• Home »
  • அரசியலும் சமூகமும் »
  • இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)

This entry is part of 23 in the series 20010902_Issue

மஞ்சுளா நவநீதன்


***

மூப்பனார் மறைவு

மூப்பனாரின் மறைவால் ஒரு வெற்றிடம் தமிழ் நாட்டின் அரசியலில் உருவனாதை எல்லாருமே உணர்கிறார்கள். மூன்றாவது சக்தியாக ஒரு அரசியல் இயக்கத்தை அவர் கட்டியெழுப்ப முயன்ற போதெல்லாம், பாராளுமன்ற இடங்களுக்காக அதனை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. நேரு குடும்பத்தினர் மீது அளவு கடந்த பக்தி இருப்பினும், அரசியலில் கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருந்த நாகரிகத்தைக் கடைப் பிடித்தவர் அவர். த மா க-வின் எதிர்காலப் பாதை எப்படி இருக்கும் என்று சொல்வதிற்கில்லை. காங்கிரசுடன் சேர்ந்துவிடுமாறு த மா க மீது அழுத்தம் அதிகமாகும் என்பதும் உண்மை. சிதம்பரம் போன்றோர் கீழ் த மா க அமைய முடியுமென்றால் அது தமிழ் நாட்டின் ஜன நாயகத்திற்கு நல்லது.

******

டர்பனில் இனவாதத்திற்கு எதிரான மாநாடு : அமெரிக்கா போவதில்லை

டர்பனில் இனவாதத்திற்கு எதிரான மாநாட்டிற்கு அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் காலில் போவல் போவதாய் இருந்தது . காரணம் : இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் மீது தொடுக்கும் போர் இனவாதப் போர் என்பதாக ஒரு தீர்மானம் ஒரு தனி அமைப்புக் கொண்டு வந்திருப்பதால், நண்பரான ‘இஸ்ரேல் ‘ மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அமெரிக்காவின் பங்கேற்பு மிகச் சாதாரண அளவில் தான் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

இது ஒன்றும் ஆச்சரியப் பட வேண்டிய விஷயமல்ல. கருப்பர்களும் வெள்ளையர்களும் 35 வருடங்கள் முன்பு வரை கூட தனி கிளாஸ் மாதிரி ஒரு பிரிவினைக்குட்பட்டுத் தான் அமெரிக்காவின் சில மானிலங்களில் இருந்தார்கள். ஒரே வகுப்பில் இரு சாராரும் சேர்ந்து படிப்பதற்கான உரிமைக்காகக் கூடப் போராடத்தான் வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்க இனவெறி அரசின் மீது உலகிலிருந்த அனைத்து நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்த போதும் கூட ரேகனின் அரசு இதை ஏற்ற்க் கொள்ளவில்லை. இதற்கு ஒரு நொண்டிச் சாக்கினை ரேகன் தெரிவித்தார். ‘தென் ஆப்பிரிக்க அரசின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது என்பது கருப்பர்களையும் பாதிக்கும். வரிக்குதிரையின் உடம்பில் உள்ள வெள்ளைப் பகுதியைத் தாக்கினால் அது கருப்புப் பகுதிக்கும் வலி தரும் ‘ என்பது அவருடைய வாதம்,.

இன்று இனவாதம் அரசாங்க ரீதியாய் ஒழிந்து விட்டாலும் வேறு பல நுணுக்கமான முறைகளில் கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. அமெரிக்காவில் வெள்ளையர் நாடுகளிலிருந்து குடியேற்ற உரிமை பெறுவது சுலபமாய் இருக்கிறது. அமெரிக்கச் சிறைகளில் கருப்பர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமான விகிதாசாரத்தில் உள்ளது. ஒரே குற்றத்திற்கு கருப்பர்கள் பெறும் தண்டனை வெள்ளையர்கள் பெறும் தண்டனையை விட அதிக காலம் இருக்கிறது. மரண தண்டனை பெறுபவர்களிலும் பெரிதும் கருப்பர்கள் எண்ணிக்கை அதிகம்

***********

உலகமெல்லாம் அகதிகள்

460 பேர் அகதிகளாய் நடுக் கடலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். நாடும் வீடும் இழந்து பஞ்சம் பிழைக்கப் புறப்பட்ட இவர்களை ஏற்றுக் கொள்வதில்லை என்று ஆஸ்திரேலியா தீர்மானமாய்த் தெரிவித்து விட்டது. அதிக எண்ணிக்கையில் ஆஃபகானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாம் இந்தக் கப்பலில் இருக்கிறார்கள். நடுக் கடலில் உடைந்து போன படகிலிருந்து நார்வேயின் வியாபாரக் கப்பல் ஒன்றினால் மீட்கப் பட்ட இவர்கள் ஆஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அகதிகள் பிரசினை ஒவ்வொரு உள்நாட்டு யுத்தத்தின் போதும், ஒவ்வொரு போரின் போதும் மிகப் பெரும் பிரசினையாக உருவாகியிருக்கிறது. ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் சற்று தாராளமாக இப்படி வருவர்களைத் தம் நாட்டில் இணைத்துக் கொண்டுள்ளன. இதில்லாமல், அண்டை நாடுகளிலிருந்து பற்பல காரணங்களுக்காக அகதியாய் வருபவர்களை ஆசிய நாடுகளில் பலவும் ஏற்றுக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் அகதிகள் பிரசினையால் உள் நாட்டுப் பிரசினையைக் கூடச் சந்தித்துள்ளது. இந்தியாவும் வங்க தேசத்திலிருந்தும், ஸ்ரீலங்காவிலிருந்தும் வந்த அகதிகளை ஏற்ற்க்கொண்டுள்ளது. பாலஸ்தீன அகதிகள் ஜோர்டானின் குடியேறியுள்ளனர். ஆனால் போர் இருக்குமட்டும் இந்தப் பிரசினை முடிவடையாது.

கடைசிச் செய்தியாக இந்த 460 அகதிகளில் 150 பேரை நியூ ஜிலாந்து ஏற்றுக் கொண்டுள்ளது. பிறர் இன்னொரு தீவிற்கு அனுப்பப்பட்டு பிறகு அங்கிருந்து வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப் படலாம் என்று தெரிகிறது.

************

தெஹல்கா : ஊழலை நிரூபிக்கப் பெண்களைப் பயன் படுத்தலாமா ?

பெண்களைத் தூண்டில் போலப் பயன் படுத்தி , ராணுவத்தில் உள்ள ஊழலை நிரூபிக்க தெஹல்கா முயன்றுள்ளது. இது பெண்களை இழிவுபடுத்துவதாகும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இந்தக் குரல் பெரும்பாலும் அரசாட்சியில் உள்ள பா ஜ க-விலிருந்து எழுந்துள்ளதால் பெரிதும் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் அரசில் இல்லாதவர்கள் கூட பாரபட்சமில்லாத சிந்தனை உடையவர்கள் கூட , லட்சியம் சிறந்ததாய் இருப்பினும், வழிமுறைகள் தவறு என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் . இது சற்றே சிக்கலான பிரசினை.

பழைய இந்திய இலக்கியங்களில் நச்சுப் பெண்கள் என்ற பெயரில் , பெண்களை எதிரி அரசாங்கத்தில் ஊடுருவி , உளவு வேலை பார்க்கப் பயன் படுத்தியிருக்கிறார்கள் என்று வரலாறு உண்டு. பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கிற ஆணாதிக்க சமூகமும், போகப் பொருளாகவே தம்மை ஆக்கிக் கொண்ட சில பெண்களும் இருப்பது மறுப்பதிற்கில்லை. தெஹல்கா-வினால் பயன் படுத்தப் படாமல், இது போல் முன்பு நிஜமான நடந்த நிகழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கலாம். இப்படிப் பெண்களைப் பயன் படுத்துவது தவறு என்று தான் தோன்றுகிறது.

***********

இரண்டு திருத்தங்கள்

அ மார்க்ஸ் எழுதிய ‘பெரியார் ? ‘ நூல் பற்றி எழுதிய பகுதியில் வழக்குரைஞர் பெயர் அருண்மொழி என்று எழுதியிருந்தேன். சரியான பெயர் அருள் மொழி என்று தெரிவித்தவர்களுக்கு என் நன்றி. அருண்மொழி என்ற பெயர் தமிழின் புணர்ச்சி விதிகளின் படி சரியானதாயினும், அருள் மொழி என்று தான் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

கொளத்தூர் மணி , ராமகிருஷ்ணன் ஆகியோரின் திராவிடர் கழகம் கருணாநிதி ஆதரவல்ல என்றும் நண்பர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு வீரமணி ஆதரவு, வீரமணிக்கு எதிராக இந்தக் குழு, எனவே கருணாநிதிக்கு இது ஆதரவு என்ற தமிழ் மனப் பதிவின் வெளிப்பாடாய் என் குறிப்பு அமைந்து விட்டது. இதுவும் தவறு.

தவறைச் சுட்டிக் காட்டிய வாசக அன்பர்களுக்கு என் நன்றி.

***

Series Navigation