இந்த வாரம் இப்படி – அக்டோபர் 16, 2000

This entry is part of 6 in the series 20001015_Issue

சின்னக் கருப்பன்


சீன எழுத்தாளருக்கு நோபல் பரிசு

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. சீன மொழியின் குவாங் ஜாங் பரிசு பெறுகிறார். சீன இலக்கியம் பரந்த இலக்கியப் பாரம்பரியம் உள்ளது. ஒரு விதத்தில் கன்ஃபூஸியஸ் உலகின் முதல் ‘மதச் சார்பற்ற ‘ சிந்தனா வாதி என்று சொல்ல வேண்டும். ஆனால் ஜாங்கின் இலக்கியம் பற்றிச் சிந்திக்க விடாமல் சீனா இந்தப் பரிசளிப்பை அரசியல் நோக்கமுடையது என்று கண்டனம் செய்துள்ளது. தலாய் லாமாவிற்கு அமைதி நோபல் பரிசு தரப் பட்ட போதும் சீனா அதனைக் கண்டனம் செய்தது.

அரசியல் நோக்கம் இல்லாத செயல் என்று எதுவும் இல்லை. ரஷ்யாவின் போரிஸ் பாஸ்டர்நாக் பரிசு பெற்ற போது அவரைப் பரிசு பெற ஸ்வீடன் செல்ல அனுமதிக்க மறுத்தது, சோவியத் யூனியன். ஜாங் அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப் பட்டார். இப்போது ஃபிரான்ஸில் வாழ்கிறார். கவிஞர் ஜோசப் பிராட்ஸ்கியும் இவ்வாறே சோவியத் யூனியனால் புறக்கணிக்கப் பட்டார். சல்மான் ரஷ்டிக்குப் பரிசு தரப் பட்டிருந்தால் ஈரான் அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கும். அரசாங்கங்கள் எல்லாமே தனக்கு அடங்கி நடக்கிற கலைஞர்களைத் தான் விரும்புகின்றன. கம்யூனிஸ்டுகளை வேட்டையாடிய போது அமெரிக்காவில், பல எழுத்தாளர்களை அமெரிக்கத் துரோகிகள் என்று குற்றம் சாட்டப் பட்டார்கள். ஹாலிவுட்டில் அவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று அமெரிக்க நிர்வாகம் தடையிட்டது. சார்லி சாப்ளினைக் கூட விட்டு வைக்க வில்லை.

ஆனால் மீறல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஜாங்கை சீனாவை விட்டு விரட்டியது அரசியல் என்றால், அவருக்கு அளிக்கும் பரிசு எப்படி அரசியல் இல்லாமல் இருக்கும் ?

***

கவிதை வாழ்க – பிரிவினை ஒழிக

பாகிஸ்தான் பிரிவினையை மிகத் தீவிரமாய் ஆதரித்தவர் கவிஞர் இக்பால். கிட்டத் தட்ட அந்தப் பிரிவினைக் கருத்துக்கு வித்திட்டவரே அவர் தான் என்று சொல்லிவிடலாம். ஆனால், இந்தியாவில் அவர் வெறுக்கப் படவில்லை. அவர் எழுதிய கவிதை நம் எல்லோருக்கும் பரிச்சயமான வரிகள். ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா ‘ எல்லாராலும் பாடப் பட்டு கெளரவம் பெறுகிறது. உண்மையிலேயே பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு தான்.

பாகிஸ்தானில் வாஜ்பாயின் கவிதைகளை மொழி பெயர்ப்புச் செய்த ‘குற்றத்தி ‘ற்காக ஒருவர் தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப் பட்டிருப்பதையும் இதனுடன் சேர்த்து நினைவு கொள்ள வேண்டும்.

****

நெடுமாறன் தூதுவர்

வீரப்பனுடன் பேச்சு வார்த்தை நடத்த நெடுமாறனும் , கல்யாணியும் சென்றுள்ளனர். நெடுமாறன் பலகாலம் காங்கிரஸ் முதலிய தேசீயக் கட்சிகளில் இருந்தவர். ஆனால் இன்று அவர் நிலை பாடு வேறு. தமிழினத்தலைவர்களாய்த் தம்மை இனம் கண்டுகொள்கிற பலரில் ஒருவர். இந்திரா காந்தியையும் , நேருவையும் தலைவராய் ஏற்றுக் கொண்டிருந்தவர் இன்று, வீரப்பனையும் , வீரப்பன் மனைவியையும் தலைவராய் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

தமிழ்த் தேசீய இயக்கத்தின் மாநாடு ஒன்றும் நடத்தியிருக்கிறார். 100 வருடமாக, இந்தத் தனித் தமிழ் நாடு குரல் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இதில் குறுகிய நோக்கம் கொண்ட , தமிழினத்தின் பாதுகாவலர்களாய்த் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டு அரசியல் லாபம் தேடும் ‘லெட்டர் பேட் ‘ கட்சிகள் இருக்கின்றன. மார்க்ஸீய-லெனினிய-பெரியாரிய வழி என்று சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் உள்ளன. இப்படிப் பட்ட கூக்குரல்களை மக்கள் தீர்மானமாக நிராகரித்துத் தான் வந்துள்ளார்கள்.

இந்தப் பிரிவினை வாதம் மக்களிடம் வேரூன்ற வில்லையென்றாலும், தலைவர்களுக்குப் புரட்சி கிரீடம் சூட்டிக் கொள்ளப் பயன் பட்டு வந்திருக்கிறது. நெடுமாறனை அரசு தூதுவராக அனுப்பியதன் மூலம், ராஜ்குமார் விடுவிக்கப் பட்டால் நல்லது தான். ஆனால் இப்படிப் பட்ட துண்டுக் கட்சிகளுக்கு ஒரு அரசியல் மதிப்பு ஏற்பட இது வழி செய்யக் கூடும் என்றால் அது தவறான முன்னுதாரணமாக ஆகி விடும்.

****

பாகிஸ்தானில் இன்று

உலக மின்வலை அரங்கம் பல விஷயங்களை மிக அருகாமையாய்க் கொண்டு வந்து விடுகிறது. பாகிஸ்தானைப் நேர்முகமாய்ச் செய்திகளை அறிந்து கொள்ள முன்பு வழியில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. ‘ஜங் ‘ பத்திரிகைகள், ‘டான் ‘, ‘ஃப்ரைடே டைம்ஸ் ‘ , ‘ஃப்ராண்டியர் போஸ்ட் ‘, என்று பல பத்திரிகைகளைப் படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கிறது. பல விஷயங்களில் தெளிவும் கிடைக்கிறது. பத்திரிகைகளும் மிகுந்த அளவு சுதந்திரமாய்த் தான் செயல் படுகின்றன.

பல பிரசினைகள் நம் இந்தியாவில் உள்ள பிரசினைகளை ஒத்தவாறு தான் இருக்கிறது. லஞ்சம் எல்லா மட்டங்களிலும் தலை விரித்து ஆடுகிறது. ராணுவம் கூட நம் போஃபர்ஸ் ஊழல் போல ஒரு ஊழலில் மாட்டிக் கொண்டுள்ளது. யாருமே வரியை ஒழுங்காகக் கட்டுவதில்லை. வரி வசூல் செய்வதற்கு வியாபாரிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அரசியல் கட்சிகளும் ஜாதி- இன அரசியல் நடத்துகின்றன. இங்கே இந்தியாவில் ஒரு ஆர்.எஸ்.எஸ் என்றால் அங்கே எல்லாக் கட்சிகளுமே ஆர்.எஸ்.எஸ் மாதிரி தான் பேசுகிறார்கள். இந்தியாவை முதல் எதிரியாக உருவகம் செய்யாமல் அங்கே அரசியல் பண்ண முடியாது. மதச் சார்பின்மையின் குரல் மிகச் சன்னமாகத் தான் ஒலிக்கிறது. மதம் பொது வாழ்வில் மிகத் தீவிரமாய் உள்ளது. காஷ்மீர் பிரசினை பேசப் படாத நாளே இல்லை. அரசியல் கட்சிகளும், ராணுவமும் சேர்ந்து மக்கள் மனதை இந்தியா எதிரி, காஷ்மீர் பிரசினை தலையாய பிரசினை என்று திசை திருப்பி விட்டிருக்கின்றனர். ஜனநாயகம் தேவை என்கிற குரலும் சன்னமாய்த் தான் ஒலிக்கிறது..

டான் என்ற பத்திரிக்கை (ஜின்னா ஆரம்பித்தது) அலுவலகத்தை பாகிஸ்தானிய ராணுவ அதிகாரிகள் சோதனை போட்டு மிரட்டியிருக்கிறார்கள். இது பற்றிய கண்டனமும் மற்றைய பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் காணோம்.

பலுச்சிஸ்தான் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் பலுச்சிஸ்தான் போலீஸ் பற்றி கண்டனம் தெரிவித்து டான் தலையங்கம் எழுதியிருக்கிறது. அங்கங்கே கொஞ்சம் இதுபோல் ஆறுதலாய்.

******

மீண்டும் இஸ்ரேல் – பாலஸ்தீனம்

தீராத உலகப் பிரசினைகளில் ஒன்றான இஸ்ரேல்-பாலஸ்தீனம் தகராறு மீண்டும் பிரசினையாகிவிட்டது . அரசியல் வாதிகள் எப்படிப் பிரசினைகளை உருவாக்கக் கூடும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இது. பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு புனிதஸ்தலத்திற்கு வருகை தந்த ஒரு யூத அரசியல் வாதியால் பாலஸ்தீனர்கள் வெகுண்டெழ, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதற்குப் பதிலாக பாலஸ்தீனர்கள் மூன்று இஸ்ரேல் படை வீரர்களைக் கொன்றதன் எதிரொலி : இஸ்ரேல் படை அராஃபத் வசிப்பிடம் மீது குண்டுகளை வீசுகிறது.

அமைதிக்கான தேடல் சுலபமானதல்ல. அராஃபத் பல நிலைகள் இறங்கி வந்து இஸ்ரேலிடம் தீர்வு காண முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, மக்களைத் தூண்டி விடும் முறையில், இஸ்ரேல் பொறுப்பற்று நடந்து கொண்டது. பேச்சு வார்த்தைகள் பலன் அளிக்கும் என்று எதிர் பார்ப்போம்.

*****

Series Navigation