This entry is part of 17 in the series 20010401_Issue

தமிழ் நாவல் – ஜெயமோகனின் பட்டியல்


கோபால் ராஜாராம்

பட்டியல்கள் பட்டியலிடப் படுகிற விஷயங்களுடன் கூடவே, மற்ற சில போக்குகளையும் பிரதி பலிக்கின்றன. ஒன்று பட்டியல் இடுகிறவரைப் பற்றி – அவருடைய முன் நிர்ணயங்கள், விருப்பு வெறுப்புகள் . இன்னொன்று காலத்தின் அப்போதைய ரசனையின் எதிரொலியை பட்டியல்கள் தவிர்ப்பது கடினம். தமிழின் பட்டியல் காரர் என்று அறியப்பட்ட க நா சு- தான் அளிக்கும் பட்டியல்களுடன் கூடவே இதையும் சொல்வதுண்டு : ‘ இந்தப் பெயர்களில் சில பெயர்களைக் காலம் அழித்து விடும். ஆனால், காலம் அழிக்க முடியாத பெயர்கள் என்று இதனைச் சொல்லலாம். ‘ இப்படி சொல்லி சில பெயர்களை அவர் சொல்வார். அந்தப் பெயர்களிலும் கூட சில பெயர்களைக் காலமும், மாறிவரும் ரசனையும் பலி கொண்டது உண்டு.

இந்த நூற்றாண்டின் சிறந்த நாவல்களைப் பட்டியலிட்டதில் ஜெய மோகனின் தன்னடக்கத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். தன்னுடைய இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பெறும் என்று தீர்மானித்திருக்கிறார் இல்லையா ? ஜெயமோகன் பத்து நாவல்கள் எழுதி முடித்த பின்பு , இந்தப் பட்டியலின் உள்ளடக்கம் எப்படி இருக்குமோ ?

தவறாமல் இடம் பெற்று விட்ட சுந்தர ராமசாமியின் இரண்டு நாவல்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். ‘ஜே ஜே சில குறிப்புகள் ‘ ஒன்று தான் நாவல் என்று ஜெய மோகன் சொன்னதாக அர்த்தம் பண்ணிக்கொண்டு பலரும் அவருடன் சண்டை போடதுண்டு – நான் உட்பட. பிறகு தன்னிலை விளக்கம் போல ‘நாவல் ‘ என்ற மிக முக்கியமான ஒரு விமர்சன நூலையும் எழுதினார். இந்தப் பட்டியல் அந்த ‘ நாவல் ‘ புத்தகத்தின் விமர்சனக் குறிப்புகளை அடியொற்றித் தான் எழுதப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

இந்தப் பட்டியலில் ஆ மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து ‘ நாவலைச் சேர்த்ததற்கு நான் ஜெய மோகனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஆ. மாதவன் தமிழில் தன் தகுதிக்கேற்ற கவனிப்பைப் பெறாத எழுத்தாளர். அவருடைய ‘காளை ‘ போன்ற சிறுகதைகளும் சரி , ‘கிருஷ்ணப் பருந்து ‘ நாவலும் சரி, மானிட உளவியலின் இலக்கியப் பதிவுகள். ஆனால் இந்த உளவியல் பதிவு என்பது எங்கோ புத்தகத்தில் படித்ததை யந்திரத்தனமாய் ஒப்பிக்கிற போக்கு அல்ல. வாழ்வில் தான் கண்ட , பழகிய மனிதர்களின் ஆழ்மனச்சிக்கல்களையும், அந்த மனச்சிக்கல்களால் , செய்த, தவிர்த்த நடைமுறைகளையும் பற்றிய மறுகலாய் கதைகள் விரிகின்றன.

ஆ மாதவன் தன் தகுதிக்கேற்ற கவனிப்பைப் பெறாத எழுத்தாளர் என்றால், சுந்தர ராமசாமி தன் ஆகிருதிக்கு மீறிய கவனிப்பைப் பெற்றவர் என்று சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமியின் இரண்டு நாவல்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது இதனால் தான்.

ஜெய மோகனின் நாவல்களைப் பற்றிய விமர்சனப் பார்வை 19-ம் நூற்றாண்டு நாவல்களை அடிப்படையாய்க் கொண்டது. டால்ஸ்டாய், சார்லஸ் டிக்கென்ஸ், விக்டர் ஹ்யூகோ என்று பரந்த வாழ்க்கைத் தளத்தில் , வாழ்க்கையின் பாரிய கேள்விகளை எழுப்பி வாழ்வின் சித்தரிப்பு மூலமாய் அதற்கு விடைகளைத் தேடுவது என்பதனை அடிப்படையாய்க் கொண்டு எழுப்பப் பட்ட இந்த விமர்சனக் கண்ணோட்டத்தில் காஃப்கா விற்கும், ஆல்பெர் காம்யூவிற்கும் கூட இடமில்லை. இருபதாம் நூற்றாண்டு எல்லாக் கலைகளிலும் செலுத்தப் பட்ட பார்வையை மறு உருவாக்கம் செய்து கொண்டே இருக்கிறது. இந்த மறு உருவாக்கத்தினை, ஜெயமோகன் தன் விமர்சன அளவுகோல்களை நிர்ணயித்துக் கொள்ளும் போது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது அவரிடம் உள்ள குறைபாடு.

அடிப்படையில் சுந்தர ராமசாமி ஒரு அங்கதக் காரர் . இயல்பான கிண்டலும், முரண்படும் வாழ்க்கைப் பார்வையின் வினோதங்களும் மிக சுலபமாக அவர் பார்வைக்கு வருகின்றன. சீரியஸாக எழுதியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவரை ,அவருடைய இயல்பான கேலித் தொனியை விட்டு நகர்த்திக் கொண்டே இருக்கிறது. ஜே ஜே சில குறிப்புகளின் முதல் வரியிலேயே இந்த அங்கதம் வெளிப்படுவதைப் பார்க்கலாம். தன் வலிமை எதில் இருக்கிறது என்ற தீர்க்கமான கண்ணோட்டத்துடன், இந்தக் கிண்டலைத் தொடர்ந்து அவர் செயல் படுத்தியிருந்தால் இந்த நாவல் மிகச் சிறப்பானதாய் இருந்திருக்கும். தேவன், பாக்கியம் ராமஸ்வாமி, சாவி போன்றோரின் நகைச்சுவைக்கதைகளுடன் இணை சொல்லக் கூடியதாய் உருவாக்கி இருந்திருப்பார். சே சே என்று தான் ஜே ஜே யின் பெயரைப் போடுவேன் என்று சொல்கிற நண்பன் முதற்கொண்டு, சங்ககாலப் பாடல்களை ‘தினத் தந்தி ‘ மாதிரி படிக்கக் கூடிய படிப்பாளி என்று அத்தகைய கதாபாத்திரங்களின் அடிப்படையை வேறு விதமாய் அவதானிக்க முடிந்திருக்கும்.

அங்கதம் கலைப் படைப்பாய் உயர்வதற்கு மிக மிக ஆழ்ந்த கலைச் சிறப்பு வேண்டும். புதுமைப் பித்தன் போன்ற மிகச் சிலரிடம் தான் இந்தப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சுந்தர ராமசாமியின் இந்த சீரியஸ் நாவல படைக்கும் முயற்சி, அங்கதத்தை முழுமையாகப் பற்றாமல், கம்பீரத்தினை முழுமையாய் மேற்கொள்ளாமல், இரண்டுமே அரைகுறையாய் நிற்கின்றன. அவருடைய அற்புதமான சிறுகதைப் படைப்பாக்கத் திறன் தான் இந்த இரு நாவல்களையும் சற்றேனும் தூக்கி நிறுத்த உதவுகின்றன. ஜோனாதன் ஸ்விஃப்ட், சார்லஸ் டிக்கன்ஸ் ஆகிற முயற்சி சுந்தர ராமசாமி தீவிர நாவல்கள் எழுதும் முயற்சி.

‘ஒரு புளிய மரத்தின் கதை ‘யோ ரேடியோ நாடகம் போன்ற ஓர் உணர்வினை அளிக்கிறது — ஒரு விஷயத்தைச் சுற்றி நடக்கிற நிகழ்ச்ச்த் தொகுப்பு என்ற அளவில். ஒரு பின்னோக்கிய ஏக்க உணர்வும் ‘முன்பு எல்லாம் அற்புதமாய் இருந்தது ‘ (Nostalgia) என்ற பெருமூச்சும் கலைப் படைப்புகளின் சிறப்பைத் தருவதில்லை.

க நா சு-வின் ‘பொய்த் தேவு ‘ இது போன்ற பட்டியல்களில் தப்பாமல் இடம் பெறக் காண்கிறேன். இந்த நாவலின் வாழ்க்கைப் பார்வையில் உள்ள சாதியம், பிராமணியச் சார்பு, கீழ்த் தட்டு மக்களின் மீதான துவேஷம் பற்றி ‘க நா சு – இலக்கியத் தடம் ‘ நூலில் நான் கருத்துத் தெரிவித்திருக்கிறேன்.

எழுத்து எல்லாமே இலக்கியச் சிறப்பு என்ற அளவுகோல் மட்டும் கொண்டு தான் அணுகப் பட வேண்டும் என்பதில்லை. இந்த உண்மையை உணர்ந்து பிற வகை நாவல்களையும் ஜெய மோகன் பட்டியலிட்டிருப்பது வரவேற்கத் தக்க ஒன்றாகும்.

கல்கிக்கு இருந்த நிறுவன பலம் எதுவும் இருந்திருந்தால், நா பா, அரு ராமநாதன் போன்றோரும் தொடர்ந்து மக்கள் கவனிப்பில் இருந்திருப்பர். மேல் நாடுகளில் இளைஞர்களுக்கான நாவல் என்று சிலவற்றை வரையறுக்கிறார்கள். நா பா, அரு ராம நாதன் நாவல்கள் இத்தகையன.

எனது பட்டியல் இது : பத்து நாவல்கள் பத்தரை நாவல்கள் என்று நான் கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்ளவில்லை. வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவும் இல்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் : இது தவிர, ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள் – மூன்றுமே தமிழின் மிக முக்கியமான நாவல்கள்.

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள். தி ஜாவின் எல்லா நாவல்களுமே எனக்குப் பிடித்தமானவை. ‘மலர் மஞ்சம் ‘, ‘அன்பே ஆரமுதே ‘, ‘செம்பருத்தி ‘, ‘மோக முள் ‘ ‘ நள பாகம் ‘ ‘, ‘மரப் பசு ‘ எல்லாமே முக்கியமான நாவல்களே. மற்ற நாவல்களைக் காட்டிலும் ‘ மோக முள் ‘ அதிகச் சிறப்பான நாவல் என்று கருதுபவர்கள் உண்டு. ஆனால் அப்புவின் தனி மனிதத் துயரம் விரிவு பெற்று வாழ்க்கையின், மனித உறவுகளின் அடிப்படையான கேள்விகளாய் மாறுகிற தீவிரம், ‘மோக முள் ‘ளில் நிகழ வில்லை என்பது என் எண்ணம்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர . அபிதாவைக்காட்டிலும் புத்ரவில் உருவச் சிறப்பு இருப்பதாய் நான் கருதுகிறேன்.

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘ தான் கண்ட வாழ்க்கையை மிகச் சிறப்பாக வர்ணிப்பதோடு நிற்காமல், வாழ்க்கையை வாழ்கின்ற மக்களின் முரண்பாடுகளின் கூடவே அதனைத் தொடர்ந்து செல்வது பொன்னீலனுக்கு வாய்த்திருக்கிறது. தமிழ் நாட்டின் அன்றாட வாழ்வில் , நடைமுறை அரசியல் பெற்றிருக்கும் சிறப்பான இடம் பற்றியும், அந்த அரசியல் பல விதங்களில் சமூக விழிப்புணர்ச்சியுடன் இணைந்த பங்கேற்பு என்பதையும் மிகச் சரியாய்ப் புரிந்த நாவல் இது. இந்த விழிப்புணர்ச்சி பெரிதும் அறிவார்ந்த தேர்வாய் இல்லாமல், உணர்வு பூர்வமான தேர்வும் கூட என்பது ஆராயப் பட்டிருக்கிறது இந்த நாவலில். (பகுத்தறிவை முன்னிறுத்திய பெரியார்-திராவிட இயக்கம் உணர்ச்சி பூர்வமான பிராமண எதிர்ப்பைத் தன்னகத்தே கொண்டது, பெளராணிகத்திற்கான எதிர்ப்பைக் காட்ட ராமாயணம், மகா பாரதம் இவற்றைக் கட்டுடைத்தது ஒரு புறம். எதிரிடையாக பிராமணிய எதிர்ப்பில் , பிராமணர் உருவாக்கம், வருகை போன்றவற்றில் வரலாற்றைக் காட்டிலும் பெளராணிகத்தை சுவீகரித்துக் கொண்டதும் நினைவிற் கொள்ள வேண்டும்)

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘. தமிழில் உளவியல் வெளீப்பாடுகளாய் அமைந்திருக்கும் படைப்புகள் மிக மிகக் குறைவு. ஆ மாதவன், தன் முதல் கதைகள் தொடங்கியே இந்த வெளிப்பாட்டில் கவனம் செலுத்தியவர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் , அழுத்தமாகவும், மிகுந்த அனுதாபத்துடனும், மனித மனத் துயர்களையும் சஞ்சலங்களையும் மிகத் தீவிரமாய் வெளிப்படுத்திய நாவல் இது.

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘ இந்த நாவலும் சரி , ‘ஜி கே எழுதிய மர்ம நாவல் ‘ -ம் சரி மார்க்வெஸ், உம்பர்தோ ஈகோ போன்றோரின் பாதிப்புக்குள்ளான நாவல்கள். கதை சொல்லும் முறையும், உத்தியும் தமிழவன் பெற்றாரே தவிர, இந்த நாவல்களின் அனுபவங்கள் அசலான தமிழ் அனுபவங்கள். சொல்லும் முறையில் மிகப் பாரதூரமான மாற்றங்களை இந்த நாவல்களில் தமிழவன் நிகழ்த்தியிருக்கிறார்.

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘ ஓர் அசலான படைப்பாளியின் படைப்பு இது. ஒழுக்கம் – மறைவில் நிகழும் பாதுகாப்பு உணர்வுகள் அற்றுப் போகும் போது மனிதனின் அடிப்படை உணர்வுகள் எழுச்சி பெறுவதைக் கலை நேர்த்தியுடன் சொன்ன நாவல்.

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘ : அசலான வரலாற்று நாவல். பிரபஞ்சனின் எழுத்தில் சற்று, அதி உணர்வு தலை தூக்குவது உண்டு என்றாலும் இந்த நாவல் அதற்கு விதி விலக்கு

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘ : வண்ண நிலவனின் எழுத்து சோடனைகளை முற்றிலும் தவிர்த்த எழுத்து. அதனாலேயே அவருக்கு உரிய நியாயமான இடம் கிடைக்க வில்லை, அவருடைய ‘கம்பா நதி ‘ , ‘ஒரு நாள் ‘ இவையும் கூட முக்கியமான நாவல்களே.

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘ சினிமா உலகை வைத்து இந்த நாவலின் பாணியில் அல்லாமல் வேறு எந்த பாணியில் எழுத முடியும் ? நினைத்த போதில் மாறும் ஓர் உலகில் , காலையில் ஒட்டப் பட்ட சுவரொட்டிகள் மாலை வரை கூட நீடிப்பதில்லை, .அது போலவே எப்போது எப்படி எது நிகழும் என்ற நிச்சயமின்மையும், பரபரப்பிற்கும் இடையிலும் வாழ்க்கையின் சரடுகள் அதனதன் போக்கில் சஞ்சரிப்பதைக் கோடி காட்டி, ஒரு சிறிய அத்தியாயத்திற்குள் , ஒரு முழு நாவல் அளவிற்குக் குறிப்புகளை ஏற்றி வைத்த படைப்பு இது. அசோக மித்திரனின் ‘தண்ணீர் ‘ ஓரளவு ‘ஒரு புளிய மரத்தின் கதை ‘ யுடன் ஒப்பிட வேண்டும் . கம்பீரத்திற்கும் , உன்னத காலங்களின் பின்னோக்கிற்குக் குறியீடாய் இருந்த புளிய மரம் போலவே மனித உறவுகளுக்குக் குறியீடான ‘தண்ணீர் ‘ இதில். ஆனால், ‘ஒரு புளிய மரத்தின் கதை ‘யைக் காட்டிலும் கூட யதார்த்தப் படைப்பு ‘தண்ணீர் ‘. ஆனால் முன் சொன்ன காரணங்கள் போலவே – ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றி நடப்பது என்ற நிர்ப்பந்தத்தினால் ஏற்படும் ஒருமைக் குலைவு இதில் உண்டு. ’18-வது அட்சக் கோடு ‘ , ‘இன்று ‘ம் கூட சிறந்த நாவல்களே.

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘ – பின்னாட்களில் அவர் எழுதிய ‘தந்திர பூமி ‘ ‘சுதந்திர பூமி ‘ ‘ ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன ‘ , ‘குருதிப் புனல் ‘ போன்ற நாவல்களின் விதைகளை இந்த நாவலில் பார்க்கலாம். ‘கால வெள்ளம் ‘ எழுத்துத் திறனில் செழுமை பெற்ற நாவல் என்று இதைச் சொல்ல முடியாது. என்றாலும், உண்மையின் எதிரொலிகள் கொண்ட அசலான நாவல்.

12. நீல பத்ம நாபன் ‘ தலைமுறைகள் ‘ :தமிழ் நாவலின் மிக முக்கியமான திருப்பு முனை என்று இந்த நாவலைச் சொல்ல வேண்டும்.

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘ : சுஜாதாவின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறுவது ஆச்சரியம் தரலாம். ஆனால், தமிழ் எழுத்தின் ஆதாரப் போக்குகளை முற்றிலும் மாற்றியவர் இவர். அவருடைய எல்லா நாவல்களுக்குமே ஏதோ ஒரு விதத்தில் முக்கியத்துவம் உண்டு. வாசகனின் ஈடுபாடுகளுடன் ஒரு விதமான விளையாட்டு நடத்துவது என்கிற ஒரு குதூகல உணர்வு இவருக்கு இருப்பதால், தீவிர எழுத்து இல்லை அது என்ற கணிப்பு ஏற்படுவதுண்டு. கல்கி ஆரம்பித்து வைத்த பாணியில் அவர் தொடர்கதை உருவத்தை மேற்கொள்வதால் அவர் எழுத்தின் தீவிரம் குறைவு என்று தோன்றலாம். ஆனால், புதிய தமிழ் என்று ஒன்றைச் சொல்லலாம் என்றால் அது சுஜாதாவின் தமிழ் தான். மேற்சொன்ன எழுத்தாளர்கள் எவரின் தீவிரத்திற்கும் , ஈடுபாட்டிற்கும் குறைந்ததல்ல அவர் எழுத்துப் பங்களிப்பு.

****

Series Navigation