ஒரே நூற்றாண்டில் முப்பது நூற்றாண்டுகள்.

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

இந்திரா பார்த்தசாரதி.

இன்று தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ்த் திரைப்படத்துக்கும் தமிழ் நாடகத்துக்கும் கிட்டியுள்ள அவல நிலைபோல் வேறு எந்த இந்திய மொழியின் கலைத்துறைக்கும் ஏற்படவில்லை என்பது கசப்பான உண்மை. ‘மக்கள் எந்த விதமான அரசாங்கத்துக்குத் தகுதியுடையவர்களோ அதைப் பெறுகிறார்கள் ‘ என்ற அரசியல் கருத்து இலக்கியத்துக்கும் பொருந்தும் என்று செயலற்று இருந்துவிட வேண்டியதுதானா ? இதைப்பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

காலத்துக்கு ஏற்றவாறு மரபைத் தோற்றுவித்துக் கொள்ளக்கூடிய தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய ஆற்றல்தான் இதை ஒரு வாழும் மொழியாக இதுவரை காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. இலக்கியத்தைப் பொறுத்தவரையில், புதிது, பழையது என்று ஒன்றும் இல்லை. அந்தந்தக் கால இலக்கிய கோட்பாடுகளும், சிந்தனைகளும், அந்தந்தக்கால மதிப்புக்களுக்கேற்ப வடிவங்கள் கொள்கின்றன. கம்பனைப் போல் ஏன் ஞானக் கூத்தன் பாடவில்லை என்றோ அல்லது ஞானக் கூத்தனைப் போல் ஏன் கம்பன் பாடவில்லையென்றோ கேட்பது இலக்கிய அறியாமை. ஓர் அனுபவம் இலக்கியப் பிரக்ஞையுள்ள ஒருவனை அந்தக் குறிப்பிட்ட காலத்துக்குரிய முறையில் எப்படிப் பாதித்திருக்கிறது என்பதுதான் அடிப்படையான விஷயம்.

ஆனால் 1971-ல் பதினெட்டு நூற்றாண்டுகள் காலெண்டரை பின்னோக்கிக் கிழித்துவிட்டு சுற்றி நிகழும் புதிய மாறுதல்களைக் காண மறுக்கும் ஒரு கண்மூடித்தனத்தோடு பழமையை நினைத்து அசைபோடும் அப்பாவித்தனம் நம்மைக் கோமாளிகளாகத்தான் காட்டும். அதற்கான ஒன்றின் தொடர்ச்சியாகத்தான் மற்றொன்று ஏற்படுகிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விடக்கூடாது. புதிது, பழையது என்ற சொற்களுக்கு அவை அளவில் பரிபூரணமான அர்த்தம் கிடையாது. ஒன்றின் தொடர்பாகத்தான் மற்றொன்றுக்குப் பொருள். இன்று புதியதாக இருப்பது நாளை பழையதாகிவிடலாம். இதை மனத்தில் கொள்ள வேண்டும்.

இது 1971-ஆம் ஆண்டு விஞ்ஞான முன்னேற்றத்தால் பிரபஞ்சமே குறுகிக் கொண்டு வருகிறது. நாமறிந்த கெடியார காலெண்டர் கணக்கெல்லாம் போய் ஒளி — வருஷங்களைப் பற்றிப் பேசும் காலம். வெளி (Space) பரிபூரணமானது, காலம் பரிபூரணமானது என்ற கருத்து பழங்கதையாகப் போய்விட்டது. பத்தொன்பது நூற்றாண்டுகளாக மேல் நாடுகளில் படிப்படியாக நிகழ்ந்த லெளகிக உலகத்தின் விஞ்ஞானச் சிந்தனை இயக்கங்களினால் பாதிக்கப்படாமல் இருந்து வந்த நம்மை ஒரே நூற்றாண்டில், இவ்வியக்கங்கள் அனைத்தும் சேர்ந்து தாக்குகின்றன. ‘நம்மை ‘ என்று சொல்லும்போது சிறுபான்மையாக இருக்கும் அறிவு ஜீவிகளை மட்டும் குறிக்கிறேன்.

சிறுபான்மையராக இருக்கக் கூடிய காரணத்தினால்தான் இருபதாம் நூற்றாண்டில் மேல் நாட்டில் ஏற்பட்டுள்ள வியக்கத்தக்க மாறுதல்களைப் பற்றிய இவர்கள் பிரக்ஞை, தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாகப் பரவியுள்ள, பண்பாட்டு வழிவந்த ரசனையைக் கண்டு — இருபதாம் நூற்றாண்டு விளைவித்துள்ள சிந்தனைப் புரட்சியினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாத ரசனையைக் குறிப்பிடுகிறேன் — அதிர்ச்சி கொள்ளுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள சிந்தனைப் புரட்சி என்னவென்று முதலில் விளக்க விரும்புகிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டு காலக் கணக்குப்படி இருந்தாலும். ஒவ்வொரு நூற்றாண்டையும் தொடர்ந்து அடுத்த நூற்றாண்டில் உண்டான இயல்பான படிப்படியான மாறுதல்களைப் போலல்லாமல், தொடர்ச்சியே அறுபட்டுப்போன நிலையில் ஒரு புதிய உலகத்தை நாம் இன்று காண்கிறோம். ‘சரித்திரம் ஒரு குப்பைத் ‘ தொட்டி என்று ஹென்றி ஃபோர்டு கூறியது எவ்வளவு உண்மையென்று நமக்கு இப்பொழுது புரிகிறது. 1900-ல் Max Planck தம்முடைய Quantum Theoryயை உலகுக்கு அறிவித்தார். ஃப்ராய்டு என்ற ஒரு புதிய மேதையை உலகம் கண்டு கொள்ளத் தொடங்கியது. 1903-ல் மனிதனை ஆகாயத்தில் பறக்க விட்டார்கள் ரைட் சகோதரர்கள். ஐன்ஸ்டான் 1905-ல் நியூடனின் உலகம் என்ற தெய்வத்தின் மீது முதல் கல்லை விட்டெறிந்தார். Wassily Kandinsky என்பவர் Abstract ஓவியம் வரைந்து உலகைத் திடுக்கிட வைத்தார்.

1914-ம் ஆண்டு ஏற்பட்ட முதல் உலகப்போர் பொருளாதாரச் சிக்கல்களையும் சமுதாயக் குழப்பங்களையும் உண்டாக்கிச் சர்வதேச ரீதியாக அரசியல் ஒழுக்கம் குறைவதற்குக் காரணமாயிற்று. தொழில் முன்னேற்றம் அடைந்த நாடுகளில் புரட்சி உண்டாக்கிக் கம்யூனிஸம் ஏற்பட வகை செய்யுமென்ற கனவு மார்க்ஸின் கணக்கு தவறு என்று நிரூபித்ததுபோல் ஐரோப்பாவிலேயே மிகவும் பின்தங்கியிருந்த நாடாகிய ரஷ்யாவில் புரட்சி உண்டாகி பொதுவுடைமை அரியணை ஏறியது.

ஜெர்மானியப் பேரறிஞன் நீட்சேயினுடைய தத்துவத்தினின்றும் கிளைத்த நாஸிஸம் சற்று அயர்ந்திருந்த உலகத்தை நிமிர்ந்து உட்கார வைத்தது. கம்யூனிஸத்தின் விலையாக லட்சக்கணக்கான மக்கள் ரஷ்யாவில் இறந்தது போல் ஜெர்மனியில் ஒரு தனி மனிதனுடைய கோபம், லட்சக்கணக்கான யூதர்களை கொன்றது.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகமகாப் போரில் ஹிட்லரை நல்லவனாக்கிய ஹிரோஷிமா — நாகஸாகி நிகழ்ச்சி ஏற்பட்டது. ஒரே கணத்தில் லட்சக்கணக்கான மக்களைச் சாக அடிக்கக்கூடிய மாபெரும் சக்தியை மனிதன் கண்டு பிடித்தான். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது, சந்திரனை அண்டை வீடாக்கிய மனிதனின் சாதனை.

மேல் நாடுகளில் மனிதனின் இக்காலச் சிந்தனையை இந்நிகழ்ச்சிகள் எப்படி உருவாக்கியுள்ளன என்பதை அவர்களுடைய இலக்கியத்தினின்றும் இன்னும் மற்றைய கலைத்துறை வாயிலாகவும் அறிகிறோம். 19-ம் நூற்றாண்டில் ஜனநாயகமும், விஞ்ஞானமும் சேர்ந்து, கலைத்துறைக்கு நடுத்தரவர்க்கம் என்ற புதிய சமூகப் பிரிவை அறிமுகப்படுத்தின. அச்சு இயந்திரங்கள் சோஷலிஸ ரீதியாகப் பெரும் அளவில் பரவிய ரசனைக்கு ஈடு கொடுக்கும் முறையில் புத்தகங்களை வெளியிட்டன. ‘பரவிய ரசனை ‘ என்றால் முன் மனநிலை ரசனை என்று அர்த்தமல்ல ‘ என்று ஹாஸ்லிட் கூறியதை இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

நடுத்தர வர்க்கம் என்று இப்புதிய சமுதாயப் பிரிவினர் தம்மைச் சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டுக் காவலர்களாக நியமித்துக் கொண்டதின் காரணமாக போலித்தனம் என்பது வாழ்க்கையின் மேல்வரிச் சட்டமாக வழங்கலாயிற்று. இந்நிலையில்தான் இருபதாம் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் மனிதனின் சிந்தனையை ஆவேசமாகத் தாக்கின.

‘1859–ல் கடவுள் இறந்தார் ‘ என்று சொல்லப்படுவது வழக்கம். அந்த ஆண்டுகள் டார்வின் மனிதனின் தோற்றம் பற்றி எழுதித் தம் புத்தகத்தை வெளியிட்டார். மனிதனுக்கு நம்பிக்கை ஊட்டும் அளவுக்கு கடவுளுக்கு நிகரான வேறொரு கருத்து மனிதனின் சிந்தனையை கவரவில்லை. இதனால் விளைந்த ஏமாற்ற நிலையில்தான் இருபதாம் நூற்றாண்டு வந்தது. சர்வ சக்தி படைத்த கடவுளுக்குப் பதிலாக விஞ்ஞானமும் ஜனநாயகமும் தோற்றுவித்த ஒரு சர்வ சக்தியான சமுதாயம் உருவாகி விதியை எதிர்த்துப் போராடிய பழம் கிரேக்க இலக்கியக் கதாநாயகர்களைப் போல், மனிதன் தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த உருவத்தை இழந்து, அதற்காகப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இச்சூழ்நிலையில் தோன்றியவர்கள் தாம் காஃப்கா, ஜாய்ஸ் ஃபாக்னர் போன்ற இலக்கிய ஆசிரியர்கள். கடவுள் என்ற அஸ்திவாரத்தின் மீது எழுந்த கட்டடம் இடிந்து விழுந்த பிறகு, மனிதன் உலகில் பிறந்து விட்டதினால் வாழ வேண்டுமென்ற காரணத்தினால், வாழ்க்கை என்றால் என்னவென்று புனராலோசனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதன் ஒருவனால்தான் இவ்வாறு சிந்திக்க முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். நிகழ்ச்சிகள் ஏற்பட்ட பிறகுதான் நாம் அவற்றைப் பற்றி யோசிக்க முடியுமேயொழியே ‘யாரோ சொல்லிவிட்டுப் போனார்கள் ‘ என்பதற்காக ஆதிக்கம் செலுத்தும் நுண்மையான நம் கொள்கைகளின் (abstract theories) அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது. அப்பொழுது தோன்றுகிற இடைக் காலப் பிரச்சனைகளைப் பற்றி முழுவதும் கோவையாகச் சிந்தித்ததின் விளைவாகப் பல கேள்விகள் எழுந்தன. கேள்விகளுக்குக் கணித ரீதியாகச் சரியா, தப்பா என்ற விடைகள் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

‘தத்துவம் ரொட்டி கட்டித்தராது ‘ என்பது ஒரு பழமொழி. இத்தகைய சிந்தனைப் போக்கினால் உலகில் மனிதனின் தனிமை இன்னும் தீவிரமாக உணரப்பட்டது. பிறவி, தன்மை, மரணம் –ஆகிய மூன்றைப் பற்றி மேலும் அதிகமான அளவு சிந்திக்கும்படியாக, Frankenstein உருவெடுத்த விஞ்ஞானமும், காலாவதியாகிவிட்ட சமுதாயக் கோட்பாடுகளும், பாதுகாப்பு இல்லாத உலகமும் மனிதனைத் தூண்டின. ஆகவேதான் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் ஓர் ஒதுங்கிய தன்மையைக் (alienation) காண்கிறோம்.

இறந்த காலத்தினின்றும் துண்டிக்கப்பட்ட ஒரு நிலையில், கடவுள் என்ற கருத்துடன் உடன்பாடு கொள்ள முடியாத அவஸ்தையில், தனக்குத்தானே — தான் மனிதன் யார் என்று நிர்ணயிக்க வேண்டும் என்ற ஒரு எக்ஸிஸ்டன்ஸியலிஸ நிர்பந்தத்தில் சிந்திக்கக் கூடிய ஒவ்வொரு மனிதனும் முழு பிரக்ஞையும் குழம்பாத ஸிஷோப்ரேனிக்காக இருப்பதுதான் இயற்கையோ என்று எண்ணும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையின் அடிப்படையில்தான் Nabokov வின் ‘Pale Fire ‘, ஜீனோவின் Our lady of the flowers, Grassன் The Tin Drum. பெக்கெட்டின் Wattயையும் Anthony Burgessன் A clock work Orangeயையும். Updikeன் The Centaurயையும், Joseph Hellerன் Catch-22யையும் படிக்கவேண்டும். அப்பொழுதுதான் இவர்களுடைய இலக்கிய நேர்மை நமக்குப் புரியும். Roy Mc Muller கூறுகிறார். Ultimate reality is not made of waves and particles but rather bundles of abstract event ‘s. possibly discontininous and finally un-knowable ‘ விஞ்ஞானத்தைப் பற்றி அவன் கூறும் உண்மை வாழ்க்கைக்கும் பொருந்தும். யூக்லிட் கண்ட உலகம் இப்பொழுதில்லை. என்பதுதான் இன்றைய எதார்த்தம். இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்த்தால்தான் இக்காலத்திய இலக்கிய நூல்கள் ஏன் இவ்வாறு அமைந்திருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்.

பத்தொன்பது நூற்றாண்டுகளாக எந்தவித மனச் சலனமுமில்லாமல் ஏற்றுக் கொண்டிருந்த கொள்கைகள் சிதறுண்ட நிலையில், அதிர்ச்சிக்கு உள்ளான மனிதன், தன் அதிர்ச்சிக்கு இலக்கிய உருவம் கொடுக்கிறான். அதன் காரணமாகத்தான், இக்காலத்திய எழுத்தில், ஓர் அசாதாரணமான மூல சக்தி (raw power) இருக்கிறது. அதிர்ச்சியை வெளியிடுவதற்கு இதைக் காட்டிலும் வலுவான காரணம் இல்லை. பெக்கெட்டின் கதையொன்று சேற்றில் ஊர்ந்து செல்லும் ஒரே நிர்வாணமான மனிதனைப் பற்றியது. Anthony Burgess ஹைவேயில் செல்லும் மனிதர்கள் மீது காரைச் செலுத்தி மகிழும் அலெக்ஸ் என்ற இளைஞனைப் பற்றிக் கூறுகிறார்.

Norman mailer கொலை,பாலுறவு ஆகியவற்றை பற்றி, ஒரு மனிதனின் தினசரி நிகழ்ச்சிகளைச் சொல்லுவது போல், மிகச் சாதாரணமாக எழுதுகிறார். மனித இனத்தையே ஒரு கணத்தில் அழித்துவிடலாம் என்ற அச்சம் அப்பொழுது இருந்து கொண்டிருக்கும்போது, மனிதத் துவத்துக்கே அர்த்தமில்லாமல் போய், விஞ்ஞானமும் வளர்ந்து விட்ட சமுதாயம் பூதம் தனிமனிதனை விழுங்கி ஜீரணித்துக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தினின்றும் ஒதுங்கியவர்கள் தங்கள் இருப்பை இப்படிக் கூக்குரலிட்டுத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. ‘The lone wolf has to howl more intensely than a member of the pack ‘ என்பார்கள்.

இருபதாம் நூற்றாண்டில் அறிவுத் துறைகளைத் தனித் தனியாகப் பகுத்து முத்திரையிட முடியாது. விஞ்ஞானமும், கலையும் வெவ்வேறு உலகங்கள் என்ற நினைவுப்போய், ஒன்றன் கருத்து இன்னொன்றைப் பாதிக்குமளவுக்கு மனிதனின் சிந்தனை வளர்ந்து வருகிறது. இக்காலத்திய கவிதை, முன் நூற்றாண்டு கவிதைகளோடு கொண்ட தொடர்பைக் காட்டிலும், ஒரு abstract ஓவியத்துடனோ அல்லது சொல்லப் போனால் Quantum mechanics கொள்கையுடனோ இன்னும் அதிகத் தொடர்புடையதாக இருக்கலாம். ஸ்டாபன் ஸ்பெண்டர் கவிதையொன்றைப் பாருங்கள்.

Now over these small hills they have built the concrete
That trails black wire;
Pylons, those pillars;
Bare like nude, giant girls that have no secret ‘

இது விஞ்ஞான — தொழில் முன்னேற்றக் காலத்திய கவிதையாகத்தான் இருக்க முடியுமென்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். Poblo Nerudaவின் கவிதை புரிந்தும் புரியாமலும் ஒரு abstract ஓவியம் போல் இருக்கிறது. ‘கவிதை ஏதோ தெரிவிக்க முயலுமேயன்றி அதைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை ‘ என்பது T.S. Eliot வாக்கு.

‘If you ask me where I have been
I must say it happens
I must speak of the soil which the stones abscure
Of the river that eduring destroys itself
I know only the things that the birds lose
The sea left behind, or my sister weeping ‘

நாவல் ஒரு கதையை மட்டும் சொல்லத்தான் எழுதப்படுகிறது என்பது பழக்காலக் கருத்து. வண்ணத்தை வண்ணமாகக் காணவேண்டுமென்று ஓவியர்களும், நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிகளாகவே காணவேண்டுமென்று நாடக ஆசிரியர்களும் ஒரு புதுவகையான இயக்கத்தை இக்காலத்துக்கு ஏற்ப உருவாக்க வரும்போது, கதையை ஏற்கெனவே தீர்மானித்து, திட்டமிட்டு அதன்மூலம் உலகை உய்விப்பதற்கான கருத்துக்களை, கதாபாத்திரங்கள் என்ற உருவகங்கள் முலம் காட்டவேண்டுமென்று நாவலாசிரியன் முயன்றால், அவன் எவ்வளவு நூற்றாண்டுகள் சிந்தனையில் பின் தங்கிவிடுகிறான் என்பதைத்தான் காட்டும். G.S.Fraser கூறுகிறார்:

‘A novel is never an exposition of a previously
determined scheme of ideas;
but is instead merely an exploration
of the variety of life through realistic
prose narrative in the hope of finding a pattern ‘

பரிபூரணம் என்பதற்கு அர்த்தமில்லை என்று விஞ்ஞானம் நிரூபித்து விட்டது. நாம் காணும் இவ்வுலகில் கதாநாயகர்களுக்கும் கதாநாயகிகளுக்கும் வில்லன்களுக்கும் இடமில்லை என்று அறிந்து கொண்டால்தான் இக்கருத்து நமக்குப் புரியும்.

எந்தவிதமான மனத்திரைகளும் இல்லாமல் மனிதனை அவனுடைய சுய உருவில் காண முயன்ற ஃப்ராய்ட் தத்துவத்தின் காரணமாக, இருபதாம் நூற்றாண்டில் நாடகம், மனித வாழ்க்கையை மேற்பூச்சு இல்லாமல் அப்படியே படம் பிடித்துக் காட்ட முயல்கிறது. நவீன நாடக இயக்கம் 1811–ல் தொடங்கியது என்று சொல்லலாம்.

அதுதான் இப்ஸனின் Ghosts வெளிவந்த வருஷம். அதற்குப் பிறகு The naturalist Theatre ‘, ‘Symbolist Theatre ‘, ‘The Theatre of the Absurd ‘, ‘The Theatre of the Derision ‘, ‘The Epic Theatre ‘, ‘The Anti-Theatre ‘, The Happenings ‘ என்று பலவிதமான முத்திரைகளோடு நாடக இலக்கியம் வளர்ந்தாலும் இவற்றை ஓர் அடிப்படையான வேறுபாட்டுடன் காணலாம். ‘எல்லாமே மாறிவிட்டது ‘ என்று கோபிப்பவர்கள், ‘ஒன்றுமே மாறவில்லை ‘ என்று கோபிப்பவர்கள் என்று மனித சமுதாயத்தை Osborne இரண்டு வகையாகப் பிரித்திருப்பது போல நாடக உலகமும் இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கிறது. இவை ‘Majority theatre ‘ என்று மேல் நாடுகளில் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இக்கால நாடகங்களின் பொதுவான அம்சம் ‘total theatre ‘ என்பது. வெறும் இலக்கிய அனுபவத்துக்காக மட்டும் நாடக ஆசிரியர்களைப் பற்றி Peter Brook என்று பிரபல நாடக இயக்குனர் கூறுகிறார்.

‘He is a poet, but not a poet of words, he is a poet of words acted, of scenes-set of players performing ‘ ‘ Samuel Backettoன் Waiting for Godot இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு சொற்கள் காட்சிகளுடன் பிரிக்க ஒண்ணாதபடி இணைந்து உணர்ச்சிகள் கதாபாத்திரங்களின் பாவனை மூலம் உருவாக்கிப் பின் சொற்களாக வெளிவந்து இந்நிலையில் இவை அனைத்தும் ஓர் இசை ஒழுங்குடன் அமைகின்ற கட்டுப்பாடே— சூழ்நிலையே — நவீன நாடக அமைப்பாகும். நவீன நாடகங்கள் வெற்றி பெறுவதற்குக் கதாசிரியன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவ்வாசிரியனின் தகுதிக்கு இணையான நாடக டைரக்டர். டென்னஸி வில்லியம்ஸின் வெற்றிக்கு முக்கிய காரணம் எலியா காஸான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதுவரை நான் சொன்ன கருத்துக்களின் பின்னணியில் இக்காலத் தமிழ் இலக்கியத்தை நாம் ஆராயும்போது, அறிவு ஜீவிகளுக்கு வேதனை ஏற்படுவது இயல்பு. Hans Enzensberger என்ற ஜெர்மானியக் கவிஞன் சொன்னான்.

The minority has the majority,

The dead are out voted ‘ என்று. தமிழகத்தில், ‘The majority still has the majority, the dead are haunting us ‘ என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. சிறுத்துவிட்ட உலகத்தின் சிந்தனை இயக்கங்களால் பாதிக்கப்பட்ட இலக்கிய ஆசிரியர்கள் சிறுபான்மையராய் இருக்க, இன்றும் தமிழ்நாடுதான் பிரபஞ்சம் என்று நினைப்பவர்கள் பெரும்பான்மையராய் இருந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் சமுதாயப் புரட்சியைப் போல் ஒன்று ஏற்பட்டது என்பது உண்மைதான். ஆனால் மேல் நாட்டில் இத்தகைய புரட்சிக்குக் காரணமானவர்கள் மிகப் பெரிய சிந்தனையாளர்களாக இருந்தார்கள் என்ற அதிர்ஷ்டம் நமக்கில்லை. இரண்டாம் தரத்துக்கும் குறைவான இத்தமிழ்நாட்டுச் ‘சிந்தனையாளர்கள் ‘ இலக்கியம், நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் தலைமையை ஏற்கத் தொடங்கியதன் காரணமாக அதற்கேற்ப நம்முடைய இக்காலக் கலைத்தரமும் அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.

தமிழ் நாட்டில் சமுதாயப் புரட்சியைப் போல் ஒன்று ஏற்பட்டது என்று நான் சொன்னேன். இதற்கு விளக்கம் தேவையாக இருக்கலாம். புரட்சி என்றால், ஜாதியின் பெயராலும், பொருளாதாரச் சீரழிவாலும் துன்பப்படும் மக்களிடத்து ‘உங்கள் துயரத்துக்கு இதுதான் காரணம் ‘ என்று, ‘ஒரு நாயைச் சுட்டிக் காண்பித்து, அதைத் தூற்றிக் கல்லெறிந்து, தூக்கிப் போடுவது மட்டுமல்ல. கடவுளைப் பீடத்திலிருந்து இறக்கித் தாம் அதில் ஏறி உட்கார்ந்து கொள்வதுமல்ல… சிவ வாக்கியர் பாடலொன்று நினைவுக்கு வருகிறது.

‘ஊரிலுள்ள மனிதர்கள் ஒரு மனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டுச் செம்மை வைத்து இழுக்கிறீர்… ‘

ஒரு சமுதாயப் புரட்சி ஏற்பட்டிருந்தால் உண்மையாகவே அச்சமுதாயப் புரட்சிக்குக் காரணமானவர்கள், புத்தரைப் போலவோ அல்லது ஏசுநாதரைப் போலவோ அல்லது லெனினைப் போலவோ மிகப் பெரிய சிந்தனையாளர்களாக இருந்திருந்தால், நம்முடைய இலக்கியம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்நிலையில் இருக்காது என்று உறுதியாகக் கூறலாம்.

சமூகத்தில் கிடைக்கக்கூடிய சில்லறைப் பலன்களை பகிர்ந்து கொள்ளுவதற்கான ஓர் இடைக்கால எழுச்சிதான் புரட்சி என்ற போர்வையை அணிந்து கொண்டது எனலாம். பரவலாகப் பார்க்கும் போது, பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழனுக்கும், இக்காலத்திய தமிழனுக்கும் சிந்தனை வளர்ச்சியைப் பொறுத்த வரையில், ஒரு மாறுபாடும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முன்பு சமயத்தின் பேரில் கடவுளைக் கோயிலில் வைத்துக் கும்பிட்டான்; இன்று ஜனநாயகாத்தின் பேரில் மனிதனை தெயவமாக்கிக் காலில் விழுந்து வணங்குகிறான். நம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ‘புரட்சி ‘ இவ்வளவு தான்.

பழைய தமிழ் இலக்கியம், தமிழ் நுண் கலைகள் ஆகியவற்றி வாரிசாகப் பிறந்த நமக்கு அவற்றின் தரத்துக்கு இணையான தகுதி இருந்தால்தான் அவற்றினின்றும் மாறுபட்டு புதிய இயக்கங்களைத் தோற்றுவிப்பதற்கான தன்னம்பிக்கை ஏற்படும். அத் தகுதி இல்லாத ஒரு தாழ்வு மனப்பான்மையின் காரணமாக அவற்றைப் பற்றியே வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருப்பது ஒரு சுலபமான பயிற்சி. அரசியலாளர்கள் தம்மை இலக்கியவாதிகளாகக் கூறிக் கொள்ளும்போது இப்பயிற்சிக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது.

ஆட்சியிலுள்ளவர்களை எதிர்த்துத் தம் கருத்தை வலியுறுத்திய ஒரு சிந்தனைப் பாரம்பரியம் தமிழ்நாட்டில் மிகவும் அருமையாகத்தான் இருந்திருக்கிறது. தொல்காப்பியத்தில் ‘செவியறிவுறூ உ ‘ என்ற ஒரு துறை காணப்படுகிறது. அரசன் தவறு செய்தால் அவனுக்கு நியாயத்தை எடுத்துக்கூற வேண்டிய கவிஞர்களின் பொறுப்பை இத்துறை விளக்குகிறது. புறநானூற்றில் இத்துறையின் கீழ் சில பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. திருமழிசை யாழ்வார் பல்லவ மன்னனைப் பாடமறுத்ததை பற்றிய வரலாற்றுச் செய்தியொன்றுண்டு.

மகேந்திர பல்லவனுடன் முரண்பட்டு ‘யாமார்க்கும் குடியல்லோம் ‘ என்று திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். கம்பர் சோழ அரசனுடன் மாறுபட்டதாக ஒரு செய்தியும் நாம் கேட்கிறோம்….. ஆனால் இவற்றையும் இன்னும் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தவிர ஆட்சியாளர்களைத் திருப்தி செய்தே பலனடைந்து வந்திருக்கிறது. நம்முடைய சிந்தனை பாரம்பரியம் ஆகவே இக்காலச் சூழ்நிலையில் ஒரு புதுமையும் இல்லை என்று சொல்லத்தான் இதைக் கூற வந்தேன்.

வெள்ளையர் ஆட்சி ஏற்பட தொடங்கிய காலத்தில், புதியதொரு நாகரிகக் கலப்பின் காரணமாக மக்களுடைய சிந்தனையிலும், வாழ்க்கை மதிப்புகளைப் பற்றியும், ஏற்பட்ட மாறுதல்களைக் குறிப்பிடும் இலக்கிய ஆசிரியர்கள் யாருமே தமிழில் இருந்ததாகத் தெரியவில்லை. ஓர் ஆனந்தரங்கம் பிள்ளை டைரியை மட்டும் வைத்துக் கொண்டு, இக்கூற்றை மறுக்க முடியாது. இச் சமயத்தில்தான் நடைமுறை வாழ்க்கைக்குப் புறம்பான சிற்றிலக்கியங்கள் புற்றீசல்கள் போல ஏராளமாகப் பெருகின. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழில் முப்பெரும் நாவல்கள் தோன்றின.

ஆனால் வங்காள மொழியில் இதே காலத்தையொட்டி ஆரம்பமான நாவல் இலக்கியம் மேலும் பரவலாக வளர்ந்து இன்று ஒரு தனிச் சிறப்பைப் பெற்றிருக்கும் போது, தமிழ் இலக்கிய வளர்ச்சி பரவலாக இல்லாமல் முப்பெரும் நாவல்கள் ஊட்டிய நம்பிக்கை சிதைந்து. இப்பொழுது ஒரு குறுகிய வரையறையினரால் மட்டும் அனுபவிக்கப்பட்டு வருகிறது என்பதுதான் இம்மொழியின் துர்பாக்கியம் வங்காள மொழியிலும், மராத்தியிலும், மலையாளத்திலும் இலக்கிய ரசனையுள்ள பல வாசகர்கள் இருக்கிறார்கள்; தமிழில் இலக்கியம் ஒரு Consumer Product ஆக இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. இதற்குப் பிரபல பத்திரிக்கைகள் ஒரு முக்கிய காரணம்.

இலக்கியத்தை முழுநேரப் பணியாகக் கொள்ளும் ஓர் இலக்கிய ஆசிரியன் பத்திரிக்கைகளை நம்பித்தான் வாழ வேண்டும். தனியாகப் புத்தகங்களை வெளியிட்டு அவனால் ஜீவனம் நடத்த முடியாது. அவன் புத்தகங்களைத் தனியாக வெளியிட பிரசுராலயங்களும் தயாராக இல்லை.

தனியாகப் புத்தகம் போட்டு ஒரு சிலரால் பலனடைய முடிந்ததென்றால் அதற்கு வேறு பல காரணங்கள் உண்டு Journalismத்துக்கும். இலக்கியத்துக்கும் வேறுபாடு அறியாத குழப்பத்தில், பத்திரிக்கைகளும், இலக்கிய ஆசிரியர்களும், தாங்கள் இலக்கிய பணி செய்து வருவதாக நம்புவதைக் கண்டு நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கும், திரைப்பட நட்சத்திரங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. திரைப்படக்காரர்கள் அரசியல் தலைவர்களாக வந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆகவே இன்று நாம் பார்க்கும் பிரபல தமிழ்ப்பத்திரிகைகள், அவை நம்பும் மானசிகமான ‘இலக்கியப் பணி ‘யைத் தாங்கள் தொடர்ந்து நடத்துவதாகத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டுமென்றால், அரசியல் தலைவர்களையும், திரைப்பட நட்சத்திரங்களையும், இலக்கிய ஆசிரியர்களாக ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென்று உணரத் தொடங்கி அவ்வாறே செயல்பட்டு வருகின்றன.

வாசகர்கள் இதைத்தான் வேண்டுகிறார்கள் என்பது அவர்கள் இதற்குக் கூறும் சமாதானம். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய அவல நிலை…. சராசரிக்கும் சற்று அதிகமான வாசகர்களுக்கென்று நடத்தப்படும், ஒரு லட்சத்துக்கும் சற்று கூடுதலாக விற்கும், மலையாள மாத்ருபூமியைப் போல், அந்தத்தரமும், பிரபலமும் வாய்ந்த தமிழ்ப் பத்திரிகை தமிழ்நாட்டில் இல்லை என்பது வெட்கக்கேடு.

தமிழில் புதியனவற்றை ஏற்றுக் கொள்வதற்கான ஓர் எதிர்ப்பு, சரித்திரப் பூர்வமாகப் பார்க்கும்போது என்றுமே இருந்ததில்லை என்றுதான் தோன்றுகிறது. இந்த மனப்பான்மை கடந்த நூற்றைம்பது வருஷங்களாகத்தான் இருந்து வருகிறது. இதற்கு அரசியலும் ஒரு வகைக் காரணமாக இருக்கலாம். ‘பழையனவையெல்லாம் தூய்மையானவை. புதியனவற்றுக்கு இடமில்லை ‘ என்று கருதும் பத்தாம் பசலிப் போக்கும், ‘பழையனவையெல்லாம் குப்பைக்கூடை; நான் இப்பொழுது எழுதும் எழுத்துத்தான் இலக்கியம் ‘ என்ற அசட்டுத்தனமும் இக்காலச் சிறுமை; தமிழ்மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஒரு தொடர்ச்சி இருந்து வந்து கொண்டிருக்கிறது என்றால் பழையன கழிதலும், புதியன புகுதலும் கால வழுவல் என்ற கருத்தை இலக்கணத்தில் ஒப்புக்கொண்டு ஆதரித்த விவேகந்தான். கடந்த இருநூறு வருஷத்திய தமிழர்களைக் காட்டிலும் முன்னிருந்தவர்கள் புத்திசாலிகள் என்பதை இது வலியுறுத்தும்.

இலக்கியத்தில் இதுதான் சொல்லப்படவேண்டும் ‘இது சொல்லப்படக்கூடாது என்ற வரையறையை தொல்காப்பியர் எதிர்க்கிறார். இது உங்களுக்கு ஆச்சர்யத்தைத் தரலாம்.

‘அறக்கழிவு உடையன பொருட்பயம் படவரின்
வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப ‘

உலக ஒழுக்கத்துக்கு மாறுபட்ட செய்திகள், பொருட் சிறப்புடன் நல்ல முறையில் கூறப்பட்டால். அவற்றையும் இலக்கிய வழக்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இதன் கருத்து புதிய சிந்தனை என்பது மட்டுமல்லாமல், அச்சிந்தனையைத் தெரிவிக்க பழைய மரபு போதாவிட்டால், புதிய இலக்கிய மரபைத் தோற்றுவிக்கலாம் என்கிறது தொல்காப்பியம்.

‘விருந்தே தோறும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே ‘

என்று ‘விருந் ‘தை விளக்குகிறார் தொல்காப்பியர். ‘புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல் வழியின்றித் தானே தோற்றுவித்தல் ‘ என்கிறார் இளம்பூரணர்.

தற்காலத்தில் மேல் நாடுகளில் நாம் காண்கின்ற நம்பிக்கையின்மை, ஏமாற்றமும், மரபு எதிர்ப்புணர்ச்சியும், ஓர் ஒதுங்கிய தன்மையும், சொற்களுக்கு அலங்காரம் செய்யாமல் அப்படியே சொல்லுகின்ற ஓர் மூலசக்தியும் (Raw Power) நம் நாட்டுச் சித்தர் பாடல்களிலும் பார்க்கிறோம். உதாரணத்துக்குச் சில பாடல்களை மட்டும் கூறுகிறேன்.

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா,
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முனே

வாயிலே குடித்த நீரை எச்சல் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்ப வேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்றுநீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்த சொல்லுமே

நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமா நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?

இவையும் சிவவாக்கியப் பாடல்கள்.

மரணம் என்ற யதார்த்தத்தை எதிர் நோக்கத் துணிவில்லாமல் வாழ்க்கையினின்றும் தப்பித்துக் கொள்ள தென்றல், நிலா, பெண், இன்பம் என்று பேசும் Romanticistகளைப் பாம்பாட்டிச் சித்தர் எப்படிச் சீறுகின்றார் பாருங்கள்.

‘நாறிவரும் எச்சில் தனை நல்லமுதமென்றும்
நண்ணுஞ்சளி நாசிதனை நற்குமிழ் என்றும்
கூறுவார்கள்….. புத்தியில்லாக் கூகை மாந்தர்கள் ‘

இக்காலத் தமிழ் இலக்கியத்தின் துர்பாக்கியம் சித்தர் மரபைப் புரிந்து கொள்ளாதவர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான். சித்தர் மரபும், பார்க்கப் போனால் எஸ்டாபிலிஸ்மென்டோடு ஒட்டாமல் இருக்கிறது. இது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

நான் தொடக்கத்தில் இருபதாம் நூற்றாண்டில் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டு வரும் மாறுதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையாகிய தமிழ்நாட்டு அறிவு ஜீவிகள் என்று குறிப்பிட்டேன். இது ஆங்கிலம் அல்லது வேறு மொழி அறிவு உடையவர்கள் எல்லாரையும் குறிப்பிடுமா என்று கேட்கப்படலாம். வேற்று மொழி அறிவு இருந்தால்தான் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லமுடியாது.

ஆங்கில அறிவு இல்லாமலேயே, சமூக இயல் விஞ்ஞானிகளுக்குத் தேவையாக இருக்கக்கூடிய செய்திகளை எளிமையாகவும் அடக்கமாகவும் அழகாகவும் கூறியுள்ளார் டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் ‘கண்டதும் கேட்டதும் ‘ ‘நினைவு மஞ்சரி ‘ போன்ற நூல்களிலே. ஆகவே இது ஒவ்வொருவருடைய கற்பனையையும், ரசனையையும், புதிய விஷயங்களைக் கேட்டு அவற்றால் பாதிக்கப்படும் மனச்செறிவையும் பொறுத்தது என்று நினைக்கிறேன் ஒருவர் ஆக்ஸ்ஃபோர்டில் படித்து, ஆங்கிலத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கலாம். அதற்காக அவர் வைதீஸ்வரன் எலியட்டின் கவிதையினால் பாதிக்கப்படுவது போல் பாதிக்கப்படவேண்டுமென்ற அவசியமில்லை. அதனால் தான் பெரிய ஆங்கிலப் பேராசிரியர்களாய் இருந்தாலும் புதிதாக எழுதும் தமிழ் எழுத்தாளர்களுடைய கதைகளில் ‘ப்ளாட் ‘ இல்லை என்று அவர்கள் குறைப்பட்டு கொண்டால் நாம் அதைக் கண்டு ஆச்சர்யப் பட வேண்டியதில்லை நம் நாட்டில் தலைச் சிறந்த விஞ்ஞானியும் சந்திரனைப் பாம்பின் வாயிலிருந்து மீட்பதற்குக் கூடும் லட்சக்கணக்கான மக்களில், ஒருவராக இருப்பது நாமறிந்த செய்தி. முப்பது நூற்றாண்டுகளையும் ஒரே சமயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

***

‘இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் ‘ புத்தகத்திலிருந்து

***

Series Navigation