அம்மாயி

This entry is part of 15 in the series 20010325_Issue

பாரி பூபாலன்


ஊரிலிருந்து செய்தி வந்தது, அம்மாயி இறந்து விட்டாள் என்று. மனதிற்குச் சிறிது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அழுகை வரவில்லை. அம்மாயி இறந்த செய்தி ஒரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அம்மாயியை விட்டு தொலை தூரம் வந்து விட்டதால் இழப்பு நெஞ்சுக்குப் பெரியதாகத் தெரியவில்லை போலும். ஒருவேளை ஊரிலேயே அம்மாயி பக்கத்திலேயே இருந்திருந்தால் கதறி அழுதிருப்பேனோ என்னவோ ?

நினைவு கூர்ந்தால், அம்மாயியுடன் கூடிய உறவு வெகு நாள்பட்டதொன்று. அம்மாயிக்கு நல்லொதொரு கம்பீரமான உருவம். பார்ப்பவர்களை வசீகரிக்கும் சிவந்த முகம். அம்மாயியின் பேரப்பிள்ளை என நம்மைப் பற்றி ஊரார் சொல்லும்போது, நமக்குள் ஏற்படும் பெருமை சொல்லி மாளாது. அம்மாயியின் மடியிலோ அல்லது பக்கத்திலோ படுத்துக்கொண்டு பழங்கதை பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

சிறுவனாய் இருந்தபோது, அம்மாயி வீட்டிற்கு அடிக்கடி செல்வதுண்டு. அம்மாயி வீட்டிற்குச் செல்வது என்பது மிகவும் பிடித்த விஷயம். அம்மாயி வீட்டுத் தோட்டத்திலும் மாடியிலும் ஒடியாடி விளையாடியதும், அம்மாயியின் சமையலை ரசித்துச் சாப்பிட்டதும், தாத்தாவிடம் ஐந்து காசு வாங்கி அருகிலுள்ள கடையில் மிட்டாய் வாங்கித் திண்றதும் இன்றும் நினைவிலிருக்கும் விஷயங்கள். அம்மாயி வீட்டுச் சமையலைப் பற்றி சொல்லப் போனால், அம்மாயி வைக்கும் சாம்பாரும், மீன் குழம்பும், கரிக் குழம்பும் தான் ஞாபகத்திற்கு வரும். அம்மாயி சமையல் பேரக்குழந்தைகள் எங்களிடம் பெரும் பிரசித்தம். அதுவும் மாமா தட்டு எனக்கு, தாத்தா தட்டு உனக்கு என தட்டுக்குப் போட்டி போட்டுக் கொண்டுதான் சாப்பாடு நடக்கும். பள்ளியில் படிக்கும் போது மத்தியானச் சாப்பாடு அம்மாயி வீட்டில்தான். அம்மாவிடம் கூடச் சொல்வதுண்டு, ‘ஏம்மா உனக்கு அம்மாயி மாதிரி சாம்பார் வைக்கத் தெரியவில்லை ? ‘ என்று.

அம்மாயியின் சிக்கனமும், அதே சமயத்தில் மற்றவர்களுக்கு உதவும் தாராள குணமும் என்னுள் வியப்பை ஏற்படுத்தும். அம்மாயி மார்க்கெட் போகும் போது நானும் கூடச் செல்வதுண்டு. அதிலும் கரிக்கடைக்குச் சென்று கரி வாங்குவது மிகவும் சுவாரஸ்யமான விஷயம். மார்க்கெட்டுக்குள் வருகின்ற அத்தனை பேரையும் வியாபார நோக்கில் வாங்க வாங்க என்று போட்டி போட்டுக் கொண்டு அழைக்கும் அத்தனை கடைக்காரர்களும், அம்மாயியைப் பார்த்ததும் வேறு பக்கம் திரும்பிக் கொள்வார்கள், ‘எதற்காக இந்தக் கிழவியிடம் வம்பு ‘ என்று. இருந்தாலும், எந்தக் கடையில் நல்ல கரி இருக்கிறது என்பதைப் பார்த்து அந்த கடைக்காரனிடம் பேசி, வாங்கும் 200 கிராம் கரியை தண்ணி இல்லாமல், கொழுப்பு, தோல் இல்லாமல், அப்படி இருந்தால் அவனைக் கண்டபடி சத்தம் போட்டு, நல்ல இளசு கரியாய் பார்த்து வாங்குவது ஒரு பெரிய கலை. வீட்டில் பசு மாடுகள் வைத்து பால் கறந்து, பக்கத்து வீட்டார்களுக்கெல்லாம் அளந்து விற்று விட்டு, அந்த பாத்திரங்களைக் கழுவி பால் போல தோன்றும் தண்ணீரே காபியாக மாறும் காட்சிகளும் உண்டு அம்மாயி வீட்டில். இப்படி சிக்கனமாகவும் கறாராகவும் இருந்து அம்மாயி வாழ்க்கை நடத்திய போதிலும், இல்லையென்று வருபவர்களை என்னவென்று கேட்டு காசோ பணமோ கொடுத்து உதவுவதிலும் அம்மாயி தயங்கியதில்லை. கோவிலுக்குப் போய் வந்து கொடுக்கும் ஒரேயொரு கொய்யாப் பழத்தையும், சிறிது பஞ்சாமிர்தத்தையும் அக்கம் பக்கத்திலுள்ள ஐந்தாறு வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுத்த காட்சியும் நினைவிலுண்டு.

பத்துக்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகளிடம், பிள்ளைகளிடமும் அம்மாயி உயிராகத்தான் இருப்பாள். தன் பிள்ளைகள் பற்றியும், பேரப்பிள்ளைகள் பற்றியும் பெருமையுடன் பறைசாற்றுவதில் அம்மாயியிடம் குறைவிருக்காது. அம்மாயிக்கு வரும் கடிதங்களை வருபவர் போபவர் என்று அத்தனை பேரிடமும் படிக்கச் சொல்லி கேட்டு மகிழ்வதில் நிறைய இஷ்டம். அப்படி ஒரே கடிதத்தை திருப்பி திருப்பி கேட்பதில் சலிப்பே இருக்காது. ‘தம்பி மாமா கடிதாசைப் படிச்சு சொல்லு ‘ என்பது எத்தனையோ முறை கேட்டுப் பழகிய சொற்றொடர். ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கல்யாணம் காட்சியென்று செய்த செய்வினைகளுக்கு குறையே இருக்காது. சிறுவயதில் மிகவும் நோய்வாய்ப் பட்டு வாரக்கணக்கில் ஆஸ்பத்திரியில் கிடந்தபோது, அத்தனை நாட்களும் கூடத் துணைக்கு இருந்தது அம்மாயிதான்.

நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாயி நெஞ்சுக்குள் நிறைந்திருப்பதினால், அதற்கு முன்னதாய், ஒரு மழலையாய் இருக்கும் போது அம்மாயி நம்மை எப்படியெல்லாம் கொண்டாடியிருப்பாள் என்பதை நினைத்துப் பார்த்தால் அம்மாயியைத் தோள் மீது தூக்கி வைத்து கொண்டாடத்தான் தோன்றும்.

இன்னும் எனக்குள் அம்மாயி இறந்த செய்தி ஒரு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தொலை தூரம் தள்ளி உள்ள வீட்டில் ஒரு பெஞ்சில் படுத்திருக்கும் காட்சியே இன்னும் என் நெஞ்சுக்குள். அடுத்த முறை, ஊருக்குச் செல்லும் போது அம்மாயி வீட்டிற்குச் சென்று அம்மாயியைச் சந்திப்பேன், இஷ்டமாய் கதை பேசுவேன் எனும் நினைவு இன்னும் எனக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

***

Series Navigation