இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)
மஞ்சுளா நவநீதன்

ஜெயலலிதா – ஆறு மாத கெடு
ஆறு மாதம் கழித்து எம் எல் ஏ ஆக முடியாது போனால் என்ன அதற்குள் கோர தாண்டவத்தை ஆடித் தீர்த்து விடுவோம் என்று முடிவு பண்ணி விட்டார் போலிருக்கிறது. திமுக பேரணியின் மீது தாக்குதல், பத்திரிகைப் பணியாளர்கள் மீது தாக்குதல் என்று தொடரும் அட்டூழியங்களில் துணைக்கு நிற்பது – இதெல்லாம் சரிஎன்று வாதிடுவது யார் ? அரசியல் வித்தகர், நேர்மை கோரிப் போராடும் சோ அவர்களே தான். அதில்லாமல் பெரியாரின் வாரிசு வீரமணி. ஜெயலலிதாவிற்கு வேறென்ன வேண்டும் ? வலதுசாரி , ஒரிஜினல் தி க , இடது சாரி என்று எல்லா திசைகளிலிருந்தும் ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது. பாவம் மக்கள்
****
ஆறுமாதம் மட்டுமல்ல – ஐந்து வருடத்திற்கு மந்திரி ஆக முடியாது
சமீபத்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஜெயலலிதாவின் கவனத்திற்கு வந்திருக்கும். ஆறு மாதத்திற்குள் எம் எல் ஏ ஆகாவிடில், ஐந்து வருடத்திற்கு மந்திரி பதவி வகிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது சுப்ரீம் கோர்ட். . அரசியல் சட்ட அமைப்பின் இது போன்ற விதிகள் சில அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப் பட்டவை. சட்ட மன்ற உறுப்பினருக்கு மக்கள் தேர்வு என்ற முத்திரை தான் அவர்களை ஜனநாயக வாதி என்று காட்ட வல்லது. மக்கள் பிரதிநிதி ஆகத் தகுதியற்ற ஒருவர் அரசில் பொறுப்பேற்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு தெளிவாகவே சொல்கிறது. ஐந்து வருடங்களுக்குள் ஒத்துழைப்பு அளித்து தம் மேல் உள்ள குற்றச் சாட்டுகளின் மீது குற்றவாளியல்ல என்று தீர்ப்பு வழங்குமாறு செய்கிற நேர்மையில்லாமல், வாய்தா வாங்கி நாளைக் கடத்திவிட்டு இப்போது மக்கள் தேர்வு என்று கோட்டைக்குள் புகுவது போன்ற ஒரு அசிங்கம் இல்லை. அரசியல் வாதி அசிங்கம் என்றெல்லாம் பார்த்தால் ஒன்றும் நடக்காது என்கிறீர்களா ? அதுவும் உண்மை தான்.
*****
ஒரிஜினல் திராவிடர் கழகம் யார் ?
வீரமணிக்கு எதிராய்ப் போர்வாளை உயர்த்தியிருக்கிறார்கள் எஸ் ராம்கிருஷ்ணன் , கொளத்தூர் மணி என்ற செயல் வீரர்கள். நிஜமாகவே இவர்கள் அட்டைக் கத்தியை உயர்த்திப் பிடிக்கிற மாதிரி நிழற்படம் கூடப் பார்த்தேன். கோமாளித் தனம் மட்டும் தமிழர்களுக்கு எப்போதுமே பிடித்த ஒன்று.
திராவிடர் கழகக் கோட்பாடுகளின் இன்றையப் பொருத்தம் பற்றியே விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை போல விளம்பரம் பண்ணிக்கொண்டுள்ள இவர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. ஜெயலலிதாவிற்கு வாலாக வீரமணியின் தி க மாறிவிட்ட போது , கருணாநிதியின் வாளா(லா)க இவர்கள் உருவாகியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
****
வரவு செலவுத் திட்டத்தில்
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் சென்னை குடிநீர்ப் பிரசினைக்கு ஆங்காங்கே சிறு நீர்த்தேக்கங்கள் அமைக்க முடிவு செய்யப் பட்டது வரவேற்கத் தக்கது. இது போன்ற முயற்சியில் ஈடுபட்ட ஒருவர் ராஜஸ்தானில் இருக்கிறார். அவருக்கு ராமன் மக்சேசே விருதும் கிடைத்துள்ளது.. தேவைப் படின் அவருடைய துணையைப் பெற வேண்டும்.
தர்மபுரி மாவட்டம் இரண்டாய்ப் பிரிக்கப்படுவது வரவேற்கத் தக்கது. சிறிய அளவில் ஆட்சிப் பகுதி இருக்கும் போது , ஆட்சியில் செம்மை ஏற்பட வழியுண்டு. பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்வதும் நல்லதே.
கோதுமை , ரவை போன்ற உணவு வகைகளுக்கு வரி விதிப்பது சரியல்ல.
இந்த வரவுசெலவுத்திட்டத்தை வரவேற்றவர்கள் எதிர்த்தவர்கள் எல்லாம் தம் கட்சிக்கு விசுவாசமாய் இருக்கிறார்கள். இதில் விதி விலக்கு கிருஷ்ணசாமி. நல்ல விஷயங்களையும் எடுத்துச் சொல்லியுள்ளார். வாழப் பாடி ராமமூர்த்தி இந்த பட்ஜெட்டைப் பாராட்டியிருக்கிறாராம். புரிகிறதா ?
****
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் மனித உரிமைகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளதாம். முதல் வகுப்பில் என் சிபாரிசு : கருணாநிதியைக் கைது செய்யப் போன போலிஸ் படை.
****
மஞ்சுளா நவநீதன்
- இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)
- வெற்றியும் அதிர்ஷ்டமும்
- கேட்டால் காதல் என்பீர்கள்…
- முதல் மனிதனும் கடைசி மனிதனும்
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…
- அன்புத்தங்கைக்கு………
- ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்
- டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்
- சிதைந்த இரவிலொன்று
- ஒரு பேறு
- டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)
- எதிாியிடம் ஒரு வேண்டுகோள்
- புரியவில்லை
- ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது
- ரவா பொங்கல்
- உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி
- ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்
- ஆறு சேவியர் கவிதைகள்
- வேகவேகமாக வாழ்வு
- உசிலி உப்புமா.
- குறள்- கவிதையும் நீதியும்
- பாலமாகி சிறந்து நிற்கும் பணி
- இரண்டு கரிகாலன் கவிதைகள்
- தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்
- காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்
- பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.
- விசாரணை