இந்த வாரம் இப்படி

This entry is part of 16 in the series 20010304_Issue

மஞ்சுளா நவநீதன்


பாரதிதாசன் பேரன் செய்த உருப்படியான காரியம்

முதலியார் சங்கம் பாரதிதாசனின் பெயரைப் பயன் படுத்தி, முதலியார் சங்கத்தின் செயல்பாடுகளை ஏதோ பாரதிதாசன் ஆசீர்வதித்திருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. உடனே பாரதிதாசனின் பேரன் இதனைக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது மிகப் பாராட்ட வேண்டிய விஷயம். இது மாதிரி சாதிச் சங்கங்கள், சாதிக்கு அப்பாற்பட்ட முறையில் பணியாற்றியவர்களையும், தம் சாதியைச் சேர்ந்த ஒரே காரணத்திற்காக , சொந்தம் கொண்டாடுவது மிக அசிங்கமான செயல். முதலியார் சங்கம் முன்பே திரு வி க என்ற அற்புதமான மனிதரைத் தனக்குச் சொந்தம் கொண்டாடியது மட்டுமல்லாமல் அவர் பெயரைச் சிதைத்து மணவழகனாராக அவரை ஆக்கிய கொடுமை பற்றியும் இந்த நேரத்தில் குறிப்பிடுவது அவசியம்.

அடுத்தது என்ன ? காமராஜ் , நாடார் சங்கத்தின் லெட்டர் பேடில் ஒளிப்படமாய் இடம் பெறப் போகிறாரா ? வ உ சி – கப்பலோட்டிய தமிழன் அல்ல , கப்பலை அல்ல எங்கள் சாதிக் கட்சியை ஓட்டப் போகிறார் என்று பிள்ளைமார்கள் சங்கம் அறிவிக்கப் போகிறதா ? நல்ல வேளை நாயக்கர் சங்கம் ஒன்று தொடங்கி ஈ வெ ரா-வை அதன் வழிகாட்டி என்று அறிவிக்கவில்லை – இந்த நிமிடம் வரையில் . ஆனால் தமிழர் பண்பாட்டில் எனக்கு அசாத்திய நம்பிக்கை. ஒரு மாதத்திற்குள் இதுவும் நடந்தாலும் வியப்பதற்கில்லை.

***

எம் ஐ டி உதவியுடன் ஆய்வு நிலையம்

மாசசூஸட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற அமைப்புடன் இணைந்து ஓர் ஆய்வு மையம், இந்தியாவில் தொடங்கப் படவிருக்கிறது. பத்து ஆண்டுகளில் 200 மிலியன் டாலர்கள் – கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய் – இந்திய அரசாங்கமும் இதில் முதலீடு செய்யும். இந்த ஆய்வு மையம் மோடோரோலா, லெகோ , இண்டெல் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடும் பெறும். அது எந்த நகரத்தில் நிறுவப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. சீனா போன்ற நாடுகள் இந்த ஆய்வு நிறுவனம் தம் நாட்டில் இயங்க வேண்டும் என்று முனைந்து செயல் பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இந்தியா முந்திக் கொண்டு தன் ஆதரவையும் பொருளாதாரப் பங்களிப்பையும் தெரிவித்ததால் இந்தியாவில் இது நிறுவப்படவிருக்கிறது.

இதன் முனைப்பு எந்த திசையில் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், தொழில் நுட்பம் சார்ந்த எந்த ஆய்வுமே வரவேற்கத்தக்கது. இந்தியா பற்றிய ஒரு நல்ல பிம்பத்தினை உலகெங்கும் உருவாக்க இது பயன் படும். இந்தியாவின் தேவைகளை ஒட்டிய ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடும் என்றால் இன்னமும் அது விசேஷம்.

***

வறுமை இருக்கும் போது எதற்கு தொழில் நுட்பம் ?

ஆனால் வழக்கம் போல இது பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன. அரசாங்கம் இவ்வளவு பணத்தை இதில் போட வேண்டுமா ? அரசாங்கம் வறுமையைப் போக்க வேண்டாமா ? தொழில் நுட்பம் இந்தியாவிற்குப் பயன் படுமா ? அடிப்படைக் கல்வியே அனைவரையும் சென்றடையாத நிலையில் தொழில் நுட்ப ஆராய்ச்சி எதற்கு ? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

இதில் இரண்டு விதப் பார்வைகள் வெளிப்படுகின்றன. இடதுசாரிகளின் கோட்பாடை ஒட்டிய, பலதேசக் கம்பெனிகளைப் பற்றி நியாயமாகவே சந்தேகப் படுகின்ற சில பார்வைகள். (இதன் பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், ரஷ்யா வானவெளியில் துணைக் கோள்களைப் பறக்க விட்டபோது, இவர்கள் தொழிலாளிகளின் பிரசினைகளைத் தீர்க்காமல் , விண்வெளிப் பயணம் என்ன உனக்குக் கேடு என்று குரல் கொடுத்தவர்கள் அல்ல. சோஷலிசத்தின் பெரும் வெற்றி என்று அதனைப் பாராட்டியவர்கள்.)

சில பார்வைகள் வேறு மாதிரியானவை. இவர்கள் டைம் , கார்டியன் போன்ற பத்திரிகைகளில் இந்தியா பற்றி எழுதுகிற கனவான்கள், அல்லது குணவதிகள். இந்தியாவைப் பற்றி எழுதும்போது ஏழ்மையையும், மதக்கலவரங்களையும் தவறாமல் குறிப்பிடுகிறவர்கள். வெளிநாட்டினர் இந்தியர்கள் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணத்திற்கு – தவறான எண்ணம் என்று சொல்ல முடியாது ஆனால், நிச்சயம் ஒற்றைப்பரிமாணப் பார்வைக்கு — அனுசரணையாய் இவர்கள் எழுதித் தள்ளும் இந்தியா பற்றிய கட்டுரைகள் இவை.

அமெரிக்கா பற்றிக் குறிப்பிடும்போது இவர்களில் எவரும் 35 வருடம் முன்பு வரை கறுப்பர்களைத் தீண்டத்தகாதவர்களாய் வைத்திருந்த நாடு இது என்று எழுதுவதில்லை. ஜெர்மனியைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் , இவர்கள் ஹிட்லரின் ஆட்சியில் 60 லட்சம் யூதர்களைக் கொன்ற நாடு என்று குறிப்பிடுவதில்லை. இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் போது 300 ஆண்டு கால காலனியாதிக்க ஆட்சியில் இருந்த நாடு என்று குறிப்பிடுவது இன்னமும் பொருத்தமாய் இருக்கும். ஆனால் இவர்கள் இதைக் குறிப்பிடுவதே இல்லை.

வறுமை போக்கப் பட வேண்டியதும், அடிப்படைக் கல்வி மக்களுக்குக் கிடைப்பதும் மிக அத்தியாவசியமான ஒன்று தான். காங்கிரஸ் அரசும் சரி மற்ற அரசுகளும் சரி கவனம் செலுத்தாத இந்தப் புறக்கணிப்பு இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் – சோகம். ஆனால், அது இல்லாவிட்டால் இது என்ற நிலையில் அரசாங்கங்கள் இயங்கமுடியாது. தொழில் நுட்ப வளர்ச்சிக்குச் செலவிடும் தொகை ஒரு விதத்தில் வறுமைக் குறைப்புக்கான பாதை தான் — இதன் பலன் உடனடியாய் இல்லாவிட்டாலும் கூட. தொழில் நுட்ப ஆய்வில் பணம் போடாவிட்டால் அந்தப் பணம் உடனடியாய் மக்களுக்கு உணவளிக்கவும், கல்வியளிக்கவும் பயன் படும் என்பதும் தப்புக் கணக்கு. எதிர்காலம் அறிவின் யுகம் . அதன் பாதையில் போகாவிட்டால், நம் நாடு நிரந்தரமாய் அறியாமையிலும், வறுமையிலும் இருக்க வேண்டி வரும்.

***

ஐக்கிய ஆப்பிரிக்க மாநிலங்கள் (United States of Africa)

சென்ற வெள்ளியன்று ஒரு நல்ல செய்தி படித்தேன். எத்தனை பேர் இந்த செய்தியை கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்திய செய்திப் பத்திரிக்கைகளும் இந்த நல்லச் செய்தியை கவனிக்காமல் பால்கோ, தாலிபான், ஜெயலலிதா என்று மூழ்கி விட்டிருந்தன.

லிபியாவின் தலைநகரமான திரிபோலி நகரத்தில் 53 ஆப்பிரிக்க தேச ராஜாக்களும், பிரதமர்களும், ஜனாதிபதிகளும் கூடி ஐக்கிய ஆப்பிரிக்க மாநிலங்கள் என்ற ஒன்றுபட்ட தேசமாக ஆப்பிரிக்காவை ஆக்க கையொப்பம் இட்டிருக்கிறார்கள். மனதார வாழ்த்துகிறேன்.

தெற்கே தென்னாப்பிரிக்காவிலிருந்து வடக்கே லிபியாவரை கிழக்கே ஜாம்பியாவிலிருந்து மேற்கே ஜைர் வரை இந்த தேசங்கள் ஒன்று பட்டு இந்த மாநாட்டில் பங்கு வகித்திருக்கின்றன. ஒரே பணம், ஒரே ராணுவம், ஒரே பொருளாதாரம் என்ற நோக்கில் இந்த கையொப்பம் இடப்பட்டிருக்கிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பது சிறுவர்களின் பள்ளிப்பாடமாக இருக்கலாம். ஆனால் அது பின்பற்றப்படாவிட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது உள்நாட்டுக் கலவரங்களிலும், ஐரோப்பியர்கள் பண்ணிய கலாட்டாக்களிலும், அடிமைத்தனத்திலும், வைரத்துக்காக நடந்த போர்களிலும், வீணான இனக்கலவரங்களிலும் ஐரோப்பியர்களுக்கு ஆப்பிரிக்க செல்வம் தாரை வார்க்கப்படுவதை பட்டு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

புரிந்தாலும், இந்தியாவில் காந்தி போல, நேரு போல ஒரு தலைமை ஆப்பிரிக்காவில் உருவாவது கனவாக இருந்த சூழ்நிலை, நெல்சன் மாண்டெலா வந்ததும் மாறி இருக்கிறது. நெல்சன் மாண்டெலா ஒரு தார்மீக தலைமையை ஆப்பிரிக்காவுக்கு கொடுத்திருக்கிறார். கடாபி போன்ற எதேச்சதிகாரிகளையும் அணைத்து அவர்களை நல்ல நீண்ட வளமையான எதிர்காலத்துக்காக அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

ஆப்பிரிக்காவில் எதேச்சதிகாரிகளுக்கும், ஐரோப்பிய காலடி வருடும் ராணுவத் தளபதிகளுக்கும் பஞ்சமில்லை. இருந்தும் இவ்வாறு அனைத்து ஆப்பிரிக்க தேசங்களுக்கும், ஒரு குறிக்கோளையும், வளமையான வாழ்வுக்காக ஒற்றுமையையும் ஆப்பிரிக்க தேசங்களுக்கு கொடுக்கும் மாண்டெலாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்தியா துண்டுதுண்டாக உடைய வேண்டும் என்று பாகிஸ்தானியர்களும், ஒரு வகை இடதுசாரிகளும், தமிழ் நாகாலாந்து அஸ்ஸாம் காஷ்மீர தீவிரவாதிகளும் போராடி வருகின்றார்கள். இவர்களுக்கு ஒரு பக்கம் வரலாற்றாசிரியர்கள் ‘இந்தியா ஒரே தேசமாக எக்காலத்திலும் இருந்ததில்லை ‘ என்று சங்கு ஊதிக்கொண்டிருக்கிறார்கள். ஜிந்தாபாத்-வுக்கு முந்தைய கவிஞர் அமெரிக்கா வந்திருந்தபோது இந்தியா உடைய வேண்டும் எல்லா மாநிலங்களும் தனித்தனி தேசங்களாக உடைய வேண்டும் என்றும் பேசினார். இது போல இன்னும் பலர் இருக்கிறார்கள். இதில் யாருக்கு சந்தோஷம் என்பது வெள்ளிடை மலை. ஐரோப்பா ஒரு தேசமாக நெருங்கி வருகிறது. ஆப்பிரிக்கா ஒரு தேசமாக நெருங்கி வருகிறது. இந்தியா உடைவது மட்டும் இந்த அறிவுஜீவிகளுக்கு வேண்டும். இது அறிவுஜீவிகள் மத்தியில் மட்டும் இருந்தால் பரவாயில்லை, இவர்கள் ஊர் ஊராகச் சென்று நாடு நாடாகச் சென்று தங்கள் உளறலையும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். பைத்தியக்காரனுக்கும் பத்துபேர் கூட்டம் என்பதுபோல இவர்களுக்கும் கொஞ்சம் கூட்டம் சேரும். அந்தக்கூட்டம் வீரப்பனின் பின்னால் அலையும். அதுதான் அவலம். மெத்தப்படித்த மூஞ்சூரு கழனிப்பானைக்குள் விழுந்ததாம் என்பதுதான் நம் ஊர் அறிவுஜீவிகளின் பெரும்பாலான வழியாக இருக்கிறது. (உதாரணத்துக்கு காஞ்சா ஐலய்யா, எஸ்.வி ராஜதுரை போன்றவர்கள்)

சொல்ல மறந்துவிட்டேன். வழக்கம் போல இந்திய ஏழ்மையை எழுதாமல் எந்த நல்ல செய்தியும் இந்தியாவைப்பற்றி வராதது போல, இந்த ஐக்கிய ஆப்பிரிக்க மாநிலங்கள் பற்றிய செய்தியை எழுதும் ஆப்பிரிக்க பங்கஜ் மிஸ்ராக்கள் ‘இதுவெல்லாம் நடக்காத கதை, ஆப்பிரிக்காவில் வறுமை தாண்டவமாடும்போது இதெல்லாம் தேவைதானா ? கடாபியின் இன்னொரு கனவு, ‘ என்றே ‘செய்திகள் ‘ கொடுத்திருக்கிறார்கள். வேறு எதில் ? ராய்ட்டர்ஸ், ஏ பி போன்ற ‘செய்தி ‘ நிறுவனங்களில்தான்.

***

சிதம்பரம் மூப்பனார் சந்திப்பு

எந்தக் கட்சியிலாவது அதே கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் சந்தித்தால் இது போல தலைப்புச் செய்தி வருமா என்று தெரியவில்லை!

அதே போல வேறு எந்தக் கட்சியிலாவது, இன்னொரு கட்சியின் தலைவரை (சோனியா) தன் கட்சித் தலைவராக இன்னொரு கட்சித்தலைவர் சொல்வாரா என்றும் தெரியவில்லை!

***

திண்ணை ஆசிரியர் என்னை தாலிபானின் புத்தச்சிலை உடைப்பைப் பற்றி எழுதச்சொன்னார். நான் எழுதவில்லை. திரு. சின்னக்கருப்பன் எழுதுவதாகவும் பின்னர் என்னிடம் ஆசிரியர் தெரிவித்ததால், நான் அவரது எழுத்தைப் படித்துவிட்டு எழுதுவதாக இருக்கிறேன்.

**

Series Navigation