மார்க்ஸீயம், முதலாளித்துவம் இந்தியாவின் எதிர்காலம் (1941)

This entry is part [part not set] of 10 in the series 20001104_Issue

ஜவஹர்லால் நேரு


நமது போராட்டம் சுரத்து குறைந்து, அடிமட்டத்துக்கு இறங்கியிருக்கிறது. எனது எண்ணங்கள் மற்ற நாடுகளில் என்ன நடக்கின்றன என்று பார்க்க பயணப்பட்டன. உலகம் மிகுந்த சோகத்தில் இருப்பதை சிறையிலிருந்து கொண்டே என்னால் பார்க்க முடிகிறது. என்னால் முடிந்த அளவுக்கு புத்தகங்கள் படித்தேன். படிக்கப்படிக்க என் ஆச்சரியமும், ஆர்வமும் வளர்ந்து கொண்டே போகின்றன. உலகமெங்கும் நடக்கும் பெரும் பொருளாதார, அரசியல் போராட்டத்தில் ஒரு பங்காக இந்தியாவின் போராட்டமும் அதன் பிரச்னைகளும் இருப்பதை காண்கிறேன். இந்த போராட்டத்தில் எனது மனச்சாய்வு பெரும்பாலான அளவுக்கு கம்யூனிஸ பக்கத்தைச் சார்ந்திருக்கிறது. சோஷலிஸத்தாலும் கம்யூனிஸத்தாலும் நான் ஈர்க்கப்பட்டிருந்தேன். ருஷ்யா எனக்கு பிடித்தமானதாக இருந்தது. எதிர்க்கருத்துக்கள் தீவிரமாக ஒடுக்கப்படுவதும், சமூகம் ராணுவமயமாக்கப்படுவதும், கொள்கைகளை நிறைவேற்ற (என் எண்ணத்தில்) தேவையற்ற வன்முறையும் எனக்குப் பிடிக்கவில்லை. முதலாளித்துவ சமூகத்திலும் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் குறைவில்லை. பொருட்களை விலைகொடுத்து வாங்கும் சமூகத்துக்கும், சொத்துக்கும் எவ்வாறு வன்முறையே அடித்தளமாக இருப்பதை உணர்ந்தேன். வன்முறையின்றி இது வெகுநாட்கள் நடக்காது என்பதையும் கண்டேன். பசி பட்டினியினால் இறக்கக்கூடும் என்ற பயம் எவ்வாறு எல்லா இடங்களிலும் இருக்கும் பெரும் அளவு மக்களை பயமுறுத்தி சிறு அளவு இருக்கும் மக்களது எண்ணத்துக்கு தலைவணங்க வைக்கிறது என்றும் இந்த பயத்தின் முன்பு அரசியல் சுதந்திரம் அவ்வளவு முக்கியமாகப் படவில்லை இம்மக்களுக்கு என்பதையும் பார்த்தேன்.

வன்முறை இரண்டு இடங்களிலும் பொதுவாக இருக்கிறது. ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பில் அது பிரிக்க இயலாலதாக இருக்கிறது. ஆனால், ருஷ்யாவில் நடக்கும் வன்முறை, மக்களின் அமைதிக்காகவும் அவர்கள் கூட்டுறவுக்காகவும் அவர்களுக்கான உண்மையான சுதந்திரத்துக்காகவும் குறிவைத்து நடந்தாலும் கெட்டதே. ருஷ்யாவுக்குள் நடக்கும் எல்லா தவறுகளையும் தாண்டி, சோவியத் ருஷ்யா பெரும் தடைகளைத் தாண்டி ஒரு புதிய அமைப்பை உருவாக்கும் பணியில் வெகுவாக முன்னேறியிருக்கிறது. உலகத்தின் பல்வேறு நாடுகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்து கிடக்கும்போது, ருஷ்யா நம் கண்முன்னால் ஒரு புதிய உலகத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் இறந்த காலத்தின் செத்த கைகளினால் கடந்த காலத்தின் தேவையற்ற பொருட்களை காப்பாற்ற கஷ்டப்பட்டு மரத்துப் போய்க்கொண்டிருக்கும்போது, லெனினைப் பின்பற்றி ருஷ்யா எதிர்காலம் என்னவாக இருக்கவேண்டும் என்று திட்டம் போட்டு செயலாற்றிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக, சோவியத் ஆட்சியின் கீழ், மத்திய ஆசிய பிரதேசங்கள் முன்னுக்கு வரும் செய்திகளைக் கேட்டு நான் மிகவும் பரவசமடைந்திருக்கிறேன். எடை போட்டுப் பார்க்கும்போது, நான் வெகுவாக ருஷ்யா சார்பாகவே இருக்கிறேன். சோவியத்துக்கள் காட்டும் வழிகாட்டல், இருண்ட உலகத்தில் எனக்கு பிரகாசமான பாதையை காட்டுகிறது.

ஆனால் சோவியத் ருஷ்யாவின் வெற்றியோ தோல்வியோ ஒரு நடைமுறை சோதனை முயற்சியாக நமக்கு முக்கியமானதாக இருந்தாலும், அது கம்யூனிஸ சித்தாந்தத்தின் சரி-தவறை நிர்ணயிக்கவில்லை. தேசீய, உலக காரணங்களுக்காக, போல்ஷவிக்குகள் தவறுகள் செய்யலாம், ஏன் தோற்றும் போகலாம். ஆனால் கம்யூனிஸ சித்தாந்தம் சரியாக இருக்கலாம். ருஷ்யாவில் நடந்ததை அப்படியே காப்பியடிப்பது அபத்தமானது. ஒரு தேசத்தின் வரலாற்று வளர்ச்சியும் அது இருக்கும் நிலையையும் வைத்தே அந்த நடைமுறை செயல்பாடுகள் இருக்கவேண்டும். மேலும், இந்தியா, அல்லது இன்னொரு தேசம், போல்ஷவிக்குகளின் வெற்றியாலும், அல்லது அவர்களது தவிர்க்கமுடியாத தவறுகளாலும் லாபமடையலாம். உள்நாட்டு எதிரிகளாலும், வெளிநாட்டு எதிரிகளாலும் தூண்டப்பட்டு ஒருவேளை அவர்கள் மிக வேகமாக செயலாற்றியிருக்கலாம். மெதுவாக சென்று ஒருவேளை கிராமப்புறங்களின் சோக நிலையை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மாறுதல் வேகத்தை குறைப்பதன் மூலம் புரட்சிகரமான மாறுதல்களை உருவாக்கமுடியுமா என்பது கூட ஒரு கேள்விதான். முக்கியமான சந்தியில் உள்ள ஒரு முக்கியமான பிரச்னைக்கு நடத்த முடியாத தீர்வு சீர்திருத்தவாதம் என்பது. அடிப்படை அடித்தளமே மாற்றப்பட்டாகவேண்டும் என்று இருக்கும்போது, முதல் அடி என்பது, இருக்கும் நிலைக்கு முழு வித்தியாசமான அடியாக இருக்க வேண்டும், பின்னால் மெதுவாக சென்றாலும். இல்லையெனில் அது எதிர்காலத்தில் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக வந்துவிடும்.

இந்தியாவில் ஒரு புரட்சிகரமான திட்டமே நிலம் மற்றும் தொழிற்சாலைகள் பற்றிய கேள்விகளுக்கு பதில்.

ருஷ்யாவை தவிர்த்துப் பார்த்தாலும், மார்க்ஸீய தத்துவம் எனது இருண்ட மன மூலைகளில் விளக்கேற்றி வைத்தது. வரலாறு எனக்கு புது அர்த்தமாக விளங்கிற்று. மார்க்ஸீய விளக்கம் வரலாற்றின் மீது ஒளி பாய்ச்சி, தொடர்ந்து வரும் நாடகத்தின் காரணங்களையும் காரியங்களையும் (பின்னால் இருந்தாலும், மறைந்து இருந்தாலும்) எனக்கு வெளிச்சம் போட்டு காண்பித்தது. இறந்தகாலம் இருண்டதாகவும் சோகமானதாக இருந்தாலும் எதிர்காலம் எத்துனை இடர் வரினும் நம்பிக்கை ஒளிவீசுவதாக சொன்னது. அடிப்படையில் கோட்பாட்டிலிருந்து விடுதலையும், அறிவியற்பூர்வமான சிந்தனையுமே எனக்கு மார்க்ஸீயத்தின் பற்று வரக்க்காரணம். ருஷ்யாவிலும் மற்ற தேசங்களிலும் இருக்கும் கம்யூனிஸத்தில் ஏராளமான dogma இருப்பது உண்மைதான்; கம்யூனிஸத்தை எதிர்ப்பவர்கள் வேட்டையாடப்படுவது உண்மைதான். இது கண்டிக்கத்தக்கது. ஆனால் சோவியத் தேசங்களில் நடக்கும் மகத்தான மாறுதல்களும், அங்கு எதிர்ப்புக்குரல் அனுமதிக்கப்பட்டால் இன்னும் பெரும் ஆபத்தான் தோல்வியை கம்யூனிஸம் சந்திக்கும் என்றும் யோசித்தால் இந்த வன்முறையை புரிந்து கொள்வது கஷ்டமாயிராது.

உலகத்தின் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் மார்க்ஸீய ஆராய்ச்சியை சரியென்றே கூறுகின்றன. மற்ற முறைகள் இருட்டில் தடவிக்கொண்டிருக்கும்போது மார்க்ஸீயமே இந்த பிரச்னையை தெளிவாக விளக்கியதோடல்லாமல், அதற்கு ஒரு தீர்வையும் அளித்திருக்கிறது.

என்னுள் இந்த எண்ணம் வலுப்பெற வலுப்பெற நான் புத்துணர்வு கொண்டவனானேன். ஒத்துழையாமை இயக்கத்தின் தோல்வி எனக்களித்த சோகம் குறைந்தது. உலகம் நடக்கவேண்டிய விஷயத்தை நோக்கி வேகமாக பயணிக்கிறது, இல்லையா ? பெரும் போர்களும் அழிவுகளும் நம்முன் பெரும் ஆபத்துகளாய் நிற்கின்றன. இருந்தாலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நின்று போய்விடவில்லை. நமது தேசத்தின் போராட்டம் பெரும் பயணத்தின் ஒரு பகுதி. இன்றைய அடக்குமுறையும், சோகமும் நமது மக்களை எதிர்கால பெரும் பணிகளுக்கு உகந்தவர்களாக உருவாக்கும். உலகத்தை உலுக்கும் பெரும் கருத்துக்களை கவனிக்கச்சொல்லி நம் மக்கள் கட்டாயப்படுத்தப்படுவார்கள். நாம் இன்னும் வலிமையுடையவர்களாக இருப்போம். இன்னும் கட்டுப்பாடு நிறைந்தவர்களாக இருப்போம். நம்முள் இருக்கும் வலிமையற்ற கூறுகளை அழிப்பதன் மூலம் நாம் இன்னும் கடினப்படுவோம். எதிர்காலம் நமது.

விடுதலையை நோக்கி: ஜவஹர்லால் நேருவின் சுயசரிதை ( நியுயார்க், ஜான் டே கம்பெனி வெளியீடு, 1941, பக்கம் 228-231)

http://www.fordham.edu/halsall/mod/1941nehru.html

Series Navigation

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு