இந்த வாரம் இப்படி

This entry is part of 12 in the series 20001112_Issue

மஞ்சுளா நவநீதன்


ராஜ்குமார் விடுதலை

ராஜ்குமார் விடுதலை ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் . இதற்கு உதவி செய்த பழ. நெடுமாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ராஜ் குமார் பழ. நெடுமாறனை மிகவும் புகழ்ந்திருக்கிறார். யோகி என்றும், சிறந்த மனிதாபிமானி என்றும் சொல்லியுள்ளார். அந்தப் புகழ்ச்சிக்கு அவர் மிகவும் தகுதியானவரே. ஆனால், தனிப் பட்ட முறையில் ஒரு மனிதரின் தகுதி அவருடைய அரசியல் நிலைபாடுகளை நியாயப் படுத்தவும், சமனப் படுத்தவும் பயன் படுவது மிக ஆபத்தான விஷயம். ஆர் எஸ் எஸ் ‘சமூக சேவை ‘ புரிகிறது, அத்வானி லஞ்சம் வாங்காதவர் என்று புகழுரைகள் சொல்லப் பட்டு கூடவே அவர்கள் இந்துத்துவா விஷமும் அதனால் ‘நல்லது ‘ தான் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஒப்பானது இது.

ஹிட்லர் கூட இந்த விதமாய்ப் பார்க்கப் போனால் ‘நல்லவன் ‘ தான். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவன் மாமிசம் கூடச் சாப்பிடாதவன். சொந்த நலனுக்காக, பணம் சேர்க்காதவன் தான்., அந்த ஒருவன் தான் யூதப் பேரழிவிற்குக் காரணமாய் ஒருந்தவன். தமிழ் ஃபாஸிஸத்திற்கும், தமிழ் நாட்டில் வாழ்கிற மற்ற இனங்களின் மீதும் வெறுப்பையும், துவேஷத்தையும் உமிழ்கிற ஒரு இயக்கத்தின் தலைவர் நெடுமாறன் என்பது மறக்கப் பட்டுவிடக் கூடாது.

வீரப்பன் நடத்திய இந்த நூறு நாள் நாடகத்தின் பின்பாவது, அரசாங்கங்கள் பாடம் கற்றுக் கொண்டால் நல்லது. கிரிமினல்களை வளர விடுவதும், அதற்குச் சாதகமான, அரசியல், போலிஸ் மற்றும் ஊழல் அதிகார வர்க்கம் தப்பிப்பதும், தடா போன்ற குரூரமான சட்டங்களின் போர்வையில் நீதித் துறையின் பொறுப்பை அரசாங்கம் கையில் எடுத்துக் கொள்வதும் நிற்க வேண்டும். வீரப்பனை அப்ரூவராய் ஏற்றுக் கொண்டு, அவன் காட்டித் தரும் அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் தண்டிப்பது தான் இது போல் இனி நிகழாமல் இருக்கத் துணையாகிற ஒரு நடவடிக்கையாய் இருக்க முடியும்.

***********

திருட்டு விடியோவை எதிர்த்து, திருட்டு கமல் ஹாசன், திருட்டு கிரேஸி மோகன்.

ஒரே ஒரு ஊரிலே ஒரு மனநோயாளி இருந்தான் . அவனைக் கண்டாலே மன நோய் மருத்துவர்களுக்கு ஒரே நடுக்கம். மருத்துவர்களுடன் அட்டை போல் ஒட்டிக் கொண்டு அவர்களைப் பைத்தியமாய் அடிக்கிற மன நோயாளி அவன். அவனுக்குக் கிடைக்கிற ஒரு மருத்துவரின் தங்கையையும். குடும்பத்தையும் அவன் கவர்ந்து விட அவனைக் கொல்வதற்கு அந்த மருத்துவர் முயல்கிறார். ஆனால் அந்தக் கொலை முயற்சிகள் தன்னைக் குணப் படுத்த மருத்துவர் நடத்தும் நன் முயற்சிகள் எனப் பாராட்டி அந்த நோயாளி மருத்துவரை இன்னமும் எரிச்சல் ஊட்டுகிறான். கடைசியில் நோயாளி மருத்துவரின் தங்கையை மணந்து கொள்ள, மருத்துவர் பைத்தியமாகிறார்.

‘தெனாலி ‘ கதையைச் சொல்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு மார்க் பூஜ்யம். ரிச்சர்ட் ட்ரைஃபஸ் மருத்துவராகவும், பில் மர்ரே நோயாளியாகவும் நடித்த ‘வாட் அபெளட் பாப் ? ‘ என்ற படத்தின் கதை இது. தெனாலி கதையை தெனாலி படத்துக்குப் பத்து வருடம் முன்னாலேயே திருடிவிட்டது ஹாலிவுட். திருட்டு விடியோவை எதிர்க்கிறோமாக்கும் என்று மகாசூரர்கள் கிளம்பினால், அவர்களிடம், ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்களிடம் ‘அவ்வை சண்முகி ‘, ‘மகளிர் மட்டும் ‘, ‘தெனாலி ‘ இதற்கெல்லாம் அனுமதி வாங்கிவிட்டார்களா என்று கேட்கலாம். உங்கள் திருட்டு சினிமாவைத் தானே நாங்கள் திருடி வி சி டி போடுகிறோம் என்று கேட்க வேண்டும்

****

ஜோதி பாசு ஓய்வு பெறுகிறார்.

ஜோதி பாசு வங்காள முதலமைச்சராய் இருந்து ஓய்வு பெறுகிறார். ஜோதி பாசு எந்த அளவு கம்யூனிஸ்டாய்ச் செயல் பட்டார், எந்த அளவு வர்க்கப் போராட்டத்தில் வெற்றி பெற்றார் என்றெல்லாம் எச்சக் கச்சமாய் கேள்வி கேட்கப் படாத வரையில் அவர் முதல்வர் என்ற முறையில் நன்றாய்த் தான் ஆட்சி நடத்தினார்.

அவர் முதல்வராய் ஆவதற்கு முன்பு போலிஸ் அமைச்சராய், வங்காளக் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியில் செயல் பட்ட விதம் பல விதங்களில் கண்டனம் செய்யப் பட்டதும் உண்மை தான். எனினும், கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் ஜாதிக் கட்சிகள் மாதிரி குட்டிக் குட்டி இடது சாரிக் கட்சிகளை சமாளித்து ஒரே அணியில் நிறுத்தி, ஆட்சி செய்த விதமே பாராட்டத் தக்கது தான், ஆனால் வங்காளம் மற்ற மானிலங்களில் நடந்த அளவு சிறப்பான தொழில் வளர்ச்சியைப் பெற்றுவிடவில்லை என்பதும் உண்மைதான்.

மம்தா பானர்ஜிக்கு எதிராக சுற்றுப் பயணம் செய்து, வங்காளத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சியைக் காப்பாற்றுவதற்காகத்தான் அவர் பதவி விலகினார் என்பதில் எந்த அளவு உண்மை என்று போகப் போகத் தான் தெரியும்.

*****

Series Navigation