இந்த வாரம் இப்படி அக்டோபர் 2, 2000

This entry is part [part not set] of 8 in the series 20001001_Issue

சின்னக்கருப்பன்


**

காந்தி பிறந்த நாள், அக்டோபர் 2

கிருஷ்ண ஜெயந்தி, கிரிஸ்துமஸ், புத்த ஜெயந்தி, போன்று பழங்காலத்தில் மதரீதியான பிறந்த நாள்கள் கொண்டாடப்பட்டன; படுகின்றன. நவீன காலத்தில் மத சம்பந்தமில்லாத அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் இன்று இந்தியாவில் காந்தி ஜெயந்தியாகவும், நேருவின் பிறந்த நாள் குழந்தைகள் தினமாகவும், ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினமாகவும், அமெரிக்காவில் வாஷிங்டன் பிறந்தநாளும், லிங்கன் பிறந்த நாளும், மார்டின் லூதர் கிங் பிறந்த நாளும் பல விதங்களில் கொண்டாடப்படுகிறது.

நமது பத்திரிக்கைகள் காந்திபிறந்தநாள் பொழுதில் காந்தி பிறந்த நாளைக் கொண்டாடினால் போதுமா, காந்தியை யாரும் மதிப்பதில்லை என்று வழக்கமான ஒரு புராணமும் பாடி விடுகின்றன.

அதே நேரம் இப்போது அரசாங்க ஆதரவுடன் காந்தி ஒரு பிரதிமையான காலம் போய், இப்போது காந்தியைக் கேவலப்படுத்துவது பாஷனாகி விட்டது. தலித் தலைவர்கள் முதல் பிராம்மண சங்கம் தலைவர்கள் வரை, இந்துக்களின் தலைவர்கள் முதல் முஸ்லீம் தலைவர்கள் வரை எல்லாரும் திட்டும் ஒரே தலைவர் காந்தி என்பது அவருக்கு ஒரு பாராட்டு என்பது என் எண்ணம். ஆனால் மக்களிடையே காந்தி இன்னமும் ஒரு ஆதர்ச புருஷனாகத்தான் இருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் அவரது relevance இன்னும் இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் Newyorker இதழில் ஒரு வங்காள எழுத்தாளர் எழுதி ஒரு பெரிய கட்டுரை வந்தது. அதில் இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு காரணம் நேதாஜியே தவிர காந்தி இல்லை என்று வாதித்திருந்தது. அந்த பெரிய கட்டுரையின் சாராம்சத்தை ஒரு வரியில் சொல்லும்போது அது கொச்சையாக இருக்கிறதே தவிர, அந்த கட்டுரை மிகவும் தெளிவாக, பல மேல்கோள்களுடன் சிறப்பாக எழுதப் பட்ட ஒன்று.

நேதாஜி ஆரம்பித்த ‘இந்திய தேசீய ராணுவ ‘த்தின் வரலாறும் அது எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதும் அது எவ்வாறு இந்தியநாட்டினுள்ளே தேசீய உணர்ச்சியையும் சுதந்திர உணர்ச்சியையும் கிளறிவிட்டது என்பதும் அதில் விவரிக்கப்படுகிறது. இந்திய தேசீய ராணுவத்தின் மூன்று ஜெனரல்களை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து தூக்கு மேடைக்கு அனுப்பியது. (அவர்களுக்காக நேருவும் மற்ற காங்கிரஸ் வக்கீல்களும் ஆஜரானார்கள்). இந்தியர்கள் அனைவருக்கும் பாடமாக இருக்க வேண்டுமென்று ஒரு இந்து, ஒரு முஸ்லீம், ஒரு சீக்கியரை பிரிட்டிஷ் அரசாங்கம் தெர்ந்தெடுத்திருந்தது. அது இன்னும் இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்திவிட்டது.

இதன் உடனடி விளைவு, பிரிட்டிஷார் கீழ் இருந்த இந்திய ராணுவத்தில் தேசீய உணர்ச்சி பொங்கியது. பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டனர். ஆனால் அந்த இந்திய அதிகாரிகள் மேல் எந்த வித ராணுவ ஒழுங்கு நடவடிக்கையும் பிரிட்டிஷ் அரசாங்கம் எடுக்க தயங்கியது. எடுக்கவும் முடியவில்லை.

இந்த பல காரணங்களால், பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டாம் உலகப்போர் முடியக் காத்திருந்தது. முடிந்தபின்னர், இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்களிடம் இந்தியாவை ஒப்படைத்துவிட்டு போய்ச் சேர்ந்தார்கள் என்பதுதான் அந்த கட்டுரையின் சாரம்.

ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு முழுமுதல் காரணமாய் ஒரே ஒரு இயக்கத்தை அல்லது தலைவரைச் சுட்டிக் காட்ட முடியாது. அப்படிக் காட்டுவதனால் அரசியல் லாபங்கள் அடைகிற காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் அந்த அவசியம் இருந்திருக்கலாம்.

நேதாஜியைப் பற்றி மார்க்ஸிஸ்டுகளும் அவ்வளவு தீவிரமாய்ப் பேசுவதில்லை. அவர் ஸ்டாலினிற்கு எதிராக ஹிட்லர் இருந்த போதே ஹிட்லருடன் சேர்ந்தவர் என்பது ஒரு காரணமாய் இருக்கலாம். ஹிட்லருடன் நேதாஜி இணைந்ததால், ஹிட்லரையும் போற்றிப் பேசும் சில வங்காளிகளும் உண்டு.

நேதாஜி இந்தியாவில் அரசு அமைத்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும் என்பது ஒரு விவாதத்திற்குரியது. ஆனால் எந்த வகையிலும் சுதந்திரத்திலும், சமூக மாற்றத்திலும் காந்தி, நேரு போன்றவர்களின் சமூக, அரசியல் பங்கை மறுதலிக்க முடியாது.

**

பங்களாதேஷ்-பாகிஸ்தான்-மன்னிப்பு

பங்களாதேஷின் பிரதமருக்கும் பாகிஸ்தானின் ராணுவ தளபதிக்கும் விவாதம் நடக்கிறது. காரணம், இந்தியா டுடே வெளியிட்ட ஹமதூர் ரஹ்மான் விசாரணை முடிவுகள். பாகிஸ்தான் 1971இல் பங்களாதேஷில் நடத்திய வெறியாட்டத்துக்கும், இனப்படுகொலைகளுக்கும், கற்பழிப்புகளுக்கும், பங்களாதேஷ் மக்களிடம் பாகிஸ்தான் அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஹஸீனா வாஜெத் கேட்டிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி ‘அது கடந்த காலத்தில் நடந்த தவறு. பங்களாதேஷ் அதையெல்லாம் மறந்துவிட வேண்டும். பாகிஸ்தான் மன்னிப்பு கேட்காது ‘ என்று கூறியிருக்கிறார்.

அதற்கு பங்களாதேஷ் பிரதமர் ‘1947இல் காஷ்மீர் எனக்கு கிடைக்கவில்லை என்று இன்னும் பாகிஸ்தான் காஷ்மீரை கேட்கும் போது, 1971இல் நடந்த தவறுக்கு பங்களாதேஷ் மன்னிப்பு கேட்பது என்ன தவறு ‘ என்று கேட்டிருக்கிறார்.

குற்றமிழைத்தவர்கள் ‘மறந்துவிடு ‘ என்று கூற அருகதை அற்றவர்கள். ‘மன்னித்து விடு ‘ என்று மன்னிப்புக் கேட்கும் கடமை உண்டு. ஆனால் மன்னிப்புக் கேட்பது என்பது சாதாரண விஷயமில்லை. மன்னிப்புக் கேட்கும் போது ஆத்மார்த்தமாகப் பழசை எண்ணி அதன் காரணங்களை ஆராய்ந்து, இனி அப்படிப் பட்ட தவறுகள் இழைக்கப் படலாகாது என்ற திட்டமிட்டுச் செயல் படுத்துதல் வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக, பாகிஸ்தானின் தலைமை அப்படிப்பட்ட நுண் உணர்வுகள் கொண்டதாக கடந்த ஐம்பது வருடங்களில் வெளிப்பட வில்லை.

குற்றமிழைக்கப்பட்டவர்களுக்குத்தான் மறக்க உரிமை உண்டு. அது குற்றமிழைத்தவர்களின் வற்புறுத்தலால் அல்லது மிரட்டலால் வருவதல்ல.

**

நரசிம்மராவுக்கு தண்டனை

நரசிம்மராவ் இன்னும் என் மதிப்பில் பெரியவராகி இருக்கிறார். அரசியல்வாதிகள் நீதிமன்றம், காவல்துறை போன்றவற்றை மதிக்காமல் இருந்ததை மாற்றி, தானே பலிகடாவாகி நீதி எல்லோருக்கும் பொது என்பதனை எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு இதனால் சீர்படும்.

நரசிம்மராவின் பெயர் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

**

இளைய ரத்தம்

மத்திய அரசில் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். அவருக்கு வயது 48. இவர்தான் மத்திய அமைச்சர்களிலேயே இளையவர். அப்படியென்றால் மற்ற அமைச்சர்களுக்கெல்லாம் என்ன வயது என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

**

டாஸல் பெட்ரோல் விலை உயர்வு

இந்தியா தொழிற்சாலைகள் நிரம்பிய நாடாகுவதற்கு பல தியாகங்களை செய்யவேண்டும். அதிலொன்று, இன்னும் கரிப்புகையை ஓசோனைக்கொல்ல அனுப்புவது. ஓசோன் மண்டலம் சுத்தமாக தீர்ந்து போனால் மனிதர்களாகிய நாம், இன்னும் பிராணிகள், தாவரங்கள் எல்லாம் தடையில்லாமல் வரும் அல்ட்ரா வயலட் கதிர்களால் சுடப்பட்டு சாகலாம்.

ஆகவே, டாஸல் பெட்ரோல் விலையை இன்னும் இரண்டு மடங்காக உயர்த்தி, அதில் வரும் வரிப்பணத்தை, ஓசோனைக் கொல்லாத தொழில் நுட்பங்களை உருவாக்க தீவிரமாக செலவிடலாம். டாஸலை கார்களில் உபயோகிப்பதையும் தடை செய்ய வேண்டும். கார்களின் உற்பத்தியைக் காட்டிலும், பஸ்கள், மினி பஸ்கள் என்று பொதுப் போக்குவரவிற்கான வசதிகள் பெருக வேண்டும். எலெக்ட்ரிக் ரயில்களும் பெருக வேண்டும்.

****

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்