இந்த வாரம் இப்படி , மே, 5, 2001

This entry is part [part not set] of 16 in the series 20010505_Issue

மஞ்சுளா நவநீதன்


**

தேர்தலோ தேர்தல்

**

ஜெயலலிதாவிற்குத் தடை- பால கிருஷ்ணப் பிள்ளைக்கு இல்லை

இரண்டு குற்றவாளிகள் – இரண்டு வேறு வேறு தீர்ப்புகள் என்பதால் எல்லோரும் சிலம்பமாடிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக ‘ஹிந்து ‘ பத்திரிகையில் ஜெய லலிதாவிற்கு அநீதி இழைக்கப் பட்டு விட்டது என்ற தொனியில் தலையங்கங்களும் , தேர்ந்தெடுக்கப் பட்ட கடிதங்களும் வெளி வருகின்றன. இதில் வரும் கடிதங்களின் கருத்துகள் சட்டத்தில் உள்ள சில குளறுபடிகளைத் தமக்குச் சாதகமாக வளைக்கிற முயற்சி.

சட்டம் என்பது பொது அரங்கில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தை, வரையறைப் படுத்துவது தான். பொது அரங்கில் ஒழுக்கம் தவறுவதற்கு சட்டப் படி இது சரிதான் என்ற சாக்குச் சொல்லிவிட்டு நழுவி விடுகிற போக்கிற்கு எல்லோருமே பலியாகி விட்டோம். பாராளுமன்றம் தண்டித்த ஊழல் நீதிபதி ஒருவரை அ தி மு க போன தேர்தலில் வேட்பாளர் ஆக்கியது. (இவர் காங்கிரஸ் கட்சியால் தண்டனை பெறாமல் காப்பாற்றப் பட்டார்.) கட்சிகளாக முன் வந்து தண்டனை பெற்றவர்களைப் பொது வாழ்விலிருந்து நீக்க முனைவது என்பது குதிரைக் கொம்பு. எனவே சட்டம் இன்னமும் கறாராகச் செயல் பட வேண்டுமே தவிர நெளிவு சுளிவுகளைப் பேணக் கூடாது. பதவியில் உ:ள்ள எம் எல் ஏக்களுக்குப் பல சட்டத்தின் வலைகளிலிருந்து அளிக்கப் பட்ட விலக்கு, சட்ட அமைப்பு உருவாக்கியவர்களால் சில காரணங்கள் கருதித் தரப் பட்டது. மக்கள் பிரதி நிதிகள் அடிப்படையில் மக்கள் பணிக்காக வருகிறவர்கள் என்ற உயர்ந்த கணிப்பிலும், அவர்கள் மீது அனாவசியச் சட்டச் சுமைகள் – பொய் வழக்குகள் போன்றவை – அவர்களின் பணியிலிருந்து அவர்களை நகர்த்திவிடும் அபாயம் உள்ளது என்ற எண்ணத்திலும் உருவாக்கப் பட்டது. அவர்கள் மக்கள் பணிக்கல்ல , ஊழல் செய்யவும் ஊழலிலிருந்து தப்பிக்கவும் மக்கள் பிரதி நிதிகள் ஆகக் கூடும் என்பது அவர்கள் மூளைக்கு எட்டாத ஒன்று.

ஆனால் இன்று நிலைமை வேறு. எனவே, ஜெயலலிதாவிற்குச் சாதகமாக இந்த முரண்பாட்டைப் பயன் படுத்த யோசனைகள் சொல்லிக் கொடுக்கிற மகா மேதாவிகள் சட்ட நிபுணர்களாகவும் , பத்திரிகையாளர்களாகவும் இருப்பது மிகவும் வேதனை தரத்தக்க, வெட்கப் பட வேண்டிய விஷயம். பாலகிருஷ்ணப் பிள்ளை போன்றோரை விலக்கி வைக்குமாறு சட்டம் கடுமையாக்கப் பட வேண்டுமே தவிர ஜெயலலிதா போன்றோரை அனுசரிக்கும்படி தளர்த்தப் படக் கூடாது.

****

காஷ்மீர் பற்றி அமெரிக்கா நடத்திய ரகசியக் கூட்டம்

காஷ்மீர் பிரசினையைத் தீர்க்க வழி வகைகள் என்ன என்பது பற்றிய ரகசியக் கூட்டம் ஒன்றை அமெரிக்கா நடத்தியிருக்கிறது. இதில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று அறிவிக்கப் பட்டதே தவிர என்ன பேசப் பட்டது என்பது ரகசியமாகவே இருக்கிறது. இதில் அரசியல் வாதிகள் இல்லை. பல பேராசிரியர்களும், பழைய தூதுவர்களும் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதை தொடக்கி வைத்ததும், முடிவுரை வழங்கியதும் ஃப்ராங்க் வீஸ்னர் என்பவர். இவர் இந்தியாவில் அமெரிக்கத் தூதுவராய் இருந்தவர். இப்போது அமெரிக்க இன்சூரன்ஸ் குரூப் என்ற கம்பெனியில் ஆலோசகராய் இருக்கிறார். அமெரிக்கக் கம்பெனிகள் பல இந்தியாவிற்கு வரக் காரணமாய் இருந்தவர்.

ஐந்து தலைப்புகளில் அமர்வுகள் நடை பெற்றன. முதல் தலைப்பு : இந்திய பாகிஸ்தானிய அணுகுமுறைகளும் கொள்கைகளும். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் அமிதாப் மத்தூ-வும், முன்னாள் அமெரிக்க வங்கதேசத் தூதுவர் ஹோவர்ட் ஷாஃபரும் இதில் கலந்து கொண்டனர்.

காஷ்மீர்ப் பார்வை என்பது இரண்டாவது அமர்வு : இதில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் ஃபரூக் கத்வாரி. இவர் ஈதன் ஆலன் என்ற அமெரிக்கக் கம்பெனியின் தலைவர். பெரும் பணக்காரர். அகதிகள் உதவி அமைப்புகளுக்குப் பெரிதும் உதவி வருபவர். இவர் தலைமையில் ‘காஷ்மீர் ஆய்வுக் குழு ‘ என்று ஒரு குழு இயங்கி வருகிறது. இதன் மூலமாக காஷ்மீர் பற்றி மூன்று ஆய்வுப் புத்தகங்களும் வெளியாகியுள்ளன. காஷ்மீரிகள் எப்படித் தம்மைப் பார்க்கிறார்கள் என்பது பற்றிய இந்த அமர்வில் காஷ்மீர் தன்னை பாகிஸ்தானியர்களாய்ப் பார்க்கிறதா ? தனி அடையாளம் கொண்டு பார்க்கிறதா என்பன போன்ற விவாதங்கள் நடைபெற்றன.

மூன்றாவது அமர்வு : அமெரிக்காவும் உலகமும் என்ன செய்ய முடியும் என்பது பற்றியது. நான்காவது அமர்வு : முன்னோக்கில் காஷ்மீர். எதிர்காலத்தில் என்ன பாதையத் தேர்வு செய்யலாம் என்பது பற்றியது.

கடைசி அமர்வு :வேறு மாறுபட்ட இதுவரை எண்ணப்படாத தீர்வுகள் உள்ளனவா என்பது பற்றியது. இந்த அமர்வில் கலந்து கொண்ட அயிஷா ஜலால் என்ற பேராசிரியை ஜின்னா பற்றி விவாதத்திற்குரிய ஒரு ஆய்வு நூல் எழுதியவர். ஜின்னா உண்மையில் பாகிஸ்தானை விரும்பவில்லை. பாகிஸ்தான் கோரிக்கையை பேரம் பேசும் ஒர் ஆயுதமாய்ப் பயன் படுத்தி முஸ்லிம் மக்களுக்கு நற்தீர்ப்புப் பெறுவதுதான் அவர் நோக்கம் என்பது ஜலாலின் பார்வை.

இந்தக் கூட்டத்தினால் என்ன பலன் விளையும் என்றோ, இதை அடிப்படையாய்க் கொண்டு அமெரிக்கா வேறு வழிகளில் காஷ்மீர்ப் பிரசினைக்குத் தீர்வு காண முயலுமா என்பதெல்லாம் இன்றைய நிலையில் கேள்விக் குறி. அமெரிக்காவிற்கு அரசியல் ரீதியாக லாபம் காஷ்மீர்ப் பிரசினையைத் தீர்ப்பதில் ஏதும் இல்லை. சொல்லப் போனால் இது போன்ற பிரசினைகள் தான் வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடித் தளம். பாகிஸ்தானைக் காட்டி இந்தியாவிடமும், இந்தியாவைக் காட்டி பாகிஸதானிடமும் ஆயுத தளவாடங்கள் விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிப்பது வளர்ந்த நாடுகளின் முக்கிய நோக்கம்.

*****

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்

அமெரிக்க குடியரசுக் கட்சியினருக்கு எப்போதும் வானத்தில் துணைக்கோள்களை வைத்து எதிரி நாட்டிலிருந்து வரும் ராக்கெட்டுகளை அங்கேயே லாசர் கொண்டு வெடிக்க வைக்கும் ஸ்டார் வார்ஸ் என்னும் நட்சத்திரப் போர் பண்ண நிரந்தர விருப்பம். ரோனால்ட் ரீகன் இதை வைத்து ஆட்டம் காண்பித்தே ரஷ்யாவின் சோவியத் அமைப்பை உடைத்தார் என்று வேறு இதற்கு பிரசித்தம். (உண்மையா இல்லையா என்று இன்னும் கட்டுரைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்)

புஷ் (இன்றைய ஜனாதிபதி) இந்த நட்சத்திரப் போர் அமைப்பில் மீண்டும் கவனம் செலுத்தி, தற்காப்பு கவசம் ஒன்றை ஏற்படுத்த ஆர்வமாக இருக்கிறார். இதன் காரணமாக அணுகுண்டு இருக்கும் ராக்கெட்டுகளை வெகுவாகக் குறைத்துவிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இந்தியா ஆஹா என்று பாராட்டி, நல்ல காரியம் என்று தெரிவித்துவிட்டது (அணுகுண்டு ராக்கெட்டுகளை குறைப்பதை முக்கியமாக காரணம் காட்டி).

அதே நேரத்தில், இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அமைச்சரோடு கூட உட்கார்ந்து, ஜஸ்வந்த் சிங், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இதே போன்ற தற்காப்பு கவசத்தை உருவாக்கிக் கொள்வோம், அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பலே பலே

**

X Prize Foundation முன்னிறுத்தும் தனியார் விண்வெளி உல்லாசப்பயணம். உங்களுக்குத் திறமை இருந்தால் 20 மில்லியன் டாலர் பரிசு.

டெனிஸ் டிடோ இன்று விண்வெளியின் முதலாவது உல்லாசப்பயணியாக பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். வயதான காலத்தில் இது தேவைதானா என்று மருமகள்கள் விமர்சனத்தையும், நாங்கள் பண்ணுவதற்கு முன்னால் இது பண்ணக்கூடாது என்று நாசாவின் விமர்சனத்தையும் தாண்டி 30 மில்லியன் டாலர் செலவு பண்ணி ரஷ்ய ராக்கெட்டில் சென்று விண்வெளிக்கலத்தில் உட்கார்ந்து மற்றவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார், இந்த 64 வயதில்.

அடுத்தது, ட்ரூ லைஸ் படத்தை எடுத்த காமரான் போவதாகப் பேச்சு.

எக்ஸ் பிரைஸ் ஃபெளண்டேஷன் என்ற தனியார் அமைப்பு இதில் நுழைந்திருக்கிறது.

தேவை ஒரு நல்ல டிசைன். பூமியிலிருந்து 64 மைல் வான் நோக்கிச் சென்று மீண்டும் அமைதியாகக் கீழே வந்து இறங்கும் ஒரு விலைகுறைவான ராக்கெட்டுக்கு நல்ல டிசைன் கொடுத்தால், 20 மில்லியன் டாலர் என்று அறிவித்திருக்கிறது. உங்களுக்குத் திறமை இருந்தால், முயற்சி செய்து பாருங்கள்.

http://www.xprize.org

***

சிதம்பரம் என்ற நல்ல பேச்சாளர்

இந்த தேர்தல் காலத்தில் கிடைத்த நல்ல பேச்சாளர் சிதம்பரம் தான் என்று நினைக்கிறேன். தெளிவாகப் பேசுகிறார். திமுக ஆட்கள் போல குரல் மாற்றிப் பேசுவதில்லை. அயராமல் எல்லா மேடைகளிலும் பேசுகிறார். (முக்கியமாக திமுக மேடைகளில்). இவர் பேசுவதைக் கேட்க கூட்டம் காத்துக்கிடக்கிறது. திருவண்ணாமலைக்குச் சென்றபோது இவர் பேசும் பேச்சைக்கேட்க வாய்ப்பு கிடைத்தது. (இன்னும் திமுக கூட்டங்களில் பெண்கள் குறைவாகவே இருக்கிறார்கள். அதிமுக கூட்டங்களில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்). கம்யூனிஸ்ட் கட்சிக்கூட்டங்களில் பேசுவதுபோல புள்ளிவிவரங்களோடு பேசுகிறார். புரியாத விஷயங்களைக் கூட புரியும் படிக்குப் பேசுகிறார். கடினமான பொருளாதார விஷயங்களை தெளிவாகப் பேசுகிறார். இது போன்ற அரசியல்வாதிகள் அபூர்வமாகவே தமிழ்நாட்டுக்குக் கிடைக்கிறார்கள். இவரை முன்மாதிரியாக வைத்து இன்னும் நிறைய அரசியல் வாதிகள் வரவேண்டும்.

ஆனாலும், சிதம்பரம் திமுகவின் நல்ல காரியங்களை வைத்து திமுகவுக்கு ஓட்டுப் போடச்சொல்லவில்லை. அதிமுக, ஜெயலலிதாவின் கெட்ட காரியங்களை வைத்து திமுகவுக்கு ஓட்டுப் போடச்சொல்கிறார்.

**

தமகா, காங்கிரஸ் இணைப்பு ?

முன்பே முடிவு செய்யப்பட்ட விஷயம் தான். இளங்கோவன் வெளிப்படையாகப் பேசுகிறார். தேர்தலுக்குப் பின்னர் தமகாவும் காங்கிரசும் இணைந்துவிடும் என்று பேசியிருக்கிறார். அப்படியென்றால் ஏன் தேர்தலுக்கு முன்னர் இணைந்திருக்கக் கூடாது ? ஐந்தாவது கட்சியும் ஆறாவது கட்சியும் இணைவதில் என்ன பெரிய ஆரவாரம் ? அதிமுகவிடம் பேரத்துக்குத் தான்.

***

அஸ்ஸாமில் உல்பா தீவிரவாதத்துக்கு யார் துணை ?

காங்கிரசும் பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் உல்பா தீவிரவாதிகள் தாக்குவதெல்லாம் பாஜக ஆட்களையும் ஏஜிபி ஆட்களையும்தான்.

முன்பு, காங்கிரஸ் அகாலிதளம் என்ற சீக்கியர் கட்சியை அடக்க பிந்தரன்வாலேயை உருவாக்கி பஸ்மாஸ்வர கதையை நடத்திக்காண்பித்தது. அஸ்ஸாமில் உல்ஃபாவை உருவாக்கியது. ஏஜிபியை அடக்க போடோலாண்ட் விஷயத்தை உருவாக்கியது. இப்போது தெலிங்கானா பிரச்னையை தூண்டலாமா என்று ஆந்திர காங்கிரஸ் காரர்கள் யோசிப்பதாகக் கேள்வி.

காங்கிரஸ் தனது வழிகளை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை.

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்