் தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுவதாய்ச் செய்திகள் வந்துள்ளன. இது ஜன நாயக விரோதம் என்பது மட்டுமல்ல, கிட்டத்தட்ட லஞ்சம் கொடுத்து வாக்குகள் வாங்குவதற்குச் சமானமானதாகும். இது தடுப்பதற்கு அரசில் என்ன முயற்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

************

107 தடா கைதிகள் விடுதலை

பொய்வழக்கில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்தக் கைதிகள் விடுதலையாகியிருக்கின்றனர். இந்தப் பொய்வழக்கின் மூல காரணம் யார் எனக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை பெற்ற இவர்களுக்கு அரசாங்கம் உரிய நஷ்ட ஈடு வழங்கவும் வேண்டும். பகிரங்கமாக இவர்களிடம் அரசு மன்னிப்பும் கேட்க வேண்டும்.

*********

Series Navigation