இந்த வாரம் இப்படி

This entry is part of 7 in the series 20001126_Issue

மஞ்சுளா நவநீதன்


கிரிக்கெட் கலாட்டா

ஒரு வழியாக கிரிக்கெட் கலாட்டா ஒரு கட்டத்தைத் தாண்டி, யார் யார் லஞ்சம் வாங்கிக் கொண்டு பந்தயங்களைக் கவிழ்த்தார்கள் என்று செய்திகள் வந்திருக்கின்றன. கபில் தேவ் பெயர் பந்தயங்களைக் கவிழ்த்தவர்களின் பட்டியலில் இல்லை என்று பெருமூச்சு விட்ட ரசிகர்கள் பலர். ஆனால், இது இத்துடன் நிற்க வேண்டிய விஷயம் அல்ல. இதையும் தாண்டி உண்மைகள் வெளிப் பட வேண்டும் இந்த அலை ஓரளவு தெளிவு பெறும் வரையில், கிரிக்கெட் பந்தயங்கள் ஓரங்கடி வைக்கப் பட்டால் கூட நல்லது தான்.

முழுமையான அறிக்கை இன்னமும் முழு அளவில் வெளிப்படவில்லை. இதன் பொறுப்பாளர் மாதவன் அறிக்கையைச் சமர்த்தித்து இருக்கிறார். அதன் முழு விவரங்களை வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், அதன் குற்றவாளிகளைத் தண்டனைக்கும் உட்படுத்த வேண்டும். வெறும் விளையாட்டு விவகாரமல்ல இது.

*******

காஷ்மீரில் போர் நிறுத்தம்

வாஜ்பாய் தானாக முன் வந்து காஷ்மீரில் போர் நிறுத்தம் ரம்ஜானின் பொழுது அமல் படுத்தப் படும் என்று அறிவித்திருக்கிறார். உடனே அதை எதிர்த்து சிவ சேனா வெளிநடப்பு செய்தது மட்டுமல்லாமல், தேசீய ஜனநாயக முன்னணியிலிருந்தும் வெளியேறுவோம் என்று அமளி கிளப்பியுள்ளது. முதலில் இந்த அறிவிப்பை வரவேற்ற ஹரியத் அமைப்பு — பாகிஸ்தானின் உத்தரவின் பேரிலோ என்னவோ — ஓரிரு நாட்களில் போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளி வேஷமென்று கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்திய அரசின் போர் நிறுத்த அறிக்கை ஒரு விதத்தில் இந்திய அரசின் அக்கறையை விளம்பரம் செய்வதற்காகப் பண்ணிய ஒரு தந்திரோபாயம் என்று தான் சொல்ல வேண்டும். பாகிஸ்தான் ஆதரவு சக்திகள் இந்த நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளாது என்பது அரசிற்குத் தெரியாததல்ல.

இந்த அறிக்கையின் மூலம் ஒரு விதமாய் காஷ்மீரில் நடப்பது போர் தான் என்று இந்திய அரசு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளது என்று சொல்ல வேண்டும்.

ஆனால் இதற்குள்ளாக இந்து சீக்கிய டிரக் டிரைவர்கள் 5 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐந்து இந்துப் பயணிகள் கடத்திச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டிருக்கிறார்கள் (உண்மையிலேயே). இது பாகிஸ்தானிய லாஷ்கர் இ தோய்பா என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் கொஞ்சநாள் கழித்து இந்து சீக்கியர்களை கொலை செய்தது இந்திய அரசாங்கமே என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் பங்கஜ் குப்தா எழுத அதற்கு மறுப்பு இந்திய பத்திரிக்கைகளில் சிலர் எழுத ஆரம்பிப்பார்கள்.

*****

புஷ்ஷா கோரா ?

ஃப்ளோரிடாவில் நடக்கும் இழுபறி முடிந்த பாடில்லை. நம் இந்திய ஜன நாயக முறைக்குப் பழக்கப் பட்டவர்களுக்கு இந்தத் தேர்தல் வினோதமாய்த் தெரியும். Electoral college என்ற ஒரு அமைப்பு ஃப்ளோரிடாவின் வெற்றி பெற்ற கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பிவைக்கப் படும் இந்த college-உறுப்பினர்கள் தான் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புஷ் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஒரு வினோதமான் செயலாய் அது இருக்கும். கோர் புஷ்ஷை விட அதிக வாக்குகள் பெற்று விட்ட போதிலும், இந்த Electoral College தரும் வசதியால் புஷ் ஜனாதிபதியாகி விடுவார்.

இந்தத் தேர்வு முறை கொண்டு வந்த போது சிறிய மானிலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொண்டு வருவதற்கு இதுவே வழி என்று இந்த வழிமுறை சட்டமாக்கப் பட்டது. இப்போது இதன் பிரசினைகள் பெரிதாய் இருப்பதால், பெரும் வாக்குகள் பெற்றவர்களை ஜனாதிபதியாக்கச் சட்டம் இயற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

******

வியத் நாமில் கிளிண்டன்

வியத் நாம் போர் நின்று 25 வருடங்கள் ஆகின்றன. முதல் முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி வியத் நாமில் அமெரிக்கா செய்த கொடுமைகளூக்கு மன்னிப்புக் கேட்க வில்லை. இதன் காரணம் அமெரிக்காவின் உள்ளூர் அரசியல். இப்படிச் செய்வது அமெரிக்காவில் உயிரிழந்த அமெரிக்கர்கள் நினைவை அவமதிப்பதாகும் என்று குடியரசுக் கட்சி – கிளிண்டனின் எதிர்க் கட்சி – பிரசாரம் செய்யக் கூடும் என்று பயந்து மன்னிப்புக் கேட்கவில்லை என்று சொல்கிறார்கள்.

வியத் நாமியர்கள் அமெரிக்கா மீது பெருங் கோபம் கொள்ளக் காரணம் இருக்கிறது. போர் வியத் நாம் மண்ணில் நடந்தது. போர் இன்னமும் முடியவில்லை.எட்டு லட்சம் டன்கள் வெடி மருந்தும் , 35 லட்சம் கண்ணி வெடிகளும் இன்னமும் வியத் நாம் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன.இதனால் தினமும் கிட்டத் தட்ட மூன்று அல்லது நான்கு பேர்கள் ஊனமுறுவது நடக்கிறது. வியத் நாமிற்கு போன வருடம் வெறும் முப்பது லட்சம் டாலர்கள் மட்டுமே அமெரிக்கா உதவிப் பணம் அளித்தது. அமெரிக்கா இதற்கு இன்னமும் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் எனக் கருத்துகள் வெளீயாகின்றன. வியத் நாமிய மக்களுக்கும், தலைவர்களுக்கும் நாம் தலை வணங்க வேண்டும். துயரத்திலே தோய்ந்த வரலாறு அவர்களது. இரண்டு பெரு சக்திகள் தம் வலுவைச் சோதிக்க வியத் நாமின் மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் பயன் படுத்தின. போர் முடிந்த பின்பு ரஷ்யாவும் உதவி புரியவில்லை. அமெரிக்கவும் உதவி புரிய வில்லை. ஆனால், அமெரிக்காவிற்கு தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டும்.

காட்டு மரங்களின் இலைகளை கொட்ட வைக்க ஏஜெண்ட் ஆரஞ்ச் என்ற வேதிப்பொருளை டன் கணக்கில் வியத்நாம் காடுகளில் கொட்டியது அமெரிக்க அரசாங்கம். அதன் விளைவுகள் இன்றும் வியத்நாம் குழந்தைகள் மேல்.

*********

Series Navigation