இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 10, 2000)

This entry is part of 9 in the series 20001210_Issue

சின்னக்கருப்பன்


மீண்டும் பாபர் மசூதிப் பிரச்னை

வாய்பாயி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முக்கியமாக காங்கிரஸ்காரர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் ஆறாம்தேதி நடக்கும் திருவிழா இது.

இந்த வருடம், வாஜ்பாயியை வாயைத்திறக்கவைத்து அந்த கூட்டணியை முறியடிக்க வேண்டுமென்றே செய்யப்பட்ட விஷயம் போல, அத்வானியையும், முரளிமனோகர் ஜோஷியையும், உமாபாரதியையும் அரசுப்பதவிகளிலிருந்து விலக்க வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள், காங்கிரசும், கம்யூனிசக்கட்சிகளும், சமாஜ்வாதி கட்சியினரும்.

வெறுவாய்க்கு அவல் கொடுத்தது போல வாய்பாயியும் ‘அங்கு கோவில் கட்டுவது என்பது பெரும்பான்மை இந்தியமக்களின் விருப்பம். அது இன்னும் நிறைவேறவில்லை ‘ என்று பேசி மாட்டிக்கொண்டுவிட்டார். ‘அதெப்படி அங்கு கோவில் கட்டுவது இந்திய மக்களின் விருப்பம் என்று சொல்லலாம் என்று பிலு பிலு என்று பிடித்துக்கொண்டு, வாய்பாயியையும் ராஜினாமா செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். வாய்பாயி பொதுமன்றத்தில் இதற்கு விளக்கம் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சியினர் எதிர் பார்த்தது போலவே, திமுகவும், தெலுகுதேசக்கட்சியும், திரினாமூல் கட்சியும் பாஜகவைச் சாடியிருக்கின்றன.

இது நிலவரம்

இனி என் கருத்துக்கள்.

முதலாவது, நரசிம்மராவின் மீது பழி போட்டு பாஜக தப்பிக்க முடியாது. மசூதி உடைப்பைச் செய்தது பாஜக. என்னை தடுக்கவில்லை என்று நரசிம்மராவைக் குற்றம் சாட்டமுடியாது. நரசிம்மராவ், பாஜகவால் ஏமாற்றப்பட்டார். மத்திய அரசு போலீஸ் வருவதை தடுக்க கோவில் சுற்றியும் கட்சி ஆட்களையும், உத்தரபிரதேச போலீஸையும் நிறுத்தி வைத்தது கல்யாண்சிங்கின் பாஜக அரசு. சிபிஐ தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது இதை.

இரண்டாவது, கல்யாண்சிங்குக்கு போன் செய்து அவரை மசூதி இடிப்பு நடந்து முடியும் வரை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது திருவாளர் எல்.கே.அத்வானி. இதையும் சிபிஐ குறித்துள்ளது.

மசூதிக்கு அருகில் நின்றுகொண்டு, இன்னொரு முறை தள்ளு. மசூதியை இடித்துத் தள்ளு என்று கோஷம் போட்டது உமாபாரதி. இன்று அவர் தான் அங்கு மசூதி இடிப்பதை தடுத்து நிறுத்தச் சென்றதாகச் சொல்வது பம்மாத்து.

அரசு இந்த வழக்கை நீதிமன்றத்துக்குச் செல்லாமல் தடுத்துக்கொண்டிருக்கும் ஒரே காரணம், சிபிஐ நிறுவனம் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வருவதால் மட்டுமே.

பாபரி மசூதி மீட்பு கமிட்டி, அந்த மசூதி இருந்த இடத்தில் மசூதிதான் கட்டப்படவேண்டும் என்றும் அந்த நிலம் வக்ஃப் போர்டுக்கு திரும்ப கொடுக்கப்பட வேண்டும் என்றும் போராடி வருகிறது. அந்த இடிப்புக்குச் சற்று முன்னர், அந்த மசூதி இருந்த நிலம், வக்ஃப் போர்டிலிருந்து உத்தர பிரதேச அரசுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து வக்ஃப் போர்டும், பாபரி மசூதி மீட்பு கமிட்டியும் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றன.

பிரதமர் நீதிமன்றம் என்ன அறிவித்தாலும் அதை ஏற்றுக்கொள்வதாக மீண்டும் மீண்டும் சொல்லி வந்திருக்கிறார். ஆனால் அந்த வழக்கு நிலுவைக்கு வரக்காணோம்.

இதன் நடுவில், நர்மதா பச்சோவ் அந்தோலன், தான் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கப்போவதில்லை என்று அறிவித்தவுடன் அதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ‘மக்கள் விரும்புகிறார்கள். எனவே நீதி மன்றம் இதில் தலையிடமுடியாது ‘ என்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துவிட்டது.

இதில் என்னதான் முடிவு இருக்க முடியும் ? அங்கே கோவில் ஒருக்காலும் இருந்ததில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் சொன்னால் என்ன நடக்கும் ? சரி, நீதி மன்றமே சொல்லிவிட்டது, அங்கே கோவில் இருக்க முடியாது என்று இந்துக்கள் ஒப்புக்கொள்ளப்போகிறார்களா ? சரி, அங்கே முன்னர் கோவில் இருந்த ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே அங்கு கோவிலை கட்டவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால், முஸ்லீம்கள் அதை ஒப்புக்கொள்ளப்போகிறார்களா ? நீதி மன்றம் என்னதான் தீர்ப்புச் சொன்னாலும் அதை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

நீதிமன்றம் இதைத் தீர்மானிக்க முடியாது. இருசாராரும் இணைந்து ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே அது நடக்கும். கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும், ராமர் பிறந்த இடம் என்றும், சிவனது முக்கியமான கோவில் என்று கருதப்படும் இடம் என்றும் இருக்கும் மதுரா, அயோத்தி, காசி கோவில்களை இந்துக்களிடமே திருப்பித்தந்துவிட்டால் வேறெந்த இடத்துக்கும் தான் போராடப்போவதில்லை என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இறங்கி வந்து பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஒப்பந்தத்தை முன் வைத்தது. அதற்கு ஒரு சில முஸ்லீம் தலைவர்கள் ஒப்புக்கொண்டாலும் பல முஸ்லீம் தலைவர்கள் ஒரு இடம் கூட நாங்கள் திருப்பித் தர மாட்டோம் என்று பிடிவாதமாகச் சொல்லியதால் எல்லா இடங்களும் இழுபறியில் இருக்கிறது.

இதனால் முஸ்லீம்களைக் கிண்ட, சமீபத்தில் குதுப் மினாருக்கு முன்னால், இது விஷ்ணுஸ்தம்பம் என்று அதை அழைத்து, வேள்வி நடத்திப் பார்த்தது விஹெச்பி. கூட்டத்தைக் காணோம்.

இரு பிரச்னைக்குள் மாட்டுவதற்கு முன்னரே அந்த பிரச்னை தனக்கு பாதகமாகச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று ஒரு மரியாதையான வெளிக்கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். அதுதான் நல்ல அரசியல். இதைத்தான் Exit strategy என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

இந்த பாபரி மசூதிப் பிரச்னையில் என்னதான் இவர்களுக்கு அந்த வெளியே போகும் வழி ? காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம் போடுகிறது. இந்த பிரச்னைக்கே மூலகாரணம் அந்தக் கட்சியின் தலைவராக இருந்த ராஜீவ்காந்திதான். அயோத்தியில், 1842இலிருந்தே பிரச்னையாக இருந்த இந்த விஷயத்தை இந்துக்களுக்குச் சாதகமாக அந்த ஊர் நீதிபதியை உத்தரவு எழுதச்சொல்லி, அதை கோவில் என்று அறிவித்து, அந்த கதவுகளை இந்துக்களுக்குத் திறந்துவிட்டார். அவர் அந்த பாபர் மசூதிக் கதவுகளை திறந்துவிடுவதற்கு முன்னர் அது ஒரு தேசீயப் பிரச்னையாக இல்லை. அது பாஜகவுக்கோ, அல்லது ஆர் எஸ் எஸ்சுக்கோ அது ஒரு விஷயமாகவே இல்லை. ஆனால் அது திறந்துவிடப்பட்டதும், அது முஸ்லீம்களிடமே திரும்பித்தரவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டதும், தன்னை அப்போது இந்துக்கட்சியாக அடையாளம் கண்டுகொண்டிருந்த பாஜக இதையும் எடுத்துப் போராட வேண்டியதாய்ப் போனது. இன்று புலிவால் பிடித்த மனிதன் கதையாய், அதன் மேல் சவாரியும் செய்யமுடியாமல், வாலை விட்டால் சாப்பிட்டுவிடும் என்ற பயத்தோடு தொடர்ந்து இதன் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறது பாஜக.

இன்றைக்கு திமுகவோ, திரினாமூலோ அல்லது தெலுகுதேசமோ இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாமல் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொள்ளவில்லை. அதுபோல அவர்கள் அவர்களது ஆதரவாளர்களிடம் நடிக்கலாம். திமுகவுக்கு முஸ்லீம் ஓட்டு வேண்டும். ஆனால் பாஜகவின் கூட்டும் வேண்டும். எனவே, இந்த பிரச்னையால் இந்த அரசு கவிழப்போவதில்லை.

இதற்கு நடுவில் ஜோதிபாசு வாஜ்பாயியை காட்டுமிராண்டி என்றும், மத்திய அரசை காட்டுமிராண்டி அரசு என்றும் அழைத்திருக்கிறார். நான் ஆச்சரியப்படவில்லை. காங்கிரசின் யோக்யதையும் அந்த கட்சியின் தலைவியின் யோக்யதையும் உலகு அறிந்தது. அதிமுகவின் யோக்யதையும் உலகு அறிந்தது. இவர்கள் இன்று பேசும் செக்குலரிஸம் ஒரு பம்மாத்து. பாஜகவின் செக்குலரிஸம் உலகு அறிந்தது. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற கதைதான் இவர்கள் கதை.

பாஜக இன்றைக்கு ஒரு தேசீயக் கட்சி. அதற்கு ஆதரவாளர்கள் அந்தமான் நிக்கோபரிலிருந்து காஷ்மீர் வரை இருக்கிறார்கள். கிழக்கே நாகாலாந்திலிருந்து மேற்கே குஜராத் வரை இருக்கிறார்கள். இதே போல இருக்கும் ஒரே அகில இந்தியக்கட்சி காங்கிரஸ் மட்டுமே. (கம்யூனிஸ்டுகள் ஒரு அகில இந்தியக் கட்சி அல்ல)

இந்த இரண்டு கட்சிகளுக்கும் தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. ஆனால் பொறுப்புணர்வை இவர்கள் வெளிப் படுத்துவார்களா ?

…..

நவாஜ் ஷெரீப் சவூதி அரேபியாவுக்கு நாடுகடத்தல்.

உலகமகாக்கூத்து இது. ராணுவ ஆட்சி, நவாஜ் ஷெரீப்பை நாடு கடத்தியிருக்கிறது. அவரும் ஒப்புக்கொண்டு தன் சொத்துக்களை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு, இன்னும் குறைந்தது பத்து வருடங்கள் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சவூதி அரேபியாவில் போய் வனவாசம் இருப்பதாக முடிவு செய்து செல்ல முன்வந்து விட்டார்.

பெனாசீர் புட்டோவின் கணவரும் கடுங்காவல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்(இவரை சிறையில் வைத்து பெனாசீரை நாடுகடத்தியவர் நவாஜ் ஷெரீப்! இப்போது அவரே நாடுகடத்தல்!) ஜியாவுல் ஹக் அசாதாரணமாகக் கொலையுண்ட பின்னரே பெனசீர் ஆட்சிக்கு வந்தார். ஜியா ராணுவப்புரட்சியில் ஆட்சிக்கு வந்ததும் செய்த முதல் காரியம் எத்தனையோ அரசுகள் சொல்லியும் எதிர்த்தும் கூடக் கேட்காமல், புட்டோவைத் தூக்கில் தொங்கவிட்டதுதான்.

மொகலாய பாரம்பரியத்தில் ஒவ்வொரு அரசரும் தனக்கு எந்த வகையிலும் போட்டி இருக்கக்கூடாது என்பதற்காக தன் தந்தையையும் தன் சகோதரர்களையும் கொன்றுவிட்டே ஆட்சிக்கு வருவார்கள். அல்லது ஆட்சிக்கு வந்தபின்பு போட்டியாய் யாரும் வரக்கூடும் என்று தெரிந்தால் அவ்னைக் கொன்று விடுவார்கள். புட்டோவின் கதி தனக்கும் ஏற்படும் என்று தெரிந்து தான் நவாஜ் ஷெரீஃப் இந்த நாடுகடத்தலுக்கு ஒப்புக் கொண்டிருக்க வேண்டும்.

இது மாதிரி நம் ஜெயலலிதா, லாலுவையும் செய்து விட்டால் பிரசினைகள் தீர்ந்து விடும் என்று கருதுகிற அதி புத்திசாலிகளும் இந்தியாவில் உண்டு. ஜன நாயகம் ஒரு சுலபமான தீர்விற்கு வழி வகுப்பதல்ல. நீதியின் அடிப்படையிலான, ஜன நாயக அரசு இயந்திரத்தின் செயல் பாடு இது போந்ஹ் தடாலடியாய்த் தடி எடுத்தவன் தண்டல் காரன் என்று இயங்க முடியாது.

பாகிஸ்தானிலும் ஜன நாயகம் வேண்டும் என்று சன்னமான குரல்கள் அவ்வப்போது எழுகின்றன.ஆனால் அந்தக் குரல்கள் எந்த மதிப்பும், மரியாதையும் பெறுவதில்லை. தன்னுடைய ‘தனிக் கலாசாரத்தையும், தனி தேசீயப் பண்புகளையும் ‘ நன்றாகவே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இஸ்லாமின் அரசாட்சிக் கோட்பாடுகளில் ஜன நாயகத்திற்கு இடமில்லை என்பதன் இன்னொரு நிரூபணமாய் இந்தக் கொடும் செயல் நடந்தேறியுள்ளது.

மொகஞ்சதாரோவிலிருந்து நேரடியாக முகமது கோரிக்கு தாவுவதாக பாகிஸ்தானிய வரலாற்று புத்தகங்கள் காட்டுகின்றன. அப்படி, மொகலாய பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்காக பாகிஸ்தான் வாங்கிச் சென்றவர்கள் ‘உன்னதமான ‘ மொகலாயப் பாரம்பரியத்தைச் சரியான முறையிலேயே காப்பாற்றுகிறார்கள் என்று அவர்கள் நன்றாகவே பெருமைப் படலாம்.

****

தொடரும் தற்கொலைகள்

விஜி என்ற நடிகையின் தற்கொலை மீண்டும் தற்கொலை பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. சாவித்திரியின் -கிட்டத்தட்ட- தற்கொலை தொடங்கி, என்னை மிகவும் பாதித்த ஷோபா, சிலுக்கு ஸ்மிதா, இப்போது விஜியின் தற்கொலை வரை இது மிக சோகமான பதிவாய் உள்ளது. இந்தியாவில் தற்கொலை விகிதாசாரம் மிக அதிகமாக உள்ள மானிலம் 100 சதவீதப் படிப்பறிவு பெற்ற கேரளம். அதனால் படிப்பறிவிற்கும், தற்கொலைக்கும் சம்பந்தமில்லை. பெண்கள் தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பொதுமக்கள் பார்வையில் எப்போதும் இருக்கிற நடிகைகள் பாதுகாப்பு உணர்வற்றவர்களாக இருப்பது மிகச் சோகமான விஷயம். தொடர்ந்து மன நிலை ஆலோசகர்களிடம் சென்று தம் மனப் பிரசினைகளை விவாதிப்பதன் மூலம் சிலர் இது மாதிரி depression மன உளைச்சல்களிலிருந்து விடுதலை பெற வாய்ப்புண்டு. ஆனால் இன்னமும், நாம் மன நிலை ஆலோசகர்களிடம் சென்றால் பைத்தியம் என்று முத்திரை விழுந்து விடுமோ என்று பயப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நடிகர் சங்கம் போன்ற அமைப்புகள் , விஜய காந்த் பார்த்திபன் போன்ற நல்ல நோக்கங்கள் கொண்ட தலைவர்கள் முன் வந்து மன நிலை ஆலோசனை பெறுவது தவறான விஷயம் அல்ல , depression போன்ற மன உளைச்சல்கள் குணப் படுத்தக் கூடியவை என்பதைப் பிரசாரம் செய்ய வேண்டும். அடுத்த முறை ரத்த தான முகாம், போலியோ முகாம் இவற்றுடன் சேர்த்து ‘மன நிலை ஆலோசனை ‘ மருத்துவ முகாம்களும் நடத்தப் பட்டால் நல்லது.

Series Navigation