ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – இறுதிப்பகுதி

This entry is part [part not set] of 17 in the series 20010219_Issue

தேஜஸ்வினி நிரஞ்சனா


ஆண்மையின் வெளிப்பாடு வேறு சில முரண் பார்வைகளிலும் வெளிப்படுகிறது. வீரப்பன் ‘காடு ‘குறியீடாகவும், ராஜ்குமார் ‘நாடு ‘ ( நாடு நகரம் என்பதாகவும் ஆகலாம்) குறியீடாகவும் காண்பிக்கப் படுகிறார்கள். வெறும் மிருகபலம் , தேர்ந்த பண்புக்கு எதிரிடையாகவும், ரத்த வெறி , சமாதானப் போக்கிற்கு எதிரிடையாகவும் நிறுத்தப் படுகிறது. ‘நிறைகுடம் தளும்பாது ‘ என்ற பழமொழிக்கு உன்னுடைய வாழ்வே உதாரணம் என்று ராஜ் குமாரைப் பார்த்து சொல்வதாய் ஒரு பேழையில் காண்கிறோம். மொழி சார்ந்த ஆண்மையைக் கட்டுவிக்கவும் இந்த வாதம் பயன் படுகிறது. தமிழ்- கன்னடம், வீரப்பன்- ராஜ்குமார் மற்றும் ரசிகர்கள் என்று ஆகிறது இது. ராஜ்குமார- ரசிகர்களை ஒட்டுமொத்தப் பார்வையில் குறிப்பிடுவதே முரண்பாடான கன்னட தேசீயச் சொல்லாடல்களுக்கு வழி வகுக்கிறது. ரசிகன் வன்முறைப் பேச்சைக் கைக்கொள்ள வேண்டிய கட்டாயம் – ராஜ்குமார் வார்த்தைகள் அவனைக் கட்டுப்படுத்துகிற செயல் – இரண்டுமே கன்னட அடையாளத்தின் ஒன்றுடன் ஒன்று இணைந்த அங்கங்கள். அண்ணா அவர்களின் வார்த்தைகள் நடவடிக்கைகள் மட்டும் போதாது. ரசிகரைக் கட்டுப் படுத்துவதன் மூலமே அவை அர்த்தம் கொள்கின்றன. ராஜ் குமாரின் சைகைகள், முழு உருவமும் கொண்டு வெளியாகின்றன. ஒரு பேழையில் ராஜ்குமார் படங்கள் வரிசையாய்ச் சொல்லப் படுகின்றன : ‘ரணதீர காண்டாரவா ‘ , ‘ரவுடி ரங்கண்ணா ‘, ‘சூரி சிக்கண்ணா ‘, ‘சிபாய் ராமு ‘ , ‘பாப்ரு வாஹன ‘ (இதில் பெரும் ஆண்மையை வெளிப்படுத்தும் நாயகனாய் ராஜ்குமார் வருகிறார்.) ‘வேடர் கண்ணப்பன் ‘ , ‘பக்த அம்பரீஷ் ‘ . இன்னொரு பேழையில் பாடல்கள் ‘ கன்னடியரின் இதய ஒலி ‘ என்று சொல்லப் படுகிறது – ராஜ்குமாரை ‘பஹடூர் கண்டு ‘ ( வீரமான ஆண்), ‘பூபதி கண்டு ‘ (பூமியை ஆள்பவன்) , ‘பென்கி செண்டு ‘ (அக்கினிப் பந்து), ‘ஃபிரங்கி குண்டு ‘ (வெளிநாட்டு குண்டு ) . ராஜ்குமாரின் உடல் இப்படி வர்ணிக்கப் படுகிறது . ‘ உடற்பயிற்சி நிலையத்திலேயே குடியிருக்கும் உடல் ‘ ஹட யோகா நிபுணராகவும் அவர் வர்ணிக்கப் படுகிறார் – மனதையும் உடலையும் தூய்மைப் படுத்திவிட்ட ஒருவராய்ச் சொல்லப் படுகிறார். யோகா தெரிவதால் ஏற்படும் பயனையும் ஒரு பேழை சொல்கிறது. வீரப்பன் ராஜ்குமாருக்கு சூர்ய நமஸ்காரம் கற்றுத் தர முயல்கிறான். ஒரு புன்முறுவலுடன் ராஜ்குமார பலவித ஆசனங்களைச் செய்து காண்பிக்கிறார். வயிறைச் சுழற்றுவதையும், ஒரு மூக்கில் நீரை விட்டு இன்னொரு மூக்கில் எடுக்கிற ஆசனத்தையும் ராஜ் குமார் செய்து காண்பிக்க, வீரப்பன் ராஜ்குமார் காலில் விழுந்து விடுகிறான். இந்தக் கதைக்கு எதிர்மாறாக இன்னொரு கதை வருகிறது : விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ராஜ்குமாரைத் திருடிக் கொண்டு போய் விட்டான் வீரப்பன். முள்ளில் விழுந்த பொன்னாடை என்று ஒரு பேழையில் வருகிறது. ஒரு வார்த்தை ராஜ்குமார் சொன்னால் போதும், மலர் போல அவரை ரதத்தில் அழைத்து வருவோம். ரசிகர்களின் அண்ணன், பச்சிளம் குழந்தை போல் கபடமற்ற மனம், வைரம், கன்னடியர் தந்தை, பால் போல் மனம் பெற்ற தூயவர் .

ஒன்று பட்ட கன்னடத் தன்மையை வெளிப்படுத்த உள்ள நிர்ப்பந்தம், ரசிகரின் வன்முறையான செயல்பாட்டிற்கு உள்ள ஆவலையும், ராஜ்குமாரின் யோகி போன்ற ஆளுமையையும் சமநிலைப் படுத்த வேண்டியுள்ளது. அதனாலேயே ஒரு குழப்பமான ஆண்மை வெளிப்பாடாய் இது அமைகிறது. இரு வேறுபட்ட தன்மைகளை முடிச்சுப் போடுகிற முறையில் ஆண்மையின் மறு உருவாக்கம் தீர்க்கமாய் உருப்பெறவில்லை. இதுவே ஒருவேளை நமக்கு நம்பிக்கை தரும் ஒரு விஷயமாய் அமையலாம்.

குறிப்புகள் :

(இந்தக் கட்டுரை கலாசாரம் மற்றும் சமூக ஆய்விற்கான மையம், பெங்களூர்-இன் உதவி கொண்டுள்ளது. ஆஷிஷ் ராஜாத்யக்ஷ, எம் மாதவப் பிரசாத், எஸ் வி சீனிவாஸ், பி ராதிகா, ஏ ராஜு இவர்களின் உதவிக்கு நன்றி.)

இந்தக் கட்டுரை ‘எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லியில் வெளியானது. மொழிபெயர்ப்பு கோபால் ராஜாராம்

Series Navigation

தேஜஸ்வினி நிரஞ்சனா

தேஜஸ்வினி நிரஞ்சனா

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 3

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

தேஜஸ்வினி நிரஞ்சனா


கன்னடம், தமிழ் கலந்த கலவை மொழியில் இவர் சொல்கிறார்: ‘ராஜண்ணா உமக்கும் அண்ணா, எமக்கும் அண்ணா. அவர் மேலே எனக்கு ரொம்ப பக்தி இருக்குது ‘ இன்னொரு ‘ நல்ல ‘ தமிழர் பூனைக்கண் ராஜேந்திரா . இவர் பெங்களூர் மாஃபியாவின் நபர். அக்னி (ஆகஸ்ட் 25-2000) -ல் இவர் பேட்டி வருகிறது. மொழி தொடர்பான வன்முறையைக் கண்டிக்கிறார். ‘அந்த கிரிமினலுடன் எங்களைச் சேர்க்க வேண்டாம் ‘ என்கிறார். அந்த இதழிலேயே தலையங்கத்தில் ,தச்சு வேலை சண்முகம், காண்டிராக்டர் அண்ணாமலை இவர்களை விவாதிக்கிறது. ‘ அவர்களின் முன்னோர்கள் தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கு இங்கே வாழும் உரிமை இருக்கிறது; அவர்கள் கன்னடியர்கள் ஆகிற ஒரு சூழ் நிலையை நாம் உருவாக்க வேண்டும். கன்னட நாட்டில் கன்னடம் கற்றுக்கொள்ளாதவர்கள் , கன்னடம் பயன் படுத்தாதவர்கள் யாரும் இங்கே இருக்க முடியாத சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டும். ‘ இங்கு , அரசாங்கம் கன்னடியர்கள் பலவீனமாகிவிட்ட ஒரு சூழலை ஏற்படுத்தி விட்டதாய்க் குறிப்பு. தமிழ் இரண்டாவது மொழியாய் இருக்க வேண்டும் என்ற வீரப்பனின் கோரிக்கையை ஒரு பேழை கிண்டல் செய்கிறது. ‘கன்னடம் முதல் மொழியாய்க் கற்பிக்கவே இவ்வளெவு போராட்டம், இதில், தமிழ் இன்னொரு அரசு மொழியாக வேண்டுமாம் ‘ . சிக்கல் முற்ற முற்ற , அரசாங்கத்தின் கையாலாகாத் தனம் பேழைகளில் வலுவாய் வெளிப்படுகிறது. ‘ஹை பெங்களூர் ‘ தலையங்கம் (செப் 15 2000) சொல்கிறது. ‘ தமிழர்கள் கன்னடியர்களை எள்ளி நகையாடும்படித் தான் பார்க்கிறார்கள். ராஜ்குமார் காட்டில் துயரமுற்ற 40 நாட்களை மறந்து விடலாம் ஆனால், தமிழர்கள் கன்னிடியர்களைத் தாழ்த்தியதை கன்னடியர் மறக்கவே மாட்டார்கள். கன்னடியர் ஒவ்வொருவரும் வீட்டில் உட்கார்ந்து வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நீயோ ( எஸ் எம் கிருஷ்ணா – முதல் அமைச்சர் ) எங்களை விடவும் கையாலாகாத் தனமாய் உட்கார்ந்திருக்கிறாய். இப்படி நடக்கலாகாது. வரலாறு நம்மில் எவரையும் மன்னிக்கவே மன்னிக்காது. ‘ வெளியான முதல் பேழையில் , ‘மங்கன கையள்ளி மாணிக்ய ‘ ( குரங்கு கையில் மாணிக்கம்) ‘ஹை பெங்களூர் ‘ தலையங்கங்கள் பலவற்றைத் திரும்பவும் சொல்கிறது. கர்நாடகத்தில் கன்னடியர்களைத் தேடவேண்டியுள்ளது, தமிழர்களின் மொழி குறித்த அசட்டுப் பெருமை, கர்நாடகத்தின் மறு பெயர் பொறுமை, அமைதி, சகவாழ்வு, இப்படியே போனால் கர்நாடகத்திலிருந்து கன்னடியர்கள் வெளியேற வேண்டியது தான் – என்றெல்லாம் பேசுகிறது. ராஜ்குமார் அண்ணா அவர்கள் கடத்தப் பட்டவுடனேயே கர்நாடகம் எரிந்திருக்க வேண்டும். கலவரம் செய்வதற்குப் பதில் நாம் யாகம் செய்கிறோம். வன்முறையைக் கைக்கொள்ளாமல் நாம் பிரார்த்தனையில் இறங்கினோம்; கை முஷ்டியை உயர்த்தாமல், நாம் கைகளைக் குவித்து வணங்கினோம். உருட்டி விடுவதற்குப் பதில் நாம் உருளுசேவை( உருளும் பிரார்த்தனை – அங்கப் பிரதட்சணம் ) யில் இறங்கினோம்; புரட்சித்திலகம் இடாமல் நாம் அமைதித் திலகம் இட்டோம்.;

கன்னட ஆண்மை

‘அக்னி ‘ யில் ஆகஸ்ட் 18,2000 தேதியிட்ட இதழில் மக்களை அறைகூவி அழைத்துக் காட்டிற்குப் போய் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொலைபேசியில் பேசினார்கள் என்று குறிப்பிட்ட ஸ்ரீதர் (ஆசிரியர்) , தீவிரம் வேண்டாம் என்று சொன்னவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். ‘ அஹிம்சை கோழைத்தனம் ஆகிவிடக் கூடாது ‘ ஒரு மாதம் கழித்து மீண்டும் அக்னியில் : ‘ பயத்தை விடு. ஆட்டுக் குட்டி ஆகிவிடாதே ‘ ( செப் 22). கன்னடியர்களையும் , தமிழர்களையும் ஒப்பிட்டுக் காண்பிக்கிற வகையில் ஒரு புதிய கன்னட அடையாளம் எழுப்பப் படுகிறது. ஆகஸ்ட் 25-ல் அக்னியில் ஸ்ரீதர் : ‘ புலியல்ல – வெறும் அலி ‘ என்று கூறும் போது இந்த எதிர்க் குரல் அடையாளம் பெறுகிறது. ‘யார் ஆண்மையுள்ளவன் ? ‘ என்று கேட்கிறார் இவர். வீரப்பனின் இரண்டு படங்கள் – மீசையுடன் ஒன்று , ‘இவனிடம் ஆணின் குணங்கள் உள்ளனவா ? திறந்த மனதுடன் இதை ஆய்வு செய்வொம். ஆண்மை இருக்கிறதா ? குற்றவாளிகளுடம் எனக்குள்ள பரிச்சயத்தை வைத்துப் பார்க்கிறேன். ஆண்மையுள்ளவன் தன் செயல்களைத் தம்பட்டம் அடிக்க மாட்டான். ஒரு நாளில் ஐம்பது மைல் நடப்பதும், காட்டினைப் பற்றி நன்றாய் அறிந்து வைத்து இருப்பதும் ஆண்மையின் அடையாளமா ? இல்லை ‘ ஸ்ரீதர் சொல்கிறார் : ‘ பயிற்சி இருந்தால் எவருமே ஒரு நாளைக்கு ஐம்பது மைல்கள் நடக்கலாம். ஆதிவாசி அனைவருக்கும் காடு பழகிப் போன விஷயம். அதில் என்ன சிறப்பு இருக்கிறது ? ஹிட்லர் ஓர் அலி. கொஞ்சமாவது ஆண்மை அவனுக்கு இருந்திருந்தால் அவன் இவ்வளெள வன்முறையக் கட்டவிழ்த்து விட்டிருக்க மாட்டான். வீரப்பனை என்ன சொல்லி அழைப்பது ? அலியா ? ஆணும் பெண்ணுமல்லாத பிறவியா ? ஒரே குரலில் நம் பையன்கள் சொல்கிறார்கள் – அலி தான் . ‘ இந்தக் கட்டுரையில் ஓர் இடத்தில் கூட ராஜ் குமார் குறிப்பிடப் படவில்லை.ஆனால் அவர் நிச்சயமாய்ப் பின்னணியில் , வீரப்பனின் ஆண்மையை விவாதிக்கும் போது, ஆண்மையின் அடையாளமாய்க் காண்கிறார். ஆண்மை பற்றிய விவாதத்தில் , வீரப்பனின் மீசையும் ஒரு விவாதப் பொருளாகிறது . ‘மீசையில் நெருப்பு வைப்போம், நீ உண்மையான ஆண்பிள்ளையென்றால், கன்னடியர்களை நேருக்கு நேர் பார்க்க வா, கன்னடியர்கள் ஆண்கள் ‘ (ராஜண்ணா திரும்பி வாருங்கள்- பேழையிலிருந்து ) வில்லனின் பிம்பத்தைச் சரிவுறச்செய்ய பல பேழைகளில் இது சொல்லப் படுகிறது ‘ பழங்காலத்தின் பெரும் வீரர்கள் கூட இப்படிப் பெரிய மீசை வைத்துக் கொள்ளவில்லை. இவனுக்கு என்ன தைரியம் ? அவன் மீசையில் வைக்கோல், புழு , பூச்சி, பேன் பிடித்திருக்க வேண்டும் ‘.

இந்த மீசை ‘காடினள்ளி கன்னட ரத்னா ‘ என்ற பேழையில் முக்கிய இடம் பெறுகிறது. ராஜ்குமாருக்கும், வீரப்பனுக்கும் இடையில் நடக்கும் கற்பனை உரையாடலில் ஒரு விஷய்மாய் இது வெளிப்படுகிறது. இதன் உறையில் வழுக்கை விழுந்த , முகம் மழித்த உண்மையான ராஜ்குமார் படம் ஒரு புறமும், இன்ன்னொரு புறம் மீசையுடன் வீரப்பனின் கேலிச் சித்திரமும் இடம் பெறுகிறது. காட்டில் ராஜ் குமாரும் வீரப்பனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராஜ்குமார் வீரப்பனைப் பார்த்து சரண் அடையும் படி சொல்கிறார். வீரப்பன் சொல்கிறான் : ‘ நான் சரண் அடைந்தால் என் மீசைக்கே கேவலம். ‘ ராஜ் குமார் கேட்கிறார் ‘ உனக்கென்ன, ரொம்ப அருமையான மீசை இருப்பதாய் நினைப்பா ? என் அப்பா புட்டஸ்வாமிய்யா பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா ? என் அப்பாவிற்கு உன்னை விட பெரிய மீசை இருந்ததாக்கும். என் அப்பா மீசையை முறுக்கி நடித்து ரசிகர்களின் கைதட்டல் பெற்றார் (அவர் டிராமா கம்பெனியில் வேலை பார்த்தார்.) நீ ? நீ கொலையும், கொள்ளையும் செய்து கைதட்டல் பெறப் பார்க்கிறாய். உன் மீசை பைசாவிற்குப் பிரயோஜனமில்லை. உன் மீசையைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது. மீசையினால் மட்டும் மக்களை பயமுறுத்த முடியும் என்றால் எல்லாரும் மீசை வைத்துக் கொள்வார்களே. மக்களை அன்பு செலுத்தித் தான் வசப் படுத்த முடியும். ‘ கனிவும், பெருமிதமும் நிரம்பிய ராஜ் குமாரின் சித்திரம், கன்னடர்களின் ஆண்மையின் அடையாளம் ஆகிறது. இதே ராஜ்குமார் ரசிகர்களை வன்முறையிலிருந்து தடுத்து ஆண்மையின் இலக்கணத்தை மாற்றி எழுதுகிறார். பழைய இளம் ராஜ் குமாரின் சி ஐ டி, காதலர், வரலாற்று நாயகன் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இன்றைய வயதான ராஜ் குமார் முன்னுக்குத் தள்ளப் படுவாதாய்த் தோன்றுகிறது. பேழைகளிலும், கட்டுரைகளிலும் ராஜ் குமார் வன்முறையைக் கண்டனம் செய்த கோரிக்கைகள் பற்றிப் பல முறை குறிப்புக் காண்கிறது. இதைக் குறிப்பிடும் போது, பேழையின் கதாபாத்திரங்கள் வன்முறையாளர்களாய்த் தாம் மாறாததற்கு இதனையே காரணாமாய்ச் சுட்டுகிறார்கள்.

(தொடரும்)

Series Navigation

தேஜஸ்வினி நிரஞ்சனா

தேஜஸ்வினி நிரஞ்சனா

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 2

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

தேஜஸ்வினி நிரஞ்சனா


பேழைகளில் உள்ள மொழி மற்றும் படிமங்கள், பத்திரிகைக் கட்டுரைகள் , தலையங்கங்கள் இவற்றினது போன்றே உள்ளன. ஆனால் தொனியில் மாறுபாடு உள்ளது : பத்திரிகைக் கட்டுரைகளில் உள்ள கம்பீர தொனியும், கிண்டலும் பேழைகளில் நகைச்சுவையும் நட்சத்திரமான ராஜ்குமார் மீது அன்பு வெளிப்பாடுமாய் மாற்றம் பெறுகின்றன. உதவாக்கரை அரசியல் வாதிகள் தான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்று சொல்லி, அவர்களைச் செயல் படத் தூண்டுகின்றன கட்டுரைகள். பேழைகளிலும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளையும், கர்னாடக அரசியல் வாதிகளையும் குற்றம் சாட்டுகிறார்கள். ‘ இந்த அரசியல் வாதிகளை ஏன் வீரப்பன் கடத்திக் கொண்டு போக வில்லை ? விதான செளதாவில் உள்ள வெள்ளையானைகள் உலக வங்கிப் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் – இவர்களை ஏன் கடத்த வில்லை ? ‘ (ஆரண்யதள்ளி அண்ணவரு- காட்டில் அண்ணா) , பதில் என்னவென்றால், மக்கள் இந்த அரசியல் வாதிகள் பற்றித் துளிக்கூடக் கவலைப் படவில்லை என்பதாம். அதனால் வீரப்பன் குறிக்கோள் நிறைவேறாது என்பதாம். ஒரு பேழை கதர், காக்கி அணிபவர்களை விமர்சிக்கிறது. அவர்கள் சேலை உடுத்தி, வளையல்கள் போட்டுக்கொண்டு கரண்டி பிடிக்கப் போகலாம் என்று சொல்கிறது. ( காட்டில் நமது அண்ணா). கன்னடியரின் குணங்களும், மன நிலையும் , இந்தப் பேழைகளில் எப்படி வெளிப்படுகிறது என்பது , இழப்பையும், சோகத்தையும் இதில் பிணைத்துள்ள முறையில் வெளீயாகிறது.

இந்தப் பேழைகளில் நடமாடும் கதா பாத்திரங்கள் – கல்லண்ணா, ஏரண்ணா, சாங்கியா, பால்யா, பஷீர் , காத்தூனப்பா – இவர்கள் தம் அபிமான நாயகனின் நிலைக்காக வருத்தம் தெரிவிக்கும் போதே, மிகுந்த நகைச்சுவையும் வெளிப்படுகிறது. வீரப்பனை நோக்கியோ, அல்லது கதாபாத்திரங்களை நோக்கியோ இந்த நகைச்சுவை வீசப் படுகிறது. கன்னட பேழைகளில் மாண்டியா பகுதியில் பேசப்படும் மொழி பாணி கையாளப் படுகிறது. பழைய மைசூர் ராஜ்யமாகட்டும், இப்போதைய தென் கர்நாடகம் ஆகட்டும்- மாண்டியா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பெங்களூர் – மைசூருக்கிடையில் மாண்டியா பகுதி மிகுந்த செழிப்பான பூமி. 1930-களில் மைசூர் திவான் எம் விஸ்வேஸ்வரய்யா கட்டிய வாய்க்கால்கள் இதற்குப் பயன் பட்டன. மாண்டியா பகுதியின் வொக்காலிக இனத்தினர் அரசியல் பொருளாதார வலிமை பெற்றவர்கள். பணக்கார கெளடர் இன விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சுஞ்சுனாகிரி மடத்தை ஸ்தாபிக்க உதவினார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் ஆட்சியில் மாண்டியா நபர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும். இப்போதைய முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா-வும் மாண்டியாவைச் சேர்ந்தவரே. இந்தப் பகுதியிலிருந்து முதலமைச்சர் பதவி வகித்த முதல் நபரும் இவரே. கன்னடப் படங்களில் பொதுவாக தென் கர்னாடகத்தின் மத்திய தர வர்க்கப் பேச்சு மொழி கையாளப் படுகிறது. கிட்டத் தட்ட இதுவே வானொலி, தொலைக்காட்சிக்கும் பயன் படுகிறது. தொழிலாளர்களின் பேச்சு மொழி – ஏறத் தாழ மாண்டியா கிராமவாசிகளின் மொழி போன்றது – நகைச்சுவைப் பகுதிகளுக்குப் பயன் படுகிறது.

ராஜ்குமாரை உயர்த்திப் பேசுதலும், வீரப்பனைத் தாழ்த்துவதுமே இந்தப் பேழைகளின் நோக்கம். இந்தப் பேழிகளில் வெளிப்படும் ராஜ்குமார பற்றிய சித்திரம், கன்னட ரசிகர்களைப் பற்றியும் சித்தரிப்புப் பெற உதவுகிறது.ராஜ்குமார புகழ் பாடப் படுகிறது — டாக்டர் ராஜ் அவர்கள் வாழ்க என்றோ , வெறுமே ராஜண்ணா என்று ஜெபித்த படியோ – அவரை கன்னடத காண்டாரவா, கன்னடத குலதிலகா ( கன்னடரி அணிகலன், கன்னடர் திலகம்) , கெண்டக்கி கர்னல் (அமெரிக்க விருது ஒன்றின் குறிப்பீடு) தாதா சாகேப் ஃபால்கே விஜேதா( தாதா சாகேப் ஃபால்கே விருது வென்றவர்) படவர பந்து( ஏழைகளின் தோழன்) , பத்ம பூஷண், கன்னடர்களின் தெய்வம், பஹாதூர் கண்டு (வீரத் திருமகன் – ராஜ்குமார் நடித்த படத்தின் தலைப்பு – அடங்காப் பிடாரியை அடக்குதல் (ஷேக்ஸ்பியரின் ‘The Taming of the Shrew ‘ நாடகத்தைத் தழுஇய படம்) என்றெல்லாம் பல படியாக. பேழைகள் வீரப்பனைன் எல்லா நிபந்தனைகளையும் குறிப்பிட்ட போதும், முக்கியமாய் இரண்டு நிபந்தனைகளை முன்னிறுத்துகிறது. காவேரி நீர்ப் பிரசினை, மொழிப் பிரசினை. ஆனால், அ இ அ தி மு க வின் முக்கியஸ்தர் வெளியிட்ட பேழையிலும் சரி, இந்தி, உருது மொழு பேழைகளிலும் சரி, மொழிப் பிரசினை குறிப்பிடப் படவில்லை.இந்தப் பேழைகளில் சகவாழ்வு வலியுறுத்தப் படுகிறது . ‘ஹமாரா ஸ்டேட் அச்சா ரஹ்னா ‘ என்று பஷிர் ‘ஆஜ் கா வீரப்பன் ‘ என்ற பேழையில் பேசுகிறான். காத்தூனப்பா நாடகக் கம்பனியின் பேழை இது. தென் மானில உர்து மொழியில் உள்ளது இது. கன்னட, தெலுங்கு பகுதிகள் மட்டும் தீரேந்திர கோபால் என்ற நகைச்சுவை நடிகரையும், என் டி ராமராவ், தெலுங்கு நகைச்சுவை நடிகர் நூதன் பிரசாத் இவர்களை மிமிக்ரி செய்கிறது. நதி நீர்ப் பிரசினையில் தான் இந்தப் பேச்சு குவிகிறது. வீரப்பனின் ‘அநியாயமான ‘ கோரிக்கையாய் இது கூறப் படுகிறது. ‘காட்டுல எதுக்குப்பா அவனுக்குத் தண்ணி ? ‘ இங்கு ஒரு சிரிப்புக் கதையும் சொல்லப் படுகிறது. ஒரு கவுடர் தமிழ் நாடு வழியாகக் காரில் போகிறார். அப்போது ஒரு விபத்து நடக்கிறது. அவருடைய காரின் பின் சக்கரம், குழியில் இறங்கிக் கொள்கிறது. என்ன செய்வதென்று அவர் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐந்து பேர் வந்து கன்னடத்தில் அவரிடம் பேசி உதவி வேண்டுமா என்று கேட்கிறார்கள். கவுடர் வியப்புடன் ‘உங்களூக்குக் கன்னடம் எப்படித் தெரியும் ? ‘ என்று கேட்கிறார். நாங்கள் மாண்டியா பகுதியில் விவசாய வேலை பார்த்தோம் என்று கூறுகிறார்கள். பிறகு காரைப் பள்ளத்திலிருந்து தூக்கிவிட்டு, கவுடரை வழியனுப்பி வைக்கிறார்கள். நன்றியுடன் கவுடர் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ஐந்நூறு நோட்டுகளைத் தருகிறார். உதவி செய்தவர்கள் பணம் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள். கவுடர் வற்புறுத்தவும் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். போகுமுன்பு, கர்நாடகம் தான் தண்ணீரைத் திறந்து விட்டதே , இந்தப் பகுதியில் தண்ணீர் நிறைய கிடைக்கிறதா என்று கேட்கிறார். ஆமாம் , நிறைய தண்ணீர் கிடைக்கிறது என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். அப்படியானால் பயிர்ப் பாசனம் நன்றாய் இருக்குமே என்கிறார். நாங்கள் விவசாயம் எல்லாம் செய்வதில்லை என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். இந்தப் பள்ளத்தை தோண்டிவிட்டு இங்கே இருப்போம். ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு கார்கள் மாட்டிக் கொள்ளும் எடுத்துவிட்டுப் பணம் சம்பாதிக்கிறோம் என்கிறார்கள். கவுடர் ‘ தமிழர்கள் தான் எவ்வளவு புத்திசாலிகள் ‘ என்று மனதுக்குள் சொல்லிக் கொள்கிறார். இங்கு வீரப்பனால் தவறு இழைக்கப் படுவது, மாண்டியா பகுதியில் உள்ள விவச்சயிக்குத் தான் என்று சுட்டிக் காட்டப் படுகிறது. மாண்டியாவிற்கு நிய்யயமாய்ச் சேர வேண்டிய காவிரி தமிழ் நாட்டிற்குத் திசை திருப்பப் படுவதாய்ச் சொல்லப் படுகிறது. ‘காடுகள்ள கட்ட முத்து ‘ (காட்டுத் திருடன் களவாடிய முத்து) என்ற பேழையில் ஒரு கதா பாத்திரம் சொல்கிறது : அவர்களுக்கு மூன்று போகம், நமக்கு இரண்டு தான். இன்னொரு பேழையில் ‘நமக்குப் பின்னால் கழுவத் தண்ணீர் இல்லை, அவர்களுக்கு டி.எம்.சி வேண்டுமாம் ‘ என்று வசனம் வருகிறது. ‘நரஹந்தகான பாலெயள்ளி கருணாதீன ஹிருதயா ‘ ( நாட்டின் இதயமே கொலைகாரன் பிடியில்) என்ற பேழைக்கு ‘ரசிகர்களின் இதயத்தின் ஆழத்திலிருந்து ‘ என்று துணைத் தலைப்புத் தரப்பட்டுள்ளது. இதை பெங்களூர் பழனி எழுதி, வட கர்நாடக பாணியில், கே தேவராஜ் கோகக் மொழியாக்கம் செய்துள்ளார்.

தமிழர்களும் ‘நாமும் ‘

கன்னடியர் யார் என்றா கேள்விக்கு அவர் யாராக இல்லை என்பதன் மூலமாய்ப் பதில் சொல்லப் படுகிறது. ஆகஸ்ட் 25, 2000 தேதியிட்ட ‘ஹை பெங்களூர் ‘ தலையங்கத்தில் தமிழர்களுக்கு அவர்கள் மொழியின் மேல் அசட்டுப் பெருமை (துரபிமானா) இருப்பதாய்ச் சொல்கிறது. இந்த அசட்டுப் பெருமையும், ‘நாம் ‘ ஒரு பெருமிதமும் இல்லாததால் மிகுந்த துயரத்துக்குள்ளாகிறோம் என்று சொல்கிறது. நம்மைப் போலல்லாமல், தமிழர்கள் தேசவிரோதிகள் – எல் டி டி ஈ, ஐ எஸ் ஐ – போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சொல்கிறது. ‘நாமோ ‘ மிகுந்த மரியாதைக்குரியவர்கள்.

இந்த விதமாய் வீரப்பன் தமிழன் என்ற முறையில் அடையாளம் காணப் படுகிறான். கொள்ளைக் காரனாக அல்ல. இந்த அடையாளப் படுத்துதலுக்கு வீரப்பனின் புதிய கூட்டாளிகள் காரணம் என்பதும், இதனால், தமிழ் நாட்டில் நடக்கவிருக்கும் பாதிப்புகளும் வேறு. நான் இங்கு முக்கியமாய் அலசவிருப்பது ‘கன்னடியர் அடையாளம் ‘ என்ற கோட்பாட்டினை இது எப்படிப் பாதிக்கிறட்து என்பது தான். ‘ வேற்று மொழி பேசும் வேறு எவருமே இந்த அளவு கன்னடியர் இதயத்தைக் கிழித்து, சுய மரியாதையைக் காயப் படுத்தவில்லை ‘ என்கிறது ஹை பெங்களூர் செப்டம்பர் 1,2000 தேதியிட்ட தலையங்கம். ஒரு வாரம் கழித்து ‘ஹை பெங்களூர் ‘ மீண்டும் கேட்கிறது : ‘ இவ்வளவு நடந்த பின்பும் நாம் பொறுமை காக்கத் தான் வேண்டுமா ? ‘ தமிழ் பயங்கரவாதம், எல் டி டி ஈ -யின் ஹெராயின் விற்பனை, வீரப்பன்-மாறன்-கருணாநிதி இவர்களிடையே ஒட்டுறவு என்றெல்லாம் பேசுகிறது. ‘அவர்களின் ‘ இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணி வெடிகள் இவற்றுடன் ‘நமது ‘ பூஜை, பஜனை, உருண்டு செய்யும் பிரார்த்தனைகள் இவற்றுடன் ஒப்பீடு செய்கிறது. கன்னடியர்கள் ஏன் இப்படி அனாதரவாய் ஆகிவிட்டனர் என்று கேட்கிறது ? நம் குழாயில் வரும் தண்ணீர் கூட அவர்கள் துப்பாக்கி முனையில் கட்டுப் படுத்தப் படும் என்கிறது.

கன்னடியரின் பொறுமையும், இந்த ஆண்மையைப் பற்றிய பொது விவாத்தில் இடம் பெறுகிறது. ‘ஹை பெங்களூர் ‘ சொல்கிறது : ‘அரசாங்கமே 200 தமிழ்ப் பள்ளிகளை நடத்துகிறது. பெங்களூரிலே 12 தமிழ் கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். ஐ ஏ எஸ் -இல் பல தமிழர்கள் இருக்கிறார்கள். போலிஸிலும் பலர் இருக்கிறார்கள். நாமும் அவர்களை நேசித்தோம், சகித்துக் கொண்டோம். ஆனால் இவ்வளவு நடந்த பின்பும், தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடந்த பின்பும் நம் கையாலாகாத பொறுமை அவசியம் தானா ? ‘ (செப் 1, 2000) .எல்லாப் பேழைகளிலும் ஒரு விஷயம் தவறாமல் வருகிறது: ‘ பெங்களூரில் தமிழர்கள் சேரி இருப்பது போல, சென்னையில் கன்னடியர் சேரி இருக்கிறதா ? ‘ அதாவது , சென்னையில் இருக்கும் கன்னடியர்கள் தமிழர்களுடன் இரண்டறக் கலந்து விட்டார்களாம். ஆனால், கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மட்டும் பிடிவாதமாகத் தனியாய் இருக்கிறார்களாம். இது கன்னடியர்களின் நல்ல பண்பைச் சொல்வதாகவும், கன்னடியர்களின் பொறுமையால் தான் இந்த தமிழ்ப் பகுதிகள் தனியாய் உருவாகியிருப்பதாகவும் சொல்கிறது.

எல்லாத் தமிழர்களும் இப்படியல்ல. ‘கத்தேகனு கொத்து கஸ்தூரி கம்பு ? ‘ (கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ?) பேழையில் ஒரு நல்ல தமிழரும் வருகிறார். ராஜ் குமார் கன்னடியர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் அண்ணன் போன்றவரே என்று இவர் பேசுகிறார்.

(தொடரும்)

Series Navigation

தேஜஸ்வினி நிரஞ்சனா

தேஜஸ்வினி நிரஞ்சனா

ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 1

This entry is part [part not set] of 14 in the series 20010129_Issue

தேஜஸ்வினி நிரஞ்சனா


ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட நிகழ்ச்சி , கன்னட மொழி அடையாளம் பற்றியும், இன்று கன்னடியர் என்று அழைக்கப் படுவதன் பொருள் பற்றியும் புதிய விசாரணைகளைத் தூண்டியுள்ளது.

இந்தச் சிக்கல், கடந்த சில வருடங்களாக இருந்துவரும் அச்சங்களையும், கன்னடியர்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது நடந்து வரும் சண்டைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தக் குரல் கன்னடியரின் ‘ஆண்மை ‘க்கு விடப்பட்ட சவாலாக, மீண்டும் மீண்டும் உருக் கொள்வதை இங்கு நான் விவாதிக்க இருக்கிறேன்.

மொழிக்கு ‘நேர்ந்த ‘ ஆபத்தை எதிர் கொள்வோரின் ஆண்மை பற்றிய கனல் தெறிக்கும் விவாதங்கள் இங்கு நான் உதாரணம் தரும் பிரதிகளில் பதிவாகியுள்ளன.

இந்தக் கடத்தல் நிகழ்ச்சி , கன்னட மொழி பற்றிய புதிய கலாசார நடவடிக்கைகளுக்கான வெகுஜனத் தர்க்கமாய் உருவாகியுள்ளது.

கன்னட மொழி என்பதே ராஜ்குமார் என்கிற நட்சத்திரத்தின் இருப்பில் வெளியாகும் அடையாளமாகிறது. ( ‘ என் ரத்தம் கன்னடம், என் வாழ்க்கை கன்னடம், என் இதயமும் சிந்தையும் கன்னடம் ‘ என்பது ராஜ் குமாரின் படங்களில் உரையாடலாய் வருகிறது. மேடைப் பேச்சுகளிலும் எதிரொலிக்கிறது.)

ஒரு வெகுஜனப் பத்திரிகை இந்தக் கடத்தல் செய்தியை வெளியிட்ட போது ‘ மொழியின் இருப்பையே கோடரி கொண்டு வெட்டிய ‘தாகக் ( ‘தரங்க ‘, செப்டம்பர் 14) குறிப்பிடுகிறது.

கன்னட அடையாளத்தின் வெளிப்பாடு ஏன் மொழியை அடிப்படையாகக் கொண்டுள்ளது ? நிச்சயம் மலையாளம், தெலுங்கு பேசுவோரின் சிறப்படையாளமாய் மொழி மட்டுமே முன்வருவதில்லை. கன்னட மொழிப் பெருமை என்பது ஏன் எப்போதும் தமிழ் மொழிப் பெருமைக்கு எதிரானதாகவே கட்டமைக்கப் படுகிறது ? இந்தப் போக்கு – சினிமா நட்சத்திரத்துடன் இணைந்து காணப்படுவது தென் கர்நாடக மானிலத்தில் மட்டும் தானா ?

1990ம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்பு மிக்க ஒரு ஆண்மையை வெளிப்படுத்துகிற முறையில் வெகுஜனச் சொல்லாடல் பெங்களூரில் கிளம்பியதுடன் தொடர்புபடுத்தித்தான் , கடத்தலுக்கு ஏற்பட்ட எதிர்வினைகளை எடை போட வேண்டும்.

இந்த வெகுஜன உணர்விற்கு உபேந்திராவின் வெற்றிகரமான படங்கள் ‘ஏ ‘ (1998) ‘ஸ்வஸ்திக் ‘ (1999) ‘உபேந்திரா ‘ (2000) தூபம் போட்டன.

அதில்லாமல், வார ஏடுகளான ‘ஹை பெங்களூர்! ‘ , ‘அக்னி ‘ , ‘போலிஸார ஹோராட்ட ‘ (போலிஸ் போராட்டம்) , ‘கிரைம் நியூஸ் ‘ , ‘ஸ்டார் ஆஃப் பெங்களூர் ‘, ‘சஞ்சே ஸ்ஃபோட்டா ‘( மாலை வெடி) போன்றவையும் காரணம்.

இவை, உள்ளூர் பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதுடன், அரசியல் விமர்சனமும் செய்கின்றன. முதல் இரண்டு பத்திரிகைகள் மற்ற பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமானவை.

வெகுஜன உணர்வுகளைத் தொடும்போது, கூடவே இலக்கியகர்த்தாக்கலூடனும் தொடர்பை வைத்திருக்கின்றன. 1. லங்கேஷ் பத்திரிகை (ஏறத் தாழ ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை) இதில் முன்னோடி. குறிப்பிடத்தக்க எழுத்தாளர் லங்கேஷ் 25 ஆண்டுகள் முன்பு துவங்கியது. இப்போது லங்கேஷின் மகள் கெளரி லங்கேஷ் நடத்துகிறார். ஆனால் அவர் தவிர மற்ற பணியாளர்கள் அனைவருமே ஆண்கள் தான். பல முக்கியமான இலக்கியகர்த்தாக்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.

நான் பெரிதும் இங்கு விவாதிக்கவிருப்பது ‘ஹை பெங்களூர் ‘ ஆசிரியர் ரவி பெலகேரே. ‘அக்னி ‘ – இதன் ஆசிரியர் ஸ்ரீதர். இருவருமே கதையாசிரியர்கள், கட்டுரையாசிரியர்கள்.

ரவி பெலகேரே கவிஞரும் கூட. இருவரும் மாஃபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதகச் சொல்கிறார்கள். ஸ்ரீதர் ‘குற்றங்களீன் உலகில் ‘ தனக்கு இருக்கும் தொடர்பை பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளவும் செய்கிறார். பெலகேரேயின் கார் ஜென், புது சிவப்பு நிற ஜிப்ஸி கார், இளைஞர்களின் கொச்சைமொழியைப் பேசுகிற தொடர்கட்டுரைகள் உள்ளன.

‘ஹலோ பெங்களூர் ‘ ‘அக்னி ‘ இரண்டுமே உலகமயமாக்கலுக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. கன்னடர் சார்பாகவும், ‘அன்னியரு ‘க்கு எதிரானதாகவும் தம்மை வெளிப்படுத்துகின்றன. அன்னியர்கள் எல்லோருமே பணம் படைத்த மேல் தட்டுக் காரர்கள். இந்திரா நகர் , ஜெய நகர் போன்ற சொகுசுப் பகுதிகளில் வசிப்பவர்கள். பிஸினஸ் செய்பவர்கள் அல்லது கம்யூட்டர் மென்பொருள் எழுதுபவர்கள். பிரிகேட் ரோட், மகாத்மா காந்தி ரோட் போன்ற பகுதிகளில் பார்களில் அடிக்கடி காணப்படுபவர்கள். ஏழை அன்னியர்கள், தமிழ் உழைப்பாளிகள் – இவர்கள் தாம் அன்னியருக்கு எதிரான வன்முறையால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் — இந்தப் பத்திரிகைகள் இவர்களைக் கண்டு கொள்வதில்லை என்றாலும், அவர்களும் குறிதான் என்று உணர்த்தவும் தயங்குவதில்லை.

புதிய மலிவான தொழில் நுட்பம் மூலமாய்த் தயாராகக் கூடிய ஒலிப் பேழைகள் வெகுஜனக் கலாசாரப் பொருளாய் இப்பொது வந்துள்ளது. முதன் முறையாக இது, மக்கள் கலைவடிவங்களான மிமிக்ரி, பக்திப் பாடல்கள் என்பதிலிருந்து நகர்ந்து அரசியல் விமர்சனங்களுக்குப் பயன் படத் தொடங்கியுள்ளது. ராஜ் குமார் கடத்தலைத் தொடர்ந்து 11 ஒலிப் பேழைகள் வெளியிடப் பட்டுள்ளன. கன்னட மொழியில் ஒன்பது, இந்தியில் ஒன்று, உருதுவில் ஒன்று. இந்த ஒலிப்பேழைகள் தயாரிப்பு தொழில் நுட்பம் சிறந்ததாகவெ உள்ளது. அவற்றின் உரைகளும் நல்ல முறையில் தயாரிக்கப் பட்டுள்ளன. நகைச்சுவை நடிகர்கள், பின்னணிப் பாட்கர்கள், மிமிக்ரி கலைஞர்கள் , நாடகக் நடிகர்கள் பலரும் குரல் தந்துள்ளனர். ராஜ் குமார் கடத்தப் பட்டு பத்து நாட்களில் முதல் பேழை வெளியிடப் பட்டது. 2 மாதம் கழித்து கடைசி பேழை வெளியிடப் பட்டது. லங்கேஷ் பத்திரிகையில் – இந்த ஒலிப் பேழைகள் ஒவ்வொன்றும் 20,000-25000 அளவில் வெளியிடப் பட்டதாகக் குறிப்பு ஒன்று காண்கிறது.

இதன் அமைப்பு மிக எளிதானது தான். ஹரிகதை பாணியில் இருவரின் பேச்சு. ஒருவர் கேள்வி கேட்க இன்னொருவர் பதில் சொல்ல என்று. நடுவில் பிறரின் இடையீடும் உண்டு.பெண்கள் யாருமே இல்லை.ஆனால் உரையாடல்களுக்கிடையில் பாடல்களில் பெண் குரல் ஒலிக்கிறது. இதற்காகவே தயார் செய்யப்பட்ட பாடல்களைத் தவிர பிற ராஜ் குமார் படங்களில் இடம் பெற்ற பாடல்களின் மறு பிறவி. ராஜ்குமார் ‘எரட கனசு ‘ என்ற படத்தில் மஞ்சுளாவை நோக்கி ‘உன்னை மறந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் ‘ என்ற பாட்டு ரசிகர்களை நோக்கிப் பாடுவது போல் மாற்றம் பெறுகிறது : ‘இன்னை மறந்தால் நான் உயிர் வாழ மாட்டேன், கன்னடத்தை விட்டுப் பிரிந்தால் நான் வாழ மாட்டேன் ‘ என்று மாற்றம் பெறுகிறது. கடத்தலுடன் தொடர்பு படுத்தியோ அல்லது ராஜ்குமார் தன் ரசிகர்களிடம் கொண்டிருக்கும் அன்பை வெளிப் படுத்துவதாகவோ பாடல்கள் பாடப் படுகின்றன. சில பாடல்கள் இதற்காகவே பிரத்தியேகமாய் எழுதப் பட்டுள்ளன: ‘நாடின் அண்ணா காட்டினிலே ‘ ‘ராஜண்ணா நாட்டிற்கு வாருங்கள் ‘ ; மக்கள் ராகத்தில் ஒன்றும், வடக்கு கர்நாடக மொழிப் பாங்கில் இன்னொன்றும் உள்ளது. ‘ஜனபத ‘ என்றழைக்கபப்டும் நாடுப் பாடல் என்று சொல்லிக் கொண்டாலும் கூட சினிமா பாடல்கள் தாம் எதிரொலிக்கின்றன. இரண்டு பேழைகள் தயரித்தவர்கள் : சஞ்சே ஸ்ஃபோடா , போலிஸர ஹோராட்ட , ஸ்டார் அஃப் பெங்களூர் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழு. ஒரு பேழை அ இ அ தி மு கவின் கே. முத்து பணத்திலும், பெங்களூர் பழனி என்ற தமிழர் எழுத்திலும் உருவாகியுள்ளது.

(தொடரும்)

Series Navigation

தேஜஸ்வினி நிரஞ்சனா

தேஜஸ்வினி நிரஞ்சனா