காஷ்மீர் சுயாட்சியும், ஒதுக்கப்படும் முஸ்லீம்களும்

This entry is part [part not set] of 11 in the series 20000723_Issue

சின்னக்கருப்பன்


சமீபத்தில் காஷ்மீர் மாநில சட்டசபை சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது 1953க்கு முன்பு காஷ்மீருக்கு இருந்த அதிகாரங்களை மீண்டும் பெறுவதற்காக மத்திய அரசை வற்புறுத்துகிறது. இந்த கோரிக்கை மூலம் புது தில்லியில் இருப்பது போன்று காஷ்மீரிலும் ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்றோரும் இருப்பார்கள். இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் பொதுவாக ராணுவமும், பணமும், தொலைத்தொடர்பும் மட்டுமே இருக்கும். இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்படும் எந்த சட்டமும் காஷ்மீருக்கு பொருந்தாது.

இதற்கு என்ன அர்த்தம் ? அதாவது காஷ்மீரின் சட்டங்கள் தனியானவை. காஷ்மீரில் இந்திய அரசியல் சட்டங்களை மதிக்காமல் எந்த சட்டமும் இயற்றலாம். ஏன் காஷ்மீரில் இருக்கும் பெளத்தர்கள் கட்டாயமாக முஸ்லீமாக வேண்டும் என்று சட்டம் இயற்றினாலும் இந்திய அரசால் ஒன்றும் செய்யமுடியாது. காஷ்மீரிகள் வழக்கம் போல இந்தியாவில் எந்த வியாபாரமும் நிலம் வாங்கவும் செய்யலாம். ஆனால் மற்ற இந்தியர்கள் காஷ்மீரில் ஒன்றும் செய்யமுடியாது. ஐரோப்பாவில் இருக்கும் நிலைக்கு சற்று ஒத்ததாக இதைப் பார்க்கலாம். நோக்கம் ஒன்றாக இருந்தாலும் திசை வேறு. அங்கு ஒரே தேசத்தை நோக்கி அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இணைய முயற்சிக்கின்றன. ஆனால் இங்கு ஒரே தேசமாக இருப்பதிலிருந்து துண்டாக உடைய ஒரு முயற்சி நடக்கின்றது.

வெகுகாலமாக மாநில சுயாட்சிக்காக முயற்சி செய்துவந்த திமுக இன்று சந்தோஷமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பலவருடங்களுக்கு முன் மாநில சுயாட்சி பற்றி புத்தகம் எழுதிய, இன்று மத்தியமந்திரியாக இருக்கும் முரசொலிமாறன் முழுமனதாக காஷ்மீர் சட்டசபை தீர்மானத்தை எதிர்த்திருக்கிறார். மாநில சுயாட்சிக்கு ஆதரவாக பேசிய ஒரே ஒருவர் ராம் ஜெத்மலானி மட்டுமே.

1947இல் நடந்தது மீண்டும் நடக்கிறது. சிந்து, பலுசிஸ்தான், பக்தூனிஸ்தான் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தான் ஜின்னாவிடம் தாரை வார்க்கப்பட்டது. பஞ்சாப் சட்டசபை மட்டுமே அந்த பிரிவினையை ஆதரித்தது. சிந்து சட்டசபையில் ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர் கொலை செய்யப்பட்டு சட்டசபை ஏமாற்றப்பட்டு பிரிவினைத் தீர்மானம் சிந்துவில் அரங்கேறியது. பலுசிஸ்தானிலும் பக்தூனிஸ்தானிலும் 1% ஓட்டு வித்தியாசத்தில் அங்குள்ள மக்களால் பொது வாக்கெடுப்பில் பாகிஸ்தான் ஏற்கப்பட்டது. அங்கு இந்தியாவுக்கு ஆதரவாக ஓட்டுப் போடச்சொல்லி எந்த காங்கிரஸ் பெருந்தலைவர்களும் (ஏன் காந்தி கூட) செல்லவில்லை.

காங்கிரஸின் இந்துத் தலைவர்களான பட்டாலும் ராஜாஜியும் பிரிவினையை உடனேயே ஒத்துக் கொண்டார்கள். இறுதியில் வழிக்கு வந்தவர் நேரு. மகாத்மா காந்தியும் கான் அப்துல் கபார் கானும் ஓரங்கட்டப்பட்டார்கள். ஜின்னா சாகக்கிடக்கிறார் என்ற உண்மை தெரிந்திருந்தால் சுதந்திரம் ஒரு வருடம் தள்ளிப்போடப்பட்டு இந்தியா ஒன்றாக இருந்திருக்கும் என்று பேசுபவர்கள் இருக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அந்த விஷயம் ஆங்கிலேயர்களுடன் நட்புறவோடு இருந்த இந்து காங்கிரஸ்காரர்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது. தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும். பாகிஸ்தான் பிரிவினை நடந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

காங்கிரஸின் இந்துப்பகுதி ஏன் முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேசங்களை இந்தியாவுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லை ? காங்கிரஸின் முஸ்லீம்பகுதித் தலைவர்கள் இந்தியாவுடன் இருக்கவே விரும்பியிருக்கிறார்கள். முஸ்லீம்களிடம் கூட ஆதரவில்லாத முஸ்லீம் லீக்க்கு ஏன் இந்துப்பகுதி காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்து முஸ்லீம்கள் பற்றிய விஷயங்களை பேசினார்கள் ? இது குறித்து முஸ்லீம் காங்கிரஸ்காரர்கள் காந்தியிடமும் நேருவிடமும் முறையிட்டிருக்கிறார்கள். அபுல் கலாம் ஆஜாத் இது குறித்து தன் நினைவுகளில் வருந்தியிருக்கிறார்.

இந்து காங்கிரஸ்காரர்கள் முஸ்லீம் பிரதேசங்களை பிரச்னைப் பகுதிகளாகவே பார்த்திருக்கிறார்கள். ராஜாஜி அவற்றை கேன்ஸர் என்று குறிப்பிட்டிருக்கிறார். முஸ்லீம் பெரும்பான்மைப் பிரதேசங்களில் (முஸ்லீம் லீகால் தூண்டப்பட்டோ என்னவோ) மாதந்தோரும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்திருக்கின்றன. ஆங்கிலேய பதிவேடுகளில், பஞ்சாபிலும் இன்றைய பங்களாதேஷிலும் தொடர்ந்த இந்து முஸ்லீம் பிரச்னைகளும், முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களில் நடந்த கலவரங்களை அடக்க தனிப்படையே வைத்திருந்தார்கள் என்றும் காண்கிறோம். கலவரங்களை அடக்குவதே முக்கிய நோக்கமாக போய்விட்டால் நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படும், எனவே பிரிந்தால் இருவருக்கும் நல்லது என்று இந்து காங்கிரஸ்காரர்கள் விரும்பியிருக்கலாம்.

1947இல் பிரியாத இந்தியாவின் மிக வளமையான நிலங்கள் பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றன. மகத்தான வலிமையான சிந்து நதியும், அதன் மிகவும் வளமையான பஞ்சாப் பகுதியும் சிந்து மாகாணமும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. பஞ்சாப் பிரிக்கப்பட்டது. ஆனால் சிந்து மாகாணம் பிரிக்கப்படவில்லை. பஞ்சாப் பிரிக்கப்பட்டதற்கு காரணம் சீக்கியர்களின் பிடிவாதம் காரணமாக இருந்தது. இந்து சிந்திகள் காங்கிரஸின் வாக்குறுதியால் ஏமாந்தார்கள். கோடிகோடியாக இந்து சிந்திகள் இந்தியாவுக்கு நாடோடிகளாக வந்தார்கள். வளமையான வங்கப்பிரதேசப்பகுதியும் பாகிஸ்தானுக்குத் தரப்பட்டது. ஒரு தந்தை தன் மகளுக்கு சீதனம் வழங்குவது போல இந்து காங்கிரஸ்காரர்கள் வளமையை பாகிஸ்தானுக்கு வழங்கினார்கள்.

இத்தகைய ஏராளமான வளமையோடு பாகிஸ்தான் உருவானாலும், பாகிஸ்தான் வெகு விரைவிலேயே குழப்பம், ராணுவ அரசாங்கம் என்ற சட்டம் ஒழுங்கில்லாத காட்டுமிராண்டி தேசமாக சுழலில் சிக்கியது என்பதை அனைவரும் அறிவர். பங்களாதேஷ் நாடும் இதில் விதி விலக்கல்ல. இரண்டு தேசங்களிலும் வெளிப்படையான அல்லது மறைமுகமான ராணுவ அரசாங்கமே கடந்த 50வருடங்களும் நடந்து வந்திருக்கின்றன. எல்லா கொடுங்கோலாட்சிகளும் மதத்தை துஷ்பிரயோகம் செய்வது போல, இந்த ராணுவ அரசாங்கங்களும் தங்கள் அரசை உறுதிப்படுத்திக் கொள்ள இஸ்லாமை பயன்படுத்திக் கொண்டார்கள். இது ராணுவப்படுத்தப்பட்ட அரசியலையும், சுதந்திரமற்ற மக்களையும், மதத் தீவிரவாதத்தையும் அதன் வழியாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த சமுதாயத்தையும் உருவாக்கிவிட்டது. இதன் வெளிப்பாடு இன்று கோயம்புத்தூரிலும் சர்ச்சுகளிலும் குண்டுகளாகவும், ஏகே47களாகவும் இந்தியாவில் வெடிக்கிறது.

இன்றைய (பாகிஸ்தானி என்றும் பங்களாதேஷி என்றும் கூறிக்கொள்ளும் )இந்திய முஸ்லீம்களின் மதத்தீவிரவாதம், இந்து காங்கிரஸ் தலைவர்கள் முஸ்லீம்களை ஒதுக்கிவைத்ததன் (Ghetto-ization) நேரடி விளைவுதான் என்பது என் கருத்து.

காங்கிரஸின் இந்துப்பகுதி தலைமை இந்தியாவை இந்து பெரும்பான்மை நாடாக வைத்திருக்க விரும்பியது. அதனால் தொடர்ந்து அவர்களை தனி நாடு கொடுத்து துரத்தி விட்டும், இந்தியாவுக்குள் இருக்கும் முஸ்லீம் பெரும்பான்மை பிரதேசங்களுக்கு சுயாட்சி கொடுத்தும் அவர்களை தனிமைப்படுத்தி ஒதுக்கி வைத்தது. இந்த ஒதுக்கிவைத்தலின் இன்றைய விளைவு என்ன ?

அது மிகத்தெளிவாகவே தெரிகிறது. இந்தியா அறிவியலிலும், ஜனநாயகத்திலும், சட்டம் ஒழுங்கிலும், தொழில்துறையிலும், வேகமாக முன்னேறிய காலத்தில் இந்த ஒதுக்கப்பட்ட பகுதிகள் பின் தங்கிப் போயின. இந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் காஷ்மீரப்பகுதிகள் மத அடிப்படைவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் சொர்க்க பூமியாகிவிட்டது. உலகத்தின் மிகவும் செழிப்பான பூமியான பங்களாதேஷ் இன்று உலகத்தின் மிக ஏழை நாடு. அழகான காஷ்மீர் இன்று பயங்கரவாதிகளின் கூடாரம். பாகிஸ்தானால் வாங்கிய கடனை அடைக்க வழியில்லாமலும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், ஷியா-ஸன்னி மதக்கலவரங்களால் தினமும் காயம்பட்டு சமுதாயத்தின் விளிம்பில் நிற்கின்றது. இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்ட ஹைதராபாத் இன்று உலகத்தின் IT தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. அதை பாகிஸ்தான் போல சுதந்திர நாடாக விட்டிருந்தால் என்ன வழியில் சென்றிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இன்று ஒரு வேலை வேண்டுமென்றால் எங்கு செல்வீர்கள் ? பங்களாதேசிற்க்கா பங்களூருக்கா ?

மல்லப்புரம் என்று ஒரு மாவட்டம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும்படிக்கு உருவாக்கப்பட்டபோது முஸ்லீம்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார்கள். இன்று அது எந்த அளவை எடுத்தாலும், கேரளாவிலேயே மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இருக்கிறது.

இவ்வாறு இந்துப்பெரும்பான்மை இந்தியா, முஸ்லீம்களை தனிமைப்படுத்துவதை, முஸ்லீம்களை மற்ற இந்தியர்களிடமிருந்து பிரிப்பதாகவே பார்க்கவேண்டும். அதை அவர்களுக்கு தரும் சலுகையாக பார்க்கக்கூடாது. புத்தமத பெரும்பான்மை இருக்கும் சிக்கிமை இந்தியாவோடு இணைத்த இந்திரா, பங்களாதேஷ் சுதந்திரமடைய இந்திய போர்வீரர்கள் உயிர்கொடுத்திருந்தாலும், பங்களாதேஷை இந்தியாவோடு இணைக்க எந்த வித எண்ணமும் இல்லாமல் இருந்ததை, இது போன்ற ஒதுக்கி வைத்து கூண்டில் அடைக்கும் கொள்கையின் தொடர்ச்சியாகத்தான் பார்க்கவேண்டும்.

இந்தியாவின் முஸ்லீம்கள் மட்டுமே இந்தியாவில் இது போன்று ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் என்று நான் எண்ணவில்லை. வடகிழக்குஇந்தியாவில் இருக்கும் பழங்குடியினர் ஆர்வத்துடன் ஒதுங்கி கொண்டார்கள். கிராமங்களில் இருந்த கீழ்ஜாதியினரும் நடுத்தர ஜாதியினர்களும் இது போன்று ஒதுக்கப்படுவதை தீவிரமாக எதிர்த்தார்கள்.

சுதந்திரத்துக்குப் பின் மேல்ஜாதி இந்துக்கள் நகரங்களுக்கு பிரயாணமானார்கள். அரசாங்க அதிகாரிகளாகவும் மேல்ஜாதியினர்களே இருந்ததால், அவர்கள் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்குக் கூட பணமில்லை என்று பேசி கிராமங்களை ஒதுக்கினார்கள். நகரங்கள் படிப்பு மையங்களாகவும், வசதிகளின் இருப்பிடங்களாகவும், வாழ்க்கைத்தரம் உயர்ந்தவையாகவும் ஆன போது, கிராமங்கள் நகரங்களில் வாழும் நிலச்சொந்தக்காரர்களின் (Absentee Landlords) காலனிகளாக மாறின. இது ஒரு முன்பே யோசித்து செய்த சதிவேலை என்று இல்லை என்றாலும் இது கிராமங்களில் உள்ள இந்தியர்களை பின்படுத்தியது. நிலச் சீர்திருத்தங்கள் நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டாலும், நகரங்களுக்குச் சென்றிருக்கக்கூடிய கிராமீய இந்தியர்களை தடுத்து வசதிகளற்ற கிராமங்களில் உட்கார வைத்தது. ஆனால் முன்னேறும் தேசம் இது போன்ற விஷயங்களால் அடிமைப்பட்டு விடுவதில்லை. சற்றே பெரிய கிராமங்கள் நகரங்களாயின. பெரு நகரங்கள் தன்னை சுற்றி இருந்த கிராமங்களை இணைத்துக் கொண்டு மிகப்பெரும் நகரங்களாயின. ஆனால் இந்த வசதி முஸ்லீம் ஒதுக்குப்புறங்களுக்கு இல்லை.

மேலும் கீழ்காதியினரும், நடுத்தர ஜாதியினர்களும் தாம் ஒதுங்கி விடக்கூடாது என்றும், ஒதுக்குதலை எதிர்த்தும் தீவிரமாக உழைத்தார்கள். தாம் இந்திய பெரு சமுதாயத்தில் முழுப்பங்கெடுக்க வேண்டும் என்று போராடினார்கள். இதனாலேயே அவர்கள் அம்பேத்காரை மதித்தாலும் பெருவாரியாக அவர் சொன்னது போல பெளத்தர்களாக ஆகவில்லை(ஆகியிருந்தால் தனிமைப்படுவதும், மற்றவர்களால் ஒதுக்கப்படுதலும் எளிதாக ஆகியிருக்கும்) தங்களுக்கு சரிசம அந்தஸ்து வேண்டும் என்று கிராமத்து டாக்கடையிருந்து, கோயில் நுழைவு கோரிக்கையிலிருந்து, அந்த கோயில் நிர்வாக கமிட்டியில் பங்கு வேண்டும் என்று போராடுவதிலிருந்து, அரசாங்க வேலை வேண்டும் என்று போராடுவதிலிருந்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக வேண்டும் என்பது வரை அவர்கள் தங்களை இந்திய பெரு சமுதாயத்தில் இணைத்துக் கொள்ள விளைகிறார்கள். ஆனால் முஸ்லீம்களோ தங்களை இந்திய சமுதாயத்திலிருந்து பிரித்துக் கொள்வதிலும், சில சலுகைகள் (மதரஸாவுக்கு மான்யம், ஹஜ் யாத்திரை மான்யம், ஷாரியத் நீதிச்சட்டம்) போன்ற மற்ற இந்தியர்களுக்கு இல்லாத விஷேசச் சலுகை பெருவதில் திருப்தி அடைந்து விடுகிறார்கள். அது இவ்வாறு இவர்களை ஒதுக்கி வைக்க முயல்பவர்களுக்கு நல்லதாகவும் இருக்கிறது. ஆனால் சுதந்திரம் அடையும்போது முஸ்லீம்களை விட கீழ் நிலையில் இருந்த கீழ்ஜாதியினர் சமூக பொருளாதார முன்னேற்றம் அடைவதே குறிக்கோளாக இருந்தார்கள்.

முஸ்லீம் தலைவர்களும் இடது சாரி சிந்தனையாளர்களும் இதைப் புரிந்து கொள்ளவே இல்லை. அல்லது புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இதை நாம் காங்கிரஸின் இந்துப் பகுதி தலைவர்களின் தீர்க்க தரிசனமாகப் பார்க்கலாம். அல்லது இடதுசாரி தலைவர்களும் முஸ்லீம் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களின் தீர்க்க தரிசனத்தை நிறைவேற்றி வைத்தார்கள் என்றும் பார்க்கலாம்.

சரி ஏன் இன்று திமுக தனி நாடு கேட்பதில்லை ? ஏன் அவர்கள் சுயாட்சி கூட கேட்கவில்லை ?

தமிழ் தொழிலாளிகளும் தமிழ் தொழிலதிபர்களும் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவெங்கும் வேலை செய்கிறார்கள். தமிழ் சினிமா, தமிழர்களே இல்லாத பெல்காமில் ஹவுஸ்புல்லாக ஓடுகிறது.

சன் டிவி( இது மாறன்- கருணாநிதி குடும்பத்துக்கு சொந்தம்) இன்று எல்லா தெற்கிந்திய மொழிகளிலும் ஒளிபரப்புகிறது. இன்னும் மற்றைய இந்திய மொழிகளிலும் அவர்கள் சன் டிவியை கொண்டு செல்ல முயற்சி செய்கிறார்கள். டாடா பிர்லாவை விடுங்கள், இன்று தமிழ்நாட்டுக்கு GEயும் Toyotaவும் கொண்டுவரும் மூலதனம் தேவை. சட்டம் ஒழுங்கு இல்லாத, மொழித்தீவிரவாதம் நிறைந்த நிலையற்ற நாட்டில் இவைகளை யோசிக்க அல்ல, கற்பனை செய்யக்கூட முடியாது.

திமுகவின் சிந்தனையில், ‘ஜெயலலிதாவுக்கு இந்த முட்டாள் தமிழ்மக்கள் வரும் தேர்தலில் ஓட்டுப் போட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரகாரம், இன்னும் 5 ஆண்டுகளில் மீண்டும் ஒரு தேர்தல் வரும். அப்போது நாம் திரும்பி ஆட்சிக்கு வரலாம் ‘ என்று தான் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இல்லையென்றால், தமிழ் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் இந்திய அரசாங்கம் கைவைக்க இயலாதென்றால், ஜெயலலிதா தமிழ்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி தன்னை நிரந்தர முதல்வராக அறிவித்துக் கொள்வார். (ம்… இதேதான் இன்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.. சில வருடங்களுக்கு முன் பங்களாதேஷிலும் நடந்து கொண்டிருந்தது). திமுக கேட்ட தனித்தமிழ்நாடு 50 வருடங்களுக்குமுன் கிடைத்திருந்தால், இன்று தமிழ்நாடு எங்கு இருக்கும் என்று பங்களாதேஷையும் பாகிஸ்தானையும் நேபாலையும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

டார்ஜிலிங்கிலிருந்து கன்யாகுமரி வரை தனிநாடு கேட்பவர்களுக்கு நம்மில் பஞ்சமில்லை. ஒரு பிரதேசத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடற்ற முழு உரிமை கொடுத்தால், இன்னொரு சிங்கப்பூரையோ, கொரியாவையோ, தைவானையோ உருவாக்கிவிட முடியும் என்று நல்லதாகவே சிந்திக்கிறார்கள். நல்ல எண்ணம் இருந்தாலும், அவர்கள் உலக அரசியல் புரியாதவர்களாகவே இருக்கிறார்கள். மாபெரும் அமெரிக்க பொருளாதார பின் பக்கபலம் இல்லாமல் அவர்களால் இது போன்ற உதாரண தேசங்களாக ஆகியிருக்க முடியாது. அந்த பக்கபலம் இல்லாத எத்தனையோ சிறிய நாடுகள் வறுமையிலும் நோயிலும் உழன்றுகொண்டு, ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஏராளமாய் சிதறிக்கிடக்கிறார்கள். பெரிய நாடுகளின் வளமையான பொருளாதாரத்தில் அட்டை போல ஒட்டிக் கொண்டு வளமையை அடைந்து விடலாம். எத்தனை அட்டைகளை பெரிய நாடுகள் தாங்கும் ? நாமே ஒரு பெரிய பொருளாதாரமாக வளர்வது நல்ல தேர்வல்லவா ? அப்போது பல சிறிய நாடுகள் நம்மை அட்டைபோல உறிஞ்சும். ஆனால் நம்மிடம் எல்லா கடிவாளங்களும் இருக்கும்.

காங்கிரஸின் இந்துத் தலைமை இந்த முஸ்லீம் தேசங்கள் கேட்ட உரிமைகளை கொடுத்து அவைகளை ஒதுக்கி தற்கொலை செய்ய வைத்துவிட்டது என்றுதான் நான் கருதுகிறேன். முஸ்லீம்களும் தாங்கள் கேட்ட உரிமைகள் கொடுக்கப்பட்டதை தங்களுக்கு வெற்றி என்று நம்பிக்கொள்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவில் இணைக்கப்பட்டதன் காரணம் அங்குள்ள பெளத்தர்களும் இந்துக்களும்தான் காரணமே தவிர அங்குள்ள அனைத்து காஷ்மீரிகளுக்குமோ அல்லது இந்தியாவின் ‘மதச்சார்பின்மை ‘யை காப்பாற்றவோ அல்ல என்று தான் நான் நினைக்கிறேன்.

காஷ்மீரிகளின் முஸ்லீம் தலைமை பாகிஸ்தான் சொல்படி கேட்பதன் மூலம் அவர்கள் உண்மையிலேயே இந்தியாவின் இந்துத்தலைமைக்கு தேவையானதையே செய்கிறார்கள். இந்தியாவின் இந்துத் தலைமை முஸ்லீம்களை தீவிரவாதிகளாகவும், பிரிவுவாதிகளாகவும் காட்டவே விரும்புகிறார்கள். அதன்மூலம் அவர்களை இந்தியாவின் இக்கால, எதிர்கால வளமையிலிருந்து ஒதுக்கிவிட விரும்புகிறார்கள். முஸ்லீம் காஷ்மீரிகள் உண்மையிலேயே மதச்சார்பற்ற, ஜனநாயக, முன்னேற்றம் நிறைந்த வாழ்க்கையை விரும்புவார்களேயானால், அவர்கள் சட்டம் 370தை இந்திய அரசியல் சட்டத்திலிருந்து எடுக்கவும், இந்தியாவுடன் இன்னும் நெருங்கிய உறவுடன் மற்ற மாநிலங்கள் போல சம உரிமையுடன் வாழவுமே கேட்கவேண்டும். அப்போது, இந்தியாவின் இந்துத் தலைமை அதிர்ச்சியாலேயே சாகும்.

**

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்