அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடாத கரம்:

This entry is part [part not set] of 10 in the series 20001104_Issue

ரால்ஃப் நாடார்


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரால்ஃப் நாடார் ஜெயிக்கப் போவதில்லை. ஆனாலும் அவர் இரண்டு சக்திவாய்ந்த ஆட்களை எதிர்த்து நிற்பது தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின்பும் பலவிதமான நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தும். யார் இந்த ரால்ஃப் நாடார் ?

அறுபதுகளில் கார்க் கம்பெனிகளுடன் மோதியவர். கார்களில் ஓட்டுபவர்களும் , பயணம் செய்பவர்களும் பெல்ட் அணிந்து கொள்வதால் விபத்துகள் குறையும் என்று நிரூபித்துக் காட்டி அந்த மாற்றத்துக்காகப் போராடியவர். இப்போது எல்லாக் கார் கம்பெனிகளும், பாதுகாப்பு அம்சங்களில் தம்முடைய தயாரிப்பு எப்படி சிறப்பாக உள்ளது என்று கவர்ச்சியான விளம்பரங்கள் புரிகிறார்கள். ஆனால் நாடார் இதனைச் சொன்ன போது இவரைத் திட்டியது மட்டுமல்ல, இவர் ஏதாவது ‘தவறாக ‘ நடந்திருக்கிறாரா என்று உளவு வேலை பார்த்தார்கள். அது மட்டுமல்லாமல் அழகிகளை அனுப்பி அவரை வசப் படுத்தி, அதனை விளம்பரம் செய்து, அவரை இழிவு படுத்தலாம் என்று முயன்றார்கள். நாடார் மசிந்து கொடுக்க வில்லை.

இன்று அமெரிக்காவில் எந்தக் கம்பெனியும், பொருள் உபயோகிப்பவர்களின் நலத்திற்கு எதிராக நடந்து கொள்ள முடியாதபடி பலவித சட்டங்கள் இயற்றியதில், நாடாரின் அயராத உழைப்பும் போராட்டமும் தான் காரணம்.

மூன்றாவது கட்சியின் வேட்பாளன் என்று தன்னை சொல்லும் போதெல்லாம், ‘இரண்டாவது கட்சியின் ‘ என்று திருத்துவதுண்டு அவர். குடியரசுக் கட்சி வலது சாரி என்றும் , ஜன நாயகக் கட்சி இடது சாரி என்றும் சொல்லப் படுவதுண்டு. நாடார், இரண்டு கட்சிகளுமே பல விதங்களில் ஒன்று தான் என்று சொல்கிறார். இரண்டு கட்சிகளுமே ஒரே கம்பெனியின் தயவில் தான் இருக்கிறார்கள். பல கம்பெனிகள் இரண்டு கட்சிக்குமே வாரி வழங்குகின்றன. பசுமைக் கட்சியின் வேட்பாளராய் நிற்கிற அவர், மாசுப் பரவுதலுக்கும், கட்டுப்பாடற்ற பெரும் கம்பெனிகளின் பரவுதலுக்கும் எதிரானவர்.

அவருடைய கொள்கைகள் என்ன ?

1. போதைப் பொருளை உபயோகிக்கிறவர்களைச் சிறைப் படுத்தக் கூடாது. அவர்களுடைய பழக்கத்தைப் போக்க அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

2. பெரும் கம்பெனிகள் வெளி நாடுகளில் மிக மலிவான கூலிகளை அளித்து, முன்றாம் உலக நாடுகளின் மாசுப் பரவுதலுக்கும் காரணமாய் இருக்கின்றன. இவை தடை செய்யப் படவேண்டும்.

3. பெரும் கம்பெனிகள் அரசியலில் வகிக்கும் ஆதிக்கம் அறவே நீங்க வேண்டும்.. பெரும் கம்பெனிகள் அர்சியல் கட்சிகளுக்கு பணம் வழங்குவது தடை செய்யப் பட வேண்டும்.

4. எல்லோருக்கும் உடல் நல மருத்துவ வசதி அரசே செய்து தர வேண்டும்.

5. பெரும் கம்பெனிகளின் வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும்.

6.. ராணுவம் குறித்த பெரும் செலவினால் பலன் பெறுபவர்கள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் தாம். அதனால் ராணுவ விரிவாக்கம் கட்டுப் படுத்த வேண்டும்.

7. கண்ணிவெடிகளை முழுக்கத் தடை செய்யும் சட்டம் இயற்றப் பட வேண்டும். ஏற்கனவே புதைக்கப் பட்ட கண்ணி வெடிகளை உலகெங்கும் கண்டு பிடித்து அகற்ற வேண்டும்.

8.. வெளி நாடுகளின் பிரசினைகளை முன்னதாகவே கண்டு அவற்றைத் தீர்க்க முயல வேண்டும்.

9. இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையில் , இஸ்ரேல் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

10. அணு ஆயுதங்களை முதலில் பயன் படுத்த மாட்டோம் என்று ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும்.. ரஷ்யாவையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வற்புறுத்த வேண்டும். அணு ஆயுதத்தில் பயன் படும் பொருள்களைத் தயாரிக்கும் கம்பெனிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.

இது நிச்சயமாகக் கம்பெனிகளுக்கு உவப்பாயில்லை. இப்போதைக்கு மாணவர்களிடமும், இடதுசாரிகளிடமும் அவருக்கு ஆதரவு உள்ளது. அதில்லாமல், அவருக்கு ஓட்டுப் போட்டால் அது வீணான வாக்கு என்று வேறு பிரசாரம் நடக்கிறது.

தேர்தலுக்குப் பிறகு பசுமைக் கட்சி ஒரு ‘கண்காணிக்கும் கட்சி ‘யாகக் கட்டப் படும் என்கிறார். ஆங்காங்கே உள்ள மீறல்களையும், மக்களைப் பாதிக்கும் விஷயங்களையும் கவனத்துக்குக் கொண்டு வந்து அதற்காகப் போராடும் இந்தக் கட்சி.

Series Navigation

ரால்ஃப் நாடார்

ரால்ஃப் நாடார்