சூறை

This entry is part 24 of 49 in the series 19991203_Issue

பாவண்ணன்


 

 

இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸடேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸடேஷனா இது ? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி ? பொழுது போக எனக்கும் ஒரு வேலை வேண்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்கப்புறம் இந்த இடம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிற அல்ப ஆசை என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸடேஷன் கட்டிட்ம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன.

ஆழ்ந்த அமைதியும் காற்றும் சற்றே கலவரமுட்டுகிறது. மாடுகளை ஓட்டிச் செல்கிற ஒரு சிறுவன் என்னைப் பார்த்தபடிே செல்கிறான். அவனை அருகில் வரும்படி தம்பி என்று குரல் கொடுக்கிறேன். என் குரலால் அவன் மிரண்டு போகிறான். வேக வேகமாய் அடியெடுத்து வைத்து ஓடுகிறான்.

ஸடேஷனை முடிவிடுவது பற்றி ஸடேஷன் மாஸடர் என்கிற முறையில் கருத்துக் கேட்டு வந்த கடிதத்தை அன்று இந்தக் கையால்தான் வாங்கினேன் நான். ஒன்றை அழிப்பது சுலபம். ஆனால் உருவாக்குவது எவ்வளவு சிரமமான காரியம். எந்தத் தேவையும் இல்லாமலா இந்த ஸடேஷன் கட்டப்பட்டிருக்கும் ? என் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டி மேல் அதிகாரிக்கு ஒரு நீண்டமடல் எழுதினேன். தினமும் ஏற்றி இறக்கப்படும் சிமெண்ட் முட்டைகள். அரிசி முட்டைகள், நிலக்கரி, எண்ணெய் பேரல்கள், பிரயாணிகள் எண்ணிக்கை என ஏராளமான புள்ளி விவரங்களைத் தேதிவாரியாகக் குறிப்பிட்டு கடிதத்தோடு இணைத்தனுப்பினேன். விழுப்புரம் – பாண்டிச்சேரி தடத்தில் கட்டப்பட்ட முதல் ஸடேஷன் இது என்றும் குறிப்பிடத் தவறவில்லை. ஒரு மாதத்திற்கப்பும் கூட என் கடிதத்துக்கு எந்தப் பதிலும் இல்லை. சரி, முடும் எண்ணம் கைவிடப்பட்டிருக்கும் என்று நினைத்திருந்த நேரத்தில் ஓர் அவசரக் கடிதம் வந்தது. சரக்கு வண்டிகள் மறுநாள் முதல் இயங்காது என்றும் வருமானத்தைக் காட்டிலும் இயக்குகிற செலவு அதிகமாகிறது என்றும் எழுதப்பட்டிருந்தது. இதனால் உபரியாகிவிடும் ஒரு குமாஸதா, ஒரு கேங்கமேன், ஒரு பாய்ண்ட்மேன் முவரும் உடனடியாய் விழுப்புரத்துக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும் குறித்திருந்தார்கள்.

அம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிரிந்து போனார்கள் அவர்கள்.

என்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் ? என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.

போவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால ? என்றான் ஒருவன்.

சேங்க்ஷன் போஸட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.

அப்ப எங்க கதி ?

போய்த்தான் ஆவணும்

அன்று மாலை என் அறையிலேயே பிரிவுபசார விழா நடந்தது. ரெட்டியார் ஓட்டலிலிருந்து மசால் தோசைகளையும் வடைகளையும் வாங்கி வந்து கூட்டாகச் சாப்பிட்டோம். மாறுதலாகிப் போகிறவார்களின் குடும்பங்களும் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள். இலாகா விதிமுறைகளையும் நிர்வாகத்தின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளையும் கடுமையாகச் சாடிப் பேசினான் டேனியல். அந்த மாறுதலுக்கு நானும்உடந்தை என அவன் நினைப்பது போலத் தோன்றியது. பேச்சு நெடுகவும் என்னை மறைமுகமாய்த் திட்டியபடியே இருந்தான். கடைசியில் ஸடேஷன் முகப்பில் கூடி நின்று ஒரு குருப் போட்டோ எடுத்துக் கொண்டோம்.

இலாகாவோடு வாகன ஒப்பந்தம் செய்துள்ள ஒருவர் வந்து சரக்குக் கூடத்தைப் பிரித்தெடுத்துச் சென்றார். போகும் முன்பு ஸடேஷனே கூட இன்னும் சிறிது காலத்துக்குள் முடப்பட்டு விடும் என்றும் அதற்கான ஆணை தயாராகிக் கொண்டிருக்கிறது என்றும் ரகசியத்ைதுக் கசிய விட்டுச் சென்றார் .

உள்ளுர நான் என்னைப் பலவீனனாக உணர்ந்தேன். எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒருவித வைராக்கியத்தோடு மேலிடத்திற்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன். ஸடேஷனைத் தக்க வைத்துக்கொள்ள படாதபாடு பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஊர்க்காரர்களின் நடவடிக்கையோ வேறு மாதிரி இருந்தது.

சரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும்

சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.

 

 

சாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது.

அங்கு தங்கியிருந்த நாள்களில் அந்தப் பெரிய மனதரைப் பார்க்காத நாளே இல்லை. என்னங்க .. நீங்களே இப்பிடிச் செய்யலாமா ? என்றேன். கண்டுக்காதீங்க சார். சும்மா கெடக்கற எடம்தானே. ஆடு மாடுங்க நெழல்ல நிக்கறது உங்களுக்குப் புடிக்கலயா ? ஏதோ வாயில்லாத ஜீவனுங்க..பொழச்சிப் போவட்டும் உடுங்க சார்.. என்றார். அப்புறம் ஒரு சிரிப்பு. அவர் கண்களில் வெறி மின்னியது. அந்தச்சிரிப்பையும் வெறியையும் தாங்க இயலாமல் நான் என் அறையை நோக்கிக் கவலையுடன் நடங்தேன்.

பாண்டிச்சேரி தடத்தில் இரண்டுவண்டிகள். அப்புறம் விழுப்புரம் தடத்தில் இரண்டு வண்டிகள். நாலு வண்டிகளுக்கும் கொடி காட்டி நிறுத்திப் புறப்பட வைத்துவிட்ட பிறகு வேலை எதுவுமிருப்பதில்லை. ஏறி இறங்கும் ஆள்களின் எண்ணிக்கையும் கூடக் குறைந்து விட்டது. ரயில் கட்டணம் பஸ கட்டணத்தைப் போல இரண்டு மடங்காக உயர்ந்து விட்டதும் ஒரு காரணம்.

தற்செயலாக இரும்புக்கிராதிப்பக்கம் இலுப்பை மரத்தடியில் ஆறேழு பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். கொடியைச் சுற்றிக்கையில் எடுத்தபடி அங்கே சென்றேன். என்னைப் பார்த்ததும் அவர்கள் எழுந்து ஓடக்கூடும் என்கிற என் நினைப்பு தவிடுபொடியானது. உட்கார்ந்த வாக்கில் வெறுமனே தலையை மட்டும் திருப்பி என்ன சார்..டிபன் ஆய்டுச்சிங்களா ? என்றான் ஒருவன். அவன் கையில் விசிறி மடிப்பாகச் சீட்டுகள். வட்டத்துக்கு நடுவில் விரிக்கப்பட்ட துண்டில் பந்தயப்பணம் புரண்டது. என் ரத்தம் சூடேறியது. ஏய் ..என்ன இது ? என்று அதட்டினேன். என் குரலில் தெரிந்த சீற்றம் அவர்கள் சிரிப்பை உடனே நிறுத்த வைத்தது. உடனே ஒருவன் எழுந்து நின்றான். சும்மா டைம் பாஸ சார்..தப்பா எடுத்துக்காதீங்க சார்..எங்களால எந்த பிரச்சனயும் வராது சார்.. என்று பணிவோடு சொன்னான். அப்பணிவின் காரணமாக நான் குரலைத் தாழ்த்த வேண்டி வந்தது. இத செய்ய இந்த எடம்தானா கெடைச்சிது ? என்றேன். நாங்க என்ன பணக்காரப் புள்ளங்களா சார் க்ளப்புக்குப் போய் ஆட. ஏதோ இல்லாதவங்க..இந்த எடமும் சும்மாதான கெடக்குது..அதான் சார்.. என இழுத்தான்.

மறுநாள் அவ்விடத்தையொட்டி இன்னொரு வட்டம் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். முற்றிலும் புதிய முகங்கள். அவர்களில் ஒருவன் ஏரிக்கரை மேலே.. என்ற வரியைச் சத்தம் போட்டுப் பாடினான். தொடர்ந்த மற்றவர்கள் கைதட்டி அவனை உற்சாகப்படுத்தினார்கள். உச்ச ஸதாயியில் மீண்டும் மீண்டும் அவ்வரியையே பாடியது அக்குரல். தொடர்ந்து அவர்கள் தமக்குள் கண்ணடித்துக் கொண்டார்கள். அப்போதுதான் தொலைவில் ஒரு பெண் போவதைக் கவனித்தேன் நான்.

என்னொரு நாள் சிமெண்ட் பெஞ்ச் பக்கத்தில் குறவனொருவன் கொக்கை அறுத்துத் தோலை உரித்துக் கொண்டிருந்தான். வெண்மையான அதன் இறகுகள் காற்றில் அலைந்தன.

சில நாள்களுக்கப்புறம் இன்னொரு சம்பவம் நடந்தது. பிளாட்பாரத்தையொட்டி இரண்டு பெண்கள் தூய்மையாய்ப் பெருக்கிச் சாணமிட்டு மெழுகினார்கள். எதற்கு என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பில்லாமல் இருந்தேன். இரண்டு நாள்களுக்கப்புறம் கதிர்க்கட்டுகளைச் சுமந்துவந்த பெண்களைப் பார்த்ததும் விஷயம் புரிந்தது. வெயில் ஏறியதும் கோவணம் மட்டுமே அணிந்திருந்த ஆண் ஒருவன் கட்டுகளை உதறிப் பிரித்து நெல்லடித்துக் கொண்டிருந்தான். தாவணியணிந்த இரண்டு பெண்கள் பக்கத்தில் நின்றபடி முறங்களால் இப்படியும் அப்படியுமாக அசைத்துக் காற்றெழுப்பினார்கள்.

வெயில் கொளுத்த ஆரம்பித்தது. இரவு நேரங்களில் பாய்களும் தலையணைகளும் கொண்டு வந்து பெஞ்சுகளில் படுக்கத் தொடங்கினார்கள் கிராமத்துக் காரர்கள்.

ஒருநாள் தற்செயலாகச் சுவரில் பதிந்திருந்த இந்த வார ஆனந்த விகடன் வாசித்தீர்களா ?எ விளம்பரப் பலகையைக் காணாமல் அதிரச்சியுற்றேன். அங்கிருந்தவர்களிடம் எங்கப்பா பலகை ?எ என்று பொதுவாகக் கேட்டேன். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஒருவன் மட்டும் எந்தப் பலகை சார் ? என்று புரியாதவனைப் போலக் கேட்டான். இந்தச் செவுத்தில மாட்டியிருந்ததே அந்தப் படம் என்று வெற்றிடத்தைக் காட்டினேன்.

எனக்குத் தெரியாது சார்.

சத்தியமா நான் பாக்கல சார்..

ஏதோ நெழலுக்கு ஒதுங்கலாம்ன்னு வந்தா சாரு திருட்டுப்பட்டம் கட்டிருவாரு போலருக்குதே..

ரொம்ப நாளாவே அது இல்ல. சாரு இன்னிக்குத்தான் புதுசா காணாம போன மாதிரி பாக்கறாரு..

அப்போதுதான் நான் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். பெஞ்சுகள், தூண்கள் எல்லா இடங்களில் இரும்புச் சாமான்கள் ஒன்று கூட இல்லை. தூண்களின் இரும்புப் பூண்கள் சாமர்த்தியமாக விலக்கி எடுக்கப் பட்டிருந்தன. அந்த அதிர்ச்சியை என்னால் தாள முடியவில்லை. அச்சூழலில் ஒரு வார்த்தை கூட என் வாயிலிலிருந்து

புறப்படவில்லை. மறுகணமே மெளனமாக அங்கிருந்து என் அறைக்குச் சென்று விட்டேன்.

எரிபொருள் சிக்கனம் என்று ஏதோ ஒரு காரணத்தைக்காட்டி தினமும் இரண்டு டிரிப்புகளாக ஓடிய வண்டியை ஒரு டிரிப்பாகக் குறைத்தது நிர்வாகம். என் கசப்பு மெல்ல மெல்ல அதிகரித்தது. பிரயாணிகளே இல்லாத இடம். ஸடேஷனில் நானும் இரு சிப்பந்திளும் மட்டுமே. ஒரு நாளில் ஐந்து நிமிஷத்துக்கு மேல் வேலை எதுவுமில்லை. சுற்றிலும் சிறுகச் சிறுகச் சூறைக்குள்ளாகி வரும் ஸடேஷனைக் காண மனத்தில் சலிப்பெழுந்தது. போலீஸக்குப் புகார் செய்தால் எல்லாம் ஒரு கணத்தில் சரியாகக் கூடும் என்கிற எண்ணம் எழாமல் இல்லை. மறுகணமே அது கலவரமாகச் சித்தரிக்கப்பட்டுவிடில் என் எதிர்காலமே பாழாகிவிடும். மேலும் அவர்களைக் கண்டு எந்த அளவு எரிச்சலெழுந்ததோ அதே அளவு இரக்கமும் சுரந்தது என்பதுவும் ஒரு காரணம்.

திடாரென்று ஒரு கிழவி பிளாட்பாரத்தின் கடைசி முலையில் எருமுட்டைகளைக் கொண்டு வந்து உலர வைப்பதைக் கண்டேன். என் சிப்பந்தி ஓடிப்போய் அவளிடம் எஏ கெழவி..இத என்ன ஙொப்பன் ஊட்டு எடம்ன்னு நெனச்சியா..முள இருக்குதா ஒனக்குஎ என்று சத்தமிட்டான். அவன் கோபத்தைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது. அன்று வரை நடந்த எந்த ஆக்கிரமிப்புக்கும் வாய் திறக்காத அவன் கிழவியைப் பார்த்து மோசமான வார்த்தைகளால் பேசினான். கிழவி அவனைக் கையெடுத்துக் கும்பிடுவது தெரிந்தது. சிப்பந்தி அவள் வார்த்தைகளைப் பொருட்படுத்தவே இல்லை. எல்லா எருமுட்டைகளையும் உதைத்துச் சிதைக்கவும் சிதற வைக்கவும் முயன்றான். அப்புறம்தான் அவன் கோபம் தணிந்தது. ஆள்காட்டி விரலை உயர்த்தி எஇன்னொரு தரம் இங்க ஒன்னப் பாத்தன்னா சும்மா உட மாட்டன். ஞாபகம் வச்சிக்கோஎ என்று எச்சரித்துவிட்டுத் திரும்பினான். ஆவேசம் தணிந்து திரும்பும் அவன் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த்தேன் நான்.

எருமுட்ட காயவக்க நல்ல எடம்டி, எடுத்தாந்து காய போடுடின்னு நேத்துதான் சார் ஊட்டுக்காரிகிட்ட சொல்லிட்டிருந்தேன். கெழட்டுக்கழுத..ஒட்டு கேட்டுட்டு ஊருக்கு முன்னால கொண்டாந்து காயப் போடுது.. நம்பளயெல்லாம் ஏமாந்த சோணகிரின்னு நெனச்சிட்டுது போல..

அவன் என்னையும் தன்னோடு இணைத்துப் பேசியதில் எனக்குச் சற்றும் உடன்பாடில்லை. எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் நான் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

மறு வாரத்தில் ஏரியிலிருந்து மீன் பிடித்து வரும் ஆண்களும் சாலையாம்பாளையம், தாதம்பாளையத்திலிருந்து காய்கறிக் கூடைகளைச் சுமந்து வரும் பெண்களும் நிழலோரம் கூறு போட்டுக் கடை வைக்கத் தொடங்கினார்கள். எல்லாரையும் அதட்டி அதட்டி எனக்குச் சலிப்பேற்பட்டு விட்டது. யாருமே என் குரலைப் பொருட்படுத்தாதது ஏமாற்றமாக இருந்தது. என்னால் தலைநிமிர முடியவில்லை. மனம் முழுக்க எரிச்சல் பொங்கியது. கவைக்குதவாத எரிச்சல்.

முற்றிலுமாக அந்த ஸடேஷனை முடிவிடுகிற ஆணைத் தந்தி வந்தது. அன்று முதல் எந்த வண்டியும் அங்கு நிற்காது. அடுத்த நாள்முதல் காலை வாகனத்துடன் வரும் கட்டுமானப்பிரிவு அதிகாரியிடம் ஸடேஷனை ஒப்படைத்துவிட்டுக் கிளம்ப வேண்டும். சிப்பந்திகள் ஓடிவந்து எஎன்ன சார்..என்ன சார்..எ என்றார்கள். நான் எஒன்னுமில்லப்பாஎ என்றேன்.

ஏதோ தந்தியடிச்சிதே சார்

நமக்கில்லப்பா..பாண்டிச்சேரிக்குப் போவுது.

அவர்கள் என்னை நம்பிக்கையின்றிப் பார்ப்பது தெரிந்தது.

மறுநாள் மதிய நேரம் வாகனம் வந்தது. அதிகாரியும் வந்தார். வாகனத்தின் ஓசையைக் கேட்டுச் சிப்பந்திகள் வந்தார்கள். வாகனத்தில் வந்த அதிகாரி எல்லாருக்குமான ஆணைகளைக் கொடுத்தார். அவர்களால் நம்ப முடியவில்லை. முகம் வெளிறிவிட்டது. ஸடேஷன் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தேன் நான்.

ஸடேஷன் பொருள்கள் வாகனத்தில் ஏற்றப் பட்டன. மேசைகள், நாற்காலிகள், கருவிகள், ரெக்கார்டுகள், அலமாரிகள், தாங்கிகள், பழைய பிக்-ஆக்ஸகள், மண்வெட்டிகள், தட்டுமுட்டுச் சாமான்கள். வெகுநேரம் வேடிக்கை பார்த்தபடி இருந்த ஊர்க்காரர்கள் திடுமென கூரைமேல் ஏறினார்கள். அந்தச் சத்தத்தைச் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஓடுகளை உருவினார்கள் சிலர். அதற்குள் சிலர் ஜன்னல் சட்டகத்தையே உடைத்தெடுக்க முயற்சி செய்தார்கள். ஒரு கம்பத்தையே சாய்த்து உருட்டிக் கொண்டு சென்றார் ஒருவர். நிறுத்துங்க..நிறுத்துங்க.. என்று அதட்டினேன் நான். வாகனத்தில் வந்த அதிகாரியும் ஆள்களும் விரட்டி விரட்டி அடுத்தார்கள். சரியான அல்பனுங்கப்பா.. என்று காறித் துப்பினார்கள் அவர்கள். எந்த அதட்டலுக்கும் அஞ்சாத சிலர் கைக்குக் கிடைத்ததை உருவிக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள்.

அன்றே அந்த ஊரைவிட்டுப் புறப்பட முடிவு கட்டினேன். பகலில் எல்லாரும் காணும்வண்ணம்தான் என் முட்டை முடிச்சுகளோடு கிளம்பினேன். ஆனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளும் மனநிலையில் இல்லை. ஆசையை வளர்த்துக் கொண்ட ஓர் இடத்தின் மீது நாமே அறியாமல் வெறுப்பும் படர்ந்துவிடும்போது எந்த முகத்துடன் பேச முடியும் ? எங்கோ ஒரு சண்டை, கூச்சல் , வசை கேட்டபடியே இருந்தது. ஊரைத் தாண்டி நடந்தேன் நான்.

****
 

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< எங்கே மகிழ்ச்சி ?புலம்பல் >>

பாவண்ணன்

பாவண்ணன்