தாய்மொழிக் கல்வி மனித உரிமை மீறலாம்:
சொல்கிறது உச்ச நீதி மன்றம்

This entry is part [part not set] of 6 in the series 20000423_Issue

சின்ன கருப்பன்


‘இந்து ‘ பத்திரிகை போன்ற தமிழ் விரோதப் பத்திரிகைகளையும், கல்வி வியாபாரம் செய்து கொழுத்த பணமுதலைகளையும், அவர்கள் வழிகாட்டலை வேதவாக்காய் ஏற்றுக் கொண்டு விட்ட அப்பாவி பெற்றோர்களையும் தவிர மற்ற எல்லோருக்குமே இந்தத் தீர்ப்பு மிக்க அதிர்ச்சியை அளிக்கக் கூடியது. சிறுபான்மையினரின் உரிமையினரைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட ஏற்பாட்டை – சி பி எஸ் சி போன்றவற்றில் ஆங்கிலப் படிப்புக்கான சலுகையை – மிகத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளது நீதி மன்றம்.

இதில்லாமல் தாய்மொழிக் கல்வி மனித உரிமை மீறலாம். எங்கே போய் முட்டிக் கொள்வது என்று எனக்குப் புரியவில்லை.

தாய்மொழியற்ற ஆங்கிலப் பயிற்சிதான் சிறுவர்களுக்கு கொடூரமான தண்டனை என்பதைக் காணத் தவறியவர்கள் இந்த நீதிபதிகள். கல்வி என்ற பெயரில் புரியாத ஒன்றைப் பிஞ்சு மனங்களில் புகுத்தி கல்வியையும், அறிவையும் இழிவு செய்யும் முயற்சி தான் ஆங்கிலப் பயிற்று மொழியில் ஆரம்பக் கல்வி. பெற்றோர்களின் உரிமையில் பொது நலனும் இருக்க வேண்டும் என்று சொல்ல அரசாங்கத்திற்கு எல்லா உரிமையும் உண்டு. இந்த அரசாணையும் கூட உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாய் இருந்து ஓய்வு பெற்றவர்களின் சிபாரிசின் பேரில் செய்யப்பட்ட ஒன்று தான் என்று நோக்கும் போது, நீதிபதிகள் சட்டத்தைப் பற்றிய தங்கள் புரிதலை வெளிப்படுத்துவதில் மிகவும் தவறு செய்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

பெற்றோர் தம் குழந்தைகளின் கல்வியின் தரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கேள்வி கேட்கக் கூடாத ஒன்றானால், ஜேப்படிப் பள்ளிகளுக்கும், கொலைசெய்வது எப்படி என்று பயில்விக்கும் பள்ளிகளுக்கும் கூட அவர்கள் அனுப்பலாம். அதிலும் கூட அரசு தலையிட முடியாது எனில், பாடத் திட்டங்கள் வகுக்க நிபுணர் குழு எதற்கு ? பாடப் புத்தகங்கள் தான் எதற்கு ? பள்ளிகள் தான் எதற்கு ? ஏன் நுழைவுத் தேர்வுகள் ?

இப்படிப் பட்ட ஆபத்தான அபத்தங்களால், சமூக உணர்வுடன் செயல் பட வேண்டிய நீதிமன்றங்கள் கேலிப் பொருளாகி விடுகின்றன. முதல்வராய் இருப்பவர் அரசு நிலங்களை வாங்குவது வெறும் ‘வழி காட்டுதல் ‘ தான் என்கிறார் ஒரு நீதிபதி. லாட்டரிச் சீட்டுகளைத் தடை செய்ய அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்கிறார் இன்னொருவர். தாய்மொழிக் கல்வி பெற்றோர்களின் உரிமையில் தலையிடுகிறது என்கிறார் இன்னொருவர். எங்கே போய் முடியும் இது ?

Series Navigation

சின்ன கருப்பன்

சின்ன கருப்பன்