திருவள்ளுவரும் திராவிட அரசியலும்

This entry is part [part not set] of 1 in the series 20000320_Issue

சின்னக்கருப்பன்


இரண்டு வாரங்களாக திண்ணையில் நடந்த திருவள்ளுவர் விவாதத்தை ஆர்வமாக படித்து வந்தேன் . திடாரென்று அது சம்பந்தமான கடிதங்கள் நின்று விட்டன. கட்ட பொம்முவின் கடிதத்துக்கு நிச்சயமாக பதில் எழுதி இருப்பார்கள் என்று நம்பி ஆசிரியரிடம் கேட்டேன் என்னவாயிற்று என்று.

வெட்டியாக சண்டை போடுவதில் அர்த்தமில்லை என்றும், தனிநபர் தாக்குதல் இல்லாமல், சரியான முறையில் ஆராயப்படும் கட்டுரை வந்தால் பிரசுரிக்க தயார் என்றும் சொன்னார். எனவே என்னால் முடிந்த கட்டுரை இது.

முதலாவது விஷயம். கோபால் ராஜாராம் எழுதிய கட்டுரை, திருவள்ளுவர் எவ்வாறு அரசியலாக்கப் படுகிறார் என்பது பற்றியது.

திருவள்ளுவர் சிலை பெங்களூரில் வைப்பது கன்னடர்கள் செய்ய வேண்டிய விஷயம். பெங்களூரில் உள்ள தமிழர்கள் திருவள்ளுவர் சிலை வைக்க விரும்பினால் அதுவும் அந்த பெங்களூர் வாழும் தமிழர்கள் பொறுத்த விஷயம். அவ்வாறு சிலை வைப்பதற்கு அங்கிருக்கும் கன்னடியர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், அந்த விஷயத்தை கை விட வேண்டியதோ, அல்லது திருவள்ளுவர் சிலை என்பது தமிழ் கலாச்சாரத்தின் கன்னட ஆக்கிரமிப்போ அல்ல என்பதை கன்னடியர்களுக்கு உணர வைப்பதோ அவர்கள் வேலை.

பெரியாரின் சொத்தை நிர்வகிக்கும் வீரமணி, பெரியாரின் இயக்கத்துக்கு தன்னை வாரிசாக அறிவித்துக் கொண்டு தன் வீரத்தைக் காட்ட பெங்களூரில் ஆர்ப்பாட்டம் செய்வது கன்னடர்களுக்கும் நல்லதல்ல தமிழர்களுக்கும் நல்லதல்ல. இது பெரியாரையும் திருவள்ளுவரையும் கொச்சைப்படுத்தும் முயற்சி.

வாஷிங்டனில் காந்தியின் சிலையை வைத்ததும், சான்பிரான்ஸிக்கோவில் காந்தியின் சிலை வைத்ததும் இங்கிருக்கும் இந்தியர்கள் ஆர்வமெடுத்து செய்த விஷயம்தான். அந்த சிலை வைப்பதற்கு இங்கிருக்கும் அமெரிக்கர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இங்கிருக்கும் அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால், காந்தி சிலை இங்கு அமைக்கப்பட்டிருக்காது. அதே நேரம் அமெரிக்காவில் எத்தனையோ பாகிஸ்தானியர்கள் இருந்தாலும் ஜின்னா சிலை இல்லை என்பதும் இங்கே குறிப்பிட வேண்டும். அதே போல் இங்கு சத்தாம் குசேனின் சிலையும் இங்கு இல்லை. இங்கு யாராவது சத்தாம் குசேனின் சிலை வைக்க விரும்பினால் அமெரிக்கர்கள் நிச்சயம் தடுத்திருப்பார்கள்.

இதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும். கன்னடியர்கள் விருப்பத்துக்கு எதிராக திருவள்ளுவர் சிலை நிர்மாணம் செய்வது திருவள்ளுவருக்கு இழுக்கு மட்டுமல்ல, அது தமிழர்களுக்கும் இழுக்கு. அதற்காக ஆர்ப்பாட்டம் செய்வது அபத்தத்தின் உச்சம்.

அது போக, திண்ணையில் நடந்த விவாதமோ இது பற்றியதல்ல. விவாதம் திருவள்ளுவரைப்பற்றியது. திருவள்ளுவரின் இன்றைய தேவை பற்றியது.

‘இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும் ‘ என்ற திருவள்ளுவர், விமர்சனத்தின் தேவையை மிகத்தெளிவாகவே சொல்லிவிட்டார்.

விமர்சனம் செய்யாமல் ஏற்றுக் கொள்ளப்படும் எதுவும் தானாகவே கெடும் என்பதாகவும் மேற்கண்ட குறளை பாடம் படிக்கலாம். அது மன்னனாகட்டும், மனிதனாகட்டும், தத்துவமாகட்டும், அறியாமல் ஏற்றுக் கொண்ட நிலைப்பாடாகட்டும், எதுவும் விமர்சனத்துக்குட்படுத்தப்படவேண்டும். திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உட்பட.

திருவள்ளுவர் நிச்சயம் இந்த விவாதத்தை படிக்க நேர்ந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்.

**

தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு வினோதமான வகை ‘நீதி இலக்கியம் ‘ என்பது. இது மதம் சாராத சமுதாயக் கோட்பாடுகளை நன்னடத்தை விதிகளை கொண்ட ஒரு இலக்கியம். இது போல வேறு மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த முறைக்கு மிக அருகில் வந்தது கன்ஃப்யூசியசும் லாவோட்ஸெயும். அதுவும் பின்னால் ஒரு மதமாக மாறிவிட்டது.

மாறாக நன்னடத்தை விதிகள் ஏறத்தாழ எல்லாக் கலாசாரங்களிலும் மதம் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றன. முஸ்லீம் பெண்கள் பர்தா போட வேண்டும் ,என்று அல்லா குர்-ஆனில் சொல்கிறார். பெரும்பாலான கிறிஸ்துவ விதிகளும், இஸ்லாமிய விதிகளும், யூத விதிகளும் மோஸஸின் கடவுள் மோஸசுக்குச் சொன்ன பத்துக் கட்டளைகளைச் சார்ந்தவை. இவை இன்றைய காலத்துக்குப் பொருந்துமா என்பது தீப்பொறி பறக்கும் விவாதமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இன்னும் நடந்து வருகிறது. இந்த விதிகளும், பைபிளில் உள்ள உலகம், கடவுள் பற்றிய வியாக்கியானங்களும் அறிவியலுக்கு முரண்பட்டவையாக இருந்ததால்தான் ‘செக்குலரிஸம் ‘ என்ற தத்துவமே வந்தது. மதத்தை உன் வீட்டுக்குள் வைத்துக்கொள், வெளியே அனைவருக்கும் ஏற்ற மதம் சாராத சமூக கொள்கைகளும் விதிகளும் வைத்துக் கொள் என்ற அறிவுரையின் பின்னரே ‘அரசியலைப்புச் சட்டம் ‘ என்ற முறையும், ஜனநாயகம் என்ற கருத்தாக்கமும் வளம் பெற்றன.

இது போன்ற ஒரு முயற்சியாக திருக்குறள் இருக்கலாம் என்று நம்புவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. முந்தைய தமிழகத்தில் வேதத்தை ஆதாரமாக கொண்ட இந்துக்களும், அவ்வாறு கொள்ளாத சமணர்களும். பெளத்தர்களும், வேதம் தேவையற்ற இந்துக்களும் சமூகம் மற்றும் ஜாதி சார்ந்த நீதிகளால் தங்களை நிர்வகித்துக் கொண்ட குழுக்களும் நிறைந்த காலம் அது. அதன் எச்சங்கள் இன்றும் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கர்னாடகத்திலும் காணக்கிடைக்கின்றது. இந்த வித்தியாசங்களை ஒப்புக்கொண்டே நமது அரசியலமைப்புச் சட்டமும் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு விதி என்பதை தன்னுள் கொண்டிருக்கிறது. இன்னும் திரிவிதாங்கூர் சமஸ்தான விதிகள் செல்லும் என்பது ஒரு உதாரணம்.

திருவள்ளுவர் தன்னை எக்காலத்துக்கும் ஏற்ற ஒரே நெறி என்று சொல்லிக் கொள்ளவில்லை. அது திராவிட அரசியல் தனக்கு கண்டுபிடித்துக் கொண்ட கடவுள் என்று தோன்றினாலும், அது போல ஒரு பிரமையை ஏற்படுத்தும் வகையில் திராவிடத்தலைவர்கள் (முக்கியமாக கருணாநிதி தன் குறளோவியத்தின் மூலம்) காண்பித்துக் கொண்டாலும், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அப்படி அரசியலமைப்புச் சட்டமாகவோ, அல்லது இன்னொரு மதமாகவோ ஆக முடியாதது. திருக்குறளின் பெரும்பாலான குறள்கள் தனிமனிதனுக்குச் சொல்லும் அறிவுரைகள். மாமிசம் சாப்பிடாதே என்று சொல்கிறதே தவிர மாமிசம் சாப்பிடக்கூடாது அவ்வாறு சாப்பிட்டவனுக்கு என்ன தண்டனை என்று சட்டம் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தால் நாம் பயப்பட ஆதாரம் இருக்கிறது. அப்படி எழுதியிருந்தால் அவரை பாஸிஸ்ட் என்று நானே முத்திரை குத்த தயாராக இருக்கிறேன். அப்படி இல்லாத பட்சத்தில், அவ்வாறு அவர் எழுதிவிட்டமாதிரி நாம் விமர்சனம் செய்வது ஊரை ஏமாற்றுவது.

உதாரணமாக விமர்சனத்தின் முக்கியத்துவத்தைச் சொன்ன திருவள்ளுவர், அவ்வாறு விமர்சனத்தை எடுத்துக் கொள்ளாத அரசனுக்கு இன்ன தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை.

ஆனால் திருக்குறளும் திருவள்ளுவரும் எல்லாரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. அதனால் தான் திராவிடத் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக திருவள்ளுவரைக் கிழிக்கும் போக்கு. இது ஏன் நாலடியாருக்கும் கொற்கை வேந்தனுக்கும் நடைபெறவில்லை என்பதற்கும் காரணம் இதுதான். தையல் சொல் கேளேல் என்று ஒவ்வையார் சொல்கிறார். யார் அவ்வையாரைக் கிழித்தார்கள் என்று தெரியவில்லை.

இந்த இடத்தில் கட்டபொம்முவின் விளக்கம் சரியானது என்பது என் எண்ணம். திருவள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் அரசுப்பணி புரிவது என்பது எண்ணப்படாததாக இருந்த காலத்தில் அரசுப்பணி புரியும் மனிதர்கள் துணைவியர் சொல் கேட்டு நடப்பது மக்களுக்கு உவப்பானதல்ல. இது இன்றும் பொறுந்தக்கூடியதென்றே கருதுகிறேன்.

மூன்றாவது விஷயம் திருவள்ளுவரின் காலம் பற்றியது. தெபொமீ சொல்லும் ஆதாரங்கள் ஆட்டம் காணக்கூடியவை. திருவள்ளுவர் வாழ்ந்ததாக குறிப்பிடக்கூடிய காலத்தில் காப்பியங்களில் உபயோகப்படுத்தப்படாத தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்த்தியிருக்கிறார் என்பது ஒன்று. பாரதியார் தன் காலத்தைய கவிஞர்களிடமிருந்து வெகுவும் மாறுபட்டு எளிய தமிழ்க்கவிதை அமைத்தார். இது போலவே திருவள்ளுவரும், தன் கவிதைகள் எளிய மக்களுக்கான அறிவுரைகளாக வேண்டும் எனக்கருதி கவிதை வழக்கல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருக்கலாம். எனவே இவை ஆதாரமாக கொண்டு வருடம் கணக்கிடுவது தவறென்பது என் எண்ணம். மேலும் இது முக்கியமற்றது. இது தேவையற்ற விவாதம் என்றாலும் இதில் உள்ள மறைபொருள் யார் யாரை காப்பி அடித்தார்கள் என்பது. காமசூத்திரத்திலிருந்தும், மனு நீதியிலிருந்தும், அர்த்த சாஸ்திரத்திலிருந்தும் அபேஸ் செய்யப்பட்ட விஷயங்கள் தான் காமத்து, அறம், பொருட்பாற்கள் என்பது சற்றுகாலாமாக பேசப்பட்டு வருவது. காமசூத்திரம் படித்தவர்களுக்கும் மனுதர்மம் படித்தவர்களுக்கும் திருக்குறள் படிப்பறிவு இருக்குமாயின் வரவே வராத ஐயம் இது. மனுதர்மத்தின் முதல் மூன்று பாகங்கள் பிறப்பின் வழி வரும் தொழில்கள் பற்றியவை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது திருக்குறள். கணவன் வெளிநாடு சென்றால் எந்த உடை அணியவேண்டும் எங்கு தூங்க வேண்டும் என்று சொல்வது காமசூத்திரம். நோக்காக்கால், தான் நோக்கி மெல்ல நகும் என்ற கவிதை சொல்வது குறள். திருக்குறளை, சமஸ்கிருத சம்பிரதாயமாக்கப்படும் இந்திய கலாச்சாரத்தின் எதிரியாக, தானாக புணைந்து கொண்டு பேசப்படும் மனச்சாய்வு உள்ள பேச்சுகள் இவை. இன்றைய அரசியலில் ஸ்தாபனப்படுத்தப்படும் இந்து மதம் ஒற்றைப்பரிமாணம் ஆவதில் பலர் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதன் காட்சி.

இந்த பயம் மற்ற மதத்தினருக்கும் இருக்கிறது. சமீபத்தில் அரசு மத்திய நூலகத்தில் ‘திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் ‘ என்று நிறுவ முயற்சிக்கும் ஒரு 1000 பக்கமுள்ள புத்தகம் படித்தேன். அபத்தத்தின் உச்சம் இந்த புத்தகம். இதே போல் திருவள்ளுவரின் நெறிகளை விட இஸ்லாமின் நெறிகள் சிறந்தவை என்று நிறுவ முயற்சிக்கும் ஒரு புத்தகமும் படித்தேன். இப்படி திருவள்ளுவர் எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். திருவள்ளுவர் இருக்கும் தளமும், நிறுவன மையமான மதங்கள் இருக்கும் தளமும் வெவ்வேறானவை. இந்த மதங்கள், மதம் சார்ந்திராத நீதி நூல்களைக் கண்டு அஞ்சுவதற்குக் காரணம் இருக்கிறது. எல்லா வாழ்க்கை நெறிமுறைகளுக்கும் தம் மதமே முழுமையான தீர்வை வழங்கவல்லது என்கிற நம்பிக்கை திருக்குறள் போன்ற நீதிநூல்களின் சமயச் சார்பின்மையால் ஆட்டங்காணக் கூடும் என்ற அச்சம் இதன் அடிப்படையாகலாம்.

திராவிட அரசியலும் திராவிட எதிர்ப்பு அரசியலும் எந்த விவாதத்தையும் மீண்டும் மீண்டும் பிராமண -எதிர் பிராமண தளத்திற்கு இழுத்துக் கொண்டுவந்து வாதிடும் போக்கு எல்லா விஷயங்களையும் கொச்சைப்படுத்தி விடுகிறது.

ஒரு வேளை இது தவிர்க்க முடியாததோ என்னவோ ?

-சின்னக்கருப்பன், திண்ணை, 20, மார்ச், 2000

Thinnai 2000 March 20

திண்ணை


  • திருவள்ளுவரும் திராவிட அரசியலும்

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்