இந்த வாரம் இப்படி

This entry is part of 10 in the series 20001203_Issueடிசம்பர் 3 2000

சின்னக் கருப்பன்

ராமதாஸ் குற்றச் சாட்டு

ராமதாஸ் தலித் பாந்தர் என்ற தலித் புலிகளின் இயக்கம் தன்னைக் கொல்ல முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். அதில்லாமல் தி மு க இது பற்றி மெளனமாய் இருப்பதால் அதுவும் கூடக் குற்றவாளியே என்றும், தன் கட்சியை அழிக்க திமுக முயல்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள் இல்லாமல் குற்றம் சாட்டுவதும் கூட ஒரு குற்றம் தான். மற்றக் கட்சிகளை வாழ வைக்க வேண்டும் என்று எந்தக் கட்சிக்கும் அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்க முடியுமா என்ன ?

ஆனால் தலித் இயக்கத்தினைக் குற்றம் சாட்டுகிற போக்கிலேயே இவர் பேசி வருவது எனக்கு வேறொன்றை நினைவூட்டுகிறது. ஆங்கிலேய ஆட்சியில் ஒரு சாதியினரைக் குற்றப் பரம்பரை என்று அபாண்டமாய்க் குற்றம் சாட்டிப் பதிவு செய்து வைத்துக் கொண்டு ஏதும் குற்றம் நடந்தால் முதலில் அந்த இனத்தினரின் வீட்டைச் சோதனை செய்வது போன்றல்லாம் அக்கிரமங்கள் செய்தார்கள். அந்தச் சாதியினரின் பிரதி நிதிகள் அதனை எதிர்த்துப் போராடி இப்படிப் பட்ட கறுப்புச் சட்டங்களை எதிர்த்து இயக்கங்கள் நடத்தினர். வெற்றியும் பெற்றனர். ஜாதி சார்ந்த கட்சிகள் நடத்துவதில் உள்ள அபாயம் , ஒரு கட்சியைக் குற்றம் சாட்டுவது அந்தக் குறிப்பிட்ட சாதியினரைக் குற்றம் சாட்டுவதாய்ப் போய் முடியும். இது நல்லதல்ல.

***********

இந்தியாவில் இப்படி ஒன்று

சில சமயங்கள் இந்தியாவில் பிறக்க நேர்ந்ததற்காக வெட்கப் பட வேண்டியுள்ளது. சில சமயம் பெருமைப் பட வேண்டியும் உள்ளது. ஆனால் இந்த வாரம் என் பெருமை, தத்துவம் பற்றியதோ , புராணங்கள் பற்றியதோ அல்ல. ஆஷா தேவி என்கிற அமர்நாத் யாதவ் பற்றியது. இவர் ஒரு அலி. இவர் கோரக்பூர் நகரின் மேயராய்த் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இது ஒரு மிக முக்கிய நிகழ்வு என்று சொல்ல வேண்டும். ஒரு நாட்டின் கலாசாரம் மேன்மையானதா என்பதை, அந்தக் கலாசாரத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிற மக்களை அது எப்படி எதிர் கொள்கிறது என்பதை வைத்துத் தான் கூற முடியும் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கப் போனால் நம் இந்தியக் கலாசாரம் பல விதங்களில் உயர்ந்தது என்று சொல்லலாம்.

இப்படி விஷப் பார்வையற்ற நிலையில் அலிகளை நோக்க நம் புராணங்களும் ஒரு வகையில் உதவியுள்ளன என்று சொல்ல வேண்டும் ராமாயணம், மகா பாரதம் போன்ற வற்றில் அலிகளின் இருப்பு அங்கீகரிக்கப் படுகிறது.

மக்களிடையே அலிகளைச் சற்றுத் தாழ்வாக நோக்கும் போக்கு இருந்தாலும், அவர்களுக்கு எதிராகக் குற்றங்கள் மிக மிகக் குறைவு., ஏதோ ஒரு வகையில் அவர்கள் வாழ்விற்கு வழி செய்யும் வகையில் சில தொழில்களும் உள்ளன. அவர்களை மற்ற தொழில்களை நோக்கியும் நகர்த்துவதற்கு இது மாதிரி தேர்தல்கள் உதவக்கூடும்.

ஷப்னம் மெளஸி என்ற அலி ஒருவர் முன்னமே மத்தியப் பிரதேசத்தில் எம் எல் ஏ வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

********

காங்கிரஸில் ஜன நாயகம்

சூடான ஐஸ்கிரீம் மாதிரி இது. தேர்தல் கமிஷன் உத்தரவினால் தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் காங்கிரஸிற்கு. வழக்கமான அடிதடி, குத்து வெட்டு எல்லாம் நடந்த பின்பு என்ன செய்தார்கள் தமிழ் நாட்டின் காங்கிரஸ் காரர்கள் ? அம்மா தாயே சோனியா நீயே பார்த்து யாருக்காவது பதவிப் பிச்சை போட்டு விடு என்று சொல்லிவிட்டார்கள். ஆகா ஜன நாயகம்!

********

வீரப்பனைப் பிடிக்க (எதுவாய் முடியும் ?)

வீரப்பனைப் பிடிக்க அதிரடிப் படை காட்டுக் குள்ளே போகிறது , இதோ சத்திய மங்கலத்தில் முகாம். இதோ இவர் தான் தலைவர். இதோ இங்கே தான் பயிற்சி எடுக்கிறார்கள் என்று தினமும் செய்தி வந்தவண்ணமாய் இருக்கிறது.

எனக்கு என்ன கேள்வி என்றால், தம்முடைய திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் பகிரங்கப் படுத்திவிட்டுத் தான் இவர்கள் வீரப்பனைப் பிடிக்கப் போகிறார்களா ? இல்லை பூச்சாண்டி காட்டி விட்டு, அடுத்த சூடான செய்தி வந்தவுடன் மறந்து விடுவார்களா ? இதற்கிடையில் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீரப்பனைப் பிடிக்கவெல்லாம் ராணுவத்தினை அனுப்ப முடியாது என்கிறார். என்ன தான் நடக்கிறது இங்கே ?

**********

உடையாதது : ஒரு படம்

சியாமளன் டைரக்ட் செய்த ‘Unbreakbale ‘ படம் யாரும் பார்த்தீர்களா ? சில விமர்சகர்களுக்குப் படம் பிடிக்க வில்லை. சிலர் ‘ஆறாவது புலன் ‘-ஐ விட இது சிறந்த படம் என்கிறார்கள். பார்த்தவர்கள் எழுதலாம்.

Series Navigation