பாராட்டு

This entry is part of 13 in the series 20010527_Issue

பாரி பூபாலன்


உள்ளம் குளிர்ந்தது அவனுக்கு. தன் மேலாளர், தான் செய்யும் வேலை விஷயமாக தன்னைப் பாராட்டியதைக் கேட்டு அவனுக்கு ஒரே சந்தோஷம். தன்னைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தனக்கு நன்றி கூட சொல்லியதால் அவனுக்கு அவனுடைய வேலையின் மீது இன்னும் பற்றுதல் ஏற்பட்டது. மேலாளரின் மீது மேலும் மதிப்பு கூடியது. அவர் கூறிய வார்த்தைகளை மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்தான். ‘THANK YOU FOR DOING THIS. ‘ அவர் கூறிய வார்த்தைகளும், அந்த வார்த்தைகளைச் சொன்ன முறையும், அப்படிச் சொல்லும் போது கொண்ட முக பாவமும் இவை வெறும் உதட்டளவில் இருந்து வந்த வார்த்தைகளாகத் தோன்றவில்லை. நன்றியுணர்வும் பாராட்டுதலும் அவரது உள்ளத்திலிருந்து வந்ததாக, அவர் உண்மையைக் கூறியதாக, அவரிடத்தில் ஒரு ஈடுபாட்டை உருவாக்கக் கூடியதாக இருந்தது.

சிந்தித்துப் பார்த்தான். இது தேவையா ? இந்த பாராட்டுதலும் நன்றி கூறுதலும் தன் மேலாளருக்கு அவசியமா ? தான் என்ன இலவசமாகவா வேலை செய்தோம் ? வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், வேலை இருந்தாலும் இல்லாவிட்டலும், நாளுக்கு குறைந்த பட்சம் எட்டு மணி நேரத்தாளில் பதிவாகிவிடுகிறது. அதன்படி மாதமிருமுறை சம்பளம் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்து விடுகிறது. இப்படி செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி நேர் செய்துவிடும் போது, கூட போனஸாகக் கிடைக்கும் இந்த பாராட்டுதலும் நன்றி கூறுதலும் தம்மை இந்த மேலாளருக்கும், அவர் மூலம் அவரைச் சார்ந்த இந்த நிறுவனத்துக்கும் நன்றிக்கடனாளியாக ஆக்கி விடுவதை உணரத்தான் செய்தான் அவன்.

பல்வேறு இடங்களில், பல்வேறு மேலாளர்களிடம் பணியாற்றி அனுபவப்பட்டதால், அவனால் அந்த மேலாளர்களை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

சக ஊழியர்கள் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசினாலும், எந்த காரியத்தையும் மிக எளிதாகவும், சீக்கிரமாகவும் செய்து முடிக்கும் வேலைத்திறனைப் பற்றி ஆச்சரியமாக விவரித்தாலும், மேலாளர் ‘அதுதான் அவனது வேலை. அவன் அப்படிச் செய்வதனால்தான் இந்த வேலையில் இருக்கிறான், அவனை இங்கு வேலைக்கு வைத்திருக்கிறோம். இதிலென்ன ஆச்சரியம் ? ‘ என்று கூறும் போது அந்த இடத்தில் அவனுக்கு எந்தப் பிடிப்பும் வரவில்லை. செய்யும் வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைத்தாலும், ஊதியத்திற்கு மேல் ஏதோ ஒன்று அவனுக்கு வேண்டியதாக இருந்தது. அது அந்த இடத்தில் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவனால் அந்த இடத்தில் நெடுநாள் ஊன்றி இருக்க முடியும் எனத் தோன்றவில்லை. அப்படி ஊன்றி இருக்கவும் அவன் விரும்பவில்லை.

ஒரு மேலாளருக்கு தன் கீழ் நல்ல முறையில் வேலை செய்யும் நபரை பாராட்டுவதோ அல்லது நன்றி கூறுவதோ ஒரு அவசியமான விஷயமாகத் தோன்றவில்லை. வேலைக்கு கூலி என்றிருக்கும் பட்சத்தில் தான் எதற்கு இவர்களைப் பாராட்ட வேண்டும் ? எதற்கு நன்றி கூற வேண்டும் ? எனக்காக ஏதாவது செய்தார்களா என்ற மனப்பான்மையுடன் இருப்பது தவறாகவும் தோன்றவில்லை. அவரவர் அவரவரது வேலையைக் குறித்த நேரத்தில் சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் அங்கே எந்த ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் அப்படி ஒருவரைப் பாராட்டும் போது, ஒருவர் செய்த வேலைக்கு நன்றி கூறும் போது அந்த இருவருக்குமிடையே ஒரு நட்புறவு வளர சாத்தியமாகிறது. அந்த நிறுவனத்தில் ஒரு பிடிப்பும் ஈடுபாடும் ஏற்படுகிறது. அதனால் அங்கு பணியாற்றும் மேலாளரிடம் நீண்ட நாள் தொடர்ந்து வேலை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.

அந்த பாராட்டுதலால், நன்றி சொல்வதால் ஏற்பட்ட மகிழ்வும் நிறைவும் அவனுக்கு அவன் செய்யும் வேலையின் மதிப்பை அவனுக்கு உணர்த்துவதாய் இருந்தன. இந்த உணர்வுகள் ‘செய்யும் தொழிலே தெய்வம் ‘ என்பதை உணர்த்துவதாய், அவனது வேலையை புனிதமாய் நோக்க வைப்பதாய் இருந்தன. இந்த எண்ணங்களால் ஏற்பட்ட திருப்தி அந்த மேலாளரிடமும், அவரைச் சார்ந்த நிறுவனத்திடமும் ஒரு நன்றியுள்ளவனாய் ஆக்க வைத்தன. இந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் அவனுள் வளரும் போது, அவன் செய்யும் வேலையை இன்னும் திறம்படச் செய்ய வைப்பதாய் இருந்தன. இந்த ஆக்க பூர்வமான உணர்வுகள், அவன் செய்யும் வேலை மற்றும் அந்த நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தியதால், அவனுக்குள் பெருமை பொங்கியது. அங்குள்ள சக ஊழியர்களை ஒரு மதிப்புடன் எதிர்நோக்கவும், அவர்களிடம் நன்றி சொல்லவும் பாராட்டவும் முடிந்தது.

Series Navigation