இலங்கைப்போர்.

This entry is part [part not set] of 7 in the series 20000507_Issue

சின்னக்கருப்பன்


இலங்கையில் மீண்டும் தீவிரப்போர் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இது பற்றி பேசவே அஞ்சும்படியான சூழ்நிலையை இருபுறமும் உருவாக்கியிருக்கிறார்கள். இலங்கை அரசு போர்பிரகடணம் செய்து, வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுப் பத்திரிக்கையாளர்களாக இருந்தாலும்சரி யாராக இருப்பினும் செய்திக் கட்டுரைகளை பரிசோதனைக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டிருக்கிறது. புலிகள் அமைப்பு எப்போதுமே சுதந்திரப் பத்திரிக்கைக்கு எதிராக இருந்து வந்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் சிக்கியிருக்கும் இலங்கைப்போர்வீரர்கள் 20000 என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இன்னொரு அறிக்கை 45000 என்று சொல்கிறது. செய்திகள் திரிக்கப்படுகின்றன என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

இலங்கை தமிழ்ப்பிரச்னைக்கு தீர்வு என்று எல்லோரிடமும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கிறது. மூலைக்கடையில் டா குடிக்கும் நம் மனிதர்களிடமிருந்து, சோழா செராட்டனில் மசாலா டா குடிக்கும் சுப்பிரமணிய சாமியிடமிருந்து, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் வரை எல்லோரிடமும் ஒரு அபிப்ராயம் இருக்கிறது. எல்லோரிடமும் ஒரு வரட்டுப் பிடிவாதம் இருக்கிறது.

இலங்கையில் தனி ஈழத்தை ஆதரித்தால் அது காஷ்மீரில் தனி நாடு கேட்கும் காஷ்மீரிகளுக்கு ஆதரவாக போய்விடும் என்று இந்திய அரசு அஞ்சுகிறது. பாகிஸ்தானோ இது போன்ற எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல், இலங்கை ஒரே நாடாக இருப்பதற்கு, தான் இலங்கை அரசுக்கு உதவ படைகள் அனுப்பத்தயார் என்று அறிவித்திருக்கிறது.

முதல்வர் கருணாநிதி ஐபிகேஎஃப் சரித்திரத்தை ஞாபகப்படுத்தி இந்தியா தன் படைகளை இலங்கை அரசுக்கு ஆதரவாக அனுப்பக்கூடாது என்கிறார். கூட்டு அரசு நடத்திவரும் பாஜக திமுகவை பகைத்துக் கொள்ள தயாராக இருக்காது. முன்பு ராஜீவ், இந்திரா காலத்தில், இலங்கை பற்றிய இந்தியக் கொள்கைகளுக்கு எந்தத் தமிழர்களும் பொறுப்பாக இல்லை என்பது வரலாறு. 1971இல் பங்களாதேஷை பிரிக்க உதவிய இந்தியா ஏன் ஈழத்துக்கு ஆதரவாக இல்லை என்பது இன்னும் ஒரு கேள்விக்குறி. அதற்கு அன்றைய இந்திய அரசு நடத்தியவர்களுக்கு தமிழர்களின் நாட்டுப்பற்றின் மேல் ஒரு சந்தேகம் என்பதுதான் சரியான விடையா ? இப்போதைய இந்திய அரசு கூட்டணி அரசாக இருப்பதால் முழு இந்திய பிரதிநிதித்துவம் கொண்டதாக இருக்கிறது என்பதும் மறுக்க முடியாதது

இருந்தாலும் இந்திய அரசு காஷ்மீரத்தையும் தமிழ் ஈழத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறது.

ஆனால் இரண்டும் வெவ்வேறு பிரச்னைகள்.

காஷ்மீர் பிரச்னை, பாகிஸ்தானால் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தானின் நலன்களுக்காக, பாகிஸ்தானால் ஏற்றுமதி செய்யப்படும் தீவிரவாதிகளால் நடத்தப்படும் ஒரு போர். இங்கு காஷ்மீரிகளும் ஒரு பலிகடாக்கள்தான். காஷ்மீரிகளின் உரிமைகளுக்கோ, அவர்களது மதத்திற்கோ இந்தியாவில் எந்த பாதிப்புக்கும் இல்லை. கேரளத்தில் வாழும் முஸ்லீம்களுக்கும், ஹைதராபாதில் வாழும் முஸ்லீம்களுக்கும் மற்றும் இந்தியாவெங்கும் இந்துக்களுடன் இணைந்து வாழும் முஸ்லீம்களுக்கும் காஷ்மீரில் வாழும் முஸ்லீம் காஷ்மீரிகளுக்கும் என்ன வித்தியாசம் ? காஷ்மீர் அரசர் செய்தது சரியா தவறா ? காஷ்மீர் பாகிஸ்தானில் இருக்கவேண்டுமா இந்தியாவில் இருக்க வேண்டுமா என்பதெல்லாம் 50 வருடங்களுக்குப் பிறகு பேசும் வெட்டிக்கதை.

உண்மைக்கதை வேறு. பாகிஸ்தானுக்கு செல்லும் ஆறுகள் அனைத்தும் உற்பத்தியாவது காஷ்மீரில் தான். எப்போதாவது இந்தியா அங்கு அணைகள் கட்டி தண்ணீரை இந்திய மாநிலங்களுக்குத் திருப்பினால், பாகிஸ்தான் பாலைவனமாகும். அதுவே பாகிஸ்தான் காஷ்மீரில் காட்டும் அக்கறை. காஷ்மீர் மக்கள் மீது அதற்கு எந்தவிதமான பாசமும் கிடையாது. மேலும் சியாச்சின் பனிக்குளத்தில்தான் அனைத்து ஆறுகளும் உற்பத்தி ஆகின்றன. அதற்காகத்தான் அந்த ‘புல்பூண்டு முளைக்காத பிரதேசத்தில் ‘ போர் நடக்கிறது.

1971இல் பங்களாதேஷ் போரின் போது, பாகிஸ்தானிய வீரர்களோடு தோளோடு தோள் நின்று, பங்களாதேஷின் மக்களை, முக்கியமாக பங்களாதேஷ் இந்துக்களையும், பங்களாதேஷின் இடதுசாரி மாணாக்கர்களையும், பேராசிரியர்களையும் கொல்வதற்கு உதவியவர்கள் பிகாரிகள். இந்த பிகாரிகள் 1947இல் இந்தியப் பிரிவினையின்போது கிழக்கு வங்காளத்துக்கு (அன்றைய கிழக்கு பாகிஸ்தானுக்கு) சென்ற முஸ்லீம் பிகாரிகள். இவர்கள் பேசும் மொழி உருது. முஸ்லீம் வங்காளிகள் பேசும் மொழி வங்காளி. ஜின்னா தலைமையிலும் பிறகு வந்த மற்ற மேற்கு பாகிஸ்தானியர் தலைமையிலும் உருது மொழி கிழக்கு வங்காளத்தில் திணிக்கப்பட்டது. இதை எதிர்த்து நடந்த கலவரம் பின்னர் விடுதலைப்போராக மாறி கிழக்கு வங்காளம் பங்களாதேஷாக ஆனது. அந்த விடுதலைபோரின்போது தான் இந்த பிகாரிகள் பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட்டனர்.

பங்களாதேஷ் உருவானதன் பின்னரும் இவர்கள் தங்களை பங்களாதேஷின் மக்கள் என்று கூறிக்கொள்ள மறுத்துவிட்டனர். தங்களை பாகிஸ்தானியராகவே அடையாளம் காணும் இந்த பிகாரிகள் 1971இலிருந்து இன்றுவரை பாகிஸ்தான் அரசை அடைக்கலம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தானிய குடியுரிமை வழங்க பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எங்கே இவர்களது உரிமைகள் ? இவர்கள் முஸ்லீம்கள் அல்லவா ? பங்களாதேஷ் அரசு இவர்களுக்கு குடியுரிமை வழங்க தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்து இருக்கிறது. இருந்தும் இந்த பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் செல்லவே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆக காஷ்மீரில் நடப்பது வெறும் பாகிஸ்தானிய நில ஆக்கிரமிப்பு முயற்சிதான். அதற்கு சில பல காஷ்மீரிகளும் துணைக்குப் போகிறார்கள். இந்திய அரசு நடத்திய காங்கிரசும் இதை பலகாலமாக சொதப்பிவிட்டிருக்கிறது. 370ஆவது அரசியல்சட்டவிதி காஷ்மீரிகளுக்கு தனி அந்தஸ்து தருவது இன்னும் காஷ்மீரிகளை இந்தியாவிலிருந்து அன்னியப்படுத்தி இருக்கிறது. இதை நீக்கப் போவதாக கோரி ஓட்டுக் கேட்ட பாஜக இன்று அது கூட்டணி ஆட்சி கொள்கையில் இல்லை என்று அறிவித்து விட்டது.

அது தனிக்கதை. அது போன்றதல்ல இலங்கை பிரச்னை. ஈழத்தை ஆக்கிரமிக்க எந்த விதமான ஆர்வமும் இந்தியாவிடம் இல்லை. அது இந்தியா உருவாக்கிய பிரச்னை அல்ல. 1971இல் இந்தியா இலங்கைக்கு சிங்களத் தீவிரவாத அமைப்பான ‘ஜனதா விமுக்தி பெர்முணா ‘வை அடக்க சிப்பாய்களை அனுப்பியது. பிறகு 80களில் ஐபிகேஎஃப் என்று இலங்கைக்கு ஆதரவாக புலிகள் அமைப்பை அடக்க சென்றது. இது போன்ற உதவிகள் மூலம் இலங்கை ஒன்றாக இருப்பதுதான் இந்தியாவின் ஆர்வம் என்று காண்பித்திருக்கிறது. 1971இல் JVP இலங்கையை ஆண்டிருந்தாலோ, அல்லது 80களில் ஐபிகேஎஃபை அனுப்பாமல் இருந்திருந்தாலோ, இன்று இலங்கை இரண்டு நாடுகளாகத்தான் இருந்திருக்கும்.

சிங்களர்களும் தமிழர்களும் இணைந்து வாழ்வது முடியாத காரியம் என்று நான் கருதவில்லை. தனிமனித அளவில் நண்பர்களும் திருமணங்களுமாக, அவர்கள் மனிதர்களாக, மற்ற மனிதர்கள் போலவே, இணைந்து வாழ்கிறார்கள். ஆனால் இரண்டு இனங்கள் மட்டும் இணைந்து வாழ்வது என்பது இயலாத காரியம் என்று எண்ணுகிறேன். உதாரணமாக கர்னாடகமும், ஆந்திரமும் மட்டும் இணைந்து ஒரு தேசமாக இருந்திருந்தால், நிச்சயமாக ஈழப்பிரச்னையை விட பல பிரச்னைகளை அது கண்டிருக்கும். இந்தியாவில் 25 மாநிலங்கள் இணைந்து இருப்பதால், மாநிலங்களின் ஜனநாயகமாக, மொழி, மத, இன குழுக்களின் உரிமைகள் இந்தியாவில் பாதுகாக்கப்பட்டுவிடுகின்றன.(ஐரோப்பிய ஐக்கியத்துக்கு இந்தியாவை முன்மாதிரியாகக்கொண்டு ஐரோப்பியர்கள் உழைக்கிறார்கள்.)

 

 

  Thinnai 2000 May 07

திண்ணை

Series Navigationசித்ராதேவி >>

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்