புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் – எதிர்வினைகள் பற்றி

This entry is part [part not set] of 15 in the series 20010422_Issue

கோபால் ராஜாராம்


என்னுடைய கட்டுரைக்கு இரண்டு எதிர்வினைகள் வந்திருக்கின்றன. முதலில் கிரிஸ் அவர்களின் எதிர் வினை. ‘எந்த ஒரு கலையும் தூய்மை , அறிவு ஜீவித்தனம் என்று பயங் காட்டும் போது , அது சாதாரண மனிதன் அண்ட முடியாததாகி விடுகிறது. ‘ என்பது உண்மை தான். அதனால் தான் ஜன நாயகத் தன்மைகள் கொண்ட சமூகத்தில் இன்னதை இன்னவர் பண்ணக் கூடாது என்ற வரையறைகள் இல்லை. எதையும் எவரும் செய்யலாம். எதையும் எவரும் விமர்சிக்கலாம். எந்தக் கலையையும், தொழிலையும் எவரும் தமதாக்கிக் கொள்ளலாம். நீ அறிவு ஜீவி இல்லை அதனால் இதை நீ தொடலாகாது. நீ இந்தத் தொழில் செய்யும் குலத்தில் பிறந்தவன், எனவே வேறு தொழில்களை நீ பாவிக்கலாகாது என்பது தான் சாதீயம். இன்று அதில்லை.

இசை , பரதம் போன்ற கலைகள் பிராமணர்களுடையது என்ற மாயத் தோற்றத்தை பெரியார் இயக்கத்தினர் தோற்றுவித்தனர். தொடர்ந்து அதையே ஒரு சூத்திரமாக்கி ஒப்புவிக்க அனைவரும் பழகி விட்டோம். இசை வேளாளர்கள் இருந்திருக்கின்றனர். முன்னமே சொன்னது போல சதிர் – பரத நாட்டியத்தின் தாய் , முந்தைய உருவம் – கீழ்த்தட்டு சகோதரிகளின் போஷணையில் தான் வளர்ந்தது. இதை மேல் தட்டுக் காரர்கள் தம் வயமாக்கிக் கொண்டால் அதுவும் வரவேற்கத் தக்கதே. மீண்டும் கீழ்த்தட்டு மக்கள் அதைப் பயிலவும், பயிற்றுவிக்கவும் எந்தத் தடையுமில்லை.

பரதம் போன்றவை செவ்வியல் கலைகள் என்பதாகவும், கூத்து, பறை போன்றவை செவ்வியல் அல்லாத நாட்டார் கலைகளாகவும் காண்பதும் ஒரு பெருந்தவறு. செவ்வியல் நுணுக்கங்கள் எழுதி வைக்கப் படவில்லை என்பது வேண்டுமானால் உண்மையாய் இருக்கலாம். ஆனால் இந்த நுணுக்கங்களும் விதிகளும் இந்தக் கலைஞர்களால் வாழையடி வாழையாய்ப் பயிற்றுவிக்கப் படுகின்றன. நாட்டார் பாடல்கள் போன்ற தனி மனித வெளிப்பாடல்ல நிகழ் கலை. அதற்கான விதிகளூம், ஒப்பனை நுணுக்கங்களும், கால அளவைகளும் உண்டு. துரதிர்ஷ்ட வசமாய் நாட்டுப் பாடல்கள் நாட்டார் கலை அதனால், கிராமத்தில் புழங்குகிற கூத்தும், பறையும் நாட்டார் கலையாய் இருக்க வேண்டும் என்பதான இமாலயத் தவறுப் பார்வை, தலித் அறிவு ஜீவிகளிடமும் வேர் கொண்டு விட்டிருக்கிறது.

வருங்காலத்தில் பறையடிக்கும் கலை அனைவராலும் பயிலப் படுமெனில் அதுவும் வரவேற்கத்தக்கதே. எல்லோரும் இதனைக் கையகப் படுத்துவதன் மூலம் இந்த அரிய கலைகள் பற்றிய மனச் சாய்வுகள் மறைந்து ஒழிந்து போகும் என்பது தான் என் எண்ணம். ‘என்னடா சதிர் ஆடுகிறாய் ‘ என்ற வசையை இப்போது யாரும் கற்பனை செய்ய முடியுமா ?

அடுத்த எதிர் வினை கட்ட பொம்முவினுடையது. உணர்ச்சி வசப்படுவதால் உண்மையை உணர முடியாமற் போகும். விவாதங்களில் பங்கு கொள்வதற்கு மிக முக்கியமான தன்மை மற்றவர்களின் கருத்தைச் சரியாக விளங்கிக் கொள்வதும், அதைத் தொடர்ந்து சிந்திப்பதும் தான். துரதிர்ஷ்ட வசமாக கட்ட பொம்மு திண்ணையில் எழுதியிருக்கும் கடிதங்கள் அனைத்துமே, தன் கையில் உள்ள சர்வ ரோக நிவாரணித் தத்துவம் ஒன்றுக்கு ஏற்ப எல்லா விவாதங்களையும் வளைத்துத் தயாராய் தன் கையில் வைத்திருக்கும் பதிலை அள்ளி வீசுவது தான். கட்ட பொம்முவிற்காக அல்ல எனினும், கட்ட பொம்மு போல் யோசிக்கிற – ஆனால் திறந்த மனம் கொண்ட – மற்றவர்களுக்காக இந்த பதில்.

என் கட்டுரை அடையாளங்கள் பற்றியது. இளைய ராஜா ஜீயர் பின்னால் செல்வது சரியா தவறா , அதனால் தாழ்த்தப் பட்டவர்கள் அடிமையாகி விடுவார்களா விடுதலை பெறுவார்களா என்பது விவாதப் பொருள் அல்ல. விவாதப் பொருள் இளைய ராஜாவின் அடையாளம் என்பது தான் என்ன ? தலித்தின் அடையாளம் என்பது என்ன ? அந்த அடையாளங்களை வரையறுப்பதும், வரையறுப்பதன் மூலம் எல்லைகளை நிர்ணயிப்பதும் ஒரு ஜன நாயகத் தன்மைகள் கொண்ட நாட்டில் சரியான செயலா என்பது பற்றித் தான். எல்லா அடையாளங்களும் ஜன நாயக நாட்டில் எல்லோருக்குமானது. நீ முஸ்லிம் அதானால் நீ தாடி வைத்தே ஆக வேண்டும் என்ற தாலிபானின் குரலோ, அல்லது நீ இந்தச் சாதிக்காரன் எனவே இது தான் உன் தொழில் என்ற சாதீயத்தின் குரலோ ஜன நாயகத் தன்மைக்கு நேர் எதிரானது.

கட்ட பொம்மு போன்றே நானும் தலித் விடுதலை என்பது பெரியார் அம்பேத்கர் வழியில் செல்வதன் மூலம் தான் பெற முடியும் என்று நம்புகிறேன். ஆனால் யதார்த்தம் வேறு விதமாய் உள்ளது. பெளத்த மதத்தில் சேர வேண்டும் என்று அம்பேத்கர் பிரசாரம் செய்தார். தானே மதம் மாற்றம் மேற்கொண்டும் வழி காட்டினார். பெரியார் போலல்லாமல் அம்பேத்கர் மதம் மனிதனின் ஆன்மிகத் தேடலுக்கு அவசியமானது என்றே கருதினார். ஆனால் தமிழ் நாட்டில் தலித் அரசியல் வாதிகள் யாருமே இதை வலியுறுத்துவதில்லை. வட நாட்டிலும் கூட புதிய பெளத்தர்கள் பெருமளவில் உருவாகிவிடவில்லை. பெரியார் இந்து மதத்தை விட்டு , இஸ்லாம் அல்லது கிறுஸ்தவ மதங்களில் சேருங்கள் என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டார்.. ஆனால் திராவிட இயக்கத்துக் காரர்களோ அல்லது பெரியாரின் போராட்டங்களால் பயன் பெற்ற பிராமணரல்லாதவர்களோ இந்து மதக் கடவுளர்களையும் , இந்து மத வழிபாட்டு முறையையும் விட்டு விடத் தயாரில்லை. பெரியாரைப் பின்பற்றிய நாயுடுக்களோ, முதலியார்களோ , வன்னியர்களோ யாருமே இந்து மதத்தை விட்டுச் சென்று விட வில்லை. இதனால் அம்பேத்கர், பெரியார் இயக்கம் தோல்வி பெற்றுள்ளது என்று பொருளில்லை. மக்களின் இந்தத் தேர்வினை சமூகவியல் காரணிகளைக் கொண்டும், உளவியல் காரணிகளைக் கொண்டும் ஆராயாமல், கிளிப் பிள்ளை போலப் பிராமணர்களின் சதி, பூசகர்களின் ஏமாற்று என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் ஐம்பது வருடங்கள் பின் தங்கித் தான் கருத்தளவில் இருபோம்.

இந்த மக்களுடைய எந்த உளவியல் தேவையை இந்து மதமும், இந்து மதக் கடவுளர்களும் பூர்த்தி செய்கின்றன என்று ஆராய வேண்டும். பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் பின்னால், இந்து மதம் வேறு விதமாய்த் தன்னைக் கட்டமைத்துக் கொண்டுள்ளதா என்று ஆராய வேண்டும்.. இன்றைய இந்து மதம் சங்கராசாரியார்கள் மட்டுமல்ல பங்காரு அடிகளும் கூட. இதன் சமூகவியல் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டோம். மாறாக , அதனால், அடிமைத் தனத்தை விரும்பிப் பேணுவது தான் தலித்கள் , தாழ்த்தப் பட்டோரின் இயல்பு என்று தொனிக்கும் வகையில் வாதிடுவது தான் கட்ட பொம்முவின் கருத்தின் சாராம்சம்.

தலித்களின் தேர்வு – அது மதம் குறித்ததானாலும், வழிபாடு குறித்ததானாலும், மத நிராகரிப்பு ஆனாலும் – அறியாமையால் நிகழ்ந்த ஒன்று அல்ல என்று வலியுறுத்திச் சொல்ல வேண்டும். அப்படித் தேர்வு ஒன்றை அவர்கள் மேற் கொண்ட வுடன் நாம் இரண்டு வழிகளில் இந்தத் தேர்வினை அணுகலாம். ஒன்று அந்தத் தேர்வுகள் பற்றிய விமர்சனம், இது ஏற்கனவே திராவிட இயக்கத்தினராலும், நாத்திக இயக்கத்தினராலும், மார்க்ஸியர்களாலும் செய்யப் பட்டு வருகிறது. கருத்து முதல் வாதம் என்று மார்க்ஸியர்கள் இதனை அழைத்து பொருள்முதல் வாதமாக நாத்திகத்தை நிறுவச் செய்யும் முயற்சி நடந்த வண்ணம் இருக்கிறது.

இன்னொன்று , அந்தத் தேர்வான மதங்களின் இறுக்கத்தைக் குறைப்பது இளையராஜா ஜீயருடன் சேர்வது இப்படிப் பட்ட ஒரு செயல் பாடுதான். இந்த இணைப்பால், பழைய அடையாளங்கள் உடையும், புதிய அடையாளங்கள் உருவாகும் என்பதே என் கருத்து. எனவே இப்படிப் பட்ட இணைப்புகள் வரவேற்கத் தக்கதே. இது தான் புதிய அடையாளம் என்று நான் சொல்வதாகும்.

சமூக அமைப்பை மாற்ற முயல்பவன் , முன் நிர்ணயிக்கப் பட்ட அடையாளங்களை உடைப்பதும், மறு உருவாக்கம் செய்வதன் மூலம் தான் புதிய சமூகம் உருவாக முடியும். இது தான் உன் அடையாளம் அதனால் அதை மீறி விடாதே என்று சொல்வது ஒரு புதிய சாதியமாய் உருவெடுத்து விடும். அபாயம் உள்ளது.

****

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்

புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் : கே ஏ குணசேகரனின் கருத்துகள் மீது ஒரு பார்வை

This entry is part [part not set] of 13 in the series 20010408_Issue

கோபால் ராஜாராம்


தலித் கலை இலக்கியம் பற்றியும், இவை எப்படி மைய நீரோட்டத்தினால் கையகப் படுத்தப் பட்டு பல மிக முக்கியமான கருத்துகளை குணசேகரன் வெளியிட்டுள்ளார். துரதிர்ஷ்ட வசமாக அவருடைய கருத்துகள் புதிய திசைகளில் செல்லாமல், வழக்கமான வாதங்களை முன்வைக்கிறது.

அந்தப் பழைய நந்தன் கதை நமக்குத் தெரியும். ‘தில்லை என்றொரு தலத் ‘தினைத் தரிசிக்க சிதம்பரம் சென்ற அந்த நந்தன் எரிக்கப் பட்டது அன்றைய கதை. இன்றைய நந்தன் என்று இளைய ராஜாவைச் சொல்லலாம். இன்றைய நந்தன் தில்லையைத் தரிசிக்க மட்டுமல்ல, அதன் ஒரு முக்கியமான அங்கமாய் மாறிப் போகிறான். வரலாற்றில் ஏற்பட்டிருக்கிற மிகப் பெரிய மாறுதல் இது. தமிழ்ச் சமூகம் எந்த திசையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதன் அடையாளம் இது. துரதிர்ஷ்டவசமாய் இந்த இரண்டுமே குணசேகரன் போன்றவர்களால் விமர்சனம் செய்யப் படுகிறது. அன்று தன் சாதிக்கென்று நியமித்த விதிகளை மீறியதற்குத் தண்டனை பெற்ற நந்தனின் கதை சாதியத்தின் கொடுமைக்கு உதாரணமாகவும், இன்றைய நந்தன் பெறும் அரவணைப்பு ‘மைய நீரோட்டம் தனக்கு வேண்டியவாறு இளைய ராஜாவைத் தகவமைத்துக் கொண்டது இங்கு உணரத் தக்கது ‘ என்பதாக கண்டனத்துக்குள்ளாகிறது.

மைய நீரோட்டம் என்பதே ஐரோப்பியக் கருத்தாக்கம். இந்தியச் சூழலை அலசுவதற்கு இது பயன் படாது. இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி , மைய நீரோட்டம் என்று ஒன்று இருந்ததே இல்லை. சாதீயத்தின் ‘பயன் ‘களில் இது ஒன்று. நந்தன் பெற்ற தண்டனை மைய நீரோட்டத்தில் ஐக்கியமாக அவன் விரும்பியதற்காக அல்ல. தன் சமூக இருப்புநிலையின் விதிகளை மீறியதற்காகும். இன்றைய நிலையில், நகர்மயமான சூழலில், இசை கோவில்களைத் தாண்டி சினிமா என்ற வெகுஜனக் கலை வடிவத்தில் நிலை கொண்டு விட்ட சூழலில் , அந்தப் பழைய விதிகள் செயல் படுவதில்லை. சமூக இருப்பு விதிகள் ஜன நாயகப் படுத்தப் பட்டு விட்டன. அதனால் தான் அடிமைத் தனத்தின், ஒரு சாதியச் செயல் பாட்டின் அடையாளமாய் இருந்த பறை முழக்கம்,- இதனாலேயே இளைய பெருமாள் இதனை விட்டொழிக்க வேண்டும் என்று சரியாக எடுத்த முடிவின் பின்னால் – இன்று தம் இருப்பின் உரத்த ஒலியாகச் செயல் படுகிறது. இந்தப் பரிணாம மாற்றம் , சாதாரணமானதல்ல.

இளையராஜா பெறும் அங்கீகரிப்பு பற்றிய குண சேகரனின் விமர்சனம் இன்னமும் சில பிரசினைகளைக் கொண்டது. ‘இளையராஜா தலித் என்னும் தன் அடையாளத்தை மாற்றவும் சிதைக்கவும் முற்படுகிறார். எனினும் இளையராஜா போல் தலித் அடையாளத்தை அனைவரும் மாற்றிக்கொள்ளவோ மறைத்துக் கொள்ளவோ மறுதலித்துக் கொள்ளவோ தயாராக இல்லை. ‘ என்று குண சேகரன் எழுதுகிறார். ஒரு தனிமனிதன் எதன் பிரதிநிதியாகச் செயல் படவேண்டும் ? அடையாளம் என்பது தான் என்ன ? சாதீயம் அடையாளத்தைச் செய்யும் தொழிலாகக் குறுக்கியது. அந்தத் தொழிலை விட்டொழித்தபின்பு எது தான் ‘அடையாளம் ‘ என்று கருதப் படும் ? இளையராஜாவின் முதல் பாடல்களே நாட்டுப் புற இசையின் மேன்மைகளிலிருந்து பிறந்தது. தன் ஆன்மீகச் சார்புகளையோ அல்லது, இறை நம்பிக்கையையோ இளையராஜா என்றுமே மறைத்துக் கொண்டதில்லை. இது மைய நீரோட்டத்தில் தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை பூர்வமான முடிவு என்று சொல்ல முடியாது. அவருடய ஆளுமையே அது தான். அவர் ஜீயரிடம் செண்றால் அதில் என்ன தவறு ? தலித் ஜீயரிடம் செல்லலாகாது என்று எந்த சாஸ்திரம் சொல்கிறது ? அப்படிச் சொன்னால் அந்த சாஸ்திரங்கள் புறக்கணிக்கப் பட வேண்டும் என்பது தானே நம் நிலைபாடாய் இருக்க வேண்டும் ?

ஏன் தலித்திற்கு அப்படி ஒரு பிரக்ஞை எழலாகாதா ? அவனுடைய ஆன்மீகத் தேடல் அவனை மா ஆனந்த மயீயிடம், சாய் பாபாவிடம் , சங்கராசாரியாரிடம் , பங்காரு அடிகளிடம் கொண்டு செல்லலாகாதா ? தலித்துக்கு ஆன்மீகத் தேடல் இருப்பது அடையாளச் சிதைவா ? எனில் அம்பேத்கர் கோட்டு அணிந்தது எந்த அடையாளத்தினைத் துறக்க ? வெள்ளையர் அடையாளத்துடன் தம்மை இணைத்துக் கொள்ளவா ? அப்படி இருக்குமானால் அதில் தவறென்ன ? சாதீயம் அளித்த அடையாளம் என்ன துறக்கத்தகாத புனிதமான ஒன்றா ?

இளைய ராஜாவிற்குக் கிடைத்த அங்கீகாரமும், தொடர்ந்து தலித் கலை இலக்கிய வடிவங்களுக்குக் கிடைத்த அங்கீகாரங்களும் , இசை-கலை அதிகார நிறுவனங்கள் (Establishment) தம்மைச் சுய விமர்சனம் செய்து கொண்டதன் விளைவு தான் என்று நம்ப இடம் இருக்கிறது. எனவே இது பற்றிய விமர்சனம் உண்மையில் தமிழ் நாட்டின் அமைப்புகள் ஜனநாயகப் படுத்தப் படுவதன் எதிரொலியாகவும், அமைப்புகள் வேறு வேறு சரடுகளினை இனங்கண்டு வளருகிற ஒரு பாராட்டத்தக்க அம்சமாய்த்தான் காணப் பட வேண்டும்.

அடையாளங்கள் என்பது ஒரு இனக்குழுவின் அடையாளம் என்றிருத்தல் சாதியத்தில் நிகழ்கிறது. ஒரு தனி மனிதன் அந்த அடையாளத்தை முழுமையாகவோ, சில பகுதிகளையோ சுவீகரித்துக் கொள்கிற சுதந்திரத்தை ஜனநாயக நடைமுறை நமக்கு அனைவருக்குமே அளிக்கிறது. நாம் நம் அடையாளங்களிலிருந்து விடுபடக் கொள்கிற எண்ணங்கள் அந்த அடையாளங்களின் அடியாழத்தில் பதிந்திருக்கிற அநீதியை எதிர்க்கும் குரலாகும். உதாரணமாக, தோட்டி மக்கள் நாளை , நாம் இனி மலம் அள்ள மாட்டோம் என்று ஒரு சரியான முடிவை எடுத்தால், தம் சார்ந்த வேலையில் உள்ள உள்ளார்ந்த அநிதியைக் களைய அந்த வேலையை விட்டு வெகுதூரம் போவதே விமோசனம் என்று ஒரு சரியான முடிவை எடுத்தால், உங்கள் அடையாளங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவே மலம் அள்ளுவதை விட்டு விடாதீர்கள் என்று குண சேகரன் வாதிடுவாரா என்ன ? அடையாளங்கள் கலாசார அடையாளங்கள் மட்டுமல்லவே. அதிலும் இந்தியச் சாதீயச் சமூகத்தில் அடையாளம், அவரவர் செய்யும் வேலையுடன் இணைந்ததாயிற்றே ?

எப்படி இந்த அடையாளங்கள் காலப்போக்கில் தம் அசலான முந்தைய அடையாளங்களை இழந்து போய் புதிய அடையாளங்களைத் தரிக்கின்றன என்பதற்கு குண சேகரன் படைப்பிலேயே உதாரணம் கிடைக்கிறது. அவர் பரத நாட்டியத்தை மேட்டுக் குடி மக்களின் கலை என்று அடையாளப் படுத்துகிறார். குணசேகரன் போன்றவர்களே இது போன்ற கட்டுக் கதைகளை நம்பத் தொடங்கிவிட்டால் , மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும் ?

பரத நாட்டியம் கீழ்த் தட்டு மக்களின் கலை வடிவமே. நியாயமாய் இது கோவில் நாட்டியக் கலைஞர்களின் கலையாய் , சதிராய் இருந்தது தான். மேட்டுக் குடி மக்கள் சதிரை இழிவாகக் கருதியதும் சமீபத்திய வரலாறு தான். ருக்மிணி அருண்டேல் இந்தக் கலையை , நகரங்களுக்குக் கொண்டு வந்து பரப்பின பிறகு – குண சேகரன் பாஷையில் சொல்வதானால் மேட்டுக் குடியினர் கையகப் படுத்திய பிறகு — இது இப்போது ‘கெளரவமான ‘வர்களின் கலையாய், குண சேகரன் கூட மேட்டுக் குடி மக்களின் கலை என்று நம்பும் படியான ஒரு பீடத்தில் ஏறி நிற்கிறது. இந்த நிகழ்வை எப்படி இனங்காணுவது ? குணசேகரன் பறை இசைக்கு நிகழ்வதாய்க் குறிப்பிடும் எல்லா விஷயங்களுமே சதிருக்கு நடந்து முடிந்து விட்டது. இன்னும் 50 வருடங்களுக்குப் பிறகு குணசேகரனின் மகன், பறை முழக்கம் போன்ற மேட்டுக் குடி மக்களின் கலையென்று பேசத் தொடங்கினால் ஆச்சரியப் பட எதுவுமில்லை. சிவராம் காரந்த் கர்நாடகத்தில் ‘யட்ச கானம் ‘ கலை வடிவத்தை, நகரமயமாக்கி, செவ்வியல் கலை வடிவம் ஏற்றி , அளவில், நேரத்தில் சுருக்கி அளித்தது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. ந முத்து சாமி , கூத்துக் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாய் அவர்களை நகர்ப்புறத்தின் மேடைகளில், நியான் விளக்கு வெளிச்சத்தில் கொண்டு வந்த போதும், குண சேகரன் அளிக்கும் விமர்சனம் போன்றே அன்றும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்களை எப்படி இனங்காண்பது ?

இந்த விமர்சனங்களின் ஒரு அடிச் சரடு நகர்மயமாதலை, வணிகக் கலாசாரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கிறதே ஒழிய இதன் பாரிய கலாசார அர்த்தங்களைக் காணத் தவறி விடுகின்றன. நகர்மயமாதல் ஒரு விதத்தில் ‘ஒன்றே போலான வெளிப்பாடை ‘ (Homogenisation) நாடுகிறது எனில், இன்னொரு புறம், மாற்றுக் கலாசாரங்களும் வெளிப்பாடுகளும் அவற்றிற்குரிய இடத்தை எடுத்துக் கொள்வதைத் தடை செய்வதில்லை. இந்த விதத்தில் சாதியத்திற்கு நேர் எதிரானது நகர்மயமாதலின் கலாசார உருவாக்கம். இது வரவேற்கப்பட மாற்றம் – சாதீயத்தின் வேர்கள் இந்த விதமாயல்லாமல், வேறு எப்படியும் நீங்குவதற்கு வாய்ப்பே இல்லை.

இந்த விமர்சனக்களின் இன்னொரு அடிச்சரடு, பிராமணியம் – அதனால் பிராமணர்கள் — தலித்துகளிற்கு எதிரிகள் , வர்ணாசிரம தர்மத்தின் பாதுகாவலர்கள் எனவே ஜீயர் போன்ற பிராமணிய ஆசாரியர்களிடம் இளைய ராஜா போன்ற தலித்கள் செல்வது ஒரு விதத்தில் சரணாகதி என்ற உள்ளுணர்வு. இது பெரியாரின் கருத்துகளிலிருந்து பெறப் பட்டது. அது சமூகக் குழுக்களை பிராமணர்கள் , பிராமணரல்லாதார் என்று பிரித்தது. பிராமணருக்கும் பிராமணரல்லாதாருக்கும் இருந்த முரண்பாட்டினை முன்னிறுத்திப் போரிடச் செய்தது. அன்றைய காலகட்டத்தில் இது மிகச் சரியான போராட்ட உத்தி என்பதினை மறுப்பதற்கில்லை. ஆனால் தலித்களின் அரசியல் கலாசாரப் பார்வை தலித்கள் – தலித் அல்லாதார் என்பதாகத் தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்ற உண்மை கடந்த 20 ஆண்டுகளாய் உணரப் பட்டு வருகிறது. இன்று தலித்களின் முரண்பாடு வன்னியர், தேவர் போன்ற மேல் சாதியினருடன் தானே தவிர பிராமணியத்துடன் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் பிராமணியத்துடன் தலித்களைச் சண்டையிட வைக்கிற மேல்சாதித் திராவிடக் கருத்தாக்கத்தில், மேல் சாதியினரின் சுய நலமே உள்ளது. இன்றும் இரட்டை கிளாஸ்களும், ஆலயப் பிரவேச மறுப்பும் நிகழ்கிற ஊர்களில் அதிகாரம் பிராமணர்களிடம் இல்லை. எனில் தலித்கள் ஏன் பிராமணியத்துடன் நிழல் யுத்தம் செய்ய வேண்டும் ?

பறையை யார் வேண்டுமானாலும் முழங்கட்டும். பள்ளுப் பாடல்கள் யாரும் பாடட்டும். பிராமணர்கள் கூத்துப் பயிலட்ட்டும். புலையர்கள் வேதம் முழங்கட்டும். எல்லாக் கலைகளூம் எல்லாருக்கும் ஆகட்டும். கருப்பாயிகள் சுப்ரபாதம் பாடட்டும். குழு அடையாளங்களின் இன இழிவுச் சகதி போக வேண்டுமானால், துறக்க வேண்டிய அடையாளங்களைத் துறக்கத் தான் வேண்டும். புதிய அடையாளங்களைப் பூணுவதன் மூலமே , சாதீயம் கற்பித்த அடையாளத்தின் அபத்தத்தை நாம் முறியடிக்க முடியும்.

இது தலித் விடுதலைக்கு எதிரான நிலையல்ல. இதுவே தலித் விடுதலைக்கு உண்மையான முதல் படி.

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்