இந்த வாரம் இப்படி – மே 20- 2001

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

மஞ்சுளா நவநீதன்


வாழ்க புரட்சித் தலைவி

ஜெயலலிதா ஒரு வழியாக முதல்வர் ஆகி விட்டார். ஐந்தாவது பரீட்சை எழுதத் தகுதியில்லாதவர் பல்கலைக் கழக துணை வேந்தர் ஆவது போன்ற ஒரு செயல் இது. எப்படி ஆளுனர் ஜெயலலிதாவை முதல்வர் ஆக்கினார், என்ன காரணம் என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன.

சென்னா ரெட்டி என்ற ஓர் ஆளுனர் அம்மாவின் கையில் அகப்பட்டு அனுபவித்த அவஸ்தைகள் அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியதல்ல – குறிப்பாக ஆளுனர் பதவியில் இருப்பவர்களுக்கு என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். பா ஜ க-வுடன் தி மு க கொண்டிருந்த உறவு ஆளுனருக்குப் பிடிக்க வில்லை என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆளுனர்கள் இது போன்ற பாரபட்சமான முடிவு எடுப்பது புதிய விஷயம் ஒன்றும் அல்ல. நீதிபதி ஸ்தானத்தில் இருந்த ஒருவர் இப்படி முடிவு எடுப்பது தான் ஆச்சரியம். ஆளுனருடன் சேர்ந்து நாமும் புரட்சித் தலைவி புகழ் பாட வேண்டியது தான். இல்லையென்றால் பரிதி இளம் வழுதிக்கு ஏற்பட்ட கதி தான் நமக்குமோ என்னவோ ?

குற்றவாளிகள் அரசியலில் இடம் பெறக் கூடாது என்று சொல்வதை இனிமேலாவது நிறுத்தி வைப்போம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இனிமேல் கொலைக் குற்றமாகட்டும், கொள்ளைக் குற்றமாகட்டும் மக்களை வாக்களிக்கச் சொல்லி தீர்ப்பு வழங்குவோம். நீதி மன்றங்கள் மூடப்படட்டும்

*****

ஜெயலலிதாவின் வெற்றிக்குக் காரணங்கள்

காரணங்கள் அலசப் படும். நடந்து முடிந்த விவகாரத்திற்குக் காரணங்கள் கண்டு பிடிப்பது எளிது தானே. எம் ஜி ஆர்- சவ ஊர்வலம் இன்னமும் முடியவில்லை, முடியாது என்பது ஒரு காரணம். சாதீயத்தின் வெற்றி இது என்பது இன்னொரு காரணம். இந்தச் சாதீயம் வர்ணாசிரமத்திற்குச் சம்பந்தமில்லாத நவீனம் பெற்றுவிட்ட ஒரு வெறுப்பின் அடிப்படையில் எழுகிறது. கிராமங்கள் என்ற அமைப்பு இருக்கும் வரையில், இந்த வெறுப்பு அழியாது.

திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோரின் நியாயமான எழுச்சியைத் தடை செய்வதும் தலித்கள் பெற்றிருக்கிற கொஞ்சநஞ்ச முன்னேற்றத்தையும் பின்னடையச் செய்வதும் தான் இதன் நோக்கம். இதற்கும் பிராமணியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை. பிராமணியத்தினை முன்னிறுத்தி பிராமண வெறுப்பை ஏற்படுத்தித் தம்முடைய அடக்குமுறைச் சாதியத்தினை மறைத்து ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்த மேல் சாதியினரின் வேடம் இப்போது சுத்தமாகக் கலைந்து விட்டது.

இந்தக் கோணலின் விதைகள் திராவிட இயக்கத்திலும் நீதிக் கட்சியின் எழுச்சியிலும் தூவப் பட்டன. தலித் – தலித் அல்லாதார் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் சமூகத்தின் அடிமட்டத்தினரின் முன்னேற்றத்திலிருந்து போராட்டம் தொடங்காமல், பிராமணர் பெற்ற வேலைகளை எப்படி மேல் சாதியினர் பெறுவது என்ற நோக்கத்தினை முன்னிறுத்திய திராவிட இயக்கத்தின் வளர்ச்சி இது தான். இந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பார்த்தால் ஜெயலலிதா தான் உண்மையான திராவிடக் கட்சிகளின் வாரிசு. வீரமணி தான் உண்மையாய் மேல்சாதியினரைக் காப்பாற்றும் திராவிட இயக்கத்தின் தலைவர். பெரியாரின் சரியான வாரிசு.

இந்த விஷத்தை மறைக்க சும்மானாச்சுக்கும் மதவாதம், பா ஜ க,, சிறு பான்மையினர் நலன் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் இவர்கள். இந்தக் கோமாளித்தனத்தை பிராமணரல்லாதார் ஒற்றுமை என்று இன்னமும் சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் எஸ் வி ராஜதுரை, அ மார்க்ஸ், காஞ்சா அய்லய்யா போன்ற ‘அரைகுறை அறிவு ஜீவிகள் ‘.

*****

மலேசியாவில் பிரதமர்

மலேசியாவில் பிரதமர் பேசிய பேச்சும் அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பும் இங்கு குறிப்பிடக் காரணம் – உலக அரங்கில் சில சரியான செய்ல்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பதால் தான். காஷ்மீர்ப் பிரசினையில் மலேசியா இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறது. இது காஷ்மீர் வெறும் இந்து-முஸ்லிம் பிரசினை என்ற நிலையை உடைக்கிறது. நண்பர்களைப் பெருக்கிக் கொள்வோம். எதிரிகள் தானாகவே பலவீனம் அடைவார்கள்.

****

புஷ்ஷின் ராணுவத் திட்டம் – இந்தியாவின் வரவேற்பு

இந்தியா புஷ்ஷின் ராணுவத்திட்டத்தை வரவேற்றது இந்தியப் பத்திரிகைகளில் பல புயல்களைக் கிளப்பியுள்ளது. ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து நிறுத்தும் இந்தத் திட்டம் ரீகன் காலத்தில் பரவலாய்ப் பேசப் பட்டது ‘ஸ்டார் வார்ஸ் ‘ என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்துடன் இணைத்து நினைவுகொள்ளத் தக்க முறையில் பெயர் சூட்டப் பட்டு விளம்பரம் செய்யப் பட்டது. இந்தத் திட்டத்தில் உருவாக்கப் பட்ட பல தளவாடங்கள் சரியாய்ச் செயல் படாத நிலையிலும், ரஷ்யாவின் பலவீனப்பட்ட நிலையிலும் இது மேற்கொண்டு செல்லத் தேவையில்லை என்று நிறுத்தி வைக்கப் பட்டது.

புஷ் பதவிக்கு வரக் காரணமான பணக் குவிப்பில், ஆயுத தளவாடங்கள் கம்பெனிகளின் ஆதரவு மிக முக்கியமான ஒன்று. அந்தக் கம்பெனிகளுக்கு புஷ் வேறு எப்படி நன்றி தெரிவிப்பது ? இப்படித் தான்.

அமெரிக்க எதிர்ப்பை இன்னமும் தாரக மந்திரமாய்க் கொண்டுள்ள ‘இடது சாரி ‘ப் பத்திரிகையாளர்கள் , இந்தியா இந்தத் திட்டத்தினை வரவேற்றதைத் தாக்கியுள்ளனர். இந்தியாவின் வரவேற்பு அல்லது எதிர்ப்பு இந்தத் திட்டத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. இந்தியா அமெரிக்கா மீது ஏவுகணை செலுத்தப் போவதில்லை. இருந்தும் இந்த ஆதரவு சீனாவின் கோபத்தைக் கிளறியுள்ளது. சீனா ஏன் கோபப் பட வேண்டும் என்று தெரியவில்லை. சீனா கோபப்படுமே என்று ஏன் இந்தப் பத்திரிகையாளர்கள் ஆதங்கப் பட வேண்டும் என்றும் தெரியவில்லை.

ரஷ்ய வழிகாட்டுதலில் வாழ்ந்திருந்த கம்யூனிஸ்டுகள் இன்று சீனாவின் வழி காட்டுதலில் வாழ்கிறார்களா ? சீனா கம்யூனிஸ்ட் நாடல்ல என்ற செய்தி இன்னமும் இந்திய இடது சாரிகளின் காதுகளுக்குப் போய்ச் சேரவில்லை என்று தோன்றுகிறது.

****

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்