ஜெயமோகனின் கடிதம்

This entry is part [part not set] of 17 in the series 20010219_Issue

அன்புள்ள ஆசிரியருக்கு


இணைய இதழ்களை பார்க்காமல் இருக்க முடியாது என்ற நிலை படிப்படியாக உருவாகிவிட்டது.சமீபத்தில் எல்லா இணையத்தமிழ் இதழ்களையும் படித்தேன்.திண்ணை மிகவும் சிறப்பாக உள்ளது.படைப்பிலக்கியத்தில் புதிய படைப்புகள் கிடைப்பதில் உள்ள சிரமம் புரிகிறது.அது இங்குள்ள எல்லா சிற்றிதழுக்கும் உள்ள பிரச்சினைதான்.மிக குறைவாகவே இங்கு எழுதுகிறார்கள்.அதற்கு முன்பிருந்தது போல சிற்றிதழ்களே போதுமானவை,ஆனால் இன்று இந்தியா டுடே போல வாரஇதழே தரமான கதைகளை அதிக பணம் தந்து பெற்றுக்கொள்கிறது.அதற்கேற்ப தீவிரமாக எழுதக்கூடிய படைப்பாளிகள் புதிதாக உருவாகவுமில்லை.எனவே சிற்றிதழ்களுக்கு மொழிபெயர்ப்பே கதியென ஆகிவிட்டது. தாராளமாக கிடைப்பது வம்பு தான்.புதிய தலைமுறையில் படிப்பதில் நம்பிக்கையில்லாத,வம்பில் மட்டுமே ஆர்வமுள்ள இளைஞர்கள் பலர் உருவாகியுள்ளனர்.மேலும் இன்று பிரபல இதழ்கள் அதிகமும் இலக்கிய வம்புகளை பிரசுரம் செய்யவே விரும்புகின்றன.

திண்ணை கடிதங்களில் பொதுவாக தரம் பேணப்பட்டிருந்தது மகிழ்ச்சி தந்தது.சில கடிதங்களில் மட்டும் தமிழகத்து குரல்களைநினைவூட்டும் தொனி ,உதா கட்டபொம்மன். மார்க்சியர்கள் பலர் தங்கள் சித்தாந்த விசுவாசத்திற்காக இலக்கிய படைப்புகள்

மீது வன்முறையை ஏவுகிறார்கள்,உள்ளூர அவர்களுக்கு வஷயம் தெரியும் என பாமரத்தனமாக நான் நம்பியதுண்டு .பலரிடம் நேரில் பழக நேரிட்ட பிறகு அவர்களில் பெரும்பாலோரின் உண்மையான தரமே அது தான் என தெரியவந்தது.பலரால் துண்டுபிரசுர தளத்திற்கு மேல் யோசிக்கவோ எழுதவோ முடியவில்லை,அதை மறைக்கவே[பலசமயம் தன்னிடமிருந்தே] மேற்கோள்கள்.[பெருமாள் முருகன் எழுதிய மேற்கோள் வாங்கலையோ மேற்கோள் என்ற கட்டுரை ஞாபகம் வருகிறது]திண்ணை கடிதங்களிலும் அவ்வப்போது ஒரு சம்பந்தமும் இல்லாமல் அரகரநச்சிவாய மாதிரி மேற்கோள்களைக் கண்டு புன்னகைத்துக்கொண்டேன்.நம்மாள்கள் எங்கே போனால் என்ன ?

தி க சிவசங்கரனுக்கு சாகித்ய அக்காதம ி பரிசுக்கு நீங்கள் அளித்த வாழ்த்து கண்டேன்.தி க சி தாமரைக்கு ஆசிரியராக இருந்த காலத்தில் சில தரமான படைப்பாளிகளுக்கு எழுத வாய்ப்பு தந்தார் என்பது மட்டுமே அவரது அனுதாபியான உங்களால் கூட அவரது சாதனையாக கூற முடிந்த விஷயம்.சாகித்ய அகாதமி பரிசு இலக்கிய படைப்புகளுக்கும்,அசலான இலக்கிய ஆய்வுகளுக்கும் தரப்படுவது.தன்னை ஒரு மார்க்சிய விமரிசகராக சொல்லிக்கொள்ளும் தி க சி க்கு மார்க்சியம் பற்றி ஏதாவது தெரியுமா ?அதற்கான சிறு தடயமாவது அவரது அபிப்பிராய பிரகடனங்களில் உண்டா ?கட்சியின் ஆயுதமாக இலக்கியவாதிகளை வசை பாடியது தானே அவரது சாதனை ?தமிழின் மார்க்சிய விமரிசனம் என்று இவரது குறிப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தால் என்ன சித்திரம் நம்மைப்பற்றி ஏற்படும் ?இவ்வாறு இது வரை பலதளங்களை சேர்ந்த விசுவாசிகள் தமிழின் உதாரண படைப்பளிகளாக முன்வைக்கப்பட்டதனால்தான் இந்திய சூழலில் தமிழ் இலக்கியம் மரியாதைகெட்டு போய்விட்டது .பத்து வருடங்கள் முன்பு வரை தமிழ் எழுத்தாளனாக இந்திய அரங்குகளில் பங்கு பெறுவதே கேவலமான அனுபவமாக இருந்தது.நானே அப்படி கூசி சிறுத்த சந்தர்ப்பங்களுண்டு.அசோகமித்திரனும் சுந்தர ராமசாமியும் ஆங்கில பிரசுர நிறுவனங்கள் வழியாக வெளியே தெரிந்த பிறகு தான் அந்த கூச்சம் மறைந்தது.ஒரு பரிசுக்குப்போய் ஏன் இத்தனை கோபம் என்று பிறருக்குத் தோன்றலாம்.தமிழகத்தின் பிற பரிசுகளைப் பற்றி யாரும் கவலைப்படப்போவதில்லை,தமிழக அரசின் குறள் பீட பரிசு இதை விட பத்து மடங்கு பெரியது.ஆனால் அது விசுவாசிகளுக்கு, பற்கலைகழக பதவிகள் போல வரும்படியுள்ள பரிசுகள் தரப்படாத கடைசிப் பந்திக்காரர்களுக்கு, தரப்படும் இனாம் மட்டுமே .சாகித்ய அகாடமி பரிசுக்கு இலக்கிய மதிப்பு உண்டு,காரணம் மற்ற மாநிலங்களில் அது தரமான படைப்புகளுக்கு மட்டுமே தரப்படுகிறது.யோசித்துப்பாருங்கள் ,இ எம் எஸ் ,பி கோவிந்தப்பிள்ளை ,சச்சிதானந்தன் போன்ற மார்க்சிய விமரிசகர்கள் எழுதிய மலயாள மொழியில் தி க சி போய்ச் சேர்ந்தால் தலைக்குனிவு யாருக்கு ?ஏற்கனவே கருணாநிதியும் மு வரதராசனாரும் எழுதிய குப்பைகள் அரசு மொழிபெயர்ப்பாக வந்து அங்கு சிரிப்பாய் சிரிக்கிறது.[ஒரு மலையாள நாவலாசிரியர் சொன்னார்,தென்பாண்டிசிங்கம் படித்தேன் நல்ல படைப்பு.அப்படியா மலயாளத்தில் யார் இதுபோல உங்களுக்கு பிடித்த படைப்பாளி ?என்று கேட்டேன்.மலயாளத்தில் நாங்கள் இப்படி எழுதுவதில்லை.தமிழில் இப்போது தானே நாவல்கள் எழுத தொடங்கியிருக்கிறார்கள்,அந்த தரத்திற்கு பரவாயில்லை என்று சொன்னேன் என்றார்.ஜெ ஜெ சில குறிப்புகள் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன்.கேள்விப்பட்டதில்லை என்றார்.அது மலையாளிகளின் இயல்பு என்று நினைத்திருந்தேன்,சமீபமாக கன்னடிகர்களிலும் அதை காண நேர்ந்தது,காரணம் நமது கட் அவுட் அரசியல்.தி க சி க்களை ஏற்றுமதி செய்து அந்த பிம்பத்தை நாம் வளர்க்கிறோம்.கட்சி மார்க்சியர் என்றாலும்கூட தோத்தாத்திரிக்கோ, முப்பால்மணிக்கோ பரிசு கிடைப்பதில்லை என்பதில் தான் நமது தமிழ்குணம் வெளிப்படுகிறது

ஜெயமோகன்

Series Navigation

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்